Election bannerElection banner
Published:Updated:

வங்கிக்கடன் விண்ணப்பங்கள்... கடன் தகவல் அறிக்கை ஏன் முக்கியமாகிறது? #LoanVenumaSir - 9

#LoanVenumaSir
#LoanVenumaSir

நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் சில சமயங்களில் கஷ்டங்கள் வருவதற்கும் காரணமாக விளங்கும் வங்கிக் கடன் பற்றி முழுமையாக எடுத்துச் சொல்லத்தான் இந்த `லோன் வேணுமா சார்?’ தொடர். அத்தியாயம் - 9

கடந்த அத்தியாயத்தின் இறுதியில் எந்தக் கடனுக்கு வட்டி விகிதம் குறைவு என்று கேட்டிருந்தோம். பலரும், வீட்டுக்கடன் என்று சொல்லியிருந்தார்கள். கார்த்திகேயன் பி என்பவர் மட்டும் கார் கடன் என்று குறிப்பிட்டிருக்கிறார். இவருக்கு மட்டும் கார் கடன் குறைவான வட்டியில் கிடைக்கிறதோ, என்னவோ! கணேஷன் என்பவர், ``கல்விக் கடனுக்கு வீட்டுக் கடனைவிட அதிகம் வாங்குகிறார்கள். அது தவறு. அரசு, டாஸ்மார்க்குத்தான் வசதி பண்ணுகிறது. குடிகார நேரம்’’ என்று தன் ஆதங்கத்தைக் கொடுத்திருக்கிறார்.

சரி, இந்த வார அத்தியாயத்துக்கு வருவோம். வங்கிகள் நமக்குக் கடன் தரும்போது கடன் தகவல் அறிக்கையைக் கட்டாயம் பார்ப்பார்கள் என்று கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தோம் அல்லவா? இந்தக் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும் பொதுவான அம்சங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

சிபில் ஸ்கோர்
சிபில் ஸ்கோர்

நீங்கள் வாங்கிய அனைத்துக் கடன்களும் இந்தக் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும். நீங்கள் வாங்கி கட்டிமுடித்துள்ள கடன்கள் மற்றும் தற்போது மாதத் தவணை செலுத்தும் கடன்கள் ஆகியவற்றின் விவரங்கள் அதாவது, கடன் தொகை, மாதாந்திர தவணைத் தொகை, வட்டி விகிதம், கடனை திருப்பிச் செலுத்தும் காலம், எவ்வளவு மாதாந்தரத் தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் எவ்வளவு தவணைகள் தவணைத் தேதி முடிந்த பின்பும் செலுத்தப்படாமல் உள்ளன, எவ்வளவு தவணைகள் தாமதமாகச் செலுத்தப்பட்டுள்ளன போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

நாம் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளது போல, எந்த வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனத்தில் இந்தக் கடன் வாங்கப்பட்டுள்ளது என்ற விவரம், வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்கள் கடனை பரிசீலிக்கும்போது எடுக்கும் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறாது. ஆனால், தாங்கள் தனிப்பட்ட முறையில் எடுக்கும் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும். இந்தத் தகவல்களை அதாவது, எந்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் கடன் வாங்கினீர்கள் என்பதை நீங்களே கடன் விண்ணப்பித்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும். ஒரு சில சமயங்களில் உங்களின் கடன் பரிசீலிக்கப்படும்போது, வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மாதாந்திரத் தவணைகளைப் பார்த்து அவர்களே தெரிந்துகொள்வார்கள்.

நீங்கள் மற்றவர்கள் வாங்கிய ஏதாவது கடனுக்கு உத்தரவாதம் அளித்திருந்தாலும், அந்தக் கடன் தகவல்களும் உங்கள் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும். அதையும் கணக்கில் கொண்டே உங்களின் கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் மற்றும் உங்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை அளவும் நிர்ணயிக்கப்படும்.

Tension (Representational Image)
Tension (Representational Image)

உங்களின் நண்பர் மற்றும் உறவினருக்காகக் கடன் வாங்கி இருந்தாலும், அந்தக் கடன் தங்கள் பெயரில் இருக்கும்பட்சத்தில் அதுவும் தங்கள் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும்.

கடன் தகவல் அறிக்கையில் பெரும்பாலும் சரியான தகவல்களை இடம்பெற்றிருக்கும். ஒருவேளை, தவறான தகவல்கள் இருக்கும்பட்சத்தில் எந்தக் கடன் தகவல் அமைப்பு அறிக்கையின் தவறான தகவல்கள் இடம் பெற்று இருக்கிறதோ, அந்த அமைப்புக்கு மின்னணு செய்தி அனுப்பி அந்தத் தவறான தகவல்களைச் சரிசெய்து கொள்ளலாம்.

நீங்கள் வாங்கிய கடன்கள் மட்டுமல்லாமல் நீங்கள் கடனுக்காக விண்ணப்பித்து அது நிராகரிக்கப்பட்டு இருந்தாலும், அதுவும் உங்களின் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறும். ஆகவே, நீங்கள் கடனுக்காக விண்ணப்பிக்கும்போது எந்த வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனத்தில் உங்களின் கடன் விண்ணப்பம் ஏற்கப்படும் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். இல்லையெனில் பலமுறை கடன் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டதற்கான தகவல்கள் கடன் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுவிடும். அது புதிய கடன்களை வாங்குவதற்குத் தடைக்கல்லாக அமைந்துவிடும்.

Savings (Representational Image)
Savings (Representational Image)

ரிசர்வ் வங்கி வகுத்துள்ள நெறிமுறைகளின்படி, வருடம் ஒருமுறை இலவசக் கடன் தகவல் அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கடன் தகவல் அமைப்புகள் தர வேண்டும் என விதி வகுத்துள்ளது. அதன்பேரில் தாங்கள் அந்தக் கடன் தகவல் அமைப்பின் வலைப்பக்கத்துக்கு சென்று விண்ணப்பித்து, தங்களின் இலவச கடன் தகவல் அறிக்கையைப் பெறலாம்.

வருடம் ஒருமுறை இவ்வாறான இலவசக் கடன் தகவலறிக்கை வசதியைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஏனெனில், தங்களுக்குத் தெரியாமல் தங்கள் ஆவணங்களைப் பயன்படுத்தி, யாரேனும் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தாலும் அல்லது கடன் வாங்கி இருந்தாலும் அதை இந்தக் கடன் தகவல் அறிக்கை மூலமாகக் கண்டுபிடித்துவிடலாம். அவ்வாறான தகவல்கள் இடம்பெற்றிருக்கும்பட்சத்தில் அந்தக் கடன் தகவல் அமைப்புக்கு தகவல் தந்து அதை சரிசெய்து கொள்ளலாம்.

கடன் தகவல் அமைப்புகள் அல்லாமல் சில இணையதளங்கள் இலவசக் கடன் தகவலறிக்கை தருவதாக விளம்பரப் படுத்துகிறார்கள். இவர்கள் அனைத்துத் தகவல்களையும் தங்களிடம் வாங்கிக் கொண்டு இலவசக் கடன் தகவல் அறிக்கையைத் தரலாம். ஆனால், தங்களிடம் வாங்கிய தகவல்களைப் பல்வேறு வியாபார நோக்கத்துக்காக அவர்கள் பயன்படுத்தலாம். ஆதலால் அத்தகைய நிறுவனங்களிடம் இருந்து இலவசக் கடன் தகவல் அறிக்கையைப் பெறாமல் தவிர்ப்பது நல்லது.

பொதுவாக, சிபில் எனப்படும் கடன் தகவல் அறிக்கையில் 300-லிருந்து 900 வரை மதிப்பெண் கொடுக்கப்படுகிறது. இந்தக் கடன் தகவல் அறிக்கையில் 700 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் இருந்தால், கடன் பெறுவது சுலபமானதாக இருக்கும். இந்த மதிப்பெண் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பது சிபில் கடன் தகவல் அமைப்புக்கு மட்டுமே தெரியும். ஆனால், நீங்கள் வாங்கிய கடன்களை சரியாகத் திருப்பிச் செலுத்தும்பட்சத்தில் உங்களுக்கு கண்டிப்பாக இந்த 700 அல்லது அதற்கும்மேல் மதிப்பெண் இருக்க வாய்ப்புள்ளது.

Bank (Representational Image)
Bank (Representational Image)
`இது சரியாக இருந்தால்தான் கடன் கிடைக்கும்!' - கடன் தகவல் அறிக்கை `ரகசியம்' என்ன? #LoanVenumaSir - 8

கடன் தகவல் அறிக்கையில் அனைத்து வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் எடுத்துள்ள அனைத்து விதமான கடன்களின் தகவல்களும் இடம்பெறும், இடம்பெற வேண்டும் என்று சொன்னாலும், ஒரு சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள் தங்களுடைய கடன் தகவல்களை முறையாக இந்த நான்கு கடன் தகவல் அமைப்புகளுக்கும் கொடுப்பதில்லை என்ற புகார் இருக்கிறது. அதை உணர்ந்துகொண்ட சில வாடிக்கையாளர்கள், அந்த மாதிரியான வங்கிசாரா நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதையே விரும்புகிறார்கள். ஏனெனில், வாங்கிய கடனைத் திருப்பி கட்டாமல் இருந்தாலும், அது கடன் தகவல் அறிக்கையில் இடம்பெறாது என்ற சாதகமான அம்சத்துக்காக அவ்வாறு முடிவெடுக்கிறார்கள். அது நீண்ட காலத்துக்குப் பயன் தராது. ஏனெனில், ரிசர்வ் வங்கிக்கு அந்தக் குறிப்பிட்ட வங்கிசாரா நிதி நிறுவனங்களின் கடன் தகவல்கள், இந்த நான்கு கடன் தகவல் அமைப்புகளுக்கும் கொடுப்பதில்லை என்று தெரியவந்தால், அந்த நிறுவனத்தின் மீது மிகப் பெரும் தொகையை அபராதமாக விதிக்க நேரிடலாம். அப்போது அந்த நிதி நிறுவனங்களின் கடன் தகவல் அனைத்தையும் கொடுக்க வேண்டி வரலாம். எனவே, உஷார்!

- வாங்குவோம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு