##~##

தனக்குத் தேவையான வருமானத்தை ஈட்டுவது ஓர் அரசாங்கத்தின் கடமை. ஓர் அரசாங்கத்துக்கு மூன்று  வகை வருமானங்கள் உண்டு. வரி, வரி அல்லாத வருமானம் (அரசின் சேவைகளுக்காகப் பெறப்படும் வருமானம் - உதாரணம்; கல்விக் கட்டணம், பொதுத்துறை நிறுவனங்களின் லாபம்... இத்யாதி, இத்யாதி), கடன். இதில் கடன் மூலம் கிடைக்கும் தொகை (இதுபற்றி பிற்பாடு விளக்கமாகச் சொல்கிறேன்!) மிகக் குறைவாக இருக்கவேண்டும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இப்போதைக்கு நமது வரி மற்றும் வரி அல்லாத வருமானம் எவ்வளவு என்பதைப் பட்டியலாகத் (வரி வருமான நிலவரம்) தந்திருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்.

மத்திய அரசு வரி வருமானத்தை சேகரிப்பதில் முழு முனைப்புடன் இருக்கிறது. 2010-11-ல் மத்திய அரசு வரி வசூலிக்க ரூ.1 செலவிட்டால் ரூ.121 வரியாகப் பெற்றது. இந்த வருடம் (2012-13) ஒவ்வொரு ரூ.1-க்கும் ரூ.142 வரி வசூலிக்கின்றது. இது மத்திய அரசின் வரி வசூலிக்கும் திறனை குறித்தாலும், வரி வசூல் உயர்வு போதுமானதா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். 2007-08-ல் மத்திய அரசின் வரி மற்றும் ஜி.டி.பி. ரேஷியோ 8.81 சதவிகிதமாக இருந்தது 2011-12-ல் 7.40 ஆக குறைந்துள்ளது. இதில் குறிப்பாக கவலையளிப்பது,  2010-11-ல் மொத்த வரி வருமானத்தில் 56 சதவிகிதமாக இருந்த நேர்முக வரி, 2012-13-ல் 53 சதவிகிதமாக குறைந்துள்ளது. (பார்க்க, வரி அமைப்பு)

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

2012-13 மத்திய வரி வருமானத்தின் பட்ஜெட் மதிப்பீட்டில் 47.9 சதவிகிதம் மட்டும் முதல் எட்டு மாதத்தில் (ஏப்ரல்-நவம்பர்) வசூலிக்கப் பட்டுள்ளது. இதில் குறிப்பாக, நேர்முக வரி வருமானம் ரூ.3.3 லட்சம் கோடி; இது முந்தைய ஆண்டின் இதே காலத்து வரி வருமானத்தைவிட 7.1 சதவிகிதம் அதிகம். தொழில்துறை மந்த நிலையில் உள்ளதால், கார்ப்பரேட் வரி வசூல் 3.0 சதவிகிதம்தான் அதிகரித்துள்ளது. ஆனால், தனி நபர் வருமான வரி வசூல் 14.94% அதிகரித்துள்ளது. செக்யூரிட்டீஸ் டிரான்ஸாக்ஷன் டாக்ஸ் வசூல் 12.83 சதவிகிதம் குறைந்துள்ளது. பங்குச் சந்தை மந்த நிலையில் இருப்பதே இதற்கு காரணம்.

இந்த எட்டு மாதத்தில் மறைமுக வரி வசூல் ரூ.2.92 லட்சம் கோடி. இது முந்தைய ஆண்டின் எட்டு மாத வசூலைவிட 16.8 சத விகிதம் அதிகம். மந்தமான பொருளாதாரச் சூழலில், உற்பத்தி மீதான கலால் வரி (excise duty) இறக்குமதி மீதான சுங்க வரி ஆகியவற்றின் வசூல் குறைவாக இருக்கும். நேர்முக வரி வசூலைவிட மறைமுக வரி வசூல் அதிகமாக உள்ளதற்கு ஜி.டி.பி. அடிப்படையில் வரி திரும்பத் தருதலை (Tax credit)அரசு கொடுக்காமல் இருப்பதும் ஒரு காரணம் எனச் சிலர் கூறுகின்றனர். நாம் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், மறைமுக வரியைவிட நேர்முக வரியில் அரசு அதிக கவனம் செலுத்தவேண்டும்.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

வரி வருமானம் குறைவாக இருப்பதற்கு மிக முக்கிய காரணம், தேசிய மொத்த உற்பத்தி போதுமான அளவிற்கு உயரவில்லை. பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.3 சதவிகிதமாக இருக்கும்போது, வரி வசூல் குறைவாகவே இருக்கும். எனவே, வரி வருமானத்தில் உள்ள பின்னடைவை வரி - அல்லாத வருமானங்கள்  மூலம் சரிக்கட்ட முயலவேண்டும்.

2012-13 ஏப்ரல்-நவம்பர் பட்ஜெட் மதிப்பீடு வரி  அல்லாத வருமானம் ரூ.1,64,614 கோடியில் 46.3 சதவிகிதமான ரூ.76,221 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் அலைக்கற்றை (spectrum) ஏலத்தில் போதுமான வருமானம் பெறப்படாமலும், (ரூ.9,400 கோடி மட்டுமே பெறப்பட்டது) பங்குச் சந்தை மந்த சூழலில் இருப்பதால் பொதுத்துறை பங்குகளை விற்பதிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

2012-13-ல் வரி வருமானம் குறைவாக இருப்பதற்கு முதல் காரணம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள பின்னடைவுதான். இதனை ஆராய்ந்த கெல்கர் கமிட்டி சில யோசனைகளைக் கூறியுள்ளது (பார்க்க, கேல்கர் கமிட்டி பரிந்துரைகள்!). இவை நீண்டகாலத்தில் வரி வருமானம் பெருக்க பயனளிக்குமே தவிர, உடனடித் தீர்வாகாது. அடுத்த நிதியாண்டில் வரி, வரி அல்லாத வருமானங்களைக் கூட்ட அரசு புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். மேலும், 2008-09 தொடங்கி, பொருளாதாரப் பின்னடவை சரி செய்ய மத்திய அரசு பல வரிச் சலுகைகளை தந்து வந்துள்ளது. இதனால் பல கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவில்லை (பார்க்க வரி வருமான இழப்பு அட்டவணை).

வரும் நிதியாண்டு முதல் வரிச் சலுகைகள் மேலும் குறைக்கப்பட வேண்டும் என்பது பலரது கருத்து.

2013-14 பட்ஜெட்டில் இரண்டு முக்கிய வரி விதிப்புகள் பற்றிய விவாதங்கள் நடைபெறும். ஒன்று, ஜி.எஸ்.டி. செயல்படுத்துவது பற்றி அறிவிப்பு- இரண்டு, பணக்காரர்களுக்கான உயர்ந்த வரி விகிதம். இவை இரண்டு வரிகள் பற்றி அரசின் பொருளாதார ஆலோசகர் களும், நிதி அமைச்சரும் அவ்வப்போது பேசியுள்ளனர்.

பொருட்கள் மற்றும் சேவை வரி (GST)

Goods and Services Tax என்பதன் சுருக்கம்தான் ஜி.எஸ்.டி. தற்போது பண்டங்கள், பணிகள் மீது இரண்டு வரிகள் விதிக்கப்படு கின்றன. இந்தியா முழுவதும் உற்பத்தியாகும் பண்டங்கள் மீது மத்திய அரசு கலால் வரி (Excise Duty) எனப்படும் CENVAT வரியை விதிக்கின்றது. இது ஒருவித VAT வரியாகும். பணிகள் மீதான சர்வீஸ் டாக்ஸையும் மத்திய அரசு விதிக்கின்றது. இதுவும் VAT முறையில் விதிக்கப்படும் வரியாகும். பண்டங்கள் இறக்குமதி மீதும் இறக்குமதி வரியும் மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் விற்பனை செய்யப்படுகின்ற பண்டங்கள் மீது VATமுறையிலான விற்பனை வரியை மாநில அரசு விதிக்கின்றது. இது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையே நடைபெறும் வியாபாரத்தின் மீது CST (Central Sales Tax) என்ற (NON-VAT) விற்பனை வரி மாநிலங்களால் வசூலிக்கப்படுகின்றன.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

மாநில வரி விதிக்கப்படும்போது, பொருளின் உற்பத்தி செலவு மற்றும் மத்திய வரிகள் சேர்ந்த பண அளவின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. இதனால் வரி மீது வரி விதிக்கும் முறை உள்ளது. மேலும், மாநிலங்களுக்கிடையே உள்ள வரி விதிப்புகளில் நிறைய வேறுபாடுகள் (வரி விகிதங்கள், வரிச் சட்டங்கள்) உள்ளன.

இந்தச் சிக்கலான வரி விதிப்பை ஒழுங்குபடுத்தி, நாடு முழுவதும் இறக்குமதி தொடங்கி, உற்பத்தி, சில்லறை வியாபாரம் வரை ஒரே வரி விதிப்பு முறையை (ஜி.எஸ்.டி.) ஏற்படுத்தவேண்டும் என 2003-04-ல் கெல்கர் கமிட்டி பரிந்துரைத்தது. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டால்,

1. மாநிலங்களின் விற்பனை வரி சுதந்திரத்தைப் பறித்து, மத்திய அரசுடன் வழங்கும் வரி  தொடர்பான அரசியல் சட்ட மாற்றம் தேவை.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

2. மாநிலங்கள் சி.எஸ்.டி. வரி வசூலிப்பதைக் கைவிட வேண்டும். இதனால் வருவாய் இழப்பு ஏற்படும்.

3. வரி விதிப்பு, வசூலிக்கும் முறைகளை கணினி மயமாக்கி எல்லா வியாபாரங்களுக்கும் இந்திய அளவில் ஒரே வரிக் கணக்கு எண் தந்து எல்லா வியாபாரியின் வரிச் செலுத்துதலும் கண்காணிக்கப்பட வேண்டும்.

13-வது நிதி குழு (13th Finance Commission) தனது பரிந்துரையில், ஜி.எஸ்.டி. வடிவமைத்து செயல்படுத்து வதை Grand Bargain என்று வர்ணித்தது. இதன்படி, மாநிலங்கள் தங்களின் விற்பனை வரி அதிகாரத்தை இழப்பதும், அதற்காக மத்திய அரசு பெரிய தொகை (ரூ.50,000 கோடி) நஷ்ட ஈடாக தரவேண்டும் என்று கூறியது.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

மாநிலங்கள், State VAT எனப்படும் விற்பனை வரியை அமல்படுத்த மாநில நிதி அமைச்சர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தற்போது நடைமுறையில் உள்ள State VAT-னால் எல்லா மாநில அரசுகளுக்கும் வருவாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது; இதனை முழுமையாக மத்திய அரசு ஈடுகட்டவில்லை என குற்றம்சாட்டுகிறது. மேலும், ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டால், வருவாய்  நஷ்டஈடு அதிகம் வேண்டும் எனவும், எல்லா பணிகள் மீதான வரி விதிப்பு அதிகாரம் மாநிலங்களுக்கு வழங்க வேண்டுமெனவும் இக்குழு கேட்கிறது.

பட்ஜெட் 2013 - மத்திய அரசு வரி வருமானம்!

இந்தச் சிக்கல்களுக்கெல்லாம் நிதி அமைச்சர் தீர்வு கண்டால் ஜி.எஸ்.டி. வரும்... தீர்வு காண்பாரா?

(முன்னோட்டம் தொடரும்...)