நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

ஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்..! - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்?

பெனிடிக்ட் பரமானந்த், சி.கே.பிரகலாத்
பிரீமியம் ஸ்டோரி
News
பெனிடிக்ட் பரமானந்த், சி.கே.பிரகலாத்

கொரோனா காரணமாக இந்த ஆண்டு ஆன்லைனில் நடந்து முடிந்துள்ளது பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்!

லக்கியக் கூட்டங்கள் எல்லாம் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு வரும் நிலையில், பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம் மட்டும் இந்த ஆண்டும் (அக்டோபர் மாதம் 30, 31 தேதிகளில்) சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களில் இல்லாத ஒரே வித்தியாசமாக, இந்த ஆண்டு நடந்த இரண்டு நாள் நிகழ்ச்சிகளும் ஆன்லைனில் நடந்தது. என்றாலும், ஏராளமான வணிக இலக்கிய எழுத்தாளர்கள், தொழில்துறை ஆலோசகர்கள், வாசகர்கள் எனப் பல தரப்பினரும் இதில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.
ஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்..! - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்?

யோசிக்க வைத்த கோவிட்...

இந்தச் சங்கமத்தின் தொடக்கமாக, ‘‘வணிகம், வேலை, சமூகத்தை வடிவமைக்கும் போக்குகள்” என்கிற தலைப்பில் ரோஹித் பார்கவா, ப்ராதீக் ராஜ், சந்தீப் தாஸ் ஆகியோர் கலந்துரையாடினர். ‘‘நாம் செய்யும் வேலை இன்றியமையாததா, நமது வாழ்க்கை எந்தப் பாதையில் செல்கிறது, என்ன மாதிரியான தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும் என்கிற கேள்விகள் குறித்து சிந்திக்க இந்தத் தொற்று நமக்கு வாய்ப்பு தந்திருக்கிறது. சீரான, ஒரே வேலை என்பதுடன், வேறு சில துணை வேலைகளுக்கும் இனி மக்கள் திட்டமிட வேண்டும். தொலைநிலைக் கற்றலுக்கும், உடனடியாக விஷயங்களைப் பெறுவதற்கும் டிஜிட்டல் மீடியாவை பயன்படுத்துவதற்கான போக்கை இந்தத் தொற்றுக் காலம் துரிதப்படுத்தியிருக்கிறது. அத்துடன், புதிய கண்டுபிடிப்பு களையும் சமூக பாதுகாப்பு பற்றிய கவலைகளையும் தூண்டுவதாக இருக்கிறது” எனக் கூறினார்கள்.

ஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்..! - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்?

பாதிப்பில் பதிப்பகத் தொழில்...

பிரபல எழுத்தாளரும் வணிக இலக்கிய விழாவின் தலைவருமான ரகுநாதன் அடுத்து பேசினார். ‘‘கோவிட்-19 வாசிப்புப் பழக்கத்திலும் பதிப்பகத் துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. விமான நிலையங்களில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் அங்குள்ள புத்தகக் கடைகள் மூலம் விற்பனையாகும் புத்தக விற்பனை பெருமளவு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. மேலும், ஆன்லைனில் பதிப்பிப்பது, சுயமாகப் பதிப்பித்து வெளியிடுவது ஆகியவை அதிகரித்திருந்தாலும் நூலின் தரமும் சந்தைப் படுத்தலுக்கான ஆதரவும் பெரும் சவாலுக்கு உள்ளாகியிருக்கிறது’’ என்றார்.

ஸ்டார்ட்-அப்பும் தொழில் விருத்தியும்...

பிசினஸ்களின் போக்கு பெரிதும் மாறியிருக்கும் இந்தக் காலகட்டத்தில் ஸ்டார்ட்-அப் தொழில்முனைவோர்கள் தங்களை எப்படித் தயார் செய்துகொள்ள வேண்டும் என்கிற கலந்துரையாடலில் எழுத்தாளர்களும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்கி நடத்துபவர்களுமான ஹரி, சித்தார்த் ராவ், ராகுல் சந்திரா, கார்த்திக் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பெனிடிக்ட் பரமானந்த், சி.கே.பிரகலாத்
பெனிடிக்ட் பரமானந்த், சி.கே.பிரகலாத்

‘‘கடந்த 15 வருடங்களாக நமது நாட்டின் ஸ்டார்ட்-அப் சூழ்நிலை நன்றாக வளர்ந்து வந்திருக்கிறது. உலகின் மிகப் பெரும் வென்ச்சர் கேப்பிடல் மற்றும் பிரைவேட் ஈக்விட்டி முதலீட்டு நிறுவனங்கள் இந்தியத் தொழில்முனை வோர்கள் தொடங்கும் நிறுவனங்களில் துணிச்சலாக பல கோடி ரூபாய்களை முதலீடு செய்வதே இதற்குச் சான்று. பொதுவாக, வெற்றி பெற்ற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தான் மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், தோல்வியையும் சிரமங்களையும் சந்தித்த நூற்றுக் கணக்கான நிறுவனங்களும் இருக்கவே செய்கின்றன. குறுகிய கால புகழுக்காகவும் மாயையின் அடிப்படையிலும் ஸ்டார்ட்-அப் ஆரம்பிப்பதைத் தவிர்த்து, சரியான தொழிலைக் கண்டுபிடித்து, அதன் அடிப்படையில் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களைத் தொடங்க இந்தியத் தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்’’ என அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

செளகரியம் தரும் பயிற்சி...

‘தி சி.இ.ஓ ஃபாக்டரி’ என்கிற புத்தகத்தின் ஆசிரியர் சுதீர் சீதாபதியும், ‘குளோபல் க்யான்’ நிறுவனத்தின் துணை நிறுவனர் ஸ்ரீனிவாச அடெபள்ளியும் கலந்துகொண்ட உரையாடலில் ஒரு நிறுவனமானது தொடர்ந்து பயிற்சி தருவதன்மூலம் தங்களுடைய பணியாளர்களை எப்படி மெருகேற்றுகிறது என்பது பற்றியும், அவர்கள் பணி நிமித்தமாக ‘லக்கன்பூரிலிருந்து லண்டன் வரை’ சென்றாலும் எந்தவொரு அசெளகரியத்தையும் உணராத அளவுக்கான மனநிலையைக் கொண்டிருக்குமாறு எப்படிப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள் என்றும் பேசினார்கள்.

உண்மைக்குப் புறம்பான செய்திகள்...

இந்த இலக்கிய சங்கமத்தில் பேசிய சுதாகர் ராவ், ‘‘சமூக ஊடகங்களில் எந்தளவு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுகின்றன என்பதையும் (உதாரணம்: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் சம்பந்தமான வழக்கில் மக்களுடைய எதிர்வினையில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் 80,000 போலிக் கணக்குகள் உருவாக்கப்பட்டது) அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சொல்லிவிட்டு, ‘‘இந்தியா நாடு அன்பால் உருவாக்கப்பட்டதே தவிர வெறுப்பால் உருவாக்கப்பட்டதல்ல. இதற்கு சமீபத்தில் தடை செய்யப்பட்ட தனிஷ்க் விளம்பரம் உதாரணம். இந்த விளம்பரத்துக்கும் ‘லவ் ஜிகாத்’துக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை. அமுல், பார்லே-ஜி, பஜாஜ் ஆகிய நிறுவனங்கள் மக்களிடையே வெறுப்பையும் நச்சுத்தன்மையையும் பரப்பும் ஊடகங்களில் விளம்பரம் செய்வதில்லை என்று எடுத்திருக்கிற முடிவு மிகச் சரியானது’’ என்று பாராட்டினார் அவர்.

ஆன்லைனில் நடந்த பெங்களூரு வணிக இலக்கிய சங்கமம்..! - இந்த ஆண்டு என்ன ஸ்பெஷல்?

ஃப்ளிப்கார்ட்டின் கதை...

இந்த விழாவின் இறுதியில் சிறந்த வணிகப் புத்தகத்துக்கு மேலாண்மைச் சிந்தனையாளர் சி.கே. பிரகலாத்தின் பெயரில் அமைக்கப்பட்ட நினைவுப் பரிசை பிரகலாத்தின் மனைவி காயத்ரியும் மகள் தீபாவும் ‘பிக் பில்லியன் ஸ்டார்ட் அப் – தி அண்டோல்ட் ஃபிலிப்கார்ட் ஸ்டோரி (Big Billion Startup – The Untold Flipkart Story)’ என்கிற நூலை எழுதிய மிஹிர் தலாலுக்கு வழங்கி உரையாற்றினர். இந்தச் சங்கமம் அடுத்த ஆண்டாவது நேரில் நடக்க வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை!

படிக்க வேண்டிய புத்தகங்கள்

ந்த சங்கமத்தில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் பல புத்தகங்களைப் பரிந்துரைத்தனர். அதில் முக்கியமான 10 புத்தகங்கள் இதோ...

1. Tell Us Who You Are – Winona Guo, Priya Vulchi

2. Give Smart – Tom Tiemey

3. How to Change the World – David Bornstein

4. Uncommon Ground – Rohini Nilekani

5. I Too Had a Dream – Verghese Kurien

6. A World of Three Zeros – Muhammad Yunus

7. Zero to One – Peter Thiel

8. The Third Pillar – Raghuram Rajan

9. Poor Economics – Abhijit Banerjee, Ester Duflo

10. Sapiens – Yuval Noah Harari.