அலசல்

##~##

பொருளாதார முன்னேற்றத்திற்காகவும், மக்களின் நலன் மேம்படவும், மத்திய அரசின் செலவுகள் போதுமானதாகவும், அவற்றின் முழு நன்மையும் மக்களில் சரியானவர்களுக்குப் போய்ச் சேருவதாகவும் இருக்கவேண்டும். ஆனால், தற்போதைய நிலையில் வரவு எட்டணா என்றால், செலவு பத்தணாவாக இருக்கிறது மத்திய அரசின் செலவு. என்ன செய்து அரசாங்கம் இந்தச் செலவைக் கட்டுப்படுத்தப் போகிறது என்பதுதான் இப்போதைக்கு நம் முன் உள்ள முக்கியமான கேள்வி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அரசின் செலவுகளை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒன்று, நடப்பு செலவுகள்; இரண்டாவது,  முதலீட்டுச் செலவுகள் (பார்க்க: நடப்புக் கணக்கும் முதலீட்டுக் கணக்கும்!). இதேபோன்று அரசின் செலவுகளைத் திட்டச் செலவுகள் (Plan Expenditure)திட்டம் அல்லாதச் செலவுகள் (Non Plan Expenditure)என்றும் வகைப்படுத்துவர் (பார்க்க: திட்டம், திட்டம் அல்லாதச் செலவுகள்).

எகிறும் செலவு!

2012-13 பட்ஜெட் மதிப்பீட்டில் மத்திய அரசின் மொத்தச் செலவு ரூ.14.90 லட்சம் கோடி. இதில் நடப்புக் கணக்கு செலவுகள் ரூ.8.65 லட்சம் கோடி; முதலீட்டுக் கணக்கு செலவுகள் ரூ.1.04 லட்சம் கோடி.

அரசு செலவினங்களைத் திட்டம், திட்டமில்லாதச் செலவுகள் என பிரித்தால், ரூ.5.21 லட்சம் கோடி திட்டச் செலவாகவும், ரூ.9.70 லட்சம் கோடி திட்டமில்லாதச் செலவாகவும் பட்ஜெட் மதிப்பீட்டில் உள்ளது.

பட்ஜெட் 2013 - வரவு எட்டணா... செலவு பத்தணா !

2012-13-ம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் (ஏப்ரல்-நவம்பர்) பட்ஜெட் மதிப்பீட்டில் 58.2 சதவிகிதமான ரூ.8.68 லட்சம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இதில் திட்டமில்லாதச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், அதனின் பட்ஜெட் மதிப்பீட்டில் 64.4% செலவு செய்தது. ஆனால், திட்டச் செலவு மதிப்பீட்டில் 46.7 சதவிகிதம்தான் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதில், முதலீட்டுக் கணக்கில் உள்ள திட்டச் செலவு 42.9 சத விகிதம்தான் செய்யப்பட்டுள்ளது. ஆனால், நடப்புக் கணக்கில் உள்ள திட்டச் செலவு 47.3 சதவிகிதம் செலவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று நடப்புக் கணக்கு செலவுகளுடன் முதலீட்டுக் கணக்கு செலவுகளை ஒப்பிடலாம். இதில் முதலீட்டுக் கணக்கு செலவுகள் 50 சதவிகிதம், நடப்புக் கணக்கு செலவுகள் 60 சதவிகிதமும் செலவு செய்யப்பட்டுள்ளன.

எனவே, அரசு தன் செலவுகளை கட்டுப்படுத்த முனைந்துள்ளது என்பது தெரிகிறது. மற்ற செலவினங்களோடு ஒப்பிடும்போது, முதலீட்டுக் கணக்கு செலவுகளையும், திட்டச் செலவு களையும் சற்று அதிகமாகக் குறைத்துள்ளது தெரியவருகிறது. இச்செலவு குறைப்பு வருங்கால வளர்ச்சியைப் பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், புதிய முயற்சிகளும், முதலீட்டு பொருட்கள் (Capital Goods) உற்பத்தியும் பாதிக்கப்படுவதால், பொருளாதார வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் பாதிப்புக்கு உள்ளாகிறது.

மானியச் சிக்கல்!

அரசின் திட்டமில்லாத நடப்புச் செலவுகளில் மிக முக்கியமானவை வட்டி, மானியங்கள், ஓய்வூதியமாகும்.  மானியங்களைக் குறைப்பதில் பல சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன.

உணவு மானியம்!

பட்ஜெட் 2013 - வரவு எட்டணா... செலவு பத்தணா !

உணவு மானியங்கள் உயர்வதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஒவ்வொரு வருடமும் உணவு தானியத்திற்கான குறைந்தபட்ச ஆதார விலையை (Minimum Support Price)அரசு உயர்த்திக்கொண்டே போகிறது. இது உயர்ந்து வரும் விவசாய உற்பத்திச் செலவுகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டாலும், அரசு தொடர்ந்து அதிக விலை தந்துதான் உணவு தானியத்தை வாங்கி வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாக, பொதுவிநியோக முறையில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாமலே உள்ளன. இதனால், ஒருபுறம் அதிகரிக்கும் கொள்முதல் விலைகள், மற்றொரு புறம் அதிக மக்கள் பொதுவிநியோக முறையில் உணவுப் பொருட்களை வாங்குவது (ஏனெனில், உணவுப் பொருட்களுக்கான சந்தை விலை உயர்ந்துகொண்டே இருப்பது) என்ற இரு வகைகளிலும், அரசின் உணவு மானியம் உயர்ந்துகொண்டே வருகிறது.

அடுத்த வருடம் உணவுப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் உணவு மானியம் உயர்வது நிச்சயம். குறைந்தபட்சம் 2014-க்குள் இச்சட்டம் நிறைவேறுவது உறுதி. எனவே, வருங்காலத்தில் உணவு மானியம் குறையாது.

எரிசக்தி மானியம்!

டீசல், சமையல், கேஸ், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் மானியத்தைக் குறைக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டீசல் மீதான மானியம் இனி உயராது. ஏனெனில், படிப்படியாக கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப டீசல் விலை மாறுபடும். சமையல் கேஸின் மானியமும் ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 9 சிலிண்டர் என்ற நிலையில் இருக்கும். மண்ணெண்ணெய்யின் மானியத்தை மேலும் குறைப்பதில் சிக்கல் உள்ளது. எனவே, டீசல், சமையல் கேஸ் மானியம் வரும்

பட்ஜெட் 2013 - வரவு எட்டணா... செலவு பத்தணா !

காலத்தில் உயராது.

தற்போது உள்ள பொருளாதார மந்தநிலையி லிருந்து மீளவேண்டுமெனில், அரசு பொதுச் செலவுகளை, குறிப்பாக, முதலீட்டுக் கணக்கு செலவுகளை உயர்த்தவேண்டும். மேலும், பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளபோது, ஏழைகளே அதிகம் பாதிக்கப்படுவர். எனவே, ஊரக வேலை உறுதித் திட்டம், உணவு மானியம், வீடு வழங்குதல் என்ற பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றவேண்டும். இதனால் குறிப்பாக நடப்புச் செலவுகள் உயரும்.

இந்தச் செலவுகளுக்கான பணத்தைப் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம் பெறலாம் என்பது ஒரு வாதம். இப்படிச் செய்வதால் மக்களிடையே தொழில் முனைவு குறைந்து, உற்பத்தித் திறன் பாதிப்படையும் என்கிறார்கள் வேறு சில பொருளாதார அறிஞர்கள். ஆனால், அரசின் நடப்பு செலவுகளை அதிகரித்து சமூக பாதுகாப்புத் திட்டங்களை நிறைவேற்றினால், அதனால் பொருளாதாரத்தில் உற்பத்தித் திறன் உயராது. எனவே, கூடுதல் வரி விதிக்காமல், அரசின் நடப்பு செலவுகளை மேலும் குறைத்து, தனியார் முதலீட்டிற்கு வழிகாண வேண்டுமென்றும் சொல்லி வருகின்றனர் பலர்.

பட்ஜெட் எப்படி இருக்கும்?

ஆனால், 2013-14-ம் நிதி ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் எப்படி அமையும்? மானியங்களைக் குறைக்க அரசு முனைப்பாக உள்ளது. கல்வி, சுகாதாரம், சாலைப் போக்குவரத்து ஆகிய துறைகளில், அரசின் நேரடி செலவைக் குறைத்து, அரசு-தனியார் கூட்டு முயற்சித் (Public-Private Partnership) திட்டங்கள் அதிகரிக்கும்.

ஆனால், ஊரக வேலை வாய்ப்பு, உணவு மானியம் ஆகிய திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்தவேண்டும் என்று சோனியா காந்தி கூறிவருவதால், இவற்றுக்கான நிதி ஒதுக்கீடு குறையாது. ஆனால், இச்செலவுகளை செய்ய அரசு நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெறும். இவ்வாறு நடப்புக் கணக்கு பற்றாக்குறையைக் குறைக்கும்போது, அரசின் கடன் தொகையின் பெரும்பகுதி முதலீட்டுக் கணக்கு செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும். ஆகவே, ஒட்டுமொத்தமாக, வரி வருவாய் உயராதபட்சத்தில் அரசின் கடன் பெறுதலும் வரையறுக்கப்பட்டதினால், அரசின் பொதுச் செலவுகள் வரும் ஆண்டுகளில் குறைவாகவே இருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அரசின் செலவு குறையுமா?

அரசின் சில செலவினங்கள் கட்டாயமாகச் செய்யப்பட வேண்டியவை. மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மட்டுமே 2011-12-ல் ரூ.1,22,010 கோடி எனக் கணக்கிடப் பட்டுள்ளது. இது அரசின் மொத்தச் செலவில் 9.9 சதவிகிதமாகும். அதேபோல் அரசின் வட்டிச் செலவு 10.3 சதவிகிதமாகும். ஆக, மொத்த செலவில் 20.2%. இவ்வாறு சட்டரீதியாக, கட்டாயமாக எவ்வித நிதி வரத்தையும் ஏற்படுத்தாதச் செலவுகள் செய்வது, அரசுக்கு மிகப் பெரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனுடன் ஓய்வூதியத்தையும் சேர்த்தால், கட்டாயச் செலவு 24.7 சதவிகிதமாக உயர்கிறது. அதாவது, ஒவ்வொரு ரூ.100 செலவில் ரூ.25 கட்டாயச் செலவாக மாறிவிடுகிறது.

இச்சூழலில், மத்திய அரசு தொடர்ந்து பொதுச்செலவுகளை குறைப்பது எப்படி என்பது முக்கியமான கேள்வி. கல்வி உரிமைச் சட்டம், ஊரக வேலை உறுதிச் சட்டம் மூலம் மக்களின் தேவைக்கு ஏற்ப இந்த இரு துறைகளில் செலவுகளை அரசு செய்யவேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டம் வரைவு அரசின் பரிசீலனையில் உள்ளது. சோனியா காந்தி தலைமையிலான கொள்கை ஆலோசனை குழு இதனை முன்மொழிந்துள்ளதால், இச்சட்டம் நிறைவேற்றப்படும். எனவே, அடுத்த சில ஆண்டுகளில் உணவு மானியம் உயரும்.

பட்ஜெட் 2013 - வரவு எட்டணா... செலவு பத்தணா !

முதலாக்கத்திற்காக (அதாவது, கட்டடம், முதலீடு போன்றவற்றை உருவாக்க) மத்திய அரசு 2011-12-ல் ரூ.2,87,316 கோடி ஒதுக்கியுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் முதலாக்க நிதி ஒதுக்கீட்டைவிட இது 4.5 சதவிகிதம்தான் அதிகம். அரசின் நடப்புச் செலவுகள் உயரும்போதெல்லாம், முதலாக்கத்திற்கான செலவுகள் குறையும். இதன் காரணமாக, வரும் காலங்களில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, முதலாக்கச் செலவுகள் அதிகரிப்பது கட்டாயமாகிவிடுகிறது.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், கழிவு நீர் வெளியேற்றம், கழிப்பிடம், சாலை, வீடு, உணவு, பொதுக்கல்வி, பொதுச்சுகாதாரம் என்ற பல பணிகள் பூர்த்தி அடையாமலே உள்ளன. இவற்றை மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகள் இணைந்து செய்யவேண்டுமெனினும், மத்திய அரசின் நிதி பங்களிப்பும், கொள்கை வழிகாட்டலும் அவசியமாகிறது. எனவே, மத்திய அரசின் பொதுச்செலவுகள் வரும் காலங்களில் பன்மடங்கு பெருகவேண்டும் என்பது மக்களின் விருப்பம்; குறைக்கவேண்டும் என்பது அரசின் நோக்கம்.

இரு எதிரெதிரான விஷயங்கள் இரண்டு பக்கமும் இழுக்க, இதற்கு நடுவே ஒரு சமநிலையை அடைவதற்கு நிதி அமைச்சர் சிதம்பரம் செய்யும் வேலை சவால் நிறைந்ததுதான்!

(முன்னோட்டம் தொடரும்...)

நடப்புக் கணக்கும் முதலீட்டுக் கணக்கும்!

அரசின் பட்ஜெட் இரண்டு பிரிவுகளாக உள்ளது. ஒன்று, நடப்புக் கணக்கு (Reverse (Current) Account),, மற்றொன்று, முதலீட்டுக் கணக்கு (Capital Account). நடப்புக் கணக்கில், அரசின் வரி, வரி அல்லாத வருவாய்கள் எல்லாம் வரவு வைக்கப்படும். இவ்வாறு பெறப்படும் வரவுகள் எல்லாம், அரசின் சொந்தப் பணமாகும்.

நடப்புக் கணக்கில் எழுதப்படும் செலவுகள் எல்லாம் அரசுக்கு நேரடி வருவாயைப் பெற்றுத் தருவதில்லை. உதாரணமாக, அரசு தன் ஊழியர்களுக்குத் தரும் சம்பளம், ஓய்வூதியம், மானியங்கள், கடன் மீது தரப்படும்  வட்டி மற்ற அமைப்புகளுக்குத் தரப்படும் கொடை என்பன.

நடப்புக் கணக்கின் வரவுகள், நடப்புச் செலவுகளுக்குச் சமமாக இருக்கவேண்டும். அதாவது, சொந்த வரவுகள், உடனடி வரவு ஏதும் தராதச் செலவுகளுக்குச் சமமாக இருக்கவேண்டும். ஒரு குடும்பத்தின் மாத வருமானம் அதனின் உணவு, உடை, இருப்பிட தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும். இந்த அடிப்படைத் தேவைகளுக்கு ஒரு குடும்பம் கடன் வாங்கினால், அக்குடும்பம் பொருளாதாரச் சிக்கலில் உள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல, அரசின் நடப்புக் கணக்கு வரவுகளைவிட நடப்புச் செலவுகள் அதிகமாக இருந்தால், வரவு ஏதும் தராதச் செலவுகளுக்குக் கடன் வாங்குவது உசிதமில்லை. எனவே, நடப்புக் கணக்கு பற்றாக்குறை இல்லாமல் இருப்பது நல்லது.

முதலீட்டுக் கணக்கில் பெரும்பாலும் அரசு பெறும் கடன்கள் அனைத்தும் வரவு வைக்கப்படும். அதோடு அரசு பல்வேறு அமைப்புகளுக்குக் கொடுத்த கடனை திரும்பப் பெறுதலும் முதலீட்டுக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தக் கணக்கில் உள்ள செலவுகள் அரசுக்குப் புதிய வரவை ஏற்படுத்தக்கூடியதாகவும், அல்லது செலவினங்களைக் குறைக்கக் கூடியதாகவும் இருக்கும்.

உதாரணமாக, மத்திய அரசு மற்ற அமைப்புகளுக்குக் கடன் தந்தால், அது முதலீட்டுக் கணக்கு செலவு. ஏனெனில், அதன் மூலம் வட்டி வருவாய் வரும். மத்திய அரசு புதிய கட்டடம் கட்டினால், அரசுக்கு வாடகை மிச்சப்படும். அரசு புதிய சாலை அமைத்தால், நாட்டிற்கு போக்குவரத்து செலவு பொதுவாகக் குறையும். இவ்வாறான முதலீட்டுக் கணக்குச் செலவுகளுக்கு கடன் வாங்குவது தவறில்லை. ஆனால், இப்படி செய்யும் செலவுகளுக்குத் தகுந்த வருமானம் கிடைக்கிறதா என்பது கேள்விக்குறிதான்.

 திட்டம், திட்டம் அல்லாதச் செலவுகள்!

1950 தொடங்கி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை, ஓர் ஐந்தாண்டு திட்டத்தினை இந்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பொதுவாக, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டத்திலும், நாட்டின் பொருளாதார, சமூக முன்னேற்றதிற்காகப் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும். உதாரணமாக, புதிய அணை கட்டுதல், புதிய சாலை அமைத்தல், புதிய ஆராய்ச்சிக்கு செலவு செய்து புதிய கண்டுபிடிப்புகளுக்கு உதவுவது என பலவகைப்படும். பல திட்டங்கள் ஓர் ஐந்தாண்டு திட்டத்தில் முடிவடையாது. அந்தத் திட்டங்கள் அடுத்து வரும் ஐந்தாண்டு திட்டத்தில் நிறைவேற்றப்படும். பல சமயங்களில், தற்போது நடைமுறையில் உள்ள ஒரு திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, சில மாற்றங்களைச் செய்வது, ஓர் ஐந்தாண்டு திட்டத்தில் புதிய திட்டமாகச் சேர்க்கப்படும்.