Published:Updated:

`எஸ் பேங்க்' வீழ்ந்த கதை! ஏன், எப்படி? #YesBank

எஸ் பேங்க்
எஸ் பேங்க்

`எஸ் பேங்க்' நிறுவனத்தைப் பொறுத்தவரை, பெயருக்கேற்ப வங்கிக்கடன் கேட்டு எந்த நிறுவனம் அணுகினாலும் `எஸ்' மட்டுமே சொல்லக்கூடியவர்கள், `நோ' சொல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதுவே வாராக்கடன் சிக்கலை உருவாக்கியுள்ளது.

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் பேங்க், தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடிக்கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கெனவே பி.எம்.சி வங்கி திவாலாகி, இன்றுவரை மீட்டெடுக்கப்படாமல் அதன் வாடிக்கையாளர்கள் வேதனையை அனுபவித்து வருகிறார்கள். தற்போது, அந்த வரிசையில் எஸ் பேங்க் என்ற தனியார் வங்கியும் சேர்ந்துகொண்டது. வங்கியில் நம்பிக்கையோடு டெபாசிட் செய்யும் எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணா கபூர் என்ற ஒற்றை மனிதரின் செயல்பாட்டால் எஸ் பேங்க் வளர்ந்தது, வீழ்ந்தது எப்படியெனப் பார்ப்போம்.

எஸ் பேங்க்
எஸ் பேங்க்
vikatan

2004-ம் ஆண்டு ராணா கபூர், அசோக் கபூர் இருவரும் இணைந்து எஸ் பேங்க்கைத் தொடங்கினார்கள். இவர்களில் அசோக் கபூர், 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் பலியானார். அதன்பின் ராணா கபூர் மட்டுமே அந்த வங்கியின் தலைவராகச் செயல்பட்டார். ராணா கபூரின் ஒற்றைத் தலைமையின்கீழ் அடுத்த பத்தாண்டுகளில் ரூ.3,00,000 கோடி சொத்து மதிப்புள்ள மிகப்பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.

எஸ் பேங்க் நிறுவனத்தைப் பொறுத்தவரை, பெயருக்கேற்ப வங்கிக்கடன் கேட்டு எந்த நிறுவனம் அணுகினாலும் 'எஸ்' மட்டுமே சொல்லக்கூடியவர்கள், `நோ' சொல்ல மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. மற்ற வங்கிகள் கடன் வழங்க மறுத்த நிறுவனங்களுக்கு தாங்கள் கடன் வழங்க முன்வரும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். ஆனால், அந்த நிறுவனங்களுக்கு அதிக வட்டியில் கடன் கொடுப்பதன்மூலம் வங்கியை வளர்ச்சியடையச் செய்யலாம் என்று ராணா கபூர் எண்ணினார். இந்த இடத்தில்தான் ராணா கபூர் சறுக்கினார். இவர் எதிர்பார்த்தபடி வங்கி மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்தாலும், அதிக வட்டி காரணமாக வாராக்கடனும் அதிகரித்தது.

எஸ் பேங்க்
எஸ் பேங்க்
\

வாராக்கடன் பிரச்னையில் பெரிதும் அடிபட்ட நிறுவனங்களான ஐ.எல் & எஃப்.எஸ், டி.ஹெச்.எஃப்.எல், ஜெட் ஏர்வேஸ், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், கஃபே காபி டே உள்ளிட்ட நிறுவனங்கள் அனைத்துக்கும் கடன் வழங்கிய வங்கிகளில் எஸ் வங்கி முக்கியப் பங்கெடுத்தது. இதன்காரணமாக வங்கியின் வளர்ச்சி சிக்கலைச் சந்தித்தது. விஜய் மல்லையாவின் வாராக்கடன் விவகாரம் பெரிதாகவும், இந்திய வங்கிகளின் வாராக்கடன் விவரங்கள் குறித்து ரிசர்வ் வங்கி கவனமெடுத்தது. அனைத்து வங்கிகளும் வாராக்கடன் விவரங்களைத் தெரிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது. அனைத்து வங்கிகளும் விவரங்களைச் சமர்ப்பித்தனர். எஸ் பேங்க் சார்பாக வாராக்கடன் தொகையாக ரூ.749 கோடி கணக்கில் காட்டப்பட்டது. ஆனால், எஸ் பேங்க் காட்டிய வாராக்கடன் தொகையில் மாறுபாடுகள் இருப்பது தெரியவந்ததால் எஸ் பேங்க் மீது ரிசர்வ் வங்கி கூடுதல் கவனம் செலுத்தியது.

2018-ம் ஆண்டில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு எஸ் பேங்கின் தலைமைச் செயல் அதிகாரியாக ராணா கபூர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அதை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை. அவரது பதவிக்காலத்தை 2019, ஜனவரி 31 ஆகச் சுருக்கியது. 2019, மார்ச் 1-ம் தேதி புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ரவ்னீத் கில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிர்வாகக் குளறுபடிகளால் 2019, மார்ச் காலாண்டு முடிவுகளில் எதிரொலித்தது. 2004-ம் ஆண்டிலிருந்து நஷ்டத்தையே சந்திக்காத நிறுவனமாகத் திகழ்ந்த எஸ் பேங்க், முதல்முறையாகக் 2019-ம் ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.1,507 கோடி அளவுக்கு நஷ்டத்தைச் சந்தித்தது. அதன்பின்னர், எஸ் பேங்க் பங்குகளின் மதிப்பு வீழத்தொடங்கியது. ரேட்டிங் நிறுவனங்களும் எஸ் பேங்க் குறித்து எதிர்மறையான மதிப்பீட்டைத் தந்தன.

வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த பிரச்னைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் தீர்வு காணும்.
நிர்மலா சீதாராமன்
`எஸ் பேங்கை கையிலெடுத்தது ரிசர்வ் வங்கி’ -  வாடிக்கையாளர்கள் ரூ.50,000 மட்டுமே எடுக்க முடியும்

2018-19-ம் ஆண்டில் எஸ் பேங்கின் வாராக்கடன் தொகை ரூ.3,277 கோடி என ரிசர்வ் வங்கி அறிவித்தது. இவற்றில், ஐ.எல் & எஃப்.எஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டுமே ரூ.1,000 கோடிக்குமேல் இருந்தது. ராணா கபூர் பதவி விலக்கப்பட்டதும் எஸ் பேங்கிலிருந்த தனது பங்குகளை விற்று வெளியேற முடிவெடுத்தார். ராணா கபூரின் குடும்ப நிறுவனமான எஸ் கேப்பிட்டல் (இந்தியா), மோர்கன் கிரெடிட்ஸ் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசமிருந்த எஸ் பேங்க் நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்ததும் முதலீட்டாளர்கள் மத்தியில் எஸ் பேங்க்கின் மதிப்பைக் குறைத்தது. 2019, டிசம்பர் மாதத்தில் ராணா கபூர் வசம், எஸ் பேங்கின் எந்தப் பங்கும் இல்லையென்று எஸ் பேங்க் அறிவித்தது.

தொடர்ந்து இறக்கத்தில் பயணித்து வந்த எஸ் பேங்கை மீட்டெடுக்க, ரவ்னீத் கில் பல்வேறு வகைகளில் முதலீட்டைத் திரட்ட முயன்றார். எனினும், அவரின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. 2019, நவம்பர் மாதத்தில், அந்த வங்கி இறுதியாக வெளியிடப்பட்ட இரண்டாவது காலாண்டு முடிவில் பெருத்த வருமான இழப்பைச் சந்தித்தது. வாராக்கடனுக்காக ரூ.1,336 கோடி ஒதுக்கப்பட்டதால் இந்த வருமான இழப்பு ஏற்பட்டது. அது முதலீட்டாளர்கள் மத்தியில் பெருத்த அவநம்பிக்கையை ஏற்படுத்தியதால் பங்கு விலை படுவீழ்ச்சியை நோக்கி நகர்ந்தது.

வாராக்கடன்
வாராக்கடன்
vikatan

இந்த நிலையில்தான் எஸ் பேங்கை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. தற்போது, எஸ் பேங்கை எஸ்.பி.ஐ வங்கி கையகப்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி வரைவறிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, ``வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்த பிரச்னைக்கு ரிசர்வ் வங்கி விரைவில் தீர்வு காணும்" என்பதை மட்டும் கூறி முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் தாமஸ் பிராங்கோவிடம் கேட்டபோது, ``எஸ் பேங்கின் வீழ்ச்சிக்கு ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் இருக்கும் தவறு முக்கியக் காரணமாக இருக்கிறது. ரிசர்வ் வங்கி இந்த பிரச்னையை முன்பிருந்தே சரியான முறையில் கையாண்டிருந்தால் இந்த நிலை வராமல் தடுத்திருக்கலாம். ஆனால், ரிசர்வ் வங்கியைச் சுயமாகச் செயல்பட மத்திய அரசு அனுமதிக்கவில்லை. தற்போது எஸ் பேங்கை எஸ்.பி.ஐ வங்கிதான் எடுத்து நடத்தவுள்ளதாகத் தெரிகிறது. இதில் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. தனியார் வங்கிகள்தான் நன்றாகச் செயல்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் மோசம் என்ற கருத்து தவறாகியிருக்கிறது.

தாமஸ் பிராங்கோ
தாமஸ் பிராங்கோ
vikatan

அதேபோல, தனியார் வங்கியான எஸ் பேங்கை எடுத்து நடத்தும்படி இன்னொரு தனியார் வங்கியிடம் சொல்லலாமே, ஏன் பொதுத்துறை வங்கியிடம் ஒப்படைக்கிறார்கள் என்றும் பார்க்க வேண்டும். எதிர்காலத்தில் இதுமாதியான பிரச்னைகள் வராமல் இருக்க வேண்டுமென்றால் பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் போக்கைக் கைவிட வேண்டும். இது விஷயத்தில் ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டைச் சரிசெய்ய வேண்டும். எஸ் பேங்க், தனியார் வங்கியாக உள்ளது. இதன் வாடிக்கையாளர்கள் வசதிபடைத்தவர்களாக இருக்கிறார்கள் என்பதால் இந்தப் பிரச்னையைத் தீர்ப்பதில் அரசாங்கம் தீவிரமாக இருக்கிறது. அதேவேளை, பி.எம்.சி வங்கி, கூட்டுறவு வங்கியாக இருப்பதாலும், அதன் வாடிக்கையாளர்கள் அடித்தட்டு எளிய மக்களாக இருப்பதாலும் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க இன்றுவரை முன்வரவில்லை என்பதையும் பார்க்க முடிகிறது. அரசின் இத்தகைய இரட்டை நிலைப்பாடு தவறானது" என்றார்.

`எஸ் வங்கி' ரிசர்வ் பேங்க் கட்டுப்பாட்டில் போனது ஏன்?! - விளக்கம் கொடுத்த நிர்மலா சீதாராமன்

முதலீடு குறித்த விழிப்புணர்வே இல்லாத எளிய மக்களின் பாதுகாப்பான முதலீட்டுச்சாதனமாக வங்கிகள் இருந்துவந்தன. அதுமட்டுமன்றி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதோடு, அடித்தட்டு, நடுத்தர மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கு கடனுதவி அளிப்பதும் வங்கிகளின் முக்கியச் செயல்பாடாக உள்ளது. இத்தகைய வங்கிகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதோடு, திவாலாகாமல் பார்த்துக்கொள்வதும் மத்திய அரசின் கடமையாகும்.

அடுத்த கட்டுரைக்கு