நாம் 2018 முடிந்து, 2019-க்குள் நுழையப் போகிறோம். ஆண்டு முடிவில் வரவு செலவுக் கணக்குப் பார்க்கிற வேலையைப் கோடிக் கணக்கில் டேர்ன்ஓவர் செய்கிற கம்பெனிகள் தான் செய்யவேண்டும் என்பதில்லை; ஒவ்வொரு தனிநபரும் செய்யலாம். குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் ஒரு மாலைப் பொழுதில் பரபரப்பில்லாமல் உட்கார்ந்து இந்த வரவு செலவுக் கணக்கினைப் பார்ப்பது நல்ல பலனைத் தரும்.
ஏன் இந்த வரவு செலவுக் கணக்கினை நாம் பார்க்கவேண்டும், அப்படி என்ன பலனைத் தந்துவிடப் போகிறது என்கிறீர்களா? முந்தைய ஆண்டைவிட, கடந்த ஆண்டில் உங்கள் பொருளாதாரம் உயர்ந்திருக்கிறதா, எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறது என்பதை இந்த வரவு செலவுக் கணக்கினைத் தயாரிப்பதன்மூலம் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும். பொருளாதாரரீதியான நமது வளர்ச்சியைத் தெரிந்துகொண்டால், இன்னும் நாம் என்னவெல்லாம் செய்யவேண்டும், எந்தெந்தச் செலவுகளை எல்லாம் தவிர்க்கவேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும்.

இந்த வரவு செலவுக் கணக்கினைச் செய்வது மிகவும் சுலபம். உங்கள் ஆண்டு வருமானத்தை முதலில் எழுதிக்கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மாதச் சம்பளம் ரூ.50,000 எனில், ஆண்டு வருமானம் ரூ.6 லட்சம். இந்த வருமானத்திலிருந்து நீங்கள் அவ்வப்போது செய்த செலவுகள் ஒவ்வொன்றையும் கழித்துக்கொண்டே வாருங்கள்.
உதாரணமாக, வீட்டு வாடகை அல்லது வீட்டுக் கடனுக்காக நீங்கள் செலுத்தும் இ.எம்.ஐ, வீட்டுக்காக வாங்கிய மளிகைப்பொருள்கள், மருத்துவச் செலவுகள் என மாதந்தோறும் ஆகும் செலவுகள் எவ்வளவு என்று கணக்கிட்டு, அந்தத் மொத்தத் தொகையிலிருந்து கழித்துக் கொள்ளுங்கள்.
அதேபோல, குழந்தைகளுக்கான பள்ளி, கல்லூரிக் கட்டணத்தையும், இன்ஷூரன்ஸ் பிரீமியம் கட்டுவதற்காகச் செலவழித்த தொகை யையும் மொத்தத் தொகையிலிருந்து கழிக்கவும்.
கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் வாங்கிய செல்போன், டிவி, இருசக்கர வாகனம், ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், லேப்டாப் என்று நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான தொகையையும் மொத்தத் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளுங்கள்.
பிறகு, நீங்கள் வாங்கிய கடனைத் திரும்பக் கட்ட செலவழித்த தொகையும் மொத்தத் தொகையிலிருந்து கழித்துக்கொள்ளுங்கள். கடைசியாக நீங்கள் ஏதாவது முதலீடு செய்திருந்தால், அந்தத் தொகை எவ்வளவு என்பதைக் கணக்கிட்டு, அதையும் மொத்தத் தொகையிலிருந்து கழித்தால், உங்களுடைய வரவு செலவுக் கணக்குத் தயாராகிவிடும்.
இந்தக் கணக்கினைக் கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், நீங்கள் சம்பாதித்த பணம் எங்கே போனது, கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தைப் பயனுள்ள வகையில் செலவழித்திருக்கிறீர்களா அல்லது வீண்செலவுகளைச் செய்துள்ளீர்களா, என்னென்ன செலவுகளைத் தவிர்த்திருக்கலாம் என்பது உங்களுக்குத் தெளிவாகப் புரியும். இதன்மூலம் புதிய ஆண்டில் நீங்கள் உங்கள் செலவுகளை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாகத் திட்டமிட முடியும். இனிவரும் நாள்களிலாவது செலவுகளைச் சுருக்கி, சேமிப்பையும், முதலீட்டையும் அதிகப்படுத்த நடவடிக்கை எடுங்கள்!