Published:Updated:

`தொழில் துறையினருக்கு முக்கியத்துவம் வேண்டும்!' - கோவை மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

மத்திய பட்ஜெட் 2021 குறித்து கோவையைச் சேர்ந்த பல்வேறு துறையினர் தங்கள் எதிர்பார்ப்புகளை இங்கே பகிர்ந்துகொள்கின்றனர்.

தொண்டாமுத்தூர் அருகே குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மூத்த விவசாயி முத்துமுருகன், ``பெரும்பாலான விவசாயிகளுக்கு, பட்ஜெட்டுக்கும், அவர்களுக்குமான தொடர்பு குறித்து தெரிவதில்லை. முதலாவது ஐந்தாண்டு திட்டத்துக்குப் பிறகு, விவசாயம் குறித்த பார்வை குறைந்துகொண்டே செல்கிறது. விவசாயிகளின், விளைபொருள்களுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. எனவே, குறிப்பிட்ட அளவுக்கு அவர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். அதாவது, நிலத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட தொகை மானியமாக வழங்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும். திட்டம் அமல்படுத்திய பிறகு, அதைச் சரியாகச் செயல்படுத்துகிறார்களா? என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.

முத்து முருகன்
முத்து முருகன்

கடன் தள்ளுபடி என்பது, அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகளாக மாறிவிட்டது. அப்படியில்லாமல் மானியம் கிடைத்தால் இழப்பீடுகளை சமாளிக்க முடியும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் விவசாயிகளிக்கு மானியம் வழங்கப்படுகிறது. அந்த மானியத் தொகை நேரடியாக சிறு, குறு விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கே வரும் வகையில் செயல்படுத்தினால் உதவியாக இருக்கும். எனவே, அரசு மானியம் என்பதை அரசு கொள்கை முடிவாகவே எடுத்து விரைந்து செயல்படுத்த வேண்டும்" என்றார்.

கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தொழில் முனைவோர் கௌசல்யா, ``கொரோனா பாதிப்பால் நிறைய மக்கள் வேலைகளை இழந்துவிட்டனர். ஒரு குடும்பத்துக்கு அடிப்படை தேவை வருமானம்தான். அதுவே இங்கு தடைபட்டு நிற்கிறது. இப்போது கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து இயல்புநிலை திரும்பினாலும், பலருக்கும் வருமானப் பிரச்னை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேநேரத்தில், காஸ் விலை, பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஜி.எஸ்.டி வரியும் குறைந்தபாடில்லை. இதுபோன்ற அத்தியாவசிய தேவைகளின் விலைகளைக் குறைக்க வேண்டும். அதைச் சரிசெய்யாமல்,வேறு விஷயங்களில் கவனம் செலுத்துவது பயனளிக்காது. வேலை வாய்ப்புகளைப் பெருக்க வேண்டும்.

கௌசல்யா
கௌசல்யா

மத்திய, மாநில அரசுகள் தொழில் தொடங்க பல திட்டங்களை அறிவித்துள்ளன. ஆனால், அதுகுறித்து மக்களுக்கு தெரிவதில்லை. வங்கிகளுக்குச் சென்றாலும் மக்கள் உதாசினப்படுத்தப்படுகின்றனர். எனவே, சாமானிய மக்களுக்கு எளிமையாகச் சென்றுசேரும் வகையில் கடன் திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சட்ட திட்டங்களைக் கடுமையாக்க வேண்டும். இந்தக் கொடிய கொரோனா காலகட்டத்திலும் விவசாயிகள் மூலம் நமக்கு தடையில்லாமல் உணவு கிடைத்தது. எனவே, பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

`100 ஆண்டுகளில் இந்தியா பார்த்திராத பட்ஜெட்!' - பட்ஜெட் 2020-21 குறித்து நிர்மலா சீதாராமன்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிறுமுகை பகுதியைச் சேர்ந்த மூத்த நெசவாளி காரப்பன், ``விவசாயத்துறையையும் ஜவுளித்துறையையும் நேரடியாக இணைக்க வேண்டும். இரண்டும் சேர்ந்தால்தான் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். அவை இரண்டையும் புறக்கணித்து வருவதால்தான், தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. எது இல்லாமல் வேண்டுமானாலும் இருந்துவிடலாம். ஆனால் உணவு, உடை இல்லாமல் இருக்க முடியாது. இரண்டுமே இன்றியமையாதது. இதில் கோடிக்கணக்கான வேலை வாய்ப்பு இருந்தாலும், அது குறித்து விழிப்புணர்வு இல்லை. விவசாயம் மற்றும் ஜவுளித்துறையில் மற்ற நாடுகள் நம்மைவிட உயர்ந்துவிட்டன. முக்கியமாக, ஜவுளித்துறைக்கு என்று பிரத்யேக வங்கிகள் மற்றும் வங்கி திட்டங்கள் கொண்டு வர வேண்டும். சில்க் மார்க்கெட்களை உருவாக்க வேண்டும்.

காரப்பன்
காரப்பன்

கோவையை தென்னிந்தியாவின் மான்சென்ஸ்டர் என்று சொல்வார்கள். அதற்கு காரணம், ஜவுளித்துறைதான். அந்த அடையாளத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக இழக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. சமீப காலங்களாக பலர் ஜவுளித்துறையைவிட்டு சென்று கொண்டிருக்கின்றனர். நூல் ஆலைகளை மூடிவிட்டனர். ஆனால், இப்போதும் ஜவுளித்துறைதான் இங்கு அதிக வேலை வாய்ப்பைக் கொடுத்து கொண்டிருக்கிறது. எனவே, ஜவுளித்துறைக்கு என்று பல சிறப்பு திட்டங்களை எதிர்பார்க்கிறோம்" என்றார்.

கணபதி அருகே உள்ள இளம் தொழில் முனைவோர் இஷானா, ``நான் மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் நாப்கின்களைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளேன். கொரோனாவால் எல்லாத்துறைகளும் முடங்கிவிட்டன. இப்போது பட்ஜெட் போடுவது மிகவும் ஆறுதலான செய்திதான். மத்திய அரசு இந்தமுறை, குறு, சிறு நிறுவனங்களை மனதில் வைத்து பட்ஜெட் போட வேண்டும்.

பெட்ரோலுக்கு GST, வருமான வரிச் சலுகை... திருச்சி மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

நாப்கின்களுக்கு 5 சதவிகிதம் ஜி.எஸ்.டி நிர்ணயித்துள்ளனர். அதை முற்றிலுமாக நீக்க வேண்டும். நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளைக் கொடுப்பது குறு, சிறு நிறுவனங்கள்தான். ஆனால், இதுவரை, எங்களுக்கு எந்தத் திட்டங்களும் பயனளிக்கவில்லை. குறு, சிறு நிறுவனங்களை மீட்டெடுத்தால் மட்டுமே, பொருளாதாரத்தை உயர்த்த முடியும்.

இஷானா
இஷானா

எனவே, எங்களுக்கு வட்டியில்லா கடனை அளித்து உதவ வேண்டும். பெண்கள் அதிகளவு தொழில் தொடங்க வருகின்றனர். அவர்களுக்கு அதிகளவு உதவிகளைச் செய்து, தொழில் நடத்துவதற்கான சூழ்நிலையை எளிதாக்க வேண்டும். இதுவரை எங்களை அடித்தட்டு மக்களாகவே வைத்துவிட்டீர்கள். இனி அடித்தட்டு மக்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும் பட்ஜெட்டாக இது இருக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு