Published:Updated:

பெட்ரோலுக்கு GST, வருமான வரிச் சலுகை... திருச்சி மக்களின் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் என்ன?

Union Budget 2021 குறித்து மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள திருச்சி மக்களில் சிலரை சந்தித்துப் பேசினோம்.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது. அனைத்து துறை சார்ந்தவர்களும் பட்ஜெட்டில் தங்களுக்கான சிறப்பு அறிவிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். மக்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள திருச்சி மக்களில் சிலரை சந்தித்துப் பேசினோம்.

திருச்சி அல்லூர் பகுதியைச்சேர்ந்த தொழிலாளர் நல ஆலோசகர் சீனிவாசன், ``மத்திய அரசின் 2021-22 நிதி நிலை அறிக்கையை நாடே எதிர்பார்க்கிறது. காரணம், கடந்த கால நிதி நிலை அறிக்கைகள் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு பாதகமாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சாதகமாகவும் இருந்தது. `பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா' வீடு கட்டி தரும் திட்டத்தின் கீழ் 19.50 கோடி வீடுகள் கட்டப்படவிருப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் 11 கோடியே 22 லட்சம் வீடுகள் மட்டுமே கட்டப்பட்டிருக்கிறது. இது போன்ற நடுத்தர மக்களின் நலனுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படவில்லை.

வருமான வரி உச்ச வரம்பு ரூ.10 லட்சம்!

சீனிவாசன்
சீனிவாசன்

பிரதான் மந்திரி கரம் யோகிமான் திட்டத்தின் கீழ் ரூ.1.5 கோடி அளவுக்கு வர்த்தகம் செய்ய கடனுதவி தரும் திட்டத்தில் ஏற்கெனவே 7 லட்சம் பேர் உள்ள நிலையில், வெறும் 25,000 பேர் மட்டுமே சேர்ந்தனர். காரணம், தொழில் வர்த்தகர்களுக்கு வழங்கும் ஓய்வு ஊதியம் ரூ.3,000, அவரது மறைவுக்குப்பின் 1,500 என்ற திட்டம் தோல்வி அடைந்தது. காரணம் ஓய்வூதியம் குறைவு மற்றும் மனைவி தவிர வாரிசுகளுக்கு ஓய்வூதியம் இல்லை என்பதுதான். இந்த பட்ஜெட்டில் ஓய்வூதிய தொகை அதிகமாகவும் வாரிசுகளுக்கும் கிடைக்கும் வகையிலும் மாற்றம் செய்ய வேண்டும். மேலும் வருமான வரி பெருமளவில் குறைக்க வேண்டும். தனிநபர் வருமான வரி விலக்கு 10 லட்சம் என நிர்ணயிக்க வேண்டும்.

ஜி.எஸ்.டி., வரியும் பெருமளவில் குறைக்கப்பட வேண்டும். இன்றைய சூழலில் கார் என்பதே நடுத்தர மக்களின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்ட நிலையில் வாகன உதிரி பாகங்களுக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்பது மிகக் கொடுமையானது. இதனை உடனே குறைக்க வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான வரி விதிப்பை ஜி.எஸ்.டி வரி விதிப்புக்குள் கொண்டு வர வேண்டும். 15 வருடங்களுக்கு மேலான தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. மாநகராட்சிக்கு 20 கிலோமீட்டர் தூரத்தில் சுங்கச் சாவடிகளை அமைக்கக் கூடாது. மேலும் சுங்க சாவடிகள் கட்டணம் 50% குறைக்க வேண்டும்.

Union Budget 2021: இந்த ஆண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட்... அறிமுகமானது புதிய மொபைல் ஆப்

நாட்டின் வேலை வாய்ப்பின்மை பெருமளவில் குறையும் வண்ணம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும். ஆக மொத்தத்தில் பட்ஜெட் பணிகள் துவங்கும் போது கொடுக்கப்பட்ட அல்வாவை முடிவிலும் கொடுக்காமல் வாயில் வடை சுடும் போக்கை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கைவிட்டு நடுத்தர மக்களுக்கு பலன் தரும் பட்ஜெட்டை தயாரித்து வழங்கினால் அவர்களை நாடு வாழ்த்தும். தவறினால் நடுத்தர மக்களின் கோபம் அரசை நிச்சயம் வீழ்த்தும்; இதில் எந்த மாற்றமும் இல்லை" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வேலைவாய்ப்பு!

ரமேஷ்
ரமேஷ்

எலக்ட்ரீஷியனான ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரமேஷ், ``பட்ஜெட் என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் இருக்கவேண்டும். அதுதானே முக்கியம்? ஆனால் பா.ஜ.க அரசு இன்னும் எத்தனை பட்ஜெட்டுகளை கொண்டு வந்தாலும் எப்படியும் மக்களுக்குகோ அல்லது சாமானியனோக்கோ பலன் அளிக்கப்பப் போவதில்லை. இந்த முறையும் பட்ஜெட் கார்ப்பரேட் முதலாளிகளுக்குதான் பயனளிக்கப்போகிறது. இதில் எந்த மாற்றமும் இல்லை. நாட்டில் எண்ணற்ற இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கின்றனர். அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் எந்த திட்டமும் கடந்த பட்ஜெட்டிலும் இல்லை. தற்போதைய பட்ஜெட்டிலாவது இருக்குமா என்பது என் எதிர்பார்ப்பு" என்றார்.

நதிநீர் இணைப்பு, குறைந்தபட்ச ஆதரவு விலை!

விவசாயி அய்யாரப்பன், ``நீண்ட காலமாகவே விவசாய வருமானம் நலிவடைந்து வரும் நிலையில், விவசாய திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என்கிற கருத்து மேலோங்கியுள்ளது. கடந்த பட்ஜெட்டில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக ஆக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் இன்று விவசாயிகளின் தலையில் துண்டை போட்டுக்கொண்டு உட்காரவேண்டிய சூழலில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்

விவசாயம்
விவசாயம்
Union Budget 2021: சுகாதாரத் துறைக்கு அதிக நிதியை ஒதுக்குமா மத்திய அரசாங்கம்?

ஆண்டுக்கு ரூ.6,000 விவசாய நிதி உதவி, குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு என பல திட்டங்களை மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. விவசாயத் துறையில் முதலீடுகளை அதிகரிக்கவேண்டும், சூரிய சக்தியை வருமான வாய்ப்பாக விவசாயிகள் பயன்படுத்த அனுமதித்தல், நுண் நீர்ப் பாசனத்தில் முதலீட்டை அதிகரித்தல் போன்ற விஷயங்களில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்.

நாடு முழுவதும் நிலவும் வறட்சியை போக்க நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு சரியான விலை, உரம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கு மானியம், பயிர் காப்பீடு உத்தரவாதம் என பல எதிர்பார்ப்புகளும் விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது" என்றார்.

தனியார் பள்ளி ஆசிரியையான பவித்ரா, ``நடுத்தர மக்களுக்கு வீடு, நிலம், கார் வாங்க வேண்டுமென்ற எண்ணமே இப்போதுதான் தோன்றுகிறது. ஆனால், இப்போது இருக்கும் சூழலில், அதையெல்லாம் இனி நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு வரிவிதிப்பு உள்ளது. ஜி.எஸ்.டி வரியால் அனைத்து பொருட்களின் விலையும் அதிக அளவில் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் சைக்கிளுக்கு மாறிவரும் நிலையை பா.ஜ.க அரசு உருவாக்கியுள்ளது.

பவித்ரா
பவித்ரா

இதுமட்டுமல்லாமல் ஏற்கனவே எகிறிக் கொண்டிருக்கும் தங்கத்தின் மீதான வரியும், மற்றும் விலை உயர்த்தப்பட்டு இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இன்றைய பொருளாதார நிலையில் ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிக்க குறைந்தபட்சம் 10 முதல் 15 பவுனாவது போட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆனால் தற்போது தங்கத்தின் மீதான வரி கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதால் ஏழை எளிய மக்கள் பாடு படுதிண்டாட்டம்தான்.

எங்களை போன்றோர்கள் மாத சம்பளம் பெறுபவர்கள் கடைசி வரையிலும் இ.எம்.ஐ கட்டியே சாகவேண்டிய சூழலில் இருக்கிறார்கள். இதனை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். கொரோனா பாதிப்புக்கு பிறகு மக்களின் பெரும்பாலான சேமிப்பு மருத்துவச் செலவுகளில் முடங்கியது. இதனால், காப்பீடு திட்டங்களில் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கான செலவுத் தொகையின் அடிப்படை வரம்பை உயர்த்த வேண்டும். மேலும், காப்பீட்டு திட்டத்தில் கூடுதல் சலுகைகளையும் அளிக்க வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு