Published:Updated:

World's first ATM: இன்ஸ்பிரேஷனாக இருந்த சாக்லெட் இயந்திரம்; முதல் ஏ.டி.எம் எப்படி உருவானது தெரியுமா?

இன்று ஏ.டி.எம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எப்படி இந்த இயந்திரம் நம் வாழ்க்கையில் நுழைந்தது?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜூன் 27... உலக ஏ.டி.எம் தினம்.

1967-ம் ஆண்டு இந்த நாளில்தான் ஏ.டி.எம் என்கிற பணப்பரிவர்த்தனை செய்ய உதவுகின்ற இயந்திரம் மக்களுக்கு அறிமுகமாகி, செயல்பாட்டுக்கு வந்தது. இன்று ஏ.டி.எம் என்பது நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது. எப்படி இந்த இயந்திரம் நம் வாழ்க்கையில் நுழைந்தது?

உலகின் முதல் ஏ.டி.எம் இயந்திரமானது ஜூன் 1967-ல் லண்டனில் இருக்கும் ஒரு தெருவில் உள்ள பார்க்லேஸ் வங்கியின் ஒரு கிளையின் மூலமாக அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை ஜான் ஷெப்பர்ட் பரோன் என்ற பிரிட்டிஷ் நாட்டுக்காரர் கண்டுபிடித்தார். இயந்திரத்தில் காசு போட்டால், சாக்லெட் தரும் இயந்திரங்கள்தான் இந்த ஏ.டி.எம் மெஷினுக்கு அடிப்படையாக இருந்தன. ஆரம்ப காலத்தில் ஏ.டி.எம் மெஷினைப் பயன்படுத்த பலரும் தயங்கினார்கள். பிற்பாடு அதில் நிறைய பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டபிறகு எல்லோரும் பயன்படுத்தத் தொடங்கினர்.

1967-ம் ஆண்டில் பார்க்லேஸ் ஏ.டி.எம் நிறுவப்பட்ட சில வாரங்களுக்குப்பிறகு உலகின் இரண்டாவது ஏ.டி.எம் ஸ்வீடனில் நிறுவப்பட்டது. இதற்குப்பிறகு உடனடியாக உலகெங்கும் ஏ.டி.எம் மையங்கள் முளைத்ததும், இந்த இயந்திரங்கள் வங்கி சேவையில் முக்கிய இடத்தைப் பிடித்ததும் வரலாறு.

ATM
ATM

இந்தியாவில் முதல்முறையாக ஏ.டி.எம் இயந்திரமானது 1987-ல் மும்பையில் ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் மூலம்தான் அறிமுகமானது. இப்போது உலகம் முழுவதும் 3.5 மில்லியனுக்கும் அதிகமான ஏ.டி.எம்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஆர்.பி.ஐ தரும் புள்ளிவிவரங்கள்படி, ஏ.டி.எம்.களின் எண்ணிக்கை 2,34,244-ஆக உள்ளன.

எல்லா வெற்றியின் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்பது போல, இந்த ஏ.டி.எம் உருவாக்கத்திலும் ஒரு பெண் இருந்தார்.

ஏ.டி.எம்-ஐ கண்டுபிடித்த ஜான் ஷெப்பர்ட் பரோன் ஆறு இலக்க ரகசிய எண்ணைக் கொண்டுவந்தார். அவர் தனது யோசனை பற்றி தனது மனைவி கரோலினுடன் ஆலோசிக்கும்போது தனது மனைவியால் நான்கு இலக்கங்களை மட்டுமே நினைவில் கொள்ள முடிந்தது. எனவே அதை 4 இலக்க எண்ணாக மாற்றினார். இதனால்தான் அன்று முதல் இன்று வரை நாம் நான்கு இலக்க எண்ணை ஏ.டி.எம் கார்டிற்காகப் பயன்படுத்தி வருகிறோம். சில பாதுகாப்பு நோக்கங்களுக்காக சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளில் உள்ள வங்கிகள் இன்றும் கூட ஆறு இலக்க ரகசிய எண்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றன.

ஏ.டி.எம் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்

தங்க முலாம் பூசப்பட்ட ஏ.டி.எம்

முதல் தங்கமுலாம் பூசப்பட்ட இயந்திரம் அபுதாபியில் உள்ள எமிரேட்ஸ் அரண்மனை ஹோட்டலின் லாபியில் வைக்கப்பட்டது. தங்கத்தால் செய்யப்பட்ட 320 பொருள்களை இந்த தங்க ஏ.டி.எம் விநியோகிக்கிறது. தற்போது மூன்று கண்டங்களில் இருபது தங்க விற்பனை இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன.

ATM
ATM

மிதக்கும் ஏ.டி.எம்

இது கேரளாவில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இதனை கேரள கப்பல் மற்றும் உள்நாட்டு போக்குவரத்து கழகத்திற்கு (கே.எஸ்.ஐ.என்.சி) சொந்தமான ஒரு படகில் நிறுவியுள்ளது. அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியான எர்ணாகுளம் மற்றும் வைபீன் இடையே ஜங்கர் என்ற படகு சேவையில் இந்த ஏ.டி.எம் அமைக்கப்பட்டுள்ளது.

தனிமையான ஏ.டி.எம்

உலகின் தனிமையான ஏ.டி.எம் அன்டார்டிகாவில் உள்ளது. அன்டார்டிகாவில் உள்ள அமெரிக்க ஆராய்ச்சி மையமான மெக்முர்டோ நிலையத்தில் இரண்டு ஏ.டி.எம்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு ஏ.டி.எம் மட்டுமே இயங்குகிறது. இன்னொன்று பேக்கப்பாக இருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக உயரமான ஏ.டி.எம்

உலகின் மிக உயர்ந்த இடத்தில் உள்ள ஏ.டி.எம் நாதுலாவில் வைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் கடல்மட்டத்திலிருந்து 14,300 அடி. இது யூனியன் பாங்க் ஆப் இந்தியாவால் இயக்கப்படுகிறது. இந்தோ-சீனா எல்லையில் இருக்கும் ராணுவ வீரர்களுக்காக இந்த ஏ.டி.எம் நிறுவப்பட்டுள்ளது.

Lakshmi Vilas Bank ATM
Lakshmi Vilas Bank ATM
Photo: Vikatan / Vijayakumar.M
ஏ.டி.எம் கார்டு பணப் பரிவர்த்தனை... உயரும் கட்டணங்கள்..! சமாளிக்கும் வழிமுறைகள்...

உயரும் ஏ.டி.எம் சேவைக் கட்டணம்!

ஏ.டி.எம் கார்டுகளை பயன்படுத்தும் முறைகளில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அரசு மற்றும் வங்கிகள் செயல்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு ஜனவரி, 1-ம் முதல், ஏ.டி.எம் மையங்களில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை கட்டணத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு வங்கியின் வாடிக்கையாளர், அதே வங்கியின் ஏ.டி.எம் வாயிலாக, மாதம் ஐந்து முறையும், பிற வங்கி ஏ.டி.எம்களில் மூன்று முறையும், பணப்பரிவர்த்தனைகளை கட்டணமின்றி மேற்கொள்ளலாம். இதற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையானது, ``வங்கி வாடிக்கையாளர்களின், ஏ.டி.எம் பரிவர்த்தனைக் கட்டணம் இறுதியாக 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நிர்ணயிக்கப்பட்டிருந்து. இந்த நிலையில் 2022, ஜனவரி 1 முதல், தற்போதுள்ள இலவசப் பரிவர்த்தனைகளுக்கு மேல் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணப்பரிவர்த்தனைக்கான கட்டணம், 20 ரூபாயில் இருந்து, 21 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. அதுபோல வங்கிகள் இடையிலான ஏ.டி.எம் நிதிப் பரிவர்த்தனை கட்டணம், 15 ரூபாயில் இருந்து, 17 ரூபாய் மற்றும் நிதிசாராத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம், 5 ரூபாயில் இருந்து 6 ரூபாயாக உயர்த்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளது.

அதிக பரிவர்த்தனைகளைத் தவிர்க்க பின்வரும் முறைகளைப் பின்பற்றலாம்.

Card
Card
தனியார்மயமாகிறதா இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? முடிவுக்கு வரும் 80 ஆண்டுக்கால பெருமை?

இரண்டு கார்டுகள் போதுமே!

தற்போது ஒருவரிடம் குறைந்தபட்சம் நான்கு ஏ.டி.எம் கார்டுகளாவது இருக்கின்றன. இத்தனை கார்டுகளை ஒருவர் வைத்திருக்கத் தேவையில்லை. தேவை இல்லாத ஏ.டி.எம் கார்டு கட்டணச் செலவுகளைத்தான் அதிகரிக்கும். அதிகபட்சம் ஒருவரிடம் ஒரு ஏ.டி.எம் கார்டு மற்றும் இரண்டு வங்கிக் கணக்குகள் இருந்தால் போதுமானது. இந்த இரண்டு வங்கிக் கணக்குகளில் ஒன்றை பொதுத் துறை வங்கிகளிலும், மற்றொன்றைத் தனியார் வங்கிகளிலும் வைத்துக் கொள்ளலாம். இந்த இரண்டில் எது சம்பளம் அல்லது குடும்ப நிதிகளைச் சேமிக்கும் வங்கிக் கணக்கோ அதற்கு மட்டும் ஏ.டி.எம் கார்டு வைத்திருக்கலாம்.

இந்த கொரோனா காலகட்டத்தில் ஏ.டி.எம் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்வது மிக மிக நல்லது. முடிந்தவரை ஏ.டி.எம்களுக்கு போகாமல் இருக்க என்ன வழி என்பதை யோசித்து, அதை நடைமுறைப்படுத்துங்கள். நமது பரிவர்த்தனைகளை முடிந்தவரை ஆன்லைனில் மேற்கொண்டால் தேவையில்லாத கட்டணச் செலவுகளைத் தவிர்க்கலாம்.

- ஸ்ரீதர் சாரதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு