Published:Updated:

நகைக்கடனுக்கு நீங்கள் கட்டும் வட்டி சரியா? ஓர் அலசல் #LoanVenumaSir - 13

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, தங்க நகையின் மதிப்பில் 75% வரை கடனாகக் கொடுக்கலாம். இந்தக் கடன், நகை மதிப்பு சதவிகிதத்துக்கு ஏற்றபடி வட்டி விகிதமும் தீர்மானிக்கப்படும்.

நகைக்கடன் என்பது எல்லோராலும் எளிதில் வாங்கக்கூடிய கடனாகும். தங்கத்தை விற்றும் பணமாக்கிக் கொள்ளலாம் அல்லது அடகு வைத்தும் பணமாக்கிக் கொள்ளலாம் என்ற முக்கியமான ஒரு காரணத்துக்காகவே நம்மில் பெரும்பாலும் தங்கத்தில் முதலீடு செய்கிறோம். பெரும்பாலான நிதி மேலாண்மை வல்லுநர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதை டெட் இன்வெஸ்ட்மென்ட் (Dead Investment) என்று கூறுகிறார்கள். ஏனென்றால் தங்கத்தில் முதலீடு செய்தால், அந்த தங்க நகை அல்லது தங்கக் கட்டி, உங்களின் பாதுகாப்புப் பெட்டகத்தில் பத்திரமாக இருக்கும். அதனால் நாட்டுக்கு அந்நியச் செலாவணி விரயமே தவிர, வேறு எந்த உபயோகமும் இல்லை. அதே பணத்தை நீங்கள் வங்கிகளிலும், பங்குச் சந்தை அல்லது பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களிலும், சிறு சேமிப்பு திட்டங்களிலும் முதலீடு செய்தால், அந்தப் பணம் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடனாகக் கொடுக்கப்படும். அத்தகைய வளர்ச்சித் திட்டங்கள் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.

Gold
Gold
Photo: Image by PublicDomainPictures from Pixabay

நம்பர் 1 இறக்குமதியில் இந்தியா

உலகத்திலேயே தங்கத்தை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கிறது. நம் நாட்டின் மொத்த இறக்குமதியில் 10% மதிப்புக்கு தங்கத்தை இறக்குமதி செய்கிறோம். இது நடப்புக் கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்க வழி செய்கிறது. இது ஒரு நாட்டின் பொருளாதாரத்துக்கு நல்லதல்ல. ஆனால், பெரும்பாலான நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் ஏராளமாக முதலீடு செய்கின்றன. டாலர் மதிப்பு குறையும்போதெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்தியாவிலுள்ள ரிசர்வ் வங்கியும் அவ்வாறு தங்கத்தில் முதலீடு செய்துள்ளது.

நம் மக்களிடையே உள்ள தங்க மோகம் காரணமாக, தங்க இறக்குமதியும், தங்க விற்பனையும் ஆண்டாண்டுக் காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. ஆனால், அதே தங்கம் பணத் தேவை இருக்கும் காலத்தில் சாமானிய மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்குகிறது. நம்மிடம் உள்ள நகைகளை வங்கியிலோ, வங்கிசாரா நிதி நிறுவனத்திலோ அடகு வைத்து, அதற்கான பணத்தை நகைக் கடனாகப் பெறலாம்.

நகைக் கடன் மட்டும் தருவதற்கென்றே பிரத்யேகமான நிதி நிறுவனங்களும் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை கேரளாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுபவை. 2014-ம் ஆண்டு தகவலின்படி, தங்க நகைக் கடன் வழங்கும் இந்தியாவின் மூன்று முக்கிய நிதி நிறுவனங்களில் உள்ள தங்கத்தின் அளவானது, ஸ்வீடன், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள தங்கத்தின் அளவைவிட அதிகமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இருக்கும் கடன் வகைகளிலேயே துரிதமாகப் பெறக்கூடிய கடனாக நகைக்கடன் உள்ளது.

Gold
Gold
Image by Mian Shahzad Raza from Pixabay

தங்க நகைக் கடனுக்கான தகுதிகள்

மற்ற கடன்களைப் போலவே தங்களின் வயது, தொழில், வருமானம், நகையின் மதிப்பு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு கடன் அளவு தீர்மானிக்கப்படுகிறது. ரூ.5,000-லிருந்து ரூ.50 லட்சம் வரை கடனாகக் கொடுக்கப்படுகிறது. கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் ஆனது ஒரு வாரத்தில் இருந்து ஒரு வருடம் வரை நிர்ணயிக்கப்படுகிறது. பிற பெரிய வகை நகைக் கடன்கள் மூன்று வருடங்கள் வரைகூட கொடுக்கப்படுகின்றன. கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தில் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு, கடன் முதிர்வடையும் நேரத்தில் அசலைத் திருப்பிக் கொடுத்தால் போதும் என்ற திட்டமும் நடைமுறையில் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல் வைத்த நகைகள்

கல் வைத்த மற்றும் கல் வைக்காத தங்க நகைகளையும், தங்கக் காசுகளையும் அடமானமாக எடுத்துக்கொள்கின்றனர். கல் வைத்த நகைகள் என்றால் கற்களின் எடை நகையின் மொத்த எடையில் 40 சதவிகிதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், அத்தகைய கற்கள் வைரம், வைடூரியம் போன்ற கற்களாக இருந்தால், அவைகளைத் தனியாக மதிப்பிடுவார்கள்.

24 காரட் தங்க காசுகள் மற்றும் 22 காரட், 20 கேரட், 18 கேரட் தங்க நகைகளை அடமானமாக எடுத்துக்கொள்வார்கள். தங்க நகைகளின் காரடகுக்கேற்ப தங்கத்தின் சுத்தத்தன்மை குறைக்கப்பட்டு தங்க நகைகள் மதிப்பிடப்படும். புராதன நகைகள், கோயில் நகைகள், உடைந்த நகைகள், தாலி, மோதிரம், மூக்குத்தி போன்ற நகைகளைப் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் அடமானமாக எடுத்துக் கொள்வது கிடையாது. பொதுவாக, கடன் தொகை ரூ.5 லட்சம் வரை அந்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தின் மதிப்பீட்டாளர் தங்க நகைகளை மதிப்பீடு செய்து கடன் வழங்கிவிடுவார்கள். கடன் தொகை ரூ.5 லட்சத்தைத் தாண்டினால், வங்கியிலேயே இருக்கும் ஒரு மதிப்பீட்டாளர் மற்றும் ஒரு வெளிமதிப்பீட்டாளர் கொண்டும் தங்க நகை மதிப்பீடு செய்யப்படும்.

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, தங்க நகையின் மதிப்பில் 75% வரை கடனாகக் கொடுக்கலாம். இந்தக் கடன், நகை மதிப்பு சதவிகிதத்துக்கு ஏற்றபடி வட்டி விகிதமும் தீர்மானிக்கப்படும்.

Gold
Gold
Image by 8180766 from Pixabay

ஏலத்தில் விற்பார்கள்

வட்டித் தொகை மூன்று மாதங்கள் வரையிலும் கட்டப்படவில்லை என்றால், அது வாராக் கடனாகக் கருதப்பட்டு, அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை ஏலத்தில் விட்டு, கடனை வசூல் செய்யும் முறைகளில் வங்கிகள் இறங்கிவிடுவார்கள். அவ்வாறு ஒருமுறை தங்க நகைகள் ஏலத்தில் விடப்பட்டு விற்கப்பட்டு விட்டால், மீண்டும் அதே நகைகளை நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதாகக் கூறினாலும் பெற இயலாது.

அதிக வட்டியில் நகைக்கடன் வேண்டாமே!

இந்தத் தங்க நகைக் கடன், வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாது, நமது இருப்பிடப் பகுதியிலேயே இருக்கும் சிறு, குறு நிதி நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது. இந்தச் சிறு, குறு நிதி நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களாக இருக்கும். இவர்கள் பொதுவாக ரூ.1.50-லிருந்து ரூ.2 வரை, ரூ.100 கடனுக்கு மாத வட்டியாக வாங்குகிறார்கள். அதாவது, நீங்கள் ஒரு லட்சம் நகைக் கடன் இவர்களிடமிருந்து பெற்றால், மாத வட்டி ரூ.1.50 என்றால், நீங்கள் ரூ.1,500 மாத வட்டியாகக் கட்ட வேண்டும். இதில் ஏதாவது ஒரு மாதம் கட்டவில்லை என்றாலும், அபராதத் தொகையையும் சேர்த்து வட்டி விகிதம் உயர்ந்துவிடும். இவ்வாறு கடன் வாங்கியதில் ஏதேனும் பிரச்னைகள் என்றால், தாங்கள் ரிசர்வ் வங்கியிலோ, வங்கிக் குறை தீர்ப்பாயத்திலோ புகார் செய்ய முடியாது. ஏனெனில், இந்த நிறுவனங்கள் ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத நிறுவனங்களாகும். ஆகவே, நீங்கள் காவல் துறை உதவியையே நாட வேண்டியிருக்கும்.

Gold
Gold
Image by Queena Deng from Pixabay
கடன்களுக்கு வங்கிகள் எப்படி வட்டிவிகிதம் கணக்கிடுகின்றன தெரியுமா? - #LoanVenumaSir - 7

இப்போது இந்தத் தங்க நகைக் கடனை ஒரு வங்கிசாரா நிதி நிறுவனக் கடன் திட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்போம். பெயர் பெற்ற நகைக் கடன் நிதி நிறுவனம் மாதம் 99 பைசா வட்டிக்கு நகைக் கடன் தருவதாகக் கூறுகிறது. அதாவது நீங்கள் ரூ. ஒரு லட்சம் நகைக் கடன் பெற்றால், ஒவ்வொரு மாதமும் ரூ.990 வட்டி கட்ட வேண்டும். ஒரு வருடத்துக்கு ரூ.11,880 வட்டியாக கட்டியிருப்பீர்கள். இதை IRR (Internal Rate of Return) எனப்படும் வட்டியாகப் பார்த்தால், 21.25 சதவிகிதமாக வரும். இதைப் பற்றி நாம் விரிவாக வட்டிவிகிதம் பகுதியில் பார்த்தோம். இதுவே மாதத் தவணைத் திட்டமாக இருந்தால் மாதம் ரூ.9,323 மாதத் தவணையாக 12 மாதங்களுக்கு கட்ட வேண்டியது இருக்கும். எனவே, குறைந்த வட்டியில் கடன் வாங்குவதே சரியாக இருக்கும். உதாரணமாக, சில பொதுத்துறை வங்கிகளில் 75 காசுகளுக்கே கடன் கிடைக்கிறது. அந்த வங்கிகளில் கடன் பெற்றால், நீங்கள் அதிகம் வட்டி கட்ட வேண்டியிருக்காது!

கேள்விக்கு என்ன பதில்?

சரி, அத்தியாயத்தின் முடிவில் ஒரு கேள்வி. இதற்கான பதிலை கமென்ட் பகுதியில் சொல்லுங்கள்.

எந்தக் கடனை ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றிக்கொள்ளலாம்.

1. வீட்டுக்கடன்.

2. அடமானக்கடன்.

3. தங்க நகைக் கடன், வாகனக்கடன், தனிநபர் கடன்.

4. எந்தவொரு கடனையும் மாற்றிக்கொள்ள முடியாது.

- வாங்குவோம்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு