கடந்த வாரம் வெளியான 10-வது அத்தியாயத்தைப் படித்த சந்திரசேகர், ``அவசியமான கட்டுரை. வளர்ந்துவரும் வணிகர்களுக்கும், இளைய தலைமுறைக்கும் பயன் தரும்’’ என்று சொல்லியிருக்கிறார். சக்திவேல் என்கிற வாசகர், ``பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனம் ஃபின்டெக் கம்பெனியா’’ என்று கேட்டிருக்கிறார். பஜாஜ் ஃபின்சர்வ் என்பது வங்கிசாரா நிதி நிறுவனம் ஆகும். கடன் விஷயத்தில் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறைகளேயே பஜாஜ் ஃபின்சர்வ் நிறுவனமும் பின்பற்றும் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
சரி, இனி இந்த வார அத்தியாயத்துக்கு வருவோம்.
``சார், உங்களுக்கு கிரெடிட் கார்டு தரத் தயார். வாங்கிக்கிறீங்களா?’’ என்கிற போன் நம்மில் பலருக்கும் தினம் தினம் வரவே செய்கிறது. சாதாரண மனிதர்களைவிட சம்பளத்தில் வேலை பார்க்கும் அலுவலகப் பணியாளர்களுக்கு இது மாதிரியான போன்கள் அடிக்கடி வந்துகொண்டுதான் இருக்கின்றன.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSகிரெடிட் கார்டு என்னும் ஆபத்பாந்தகன்
தனி நபருக்கு வழங்கப்படும் கடன்களில் முக்கியமானது இந்த கடன் அட்டை. இந்த கடன் அட்டையை பயன்படுத்துவது பற்றியும், இந்த கடன் அட்டையின் பயன்பாடுகள் பற்றியும், இதிலிருக்கும் அபாயம் பற்றியும் பல்வேறு பத்திரிகைகளில் நிதி நிபுணர்கள் பேசிய / எழுதிய கட்டுரைகளை நீங்கள் படித்திருப்பீர்கள். இந்த கடன் அட்டைகளை வங்கிகளே பெரும்பாலும் வழங்குகின்றன. தனிநபர்களுக்கு வழங்கப்படும் கடனில் அதிகமாக வட்டி வசூலிக்கப்படுவது இந்த கிரெடிட் கார்டில்தான். இந்தக் காரணத்திற்காகவே இந்த கிரெடிட் கார்டின் உபயோகத்தைப் பற்றி பல நிபுணர்கள் சாதாரண மக்களை எச்சரிக்கிறார்கள்.

இரு வகையான கடன் அட்டை
கடன் அட்டையில் இரண்டு வகை உண்டு. ஒன்று, பற்று அட்டை (Debit Card); இன்னொன்று, கடன் அட்டை (Credit Card). இந்த இரண்டுக்கும் உள்ள முக்கியமான வித்தியாசம், பற்று அட்டையில் உங்களின் வங்கிக் கணக்கில் பணம் இருந்தால் மட்டுமே எடுக்க முடியும். ஆனால், கடன் அட்டையில் நீங்கள் பணத்தை பயன்படுத்தி விட்டு பிறகு செலுத்திக் கொள்ளலாம். இந்த வசதியே கடன் அட்டையில் உபயோகத்தில் உள்ள அபாயத்தை எடுத்துரைக்கிறது.
இந்தக் கடன் அட்டைகளில் இணை முத்திரைக் கடன் அட்டையில் (Co Branded Credit Card) முதல் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக கொடுக்கப்படும் சிறப்புச் சலுகை கடன் அட்டை வரை பல்வேறு விதமான கடன் அட்டைகளை வங்கிகள் வழங்குகின்றன. ஒவ்வொரு விதமான கடன் அட்டைகளுக்கும், ஒவ்வொரு விதமான கடன் தொகை அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த கடன் தொகை அளவானது தங்களின் வயது, கல்வித்தகுதி, வேலை பார்க்கும் நிறுவனம், பதவி, வருமானம், தற்போது இருக்கும் மாதத் தவணைகள் மற்றும் உங்களின் கடன் தகவல் அறிக்கை ஆகியவற்றைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. வங்கிகள் வழங்கும் கடன்களிலேயே கடன் விண்ணப்பத்தைப் பரிசீலிப்பதில் ஆரம்பித்து, கடன் வழங்குவது மற்றும் கடன் அட்டை வழங்கியபின் வாடிக்கையாளரை நிர்வகிப்பது போன்ற அனைத்து விஷயங்களிலும் மின்னணுமயமாக்கப்பட்ட சேவை ஒன்று உண்டு என்றால், அது இந்தக் கடன் அட்டையில் மட்டுமே.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
கடன் அட்டையைத் தவிர்ப்பது சரியா?
சில நிதி ஆலோசகர்கள் கடன் அட்டை வாங்குவதையே தவிர்க்குமாறு கூறுகிறார்கள். அது ஏற்புடையதல்ல. உங்களின் நிதி மேலாண்மையில் ஒரு ஒழுக்கத்தையும், கட்டுப்பாட்டையும் கொண்டுவருவதற்கு இந்தக் கடன் அட்டைகள் உதவிபுரிகின்றன. உங்களின் வருமானம் மற்றும் பணத்தை நிர்வகிப்பதிலும், உபயோகிப்பதிலும் ஒழுக்கம் மற்றும் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருந்தால், இந்தக் கடன் அட்டை உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஆனால் அவ்வாறு ஒழுக்கம் மற்றும் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது கடன் அட்டை என்றில்லாமல், நீங்கள் வாங்கும் அனைத்து கடன்களுக்குமே பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆனால், கிரெடிட் கார்டு வைத்துக்கொள்ளலாமா, வேண்டாமா என்பது வேறு கேள்வி. அதை வைத்திருப்பதில் சில நன்மைகள் இருந்தாலும் பல கெடுதல்களும் விளையவே செய்யும். காரணம், தற்போது பல வங்கிகள் இந்தக் கடன் அட்டையின் கடன் தொகை அளவை தாராளமாகவே நிர்ணயிக்கின்றன. இது தனிநபரின் வாங்கும் சக்தியை அதிகரித்தாலும், அநாவசியமான நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்றே கூறலாம்.

கிரெடிட் கார்டில் எந்தத் தேதியில் பொருள் வாங்கினால் லாபம்?
நாம் ஏற்கெனவே சொன்னபடி, இந்தக் கடன் அட்டைக்கு விதிக்கப்படும் வட்டியானது மிகவும் அதிகமாக இருக்கிறது. அதாவது, தோராயமாக மாதம் மூன்று சதவிகித வட்டி என்று வசூலிக்கப்படுகிறது. உதாரணமாக, நீங்கள் ஜனவரி மாதம் 11-ம் தேதி ரூ.30,000-யை கிரெடிட் கார்டு மூலம் பொருள் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தச் செலவு ஏப்ரல் 11-ம் தேதி தயாராகும் கடன் அட்டை அறிக்கையிலேயே இடம்பெற்றுவிடும். இந்தத் தொகையை முழுவதுமாகவோ அல்லது அதில் 5% அதாவது, ரூ.1,500-யை, ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்துமாறு கடன் அட்டை நிறுவனம் மாதாந்திர அறிக்கையில் குறிப்பிடும். இதன்மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் உங்களுக்கு 22 நாள்கள் மட்டுமே கிடைக்கும்.
இதையே நீங்கள் ஏப்ரல் 12-ம் தேதி அன்று ரூ.30,000-யை கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்தால், அது மே 11-ம் தேதி கடன் அட்டை மாதாந்திரத் தகவல் அறிக்கையில் இடம்பெறும். இதன்மூலம் கடனை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் 48 நாள்கள் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது, 48 நாள்கள் எந்த வட்டியும் இல்லாமல் கடன் பணத்தை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுதான் கிரெடிட் கார்டில் இருக்கும் மிகப் பெரிய செளகரியம். ஆனால், கடன் அட்டை தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்தத் தொகையையும் மாதந்திரத் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதிக்கு முன்பாகக் கட்டிவிடுவது நல்லது. குறைந்தபட்ச தொகையான 5% தொகையை மட்டும் நீங்கள் செலுத்தினீர்கள் என்றால் ஆபத்தில் மாட்டிக்கொள்வீர்கள்.

தயவு செய்து பணம் எடுக்காதீர்கள்!
கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி எந்த விதமான பணமும் எடுக்கவே எடுக்காதீர்கள். ஏனெனில் நீங்கள் எடுக்கும் அந்தக் கடனுக்கும் அதே மாதம் 3% வட்டி வசூலிக்கப்படும். இது மிகவும் அதிகமானது ஆகும். அவ்வாறு உங்களுக்கு பணம் தேவைப்படும் நிலையில் தனிநபர்களிடம் 1% அல்லது 2% வட்டிக்கு கடன் வாங்கலாம்.
கடன் அட்டையில் பணத்தை எடுத்துவிட்டு, அதை மாதத் தவணையாக திரும்பக் கட்டுகிற மாதிரியான கடனாக மாற்ற முயற்சிக்காதீர்கள். ஏனெனில் அதற்கான வட்டி விகிதமும் மாதம் 3% என்கிற அளவிலேயே இருக்கும். ஒருவேளை, ஒரு மாதத்தில் உங்களின் கடன் அட்டையில் உள்ள நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல்போகும் நிலையில், அதை கடனாக மாற்றிக் கொள்ளலாம். அப்படிக் கடனாக மாற்றும் சமயத்தில், அடுத்தடுத்த மாதங்களில் கடன் அட்டையைப் பயன்படுத்தினால் அந்தத் தொகை முழுவதையும் அந்தந்த மாதங்களில் கண்டிப்பாகத் திருப்பி கட்டிவிட வேண்டும். அப்படிக் கட்டவில்லை எனில், நீங்கள் ஏற்கெனவே கடன் அட்டையில் பயன்படுத்திய தொகையை கடனாக மாற்றியதற்கான அதிக வட்டி மற்றும் இப்போதுள்ள நிலுவைத் தொகை மீது அதிக வட்டி என்று மிகப் பெரும் கடன் புதைகுழிக்குள் சிக்க நேரிடும்.
ஆன்லைனுக்கு வாருங்கள்...
கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்துபவர்கள் உங்களின் ஆன்லைன் பயன்பாட்டிற்கு கிரெடிட் கார்டு பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் ஏதேனும் தவறுகளோ மோசடிகளோ நடந்தால், அதை வங்கியில் தெரிவித்தால் அதை அவர்கள் நிவர்த்தி செய்யவும் மற்றும் தள்ளுபடி செய்யவும் வாய்ப்பு உள்ளது.

பணம் கட்ட எளிய வழி...!
ஒருவர் பல விதமான கடன் அட்டைகளை வைத்திருந்தால், அப்போது கடன் அட்டை மாதாந்திர தகவல் அறிக்கை தேதியை நினைவில் வைத்துக்கொண்டு, எந்தக் கடன் அட்டையை உபயோகிப்பது என்பது பற்றி குழப்பம் வரலாம். ஆகவே, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கடன் அட்டைகளைப் பயன்படுத்துபவர்கள், அந்தந்தக் கடன் அட்டையின் மாதாந்திர தகவலறிக்கை தேதியை, சிறிய அளவில் கடன் அட்டையின் பின்புறம் குறித்து வைத்துக் கொள்ளலாம். இதைக் கொண்டு எந்த கடன் அட்டையை எந்தத் தேதியில் எந்த செலவினத்திற்குப் பயன்படுத்துவது என்று முடிவு செய்துகொள்ளலாம். அதன் மூலம் உங்களுக்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் அதிகமாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
சரி, இப்போது ஒரு கேள்வியைக் கேட்கிறேன். இதற்கான பதிலை கமென்ட் பகுதியில் குறிப்பிடுங்கள்.
கிரெடிட் கார்டு கடன்களுக்கு பொதுவாக விதிக்கப்படும் வட்டி எவ்வளவு?
1. 12%
2. 24%
3. 36%
4. 46%
- வாங்குவோம்.