Published:Updated:

வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கிறீங்களா... இந்த கே.ஒய்.சி பிரச்னைகளை தெரிஞ்சுக்கோங்க! #LoanVenumaSir -5

#LoanVenumaSir

அது என்ன கே.ஒய்.சி... இதனால் ஒருவருக்குக் கடன் கிடைக்காமல் போகுமா?

வங்கிக்கடனுக்கு விண்ணப்பிக்கிறீங்களா... இந்த கே.ஒய்.சி பிரச்னைகளை தெரிஞ்சுக்கோங்க! #LoanVenumaSir -5

அது என்ன கே.ஒய்.சி... இதனால் ஒருவருக்குக் கடன் கிடைக்காமல் போகுமா?

Published:Updated:
#LoanVenumaSir

நங்கநல்லூர் ராகவன் இரண்டு, மூன்று ஆண்டுகள் அலைந்ததில் கடந்த ஜூலை மாதம் பொதுத்துறை வங்கி ஒன்றில் ரூ.1 லட்சம் சாங்ஷன் ஆகிவிட்டது. கொரோனா காலத்தில் பலரும் வங்கிக்கு வந்து கடன் வேண்டும் என்று கேட்காததுனாலோ என்னவோ, ராகவனுக்குக் கடன் வரம் கிடைத்துவிட்டது. கொரோனா காலத்தில் சம்பள வெட்டுப் பிரச்னையைச் சமாளிக்க இந்தக் கடன் உதவும் என்கிற கனவு கண்டுவந்தார் ராகவன்.

ஆனால், நாளைக்குக் கடன் என்கிற நிலையில் புதிய பிரச்னை ஒன்றைக் கிளப்பினார்கள் வங்கி அதிகாரிகள். ராகவனின் கே.ஒய்.சி-ல் (KYC - Know Your Customer) ஏதோ பிரச்னையாம். அந்தப் பிரச்னையைச் சரிசெய்தால்தான் கடன் தர முடியும் என்று கறாராகச் சொல்லிவிட்டார்கள் வங்கி அதிகாரிகள்.

கே.ஒய்.சி.க்காக வங்கி அதிகாரிகள் கேட்ட முக்கிய ஆவணம் ஒன்று ராகவனிடம் இல்லை. இதனால் கே.ஒய்.சி பிரச்னை இழுத்துக்கொண்டே போனது. சில நாள்கள் அலுவலகத்தில் லீவு போட்டுவிட்டு, வங்கியே கதியாகக் கிடந்த ராகவனுக்கு வெறுத்துப் போனது. ``சரிங்க சார், நீங்க சொல்ற எல்லா டாக்குமென்ட்டையும் எடுத்துட்டு வர்றேன்’’ என்று பேங்க் மேனேஜரிடம் சொல்லிவிட்டு வந்தவர், பிற்பாடு போக வேண்டும் என்று நினைக்கவே இல்லை.

அது என்ன கே.ஒய்.சி... இதனால் ஒருவருக்குக் கடன் கிடைக்காமல் போகுமா என்று கேட்கிறீர்களா?

கே.ஒய்.சி
கே.ஒய்.சி

கே.ஒய்.சி ஆவணங்கள் (KYC Documents)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தனிநபர்கள் கடன் வாங்க முயலும்போது ``உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளுங்கள்’’ எனப்படும் `நோ யுவர் கஸ்டமர்’ (KYC - Know Your Customer)’’ என்பது இன்றைக்கு எல்லா வங்கிகளும் கட்டாயம் ஃபாலோ செய்ய வேண்டிய நடைமுறை ஆகிவிட்டது. இந்த கே.ஒய்.சி-க்கு வாடிக்கையாளர்கள் முக்கியமான பல ஆவணங்களை வங்கிகளிடம் தந்தாக வேண்டும். அதற்கு அத்தகைய ஆவணங்களைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

என்னென்ன ஆவணங்கள்?

கே.ஒய்.சியைப் பொறுத்தவரை, இருப்பிட ஆதாரமாக மற்றும் அடையாள ஆதாரமாக உங்களின் பான் கார்டு, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாகன ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஒன்று அல்லது இரண்டைக் கொடுத்தால், வங்கிகளில் தாராளமாக ஏற்றுக்கொள்வார்கள். இது தவிர, அலுவலக முகவரி ஆதாரம், கையொப்பம் ஆதாரம் போன்ற ஆவணங்களையும் தயாராக வைப்பது நல்லது.

இந்த ஆவணங்களைத் தவிர, இன்ன பிற ஆவணங்களையும் இருப்பிட ஆதாரமாகவும் மற்றும் அடையாள ஆதாரமாகவும் வங்கிகளும் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களும் ஒப்புக்கொள்கின்றன. இத்தகைய ஆவணங்கள் ரிசர்வ் வங்கியால் வரையறுக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன ஆவணங்கள் என்பதை நீங்கள் தமிழில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டுமெனில், கீழே குறிப்பிட்டுள்ள லிங்கில் சென்று படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

https://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/FAQs.aspx?Id=840

Bank ATM
Bank ATM
Photo by Eduardo Soares on Unsplash

சி.கே.ஒய்.சி என்றால்..?

சரி, கே.ஒய்.சி பற்றித் தெரிந்துகொண்டுவிட்டோம். இப்போது புதிதாக சி.கே.ஒய்.சி (CKYC) என்று ஒன்று வந்திருக்கிறது. அது என்ன சி.கே.ஒய்.சி?

CKYC அதாவது, Central Know Your Customer Registry என்ற முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முறையில் ஒரு வங்கியில் நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும்போது உங்களின் கே.ஒய்.சி ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி அந்த வங்கி CKYC எனும் 14 இலக்க எண்ணை வழங்கும். அந்த எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விட்டால், நீங்கள் எதிர்காலத்தில் எந்த வங்கியிலும் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிலும் கடன் பெறும்போது இந்த CKYC எண்ணை மட்டும் கொடுத்தால் போதும். இதனால் உங்களின் நேரம் மிச்சம் ஆவதுடன் உங்கள் தொடர்பான ஆவணங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்கலாம். இந்த CKYC நடைமுறையானது பங்கு வர்த்தகம் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓகே, சி.கே.ஒய்.சி என்கிற பேச்சு அடிபடும் வேளையில், இ.கே.ஒய்.சி என்றும் சொல்கிறார்களே, அது என்ன என்று கேட்கிறீர்களா?

இ.கே.ஒய்.சி (eKYC)

இ.கே.ஒய்.சி என்கிற நடைமுறையும் மத்திய அரசால் தற்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையில் தங்களின் ஆதார் எண்ணைக் கொண்டு தங்களின் விரல் ரேகை மற்றும் கருவிழியை அடையாளமாகக் கொண்டு சேகரிக்கப்பட்டு வைத்துள்ள தகவல்களைச் சரிபார்த்து தங்களைப் பற்றிய அடையாளம் உறுதிப்படுத்தப்படுகிறது.

வேறு என்ன ஆவணங்கள் வேண்டும்?

சரி, கடன் வாங்குவதற்கு வேறு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் என்று இனி பார்ப்போம்.

வங்கிகளிலும் வங்கிசாரா நிதி நிறுவனங்களிலும் கடன் வாங்கும்போது கே.ஒய்.சி (KYC Documents) ஆவணங்களைத் தவிர, கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

இ.கே.ஒய்.சி
இ.கே.ஒய்.சி

1. 6 - 12 மாதங்களுக்கான அனைத்து வங்கிக் கணக்குத் தகவல் அறிக்கை (Bank Statement)

2. ஏற்கெனவே வாங்கியுள்ள கடன் பற்றிய தகவல்கள் தகவல்கள் (Existing Loan EMI details)

3. மாதச் சம்பளம் வாங்குபவராக இருந்தால், கடைசி மூன்று மாத சம்பளம் குறித்த தகவல் அறிக்கை (Pay Slips)

4. சுயதொழில் செய்பவராக இருந்தால் கடைசி இரண்டு ஆண்டுக்கான வருமான வரித் தாக்கல் செய்ததற்கான ஆதாரங்கள் மற்றும் நிதிநிலைத் தகவல்கள் (Income Tax Return, Tax Computation, Profit and Loss account, Balance Sheet, Schedules) போன்ற ஆவணங்களையும் தயாராக வைத்துக்கொள்வது முக்கியம்.

5. வியாபாரம் செய்யும் இடத்தின் சான்றிதழ் மற்றும் உரிமைச் சான்றிதழ் (Business Proof)

நகல்களைக் கொடுத்தால் போதும்...

இந்த ஆவணங்கள் அனைத்தையும் நகல் எடுத்து வைத்துக்கொள்வது முக்கியம். வங்கிகளுக்கு மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு நகல்களைக் கொடுத்தால் போதுமானது. அசல் ஆவணங்களை அவர்களிடம் கொடுக்கத் தேவை இல்லை. நகல் ஆவணங்களை அவர்களிடம் கொடுக்கும்போது அவர்கள் அதை அசல் ஆவணங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வார்கள்.

மேலே சொன்ன ஆவணங்களில் தங்களைப் பற்றிய தகவல்களும் தாங்கள் குறிப்பிட்டுள்ள தகவல்களும் எல்லா ஆவணங்களிலும் பொருந்திப்போவது முக்கியமானது. உதாரணமாக, உங்களின் பிறந்த தேதி எல்லா ஆவணங்களிலும் ஒன்றாக இருத்தல் அவசியம். அது வேறுபாடாக இருக்கும்பட்சத்தில் வங்கி அதிகாரிகள் தெளிவுபடுத்த சொல்லிக் கேட்பார்கள்.

 money
money

செல்ஃப் அட்டஸ்டேஷன் முக்கியம்

இவை தவிர, தங்களின் கடன் தகுதியை நிர்ணயிப்பதற்காக வேறு சில ஆவணங்களையும் வங்கி அதிகாரிகள் கேட்கும்பட்சத்தில், அவை என்ன ஆவணங்கள், எதற்காகக் கேட்கிறார்கள், அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொண்டு கொடுப்பது நல்லது. வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கும்போது எல்லா ஆவணங்களிலும் தங்களின் கையொப்பம் இடுவதற்கு மறக்க வேண்டாம். இதை `செல்ப் அட்டஸ்டேஷன்’ (Self attestation) என்று சொல்வார்கள். அதாவது, `இந்த ஆவணங்கள் என்னால் என் கடன் விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டது. இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மையே’ என்று நாம் உறுதி கூறுவதாக அர்த்தம்.

நீங்களே நிரப்புங்கள்

நம்மில் பெரும்பாலானவர்கள் கடன் விண்ணப்பத்தை முகவரையோ, வங்கி விற்பனை பிரதிநிதியையோ நிரப்பச் சொல்லிவிட்டு நாம் வெறும் கையெழுத்து மட்டும் போடுவோம். அதை தயவு செய்து செய்யாதீர்கள்.

Indian Rupee
Indian Rupee

ஏற்கெனவே கூறியபடி, இந்த ஆவணங்களை முகவரிடம் கொடுக்கும்போது எந்த வங்கியில் தங்களின் கடன் தேவைக்கான விண்ணப்பத்தைக் கொடுக்கப்போகிறார் என்று தெரிந்துகொள்வது முக்கியம். ஏனெனில், உங்களின் கடன் விண்ணப்பத்தைப் பல வங்கி மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு கொடுத்து அவை நிராகரிக்கப்பட்டால், அது தங்களின் கடன் தகவல் அறிக்கை /கடன் மதிப்பீடு அறிக்கையில் இடம்பெற்று, தாங்கள் மேற்கொண்டு கடன் பெறுவதற்கு சிக்கலை ஏற்படுத்திவிடும். இதைப் பற்றிக் கடன் தகவல் அறிக்கை / கடன் மதிப்பீடு அறிக்கையைப் பற்றிப் பார்க்கும்போது விரிவாக விவாதிப்போம்.

இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும்முன், இந்தக் கேள்விக்கான பதிலை கமென்ட் செக்‌ஷனில் போடுங்கள்.

பின்வரும் கடன்களில் எந்தக் கடனுக்கு வட்டி அதிகம்?

1. பர்சனல் லோன்

2. ஹவுசிங் லோன்

3. எஜுகேஷன் லோன்

4. கிரெடிட் கார்டு லோன்

இந்தக் கேள்விக்கான சரியான பதில் அடுத்த அத்தியாயத்தின் தொடக்கத்தில்...

- வாங்குவோம்