##~##

நிதிப் பற்றாக்குறையை எப்படி குறைப்பது?  என்பதற்கு எல்லோருமே அரசுக்குச் சொன்ன யோசனை, மானியத்தைக் குறைப்பது என்பதுதான்.  ஆனால், வரி வருவாயை உயர்த்தவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. வரி வருவாய் குறைந்துகொண்டே போகிறது என்பதற்கான புள்ளிவிவரத்தை ஏற்கெனவே தந்திருக்கிறேன். 2007-08-ல் நமது மொத்த வரி வருவாய் 100 ரூபாய் எனில்,  வரிச் சலுகையாக 156 ரூபாய் தந்திருக்கிறோம். 156 ரூபாய் வரிச் சலுகை தந்திருக்கிறோம் எனில் என்னென்ன துறைகளுக்குத் தந்திருக்கிறோம், அதனால் வளர்ச்சி அடைந்ததா என்பதற்கு எந்த புள்ளிவிவரமும் இல்லாமலே இன்றுவரை வரிச் சலுகைகளை தந்துகொண்டே இருக்கிறோம்.

எனவே, அரசாங்கம் தனது சரியான வரி வருவாயை ஈட்டவேண்டும். ஆனால், அரசாங்கம் புதிதாக வரி விதித்து, தனது வருவாயை உயர்த்தினாலே, ஏதோ கந்துவட்டி வாங்குவதுபோல நாம் பார்க்கிறோம். ஓர் அரசின் அடிப்படை உரிமையே வரி விதித்து, அதை வசூலிப்பதுதான். நம் பொருளாதாரத்தில் 100 ரூபாய் உற்பத்தி ஆகிறது எனில், இதில் 7.50 ரூபாய் வரியாக வாங்குகிறோம். இது மிகக் குறைவான வரி. இதனோடு மாநில அரசாங்கம் வாங்குகிற வரியையும் சேர்த்தால், மொத்தமே 12-லிருந்து 13 சதவிகிதம்தான் வரியாக இருக்கும். ஆனால், பல நாடுகளில் 30-40 சதவிகிதம் வரியாக வசூலிக்கிறார்கள்.

இந்தியா போன்ற ஒரு பின்தங்கிய நாட்டில் 35-37 சதவிகித மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள். இது 2009-10 கணக்கின்படி.  இந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வு உள்ள ஒரு நாட்டில் வரி வருவாயை, குறிப்பாக, பணக்காரர்களிடமிருந்து பெருக்குவதற்கு அரசாங்கம் முனைப்புடன் இருக்கவேண்டும். ஆனால், அந்த முனைப்பு குறைந்துகொண்டே வருகிறது.

அரசாங்கத்தின் செலவு!

பட்ஜெட்:  புரிந்ததும் புதிரானதும் !

நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசாங்கத்தின் செலவும் குறையவேண்டும். இந்த ஆண்டின் மொத்த உற்பத்தியில் 14.6 சதவிகிதம்தான் அரசாங்கத்தின் செலவு. மீதி 85.4 சதவிகிதம் உங்களையும், என்னையும் போன்ற தனியார்கள் செய்கின்ற செலவுகள்தான். இந்த 14 சதவிகிதத்தை வைத்துக்கொண்டு அரசாங்கத்தால் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் உயர்த்திவிட முடியாது.  பொருளாதாரம் முன்னேற அரசாங்கம் திறமையாகச் செயல்படவேண்டும்.

ஆனால், நமது பொருளாதாரச் சீர்திருத்தங்கள் ஆரம்பித்த காலகட்டத்திலிருந்து நம்மால் அரசாங்கத்தின்  செயல்பாடுகளில் உள்ள குறைகளையும், திறமையின்மையையும் சுட்டிக்காட்டி அதை திறம்பட செயல்படுத்தத் தேவையான பொதுவிவாதம் ஒன்றை நடத்த முடியவில்லை. எனவே, இதுமாதிரி எத்தனை பட்ஜெட் போட்டாலும்கூட, எப்போது அரசாங்கத்தின் செலவு திறமையாக நடக்கிறதோ, அப்போதுதான் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இப்படியான பிரச்னைகளுக்கு நடுவில்தான் 2013-14 பட்ஜெட் வந்திருக்கிறது. இதில் 'வோட் ஆன் அக்கவுன்ட்’ என்று ஒன்று வருகிறது. தற்போதைய நாடாளுமன்றம் 2014 மே மாதத்தோடு முடிவடைகிறது. அடுத்த 2014-ல் நிதி அமைச்சர் 'வோட் ஆன் அக்கவுன்ட்’ தருவார். காரணம்,  தற்போதைய அரசாங்கத்திற்கு 2014-15-ம் ஆண்டிற்கான நிதித் திட்டங்கள் எதையும் உருவாக்குவதற்கான அதிகாரம் இல்லை. அதிகாரம் இல்லாதபட்சத்தில் அரசாங்கம் என்ன செய்யும் எனில், இந்த வருஷம் என்ன வரவு - செலவு   செய்ததோ, அதையே மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு  ஃபோர்காஸ்ட் செய்து அப்படியே தந்துவிடுவார்கள். இதுதான் 'வோட் ஆன் அக்கவுன்ட்’.  அப்படியென்றால் இந்த வருடத்திற்கும், அடுத்த வருடத்திற்கும் வரவு - செலவில் எவ்வித மாற்றங்களும் இல்லாமல் இருக்கும் என்பதுதான் நிலைமை.

இனி 2013-14 பட்ஜெட்டை பார்ப்போம்.  ஏறக்குறைய இந்த வருஷத்திற்கும் அடுத்த வருஷத்திற்கும் பெரிய மாற்றம் இல்லை. கார்ப்பரேட் டாக்ஸ், இந்த வருஷமும் 21 ரூபாய்தான், அடுத்த வருடமும் 21 ரூபாய்தான். வருமான வரி இந்த வருஷம் 11 ரூபாயாக இருக்கும்; அடுத்த வருஷம் 12 ரூபாயாக இருக்கும். இப்படி பார்த்தால் எல்லா வரவுகளுமே எவ்விதமான மாற்றங்களும் இல்லாமல்தான் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. வெவ்வேறு வரவுகளிலும் எந்தவிதமான  பெரிய மாற்றங்களும் இல்லாத ஒரு ரெவின்யூ அக்கவுன்ட்டைத் தந்திருக்கிறார் நிதி அமைச்சர்.  

பட்ஜெட்:  புரிந்ததும் புதிரானதும் !

சரி, செலவு எப்படி இருக்கிறது என்று பார்த்தால்,  அதுவும் அதேமாதிரிதான். இந்த வருடத்திற்கும் அடுத்த வருடத்திற்கும் வெவ்வேறு செலவுகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

அப்படியென்றால் இந்த பட்ஜெட்டினால் பெரிய பொருளாதார மாற்றம் ஏதும் நிகழ்ந்துவிடுமா? பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறைகளைக் கண்டிருக்கிறார்களா? என்கிற கேள்விகளுக்கான பதில், இல்லை என்பதே.  

பட்ஜெட்:  புரிந்ததும் புதிரானதும் !

ஏன் இல்லை, ஏன் இப்படி ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார்கள் எனில், எனக்கு ஒரே ஒரு க்ளூதான் கிடைக்கிறது. பொருளாதார ஆய்வறிக்கையில், வளர்ச்சி குறைந்ததற்காக இரண்டு காரணங்கள் அழுத்தமாக  திரும்பத் திரும்ப பல்வேறு இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் நுகர்வுத் தேவைகளும், முதலீட்டுத் தேவைகளும் அதிக அளவில் குறைந்ததற்கு ஆர்.பி.ஐ. அதிக அளவில் வட்டி விகிதங்களை வைத்திருப்பதே முதல் காரணம். அப்படியென்றால், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுவதற்கு ஆர்.பி.ஐ மட்டுமே காரணமாக இருக்க முடியும். பட்ஜெட்டினால் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியாது என்கிற முதல் முடிவோடுதான் பொருளாதார ஆய்வறிக்கை ஆரம்பிக்கிறது.

உலக அளவில் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் நம்மால் பெரிய அளவில் ஏற்றுமதிகளை உயர்த்த முடியவில்லை. ஆனால், பெட்ரோல் போன்ற பொருட்களின் தேவைகள் நிலையாக இருப்பதால் இறக்குமதியை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account deficit)அதிகமாக இருக்கிறது என்பதை  இரண்டாவது காரணமாகச் சொல்லி இருக்கிறார்கள்.

சரி, பட்ஜெட் உரையில் ஏதாவது காரணம் சொல்வார்கள் என்று பார்த்தால், ஒரே ஒரு காரணம் சொன்னார்கள். அதாவது, நடப்பு பற்றாக்குறை அதிகமாக இருப்பது. ஆனால், நடப்பு பற்றாக்குறை 29 சதவிகிதத்திலிருந்து 27 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.

இந்த பட்ஜெட்டுக்கு முன் இருக்கும் சவால்கள் என்னென்ன என்று ஏற்கெனவே  பார்த்தோம். பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் தேவைகள் குறைந்திருப்பது, பணவீக்கம் அதிகமாக இருப்பது போன்ற மூன்று பெரிய சவால்களுக்குச் சரியான அணுகுமுறையும், தீர்வும் இல்லாமலே இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.  அதனால், இந்த நிதி ஆண்டிற்கும் அடுத்த நிதி ஆண்டிற்கும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாத நிலையைதான் உருவாக்கி இருக்கிறார்கள்.

பட்ஜெட்:  புரிந்ததும் புதிரானதும் !

இதற்கு என்ன காரணம்?   நவம்பரில் 'ரிவைஸ்ட் எஸ்டிமேட்’  ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டுவரலாம். அந்நேரத்தில் 'மிட்டேர்ம் அப்ரைசல் டாக்குமென்ட்’ வரும். அது சில மாற்றங்களை பட்ஜெட்டில் ஏற்படுத்தும். அநேகமாக நவம்பர் மாதம் உணவு பாதுகாப்பு மசோதாவை பெரிய அளவில் எடுத்துக்கொண்டு வர வாய்ப்புள்ளதுபோலத் தெரிகிறது.   அதை பெரிய அளவில் செய்யவேண்டுமெனில்,  கிட்டத்தட்ட 1.20-1.50 லட்சம் கோடி ரூபாய் தேவை. ஆனால், இந்த பட்ஜெட்டில் இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்டு இருப்பது 85 ஆயிரம் கோடிதான். எனவே, கூடுதலாக 35-55 ஆயிரம் கோடி ரூபாய் இந்தத் திட்டத்திற்கு தேவை. இதற்காகத்தான் நிதி அமைச்சர் பணத்தை மிச்சப்படுத்தி ஒதுக்கி (Buffer) வைக்கிறாரோ  என்று சந்தேகம் வருகிறது.

தவிர, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் (என்.ஆர்.ஜி.ஏ.)  நிறைய குழப்பங்கள் இருக்கிறது. அதாவது, சில வருடங்களாகவே இந்தத் திட்டத்தில் பெண்கள் அதிகமாக இருக்கிறார்கள், வயதானவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் அதாவது, 90 சதவிகிதம் மக்கள் 100 நாட்கள் வேலை செய்வதே இல்லை. அதனால்தான் 40 ஆயிரம் கோடியாக இருந்த என்.ஆர்.ஜி.ஏ. திட்டத்திற்கு இப்போது 33 ஆயிரம் கோடி என நிதியைக் குறைத்து ஒதுக்கியிருக்கின்றனர்.

பட்ஜெட்:  புரிந்ததும் புதிரானதும் !

ஒருவேளை இத்திட்டம் நகரங்களுக்கு விரிவுபடுத்தலாம் என்றால், அதிலும் பல சிக்கல் இருக்கிறது. ஏற்கெனவே திரிபுராவில் இந்த முயற்சி நடந்திருக்கிறது. ஆனால்,  100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் என்பதே கிராம 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்தான். அதை நகரங்களுக்கு எடுத்துக்கொண்டு வருவதற்கான முகாந்திரம் இந்தப் பொருளாதார ஆய்வறிக்கையில் இருக்கிறது.  

ஏனென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும்,  திறமைகளை மேம்படுத்துவது   (Skill Development) போன்ற விஷயங்கள் குறித்தும்   அதிகமாகப் பேசியிருக்கிறார்கள். ஆனால், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம்  என்பது கவர்ச்சிகரமான திட்டம்.  அது மாதிரியான இன்னொரு கவர்ச்சிகரமான திட்டத்தை கொண்டுவர வேண்டுமெனில், அதற்கு சரியான வழி என்.ஆர்.ஜி.ஏ. என்பது என்.ஆர்.இ.ஏ.   (National Rural Employment Guarantee Scheme )என்கிற ஒரு புதிய திட்டத்தைகூட எடுத்துக்கொண்டு வருவதுதான். அதற்கான ஒதுக்கீடும் இருக்கவே செய்கிறது. அதை உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது.

மூன்றாவதாக, மீண்டும் ஒரு கடன் தள்ளுபடி திட்டம் வந்தாலும் வரலாம். இந்த வருடம் நமக்குப் பற்றாக்குறை பருவமழை பெரிய அளவில் இல்லை என்பதால் கடன் தள்ளுபடி செய்வதற்கான அரசியல் நிர்ப்பந்தங்கள் உருவாகலாம்.  இப்படி செய்வதன் மூலம் அரசியல் கவர்ச்சியை உருவாக்க முடியும்.

ஒரு வகையில் இம்மூன்று திட்டங்களையும் எதிர்பார்த்துதான்  நிதி அமைச்சர் செலவுகளை குறைத்திருப்பாரோ என்று சந்தேகமாக இருக்கிறது.

சுருக்கமாக, 2013-14-க்கான பட்ஜெட் அதிக ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

(நிறைவு பெற்றது)