##~##

சுதந்திரம் அடைந்தது முதல் இந்திய அரசாங்கம் தொடர்ந்து பற்றாக்குறை பட்ஜெட்டையே தாக்கல் செய்து வந்திருக்கிறது. நிதிப் பற்றாக்குறையினால் (Fiscal Deficit _ FD) பொருளாதாரத்தின் உற்பத்திச் சக்தியை மீட்டெடுக்க முடியும் என்று கெயின்ஸ் என்கிற பொருளாதார அறிஞர் சொன்ன கருத்தும், அரசின் நிதிப் பற்றாக்குறை தனியார் துறையின் உற்பத்தித் திறனை சீரழித்து, பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளிவிடும் என்ற வேறு சில பொருளாதார அறிஞர்கள் சொன்ன கருத்தும் வாதப் பிரதிவாதங்களாகப் பேசப்பட்டு வருகின்றன.

நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்கவே முடியாது எனினும், சமகால பொருளாதாரப் பிரச்னைக்கு எவ்வளவு நிதிப் பற்றாக்குறையை அரசு ஏற்றுக்கொள்ளலாம் என்ற முடிவினை எடுப்பதற்கு பொருளாதார அறிவும், அரசியல் தீர்க்கமும் வேண்டும்.

ஒரு நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் (FD/GDP) நிதிப் பற்றாக்குறை என்பது 3% மட்டுமே இருக்கவேண்டும்; அதுபோலவே, விளைவுள்ள வருவாய் பற்றாக்குறைக்கும் (Effective Revenue Deficit) 160; ஜி.டி.பி.-க்குமான விகிதம் (ERD/GDP)0 ஆக இருக்கவேண்டும்; இவற்றை 2014-15-க்குள் அடையவேண்டும் என நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் 2003 கூறுகிறது. (இது தொடர்பாக நான்குவிதமான பற்றாக்குறை பற்றிய பெட்டிச் செய்தியைப் படிக்கவும்!)

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்...

எனவே, எக்காலத்திலும், பொருளாதாரத்தில் எப்பிரச்னை இருந்தாலும், இனிமேல் எஃப்.டி./ஜி.டி.பி. விகிதம் 3 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது என்பது அரசின் கொள்கையாக நாம் எடுத்துக்கொள்வோம். இந்த 3 சதவிகிதத்தை எப்படி நிர்ணயித்தார்கள் என்பது இதுவரை புரியாதப் புதிர். இந்த 3 சதவிகித நிலையில் நாம் எப்போதும் இருக்கமுடியாது என்பது இச்சட்டத்தை பலமுறை திருத்தியதிலிருந்து தெரிகிறது. எனவே, எது அதிக அளவு நிதிப் பற்றாக்குறை என்பதற்கான சூத்திரம் தெரியாமல் இருப்பதுதான் நம் பொருளாதாரப் பிரச்னை. இது ஒருபுறம் இருக்க, அண்மைக் காலங்களில் நிதிப் பற்றாக்குறை எவ்வாறு இருந்திருக்கிறது என்பதைப் பார்த்தால், பல சுவாரஸ்யமான விஷயங்கள் நமக்குக் கிடைக்கும்.

2007-08-ம் ஆண்டில் நாம் பொருளாதார வளர்ச்சியின் உச்சத்தில் இருந்தோம். அவ்வருடம் எஃப்.டி./ஜி.டி.பி. விகிதம் 2.5% ஆகவும், ஆர்.டி./ஜி.டி.பி. விகிதம் 1.1 சதவிகிதமாகவும் இருந்தது. எனவே, 2007-08-ல் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்திவிட்டோம். வருவாய் பற்றாக்குறையை (Revenue Deficit)விரைவில், அதாவது, 2008-லேயே, கட்டுப்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், 2008 -ம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட உலக நிதிச் சிக்கல் நம் பொருளாதாரத்தைத் தடம் புரள செய்தது. எனவே, பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் விதத்தில் வரிச் சலுகைகளும், புதிய செலவுகளும் (6-வது சம்பளக் குழுவின் பரிந்துரைபடி, அரசு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் வழங்கியது போன்றவை) மேற்கொள்ளப்பட்டன. அதே நேரத்தில் பற்றாக்குறை பொறுப்பு மற்றும்

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்...

பட்ஜெட் மேலாண்மை (FRBM)சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு எஃப்.டி./ஜி.டி.பி. விகிதம் 3 சதவிகிதத்தைவிட அதிகமாகவும், ஆர்.டி./ஜி.டி.பி. விகிதம் 1.1 சதவிகிதத்தைவிட அதிகமாகவும் இருக்கலாம் என கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால், இந்த வருடம் (2012-13) வரை நிதி மற்றும் வருவாய் பற்றாக்குறைகள் கட்டுப்படுத்தப் படாமலே இருப்பதை அட்டவணையில் உள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நிதிப் பற்றாக்குறையை தவிர்க்கவே முடியாது என்பவர்கள் அதற்காகச் சொல்லும் காரணங்களை இனி பார்ப்போம். நிதிப் பற்றாக்குறை பட்ஜெட், அரசு செலவுகளை உயர்த்தும். இச்செலவுகள் திறம்பட இருக்குமே யானால் பொருளாதாரம் வளர்ச்சி பெறும். அனைவருக்கும் கல்வி, சுகாதாரம், உணவு பாதுகாப்பு, சாலை, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல் இருப்பதால், அரசின் செலவுகள் திறமையாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்துவதற்குப் பதில், அரசின் சேவைகள் எல்லாருக்கும் கிடைக்க செய்வதே பிரதான நோக்கமாக உள்ளது. எனவே, எல்லாருக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாகும் வரை, பற்றாக்குறை பட்ஜெட்டை தயாரித்தாவது, அரசு தன்னுடைய செலவுகளை உயர்த்தவேண்டும் என்பது ஒரு கருத்து. மேலும், நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் அரசின் வரி வசூலிக்கும் திறமையின்மையைக் காட்டுகிறது என்ற குற்றச்சாட்டும் இக்கருத்துடன் உடன்படுவோரினால் முன்வைக்கப்படுகிறது.

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்...

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டினால் பல மோசமான விளைவுகள் ஏற்படும். எனவே, அதனை முற்றிலும் தவிர்க்கவேண்டும் என்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இந்தக் கருத்தைக்கொண்டவர்கள் பின்வரும் வாதங்களை முன்வைக்கின்றனர்.

(1) அரசின் செயல்பாடுகளைவிட தனியார் துறையின் செயல்பாடுகள் திறமையாக இருக்கும். எனவே, அரசு கடன் பெறுவதைத் தவிர்த்து, குறைந்த வட்டியில் தனியார் துறைக்குக் கடன் போய் சேர உதவி செய்யவேண்டும். உதாரணமாக, நாட்டில் ரூ.100 கோடி சேமிப்பு இருக்கிறது எனில், அதில் பெரும்பகுதியை அரசு கடனாகப் பெறுமேயானால், தனியார் துறை முதலீட்டிற்கு குறைந்த கடன் பணம், அதிக வட்டி விகிதத்தில்தான் கிடைக்கும். இதனால் உற்பத்தி குறைந்து, வேலைவாய்ப்பின்மை உயரும்.

(2) அரசின் பற்றாக்குறையை, மத்திய ரிசர்வ் வங்கி பணஅளிப்பு மூலமாக சரி (Monetisation of deficit) செய்கிறது என வைத்துக்கொண்டால், அதனால் பொருளாதாரத்தில் பணவீக்கம் ஏற்பட்டு, பொருளாதார வளர்ச்சி பாதிப்படையும்.

(3) தொடர்ந்து, அதிக அளவு பற்றாக்குறை பட்ஜெட்டை செயல்படுத்துவதினால், அடுத்தடுத்த ஆண்டுகளில், அரசு செலுத்தவேண்டிய வட்டி அளவு அதிகரித்துக்கொண்டேபோகும் (பார்க்க அட்டவணை) இதனால், அரசு செய்ய விரும்பும்/வேண்டிய செலவுகளை செய்யமுடியாமல் போகும்.

(4) பற்றாக்குறை பட்ஜெட் உருவாக்கும்போ தெல்லாம், அதனை சரிசெய்ய ஒன்று தனியார் முதலீட்டிற்கு செல்லவேண்டிய பணம்/சேமிப்பு அரசுக்குச் செல்லவேண்டும். இரண்டு, இறக்குமதி அதிகரித்து ஏற்றுமதி குறையவேண்டும். இதனால், அந்நிய செலாவணி குறையும்; வெளிநாட்டுக் கடன் உயரும்; இந்திய ரூபாயின் அந்நிய செலாவணி மாற்று விகிதம் உயரும் (ரூபாய் மதிப்பு குறையும்) என்று தொடர்ச்சியான பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படும்.

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்...

இவ்வாறு தொடர்ச்சியான பொருளாதாரச் சிக்கல்களை ஏற்படுத்தும் நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்டை தவிர்ப்பது நலம். குறிப்பாக, வருவாய் பற்றாக்குறையை முற்றிலும் தவிர்க்கவேண்டும். ஏனெனில், அரசு கடன் வாங்கி எவ்வித வரவும் தராதச் செலவுகளை செய்வதால், தற்காலத் தேவைகளுக்கு வருங்கால சந்ததியினர் மேல் வரி சுமையை சுமத்துவதாகும். இது எந்த வகையில் சரி? இதேபோன்றுதான் முதன்மை பற்றாக்குறை முழுவதும் குறைக்கவேண்டும்.

எக்காலத்திலும், எஃப்.டி./ஜி.டி.பி. விகிதம் 3 சதவிகிதமாக இருக்கலாம் என்று நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டம் கூறுவதால், நிதிப் பற்றாக்குறை பட்ஜெட் தவிர்க்க முடியாதது என்பது தெளிவு. ஆனால், பற்றாக்குறை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதில் தெளிவற்ற நிலையுள்ளது. வரி, வரியில்லாத வருவாய்களை அதிகமாகத் திரட்டி, அரசின் கட்டாய, நடப்பு செலவுகளை செய்வதன் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யமுடியும். இது அரசின் கடமை என்பதில் சந்தேகமில்லை. மேலும், அரசின் செலவு திறம்பட இல்லாமல் விரயமாவதும் தவிர்க்கப்படவேண்டும். இதனாலும் பற்றாக்குறை குறையும் என்பதை நாம் அடிகோடிட்டுக் காட்டவேண்டும்.

(முன்னோட்டம் தொடரும்...)

நான்குவிதமான பற்றாக்குறை!

அரசு செலவுகள், அதன் வருவாயைவிட அதிகமாக இருப்பதையே பற்றாக்குறை என்கிறோம். இதில் நான்குவிதமான பற்றாக்குறைகள் கணக்கிடப்படுகிறது.

1. வருவாய்ப் பற்றாக்குறை (Revenue Deficit): இதில் அரசின் வருவாயைவிட நடப்புச் செலவு அதிகமாக இருப்பது. நாம் அரசின் வருவாய், செலவு பற்றி விவாதிக்கும்போது, நடப்புச் செலவுகள், நடப்பு வருவாயைவிட அதிகமாக இல்லாமல் இருப்பது நலம் என்று குறிப்பிட்டிருந்தோம். அதாவது, வருவாய்ப் பற்றாக்குறை இல்லாமல் இருப்பது நலம்.

வருவாய்ப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது என்று வாதிடுவோரும் உண்டு. அரசு போதுமான வரி வருவாயைத் திரட்டவில்லை என்பதாலேயே, மக்களின் அடிப்படைத் தேவைகளான, கல்வி, சுகாதாரம், உணவு மானியம் ஆகியவற்றை கடன் வாங்கியாவது (வருவாய்ப் பற்றாக்குறை இருந்தாலும்) அவற்றை பூர்த்தி செய்யவேண்டும் என்று கூறுகின்றனர்.

நிதிப் பற்றாக்குறை பட்ஜெட்...

2. விளைவுள்ள வருவாய் பற்றாக்குறை (Effective Revenue Deficit):கடந்த இரண்டு வருடமாக அரசு விளைவுள்ள வருவாய் பற்றாக்குறை என்பதைக் கணக்கிடுகிறது. நடப்புக் கணக்குச் செலவுகளில் மிக முக்கியமான ஒன்று, மாநில, உள்ளாட்சி அரசுகளுக்கும் தன்னாட்சி நிறுவனங்களுக்கும் மத்திய அரசு கொடுக்கும் கொடையாகும். இக்கொடையைப் பெற்ற அமைப்புகள் அதனை முதலாக்கத்திற்காக (அதாவது, முதலீட்டுச் செலவுகளுக்கு) பயன்படுத்தலாம்.

அவ்வாறு செய்யும்போது அத்தொகையானது, மத்திய அரசை பொறுத்தமட்டில், நடப்புச் செலவாக இருந்தாலும், நாட்டை பொறுத்தவரை முதலீட்டுச் செலவாகக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நினைக்கிறது. எனவே, முதலீட்டுச் செலவிற்காகத் தரப்பட்ட கொடையை (Grant for Capital Expenditure)வருவாய் பற்றாக்குறையிலிருந்து கழித்துப் பெறப்படுவது விளைவுள்ள வருவாய் பற்றாக்குறை.

3. முதன்மை பற்றாக்குறை (Primary Deficit): நடப்புக் கணக்குச் செலவுகளில் அரசினால் முற்றிலும் கட்டுப்படுத்த முடியாத ஒரு செலவு - வட்டி.  சட்டப்படி, கடன் வாங்கியவரிடம் வட்டி கட்டவேண்டும். எனவே, வட்டி நீங்கலான மற்ற நடப்புச் செலவுகள் நடப்பு வருவாயைவிட அதிகமாக இருந்தால், அதனை முதன்மை பற்றாக்குறை என்பர். முதன்மை பற்றாக்குறையை குறைக்கவேண்டுமெனில், வட்டி நீங்கலான மற்ற நடப்பு செலவுகளை குறைக்கவேண்டும் என்பதை அறிவுறுத்தவே இது கணக்கிடப்படுகிறது.

4. நிதிப் பற்றாக்குறை: அரசின் சொந்த வருவாயைவிட, அரசின் மொத்தச் செலவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அதனை நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit)என்பர்; அதற்கு இணையாக அரசு கடன் பெறும். எனவே, ஒரு வருடத்தில் அரசு பெறும் கடன் தொகை அவ்வருட நிதிப் பற்றாக்குறைக்கு  சமம்.

நடப்புக் கணக்கில் அரசின் வருவாயும், முதலீட்டுக் கணக்கில் கடன் அல்லாத வருவாயும் இணைத்து அரசின் மொத்த வருவாய் பெறப்படுகிறது. நடப்புக் கணக்குச் செலவு, முதலீட்டுக் கணக்குச் செலவு இணைத்து மொத்தச் செலவு பெறப்படுகிறது.