Published:Updated:

உச்சத்தை நோக்கி தங்கத்தின் விலை!- என்ன காரணம்?

செ.கார்த்திகேயன்

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் இன்னும் சில நாள்களில் ஆபரணத் தங்கத்தின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

தங்கம்
தங்கம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்திருப்பதாலும், தங்கத்தின் மீதான உள்நாட்டு இறக்குமதி வரி உயர்த்தப்பட்டிருப்பதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் அடைந்துள்ளது. மேலும், கடந்த இரண்டு மாத காலமாகவே ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை 27,000 ரூபாயை நெருங்கும் விதமாகவே வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், சுத்தத் தங்கம் (24 கேரட்) கடந்த திங்கள் கிழமையில் 28,040 ரூபாயைத் தொட்டிருக்கிறது. இது வரலாறு காணாத உச்சமாகும்.

தங்கம்
தங்கம்

கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 25,000 ரூபாயைத் தாண்டி விற்பனையானது. இது கடந்த ஜூன் மாதம் 26,000 ரூபாயைக்  கடந்தது. நேற்றைய நிலவரப்படி (ஜூலை 22, 2019) ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 26,784 ரூபாய் என்கிற விலையில் வர்த்தகமாகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், இன்னும் சில நாள்களில் ஆபரணத் தங்கத்தின் விலையும் புதிய உச்சத்தைத் தொடும் என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இன்றைய காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 136 ரூபாய் குறைந்து, கிராமுக்கு 3,331 ரூபாயாகவும், சவரனுக்கு ரூ. 26,648 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 3,488 ரூபாயாகவும், சவரனுக்கு 27,904 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.