ஏன் வங்கிகள் உங்களுக்கு சில்லறைக் கடன்கள் வழங்க ஆர்வம் காட்டுகின்றன தெரியுமா? #LoanVenumaSir - 3

இந்த சில்லறைக் கடன்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது.
`லோன் வேணுமா சார்' என்கிற இந்தத் தொடர் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. கடந்த வியாழக்கிழமை அன்று வெளியான அத்தியாயத்தின் முடிவில், கடன் வாங்கும்போது எதை முக்கியமாகக் கவனிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். பலரும் இந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்லி இருக்கிறீர்கள்.
தமிழ்த்தம்பி என்பவர், கடனுக்கான வட்டியையும் காலத்தையும் பார்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். சிவகாமி என்பவர், ``கடன் தரும் நிறுவனம் (இந்திய ரிசர்வ் வங்கி நெறிமுறைகளைப் பின்பற்றுகிறதா என்பது முக்கியம்) மற்றும் வட்டி விகிதம் போன்றவை முக்கியமானவை'' என்று சொல்லியிருந்தார். கனகராஜ் பிரியா என்பவர், ``பேங்க்ல கடன் வாங்கக் கூடாது" எனக் கொஞ்சம் குத்தலாகப் பதில் சொல்லியிருக்கிறார். பதில் சொன்ன உங்கள் அனைவருக்கும் நன்றி. இவை பற்றி இன்னும் விரிவாக நாம் அடுத்தடுத்த அத்தியாயங்களில் பார்ப்போம். இன்று இன்னொரு முக்கியமான கடன் பற்றி பார்ப்போம்.
பொதுவாக, கடன் வாங்க அலைகிறவர்களில் ஐந்து லட்சம், பத்து லட்சம் கடன் வேண்டும் என்று தேடி அலைபவர்களைவிட ₹50,000, ₹75,000 கடன் வேண்டும் என்று அலைபவர்கள்தாம் இன்றைக்கு நம்மில் பலர். கடன் தொகை ஒன்று அல்லது இரண்டு லட்சம் ரூபாய்க்குள் இருந்தால், அது மாதிரியான கடன்களை சில்லறைக் கடன்கள் என்று அழைக்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.

இன்றைய தேதியில் பெரும்பாலான வங்கிகள், தொழில் நிறுவனங்களுக்குப் பல்லாயிரம் கோடி ரூபாயைக் கடனாகத் தருவதைவிட, தனிநபர்களுக்கு சில்லறைக் கடனாகக் கொடுக்கவே ஆர்வம் காட்டுகின்றன. இந்தப் போக்கு இருபது ஆண்டுகளுக்கு முன் அதாவது, 2000-களின் ஆரம்பத்தில் தொடங்கியது.
இந்த வகையான சில்லறைக் கடன்கள் கொடுப்பதில் ஆபரேட்டிங் காஸ்ட் என்று சொல்லப்படும் இயக்கச் செலவுகள் அதிகமாக இருந்தாலும், இந்த மாதிரியான கடன்களில் வாராக்கடன் சதவிகிதம் தற்போது வரையில் குறைவாகவே இருக்கிறது. மல்லையா மாதிரியான ஆட்கள் ஒரே சமயத்தில் பல ஆயிரம் கோடிகளை சுவாஹா செய்துவிடும் ஆபத்து இதில் இல்லை என்பதால், தனியார் வங்கிகளும் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் சில்லறைக் கடன்கள் வழங்குவதை முன்னெடுத்துச் சென்றாலும், 2010-க்குப் பிறகு பொதுத்துறை வங்கிகளும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கின.
இந்த சில்லறைக் கடன்களின் வளர்ச்சியானது நாட்டின் பொருளாதார வளர்ச்சியுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. நாட்டில் நுகர்வுக் கலாசார மற்றும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்ததால், சில்லறைக் கடன்களும் அபரிமிதமாக வளர்ச்சி அடைகின்றன.

வாங்கலாமா... வேண்டாமா?
இந்த வகை சில்லறைக் கடன்களை வாங்கலாமா, கூடாதா என்று கேட்டால், அது தனிப்பட்ட மனிதர்களின் தேவையைப் பொறுத்தே முடிவு செய்யலாம். காரணம், இந்த வகைக் கடன்களுக்காக வங்கிகள் அளிக்கும் தொகை அதிகபட்சம் சில லட்சங்கள் வரைதான். இதற்கான வட்டியும் அதிகபட்சம் 18 சதவிகிதத்துக்குள்தான் இருக்கும்.
சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள், வர்த்தகக் கணக்குகளை சரியாக நிர்வகிக்காதவர்களுக்கும், வருமான வரித் தாக்கல் செய்யாதவர்களுக்கும், முறைசாரா நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கும், ஏற்கெனவே கடன் வாங்கி சரியாகத் திருப்பிக் கட்ட முடியாதவர்களுக்கும் சற்று அதிக வட்டி விகிதத்தில் அதாவது, 20-லிருந்து 30 சதவிகித்தில் தனிநபர் கடன்களை வழங்குகின்றன. அதேபோல், சில வங்கிசாரா நிதி நிறுவனங்கள், சிறு, குறு கடன்களையும் (Micro Finance) சற்று அதிக வட்டி விகிதத்தில் வழங்குகின்றன. எனவே, அத்தியாவசியமாகக் கடன் வாங்க நினைப்பவர்கள் மட்டும் இந்த வகை சில்லறைக் கடனை வாங்கலாம்.
கடந்த டிசம்பர் 2019 இறுதி நிலவரப்படி, இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் கொடுத்துள்ள மொத்தக் கடன் தொகையில் கிட்டத்தட்ட 25% சில்லறைக் கடன்களாக உள்ளன. அதாவது, வங்கிகள் கொடுத்துள்ள ரூ.105 லட்சம் கோடி கடன் தொகையில் ரூ.23 லட்சம் கோடி கடன்கள் சில்லறைக் கடன்களாக உள்ளன. இந்த சில்லறைக் கடன்கள் பெரும்பாலும் தனிநபர்களுக்கே வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு கடனும் ஒவ்வொரு விதம்...
வங்கிகள் தனிநபர்களுக்கு வழங்கும் இத்தகைய கடன் வகைகளுக்குக் கடன் பரிசீலனை செய்வதிலும் மற்றும் கடன் தொகை அளவைத் தீர்மானிப்பதிலும் பல்வேறு விதமான வழிமுறைகளைக் கையாளுகின்றன.
ஒரு கடன் வகைக்குக் கையாளும் வழிமுறையை மற்றொரு கடன் வகைக்கும் மேற்கொள்வது சிரமம்தான். அதேபோல் ஒரு தனிநபர், ஒரு கடன் வகைக்கு தகுதி என்று எடுத்துக் கொண்டால், மற்றொரு கடன் வகைக்கும் அவர் தகுதியானவர் என்றும் சொல்லிவிட முடியாது.
ஒவ்வொரு விதமான கடன் வகைக்கும் வங்கிகள் வெவ்வேறு விதமான ஆவணங்கள் சரிபார்த்தல்களையும், பல்வேறு வழிமுறைகளையும், மென்பொருள் சார்ந்த முடிவுகளையும் மேற்கொள்கின்றன. தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் சில வங்கிகள் கடன் வழங்கும் முடிவை முழுவதுமாகச் செயற்கை நுண்ணறிவு மூலமாகவே மேற்கொள்கின்றன.
ஆனால், இன்றைய தேதியிலும் பெரும்பாலான வங்கிகளில் மனிதர்களே கடன் வழங்கும் முடிவை மேற்கொள்கிறார்கள். அவ்வாறு கடன் வழங்கும் முடிவை பல்வேறு ஆவணங்களையும், கணக்கு வழக்குகளையும், சரிபார்த்தல்களையும், கடன் கொள்கை சார்ந்த முடிவுகளையும் கணக்கில் கொண்டு மேற்கொண்டாலும், இது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நடக்கிறதா என்று உறுதி கூற முடியாது. ஆகவேதான் பெரும்பாலான வங்கிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் முனைப்பு காட்டுகின்றன.
நீங்கள் சில்லறைக் கடனை வாங்கி இருக்கிறீர்களா? அதற்கான வட்டி விகிதம் எவ்வளவு என்று தெரியுமா? இந்தக் கேள்விக்கான பதிலை நீங்களே உங்கள் வங்கியிடம் கேட்டோ அல்லது ஆவணங்களைப் பார்த்தோ தெரிந்துகொள்ளுங்கள்.
இப்போது உங்களிடம் இன்னொரு கேள்வி. கடன் வாங்கும்போது மாதம் ஒரு வட்டி என்பது எத்தனை சதவிகிதம்?
* 3%
* 9%
* 12%
* 17%
அடுத்து வியாழக்கிழமை சந்திப்போம். அதுவரை உங்களின் கருத்துகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்!
- வாங்குவோம்