Published:Updated:

பணவீக்கம், வட்டி விகிதம் உயரும்..? பட்ஜெட் 2019 பலன்கள் என்ன, பாதகங்கள் என்ன?!

பிரதான பணவீக்கம் ஏற்கெனவே 5.4% அளவுக்கு உயர்ந்து கவலையை அளித்துள்ள நிலையில், தற்போதைய பட்ஜெட்டுக்குப் பின்னர் இது மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மீதான வட்டி விகிதம் ஏற்கெனவே 7.4 சதவிகிதத்தைத் தாண்டிவிட்ட நிலையில், தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் முதலீட்டுக்கான கடனுக்கு இன்னும் அதிக வட்டியைச் செலுத்தும் சூழல் உருவாகும்.

பணவீக்கம், வட்டி விகிதம் உயரும்..? பட்ஜெட் 2019 பலன்கள் என்ன, பாதகங்கள் என்ன?!
பணவீக்கம், வட்டி விகிதம் உயரும்..? பட்ஜெட் 2019 பலன்கள் என்ன, பாதகங்கள் என்ன?!

த்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் மூலம், பாஜக தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களை ஈர்க்கும்விதமான அறிவிப்புகள் மற்றும் வரிச் சலுகைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதே சமயம் இந்த அறிவிப்புகள் மற்றும் சலுகைகள், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும்,  இன்னொரு பக்கம் பல பாதகங்களுக்கும் வழிவகுத்துள்ளது. குறிப்பாக,  வட்டி விகிதங்கள் உயர்வு மற்றும் பணவீக்கத்துக்கு வழிவகுத்துவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 

பலன்கள் என்ன? 

முதலில், பட்ஜெட்டில் யார் யாருக்கு, எந்தெந்தப் பிரிவினருக்கு எத்தகைய ஆதாயம் என்பதைப் பார்ப்போம்.

விவசாயிகள்

தேர்தல் ஆண்டு என்பதால், ஏற்கெனவே எதிர்பார்த்தது போன்றே விவசாயிகளைக் கவரும்விதமான அறிவிப்புகளை மோடி அரசு அறிவித்துள்ளது. `பிரதமர் கிஸான் சம்மான் நிதி யோஜனா' திட்டத்தின் மூலம் 75,000 கோடி ரூபாய் செலவில், குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000  ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். 2 ஏக்கர் அளவு வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக இந்தத் தொகை வழங்கப்படும் என்றும், இதன் மூலம் 12 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் அடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடவே விவசாயிகள் மட்டுமல்லாது வேளாண் கருவிகள் மற்றும் பம்புகள் உற்பத்தி நிறுவனங்கள் போன்ற வேளாண் சார்ந்த நிறுவனங்களும் பயனடையும். 

வரி செலுத்துவோர்

வரி செலுத்துவோரில் இனி ஐந்து லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது ரூ. 6.5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள், தங்களது வருமானத்தை பிராவிடண்ட் ஃபண்ட், இன்ஷூரன்ஸ் போன்ற சில வருமான வரி சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும்பட்சத்தில், வரிவிலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 3 கோடி பேர் பயனடைவார்கள். 

கிராமப்புற இந்தியா

கால்நடைத் துறை மற்றும் மீன் வளத்துறைக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நலன்களைக் கருத்தில்கொண்டு மீன்வளத் துறை அமைக்கப்படும் என்ற அறிவிப்போடு, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் வகையிலான நிதி உதவிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் பயனடையும் விதமான அறிவிப்புகளும் இடம்பெற்றுள்ளன. 

தொழிலாளர்கள் 

இந்த பட்ஜெட்டில் இடம்பெற்ற மிக முக்கியமான அறிவிப்பு என்னவென்றால், மாதம் 15,000 ரூபாய்க்குக் கீழ் வருவாய்கொண்ட அமைப்பு சாரா தொழிலாளர்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள  `பிரதம மந்திரி ஷ்ராம் யோகி மந்தன்' என்ற பெயரில் மெகா பென்ஷன் திட்டம்தான். இதற்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ் மாதம் 100  ரூபாய் ப்ரீமியம் செலுத்தவேண்டியிருக்கும். இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் 10 கோடி பேர் பயன்பெறுவர். அமைப்பு சாரா தொழிலாளர்கள், 60 வயதுக்குப் பிறகு மாத ஓய்வூதியமாக குறைந்தபட்சம் ரூ.3000 பெறுவார்கள். இதேபோல், பி.எஃப் சந்தாதாரர் உயிரிழந்தால் வழங்கப்படும் நிவாரண நிதி ரூ.6 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்குச் சாதகமானதுதான். 

ரியல் எஸ்டேட் 

இடைக்கால பட்ஜெட்டில், ரியல் எஸ்டேட் துறைக்கும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாயம் வீடு என்ற வாக்குறுதி போக, வீட்டுக் கடனுக்கான வரிச்சலுகை இனி இரண்டு வீடுகளுக்கு வழங்கப்படும். அதாவது, ஒரு வீட்டின் மீதான மூலதன ஆதாய வரிக்கு அளிக்கப்பட்டுவந்த வரிவிலக்கு, இனி இரண்டு வீடுகளுக்கு வழங்கப்படவுள்ளது. இரண்டாவதாக வாங்கிய வீட்டிலும் வீட்டு உரிமையாளரே தங்கியிருந்தால், அதற்குக் கணக்கிடப்படும் வாடகை வருமானத்துக்கு வரி எதுவும் இல்லை. 

மேலும், வீட்டு வாடகை வருமானத்துக்கான வரிச்சலுகை தொகையும் ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  கிராமப்புற உட்கட்டமைப்புத் துறையை ஊக்குவிக்க, ரூ.19,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு இருக்கும் ஜிஎஸ்டி வரிச்சுமையைக் குறைக்க, அமைச்சகங்கள் திட்டமிட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாகன தயாரிப்பு நிறுவனங்கள்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக  இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய ரக கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முறையாக கார் வாங்கத் திட்டமிட்டிருப்பவர்கள், உடனடியாக கார் வாங்கும் திட்டத்தை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரூ.6 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கும் சிறிய ரக கார்களின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால், சந்தையில் முன்னிலை வகிக்கும் மாருதி சுஸுகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும்பயனடையும்.  இதுதவிர, பேட்டரியில் இயங்கும் மின்சார கார்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும்விதத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரி, மின்மோட்டார் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்கான வரி, 10 முதல் 25 சதவிகிதம் வரை குறைக்கப்படும் என்ற அறிவிப்பினால்,  மின்சார வாகனங்களுக்கான சந்தை ஏற்றம் காணும். 

மோடி, பா.ஜனதாவுக்கும் பயன்

விவசாயிகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரைக் குளிர்விக்கும்விதமான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்பது முன்பே எதிர்பார்க்கப்பட்டபோதிலும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பென்ஷன் திட்டம் எதிர்பாராததுதான். எனவே, இந்த மூன்று தரப்பினரையும் இடைக்கால பட்ஜெட் ஈர்த்துள்ளபோதிலும், வருமான வரிவிலக்கு வரம்பு உயர்த்தப்பட்டது, பா.ஜனதாவின் பிரதான ஓட்டு வங்கியாக இருக்கும் நடுத்தர வர்க்கத்தினரின் ஆதரவு கூடும். இந்த பட்ஜெட்டால் பயனடைபவர்களின் பட்டியலில் விரைவில் தேர்தலைச் சந்திக்க உள்ள மோடியையும் பா.ஜனதா கட்சியையும் சேர்த்துக்கொள்ளலாம். 

பாதகங்கள் என்ன? 

முதலில் இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகள், புதிய அறிவிப்புகளை வெளியிடுவது மரபு மீறும் செயல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மத்திய அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட், இந்திய அரசியலமைப்புச் சட்டம் 116(1)-ன் கீழ் வருகிறது. இந்தச் சட்டத்தின்படி புதிய அறிவிப்புகளும் சலுகைகளும் அளிக்கக் கூடாது என விதிகள் இல்லை என்றபோதிலும், வழக்கமாக வருமான வரிவிலக்கு போன்ற முக்கிய அறிவிப்புகள், சலுகைகள் மத்திய அரசின் பொது பட்ஜெட் தாக்கலின்போது மட்டும் அறிவிக்கப்பட்டு வந்தது. இவை, இடைக்கால பட்ஜெட்டில் பெரும்பாலும் இடம்பெறுவதில்லை.

ஆனாலும், இந்த மரபு தற்போது மீறப்பட்டுள்ளது. பியூஷ் கோயல், தாக்கல் செய்த பட்ஜெட்டில் தேர்தலை மனதில் வைத்து பல சலுகைகளும் அறிவிப்புகளும் அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. 

எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரம்

மரபுகளை மீறி அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளால், தங்களது தேர்தல் பிரசாரம் பெருமளவில் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. வழக்கமாக கட்சிகள், தேர்தல் பிரசாரத்தின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதை வாக்குறுதிகளாகவும் தேர்தல் அறிக்கைகளாகவும் தெரிவிக்கும். ஆனால், அவை நடைமுறைப்படுத்தப்படுமா என்பதில் உத்தரவாதம் கிடையாது. ஆனால், தற்போதைய பட்ஜெட் அறிவிப்புகள் மூலம் தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அவை அனைத்துமே அமல்படுத்தப்படும் என்பதை வாக்காளர்கள் மனதில் பதியவைத்துவிட்டது பா.ஜனதா. ஆனால், எதிர்க்கட்சியினரோ இனிமேல் செய்ய இருக்கும் பிரசாரத்தை மட்டுமே நம்பி இருப்பதால், அவர்களைப் பொறுத்தவரையில்  இந்த பட்ஜெட் ஒரு பின்னடைவுதான்.  

நிதி பற்றாக்குறை

நடப்பு 2019-20-ம் நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை, கடந்த பட்ஜெட்டில் 3.3 சதவிகிதமாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில்,  திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி அது 3.4 சதவிகிதமாக உள்ளது என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த நிதியாண்டில் பெட்ரோலிய நிறுவனங்களுக்குத் தரவேண்டிய மானியத்தொகை, மாநில அரசுகளுக்கு 14-வது நிதிக்குழு பரிந்துரையின்படி வரியில் தரவேண்டிய பங்கீடு ஆகியவை அடுத்த நிதியாண்டுக்கு ஒத்திப்போடப்பட்டுள்ளது. இவற்றையும் சேர்த்தால், உண்மையில் இந்த நிதியாண்டின் நிதி பற்றாக்குறை 4.5 சதவிகிதம் அல்லது அதற்குமேல் செல்லும்.

அப்படி, நிதி பற்றாக்குறை அதிகரிப்பதால்  ரிசர்வ் வங்கி மீது அழுத்தம் அதிகரித்து, பணவீக்கமும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இத்தனைக்கும் நிதி பற்றாக்குறையை மூன்று சதவிகிதத்துக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என 2008-ம் ஆண்டே இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆண்டுகள் பல கடந்தும், அந்த இலக்கை எட்டிப்பிடிக்க முடியவில்லை என்பதோடு, அதிகரித்தும் வருகிறது. 

தேர்தலுக்கு முன்னர்,  இதுபோன்று வாக்காளர்களைக் கவரும்விதமான சலுகைகள் மற்றும் நிதியுதவி அடங்கிய பட்ஜெட்டைப் போடுவதிலிருந்து ஆளும் அரசுகள் தப்பிக்க முடியாதுதான். ஆனால், அதற்காகச் செலவிடுவதற்கான நிதி ஆதாரம் இல்லாதபோது, பற்றாக்குறை மேன்மேலும் அதிகரித்து, கடன் சுமையை அதிகரிக்கச் செய்துவிடும். 

பணவீக்கம், வட்டி விகிதம் உயர்வு

பிரதான பணவீக்கம் ஏற்கெனவே 5.4 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்து கவலையளித்துள்ள நிலையில், தற்போதைய பட்ஜெட்டுக்குப் பிறகு இது மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடன் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதம் ஏற்கெனவே 7.4 சதவிகிதத்தைத் தாண்டிவிட்ட நிலையில், தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழில் முதலீட்டுக்கான கடனுக்கு இன்னும் அதிக வட்டியைச் செலுத்தும் சூழல் உருவாகும். இதுபோக, கஜானாவின் வருவாய்க்குப் பாதிப்பை ஏற்படுத்தும்விதமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரிவிகிதத்தை 25 சதவிகிதமாகக் குறைப்பதாக பட்ஜெட்டில் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். அடுத்து எந்தக் கட்சி ஆட்சிக்கு வரும் என்பதுகுறித்து உத்தரவாதமான நிலை இல்லாத நிலையில், இது நிச்சயம் அடுத்து ஆட்சிக்கு வரும் அரசுக்குச் சிக்கலைத்தான் ஏற்படுத்தும். 

ஜிடிபி-யில் வருவாய் பற்றாக்குறையே இருக்கக் கூடாது என நீண்டகாலங்களாக திட்டமிடப்பட்டு வரும் நிலையில், தற்போது அது 2.2 சதவிகிதமாக இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் என்றால், வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய், மூலதன செலவுகளுக்காக அல்லாமல் வரிச் சலுகைகள் போன்ற இதர திட்டங்களுக்குத் திருப்பிவிடப்படுகின்றன என்பதுதான். இந்தியா, தற்போது முதலீடு சார்ந்த வளர்ச்சியிலிருந்து நுகர்வோர் சார்ந்த வளர்ச்சிக்கு மாறிக்கொண்டிருக்கிறது. இது, நீண்டகால வளர்ச்சியைப் பாதிக்கும் என்பது பொருளாதார நிபுணர்களின் அச்சமாக உள்ளது.