Published:Updated:

எந்தெந்த கடன்களுக்கு வரி விலக்கு கிடைக்கும் தெரியுமா? - பணம் பண்ணலாம் வாங்க - 44

`உங்களுக்கு கடன் தேவையில்லை' என்று நிரூபித்தால்தான் வங்கிகள் கடன் தரும் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஏனெனில் வங்கிக் கடன் பெற நல்ல வேலை, நிலையான வருமானம், அடமானமாக சில சொத்துக்கள் எல்லாம் தேவைப்படும். இவை இல்லாமலும் சில கடன்கள் கிடைக்கும்.

கடன் என்பது வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாது. சாமானியன் ஸ்மார்ட் ஃபோன் வாங்குவது துவங்கி பெரு முதலாளிகள் ஏர்போர்ட் வாங்குவது வரை எல்லாமே கடனில்தானே நடக்கிறது? யாரும் கடன் வாங்காமல், கையில் ரெடியாகப் பணம் வைத்துக் கொண்டு பெரிய செலவுகளையோ, முதலீடுகளையோ செய்வது கடினம். அதற்கேற்றவாறு கூவிக் கூவிக் கடன் தரும் நிறுவனங்களும் அதிகரித்துவிட்டன.

Money (Representational Image)
Money (Representational Image)
இவற்றிற்காக வாங்கினால், பர்சனல் லோன் கூட கெட்ட கடன்தான்! - பணம் பண்ணலாம் வாங்க - 43

கல்யாணம், காதுகுத்து விசேஷம் என்றால் மாமன், மச்சான் கடன் தந்து உதவிய காலங்கள் உண்டு. (கோவிட்டுக்குப் பின் மாமன், மச்சானே கடன் கேட்கும் நிலையில் இருப்பது வேறு விஷயம்). ஆனால் நெருங்கிய சொந்தத்தில் கடன் கேட்பதில் பல பிரச்னைகளும் எழுவதுண்டு. மேலும் வீடு கட்ட, பிள்ளைகள் அயல்நாடுகளில் மேற்படிப்பு படிக்க எல்லாம் அதிகப் பணம் அவசியம். இந்த சமயங்களில் வங்கிகள் கை கொடுத்து உதவுகின்றன.

`உங்களுக்கு கடன் தேவையில்லை' என்று நிரூபித்தால்தான் வங்கிகள் கடன் தரும் என்று வேடிக்கையாக சொல்வதுண்டு. ஏனெனில் வங்கிக் கடன் பெற நல்ல வேலை, நிலையான வருமானம், அடமானமாக சில சொத்துக்கள் எல்லாம் தேவைப்படும். எளிய மக்களுக்கு இதெல்லாம் சாத்தியமில்லாத நிலையில் கந்து வட்டிக்காரர்களும், நகை அடகு பிடிக்கும் கடைகளும் அவர்களுக்கு உதவின.

அப்போது தோன்றியவைதான் என்.பி.எஃப்.சி. வகையைச் சார்ந்த பஜாஜ் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகியவை. இவை ஒவ்வொன்றும் பொது மக்களின் வித விதமான சிறு தேவைகளுக்குக் கடன் தந்து வருகின்றன.

பாதுகாப்பு அடிப்படையிலான கடன் வகைகள்

பொதுவாக கடனை,

செக்யூர்டு லோன் (பாதுகாப்பு நிறைந்த கடன்),

அன்செக்யூர்டு லோன் (பாதுகாப்பில்லாத கடன்)

என்று இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். செக்யூர்டு லோனில் கடனுக்கு ஈடாக ஏதாவது சொத்து அடமானமாகப் பெறப்படும். கடன் வாங்கியவர்கள் கடனைக் கட்ட இயலாத பட்சத்தில் அந்த சொத்து விற்கப்பட்டு கடன் அடைக்கப்படும். வீட்டுக் கடன், நகைக் கடன், மற்றும் இன்சூரன்ஸ் பாலிஸி, மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள் போன்றவற்றின் மீதான கடன்கள் ஆகியவை செக்யூர்டு லோன் வகையில் அடங்கும். இந்த வகை லோனுக்கு வட்டி விகிதம் குறைவு.

Money (Representational Image)
Money (Representational Image)
கிரெடிட் கார்டை இப்படிப் படுத்தினால் பிரச்னையே இல்லை! - பணம் பண்ணலாம் வாங்க - 42

அன்செக்யூர்டு லோன்களில் அடமானம் ஏதும் பெறப்படுவதில்லை. கடன் பெறுபவருக்கும் வங்கிக்குமான உறவு, கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றை மதிப்பிட்டு கடன் தரப்படுகிறது. இவற்றுக்கு வட்டி அதிகம். பர்சனல் லோன், பிசினஸ் லோன் போன்றவை அன்செக்யூர்டு லோன்கள்.

குறிக்கோள் அடிப்படையிலான கடன் வகைகள்

வீடு, கல்வி, வாகனம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குதல் போன்ற குறிக்கோள்களை அடைவதற்காக வங்கி மற்றும் என்.பி.எஃப்.சி. நிறுவனங்கள் கடன் தருகின்றன. வீட்டுக்கடனைப் பொறுத்தவரை நிலம் வாங்க, வீடு கட்ட, ஃப்ளாட் வாங்க, மேம்படுத்த என்று பல காரணங்களுக்காகக் கடன் தரப்படுகிறது. நமது வருமானம், தற்போதைய மற்ற கடன்கள், கிரெடிட் ஸ்கோர் போன்றவற்றைப் பொறுத்து கடன் தொகை நிர்ணயிக்கப் படும். 10% முதல் 20% வரை டவுன் பேமென்ட்டாக நாம் கட்டவேண்டியிருக்கும். மீதி கடனாகக் கிடைக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நிர்வாகம், இஞ்சினியரிங், மருத்துவம் ஆகிய படிப்புகளுக்கு செலவு அதிகம் என்பதால் கடன் தரப்படுகிறது. கல்விக்கடனின் சிறப்பு அதற்குத் தரப்படும் மொரடோரியம். கல்விக் காலம் முடிந்து, ஒரு வருடம் அல்லது வேலை கிடைத்து ஆறு மாதம் – இவற்றில் எது முதலில் வருகிறதோ – அப்போதிலிருந்து கடனைக் கட்ட ஆரம்பித்தால் போதும்.

இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனங்கள், (புதியவையோ அல்லது செகண்ட் ஹேண்டோ), கன்ஸ்யூமர் குட்ஸ் எனப்படும் டி.வி., வாஷிங் மெஷின் போன்றவை வாங்குவதற்கும் கடன் கிடைக்கும். கடன் கேட்பவரின் கிரெடிட் ஸ்கோர், கடனுக்கும், வருமானத்திற்கும் உள்ள ரேஷியோ, கடன் காலம் இவற்றைப் பொறுத்து கடன் தொகை நிர்ணயிக்கப் படுகிறது.

Loan (Representational Image)
Loan (Representational Image)
இந்த 3 விஷயங்களுக்காக மட்டும் கடன் வாங்குவது புத்திசாலித்தனமே! - பணம் பண்ணலாம் வாங்க - 41

வரிவிலக்கு பெறும் கடன்கள்:

நாம் வீட்டுக் கடனுக்கு கட்டும் வட்டிக்கு வருமான வரி செக்.24இ-ன் கீழ் ரூ.2 லட்சம் வரையும், அசலுக்கு செக்.80சி-யின் கீழ் ரூ.1.5 லட்சம் வரையும் வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

பர்சனல் லோனில் பிசினஸை மேம்படுத்த வாங்கும் கடனுக்கு வரிவிலக்கு உண்டு. கல்விக்கடனில் நாம் கட்டும் வட்டித் தொகைக்கு மட்டும் வருமான வரி செக்.80இ-யின் கீழ் வரி விலக்கு கிடைக்கிறது.

இந்த ஏரியாவில் புதிதாக வேகமெடுத்திருப்பது டிஜிட்டல் லெண்டிங். அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் காணலாம்.

- இனி அடுத்து திங்கள் கிழமை காலை 9 மணிக்கு சந்திப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு