Published:Updated:

`இந்தியாவும் இந்த சுமையை தாங்க வேண்டியிருக்கும்!' - பொருளாதார மந்தநிலை குறித்து நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதி குறைக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

`மக்களுக்கான பட்ஜெட்’ என்ற நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொழில்துறையினருடன் கலந்துரையாடினார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த நிர்மலா சீதாராமனிடம் பட்ஜெட் தொடர்பாகப் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இதற்குப் பதிலளித்தவர், ``இந்தியாவின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளது. அந்நிய செலாவணி இருப்பு மற்றும் அந்நிய நேரடி முதலீடுகள் அதிகபட்ச நிலையில் உள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

சிறு குறு தொழில்துறையினருக்கு எந்தக் காரணமும் இன்றி வங்கிகள் கடன் வழங்க மறுத்தால் இதுகுறித்து புகார் தெரிவிக்க சிறப்பு மையம் விரைவில் அமைக்கப்படும். மெயில் மூலம் புகார்கள் அனுப்ப வழிவகை செய்யப்படும். புகார் தெரிவிக்கும்போது அதன் நகலை சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு அனுப்ப வேண்டும். பட்ஜெட்டில் மாநிலங்களுக்கான நிதிகள் குறைக்கப்படவில்லை. நிலுவைத் தொகைகள் அந்தந்த மாநிலங்களுக்கு விரைவில் வழங்கப்படும்.

தமிழகம் மட்டுமல்லாமல் எல்லா மாநிலங்களுக்கும் ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத்தொகையைப் பொறுத்தவரை 2 தவணை நிலுவையில் உள்ளது. விரைவில் நிலுவைத்தொகை வழங்கப்படும். மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்படுத்துவதுபோல் இந்த பட்ஜெட் உள்ளதாகக் கூறுவது முற்றிலும் தவறானது. நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போதே இதுகுறித்து நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினோம். நிபுணர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.

விவசாயிகளுக்கான நிதி உதவிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கான சோலார் பம்ப் திட்டத்துக்கு மாநிலங்களுக்கு எவ்வளவு நிதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து அரசு பின்னர் தெரிவிக்கும். பொதுமக்களின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காகவே, எல்.ஐ.சி-யின் பங்குகளைத் தனியாருக்கு விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. எத்தனை சதவிகித பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

8 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்ற இலக்கை அடைவதற்காக முயற்சியில் அரசு இறங்கியுள்ளது. உலக அரங்கில் பொருளாதார மந்தநிலை உள்ளது. சீனா - அமெரிக்கா, இரான் - அமெரிக்கா இடையேயான வர்த்தகப் போர் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் இந்தச் சுமையைத் தாங்க வேண்டியிருக்கும். உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக உற்பத்தி, வர்த்தகத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது” என்றார்.

பின் செல்ல