Election bannerElection banner
Published:Updated:

நிர்மலா சீதாராமன் சொன்ன`100 ஆண்டுகளில் பார்த்திராத பட்ஜெட்!' - 10 முக்கிய அம்சங்கள் #UnionBudget2021

Nirmala Sitharaman
Nirmala Sitharaman ( AP Photo / Manish Swarup )

மத்திய பட்ஜெட் 2021-ன் 10 முக்கிய சிறப்பம்சங்கள்

நாடாளுமன்றத்தில் தனது மூன்றாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சி அமைத்த பிறகு, தாக்கல் செய்யப்படும் எட்டாவது பட்ஜெட் இதுவாகும். இந்திய வரலாற்றில் முதல் முறையாக `பேப்பர்லெஸ்' பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

பட்ஜெட் உரையின்போது, ``நாட்டுக்குப் பொருள் வரும் வழிகளை உண்டாக்குதலும், நாட்டில் கிடைக்கப் பெறாதனவற்றைக் கிடைக்குமிடங்களிலிருந்து சேர்த்தலும், உள்ள பொருள்களை வீணாக்காமல் காப்பாற்றுதலும், காப்பாற்றியுள்ள பொருள்களைப் பயன்படும் வழிகளில் வகுத்துச் செலவிடுதலும் ஆகிய விஷயங்களில் வல்லவனே அரசாட்சி செய்ய ஏற்றவனாவான் என்பதை சுட்டிக்காட்ட,

``இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு"

- என்கிற திருக்குறளையும், நோய் இல்லாமை, செல்வம், விளைச்சல், மகிழ்ச்சி, நல்ல காவல் இவை ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு என்கிற விஷயத்தை சுட்டிக்காட்ட

``பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து"

- என்கிற திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசினார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
மெட்ரோ விரிவாக்கம், தொழில் வழித்தடம்... மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள்?

சில வாரங்களுக்கு முன்பு மத்திய பட்ஜெட் குறித்து பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``இதற்கு முன்பு யாரும் பார்த்திராத பட்ஜெட்டை தயாரிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுபோல், ஒரு பெருந்தொற்றுக்குப் பிறகு, தயாரிக்கப்படும் பட்ஜெட்டை கடந்த 100 ஆண்டுக் கால இந்தியா பார்த்திருக்காது" எனத் தெரிவித்திருந்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. `budget like never before' என்பது இந்த பட்ஜெட்டைக் குறிப்பிடும் முக்கியமான வாசகமாகவும் ஆனது. இதுவரை இந்தியா பார்த்திராத சூழ்நிலையில் தாக்கலாகும் பட்ஜெட் என்றாலும், வரலாற்றில் குறிப்பிடும் அளவுக்கான பட்ஜெட்டா இது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறோம். இந்த `வரலாற்று சிறப்புமிக்க(!)' பட்ஜெட்டின் 10 முக்கிய சிறப்பம்சங்களைக் காண்போம்.

* கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்டதைவிட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்

* சுய சார்பு சுகாதாரத்துக்கு (Aatmanirbhar Health Yojana) 64,180 கோடி ரூபாய்,

* நகர தூய்மை திட்டத்துக்கு 1.14 கோடி லட்சம் கோடி ரூபாய்

* கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Union Budget 2021: இந்த ஆண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட்... அறிமுகமானது புதிய மொபைல் ஆப்

* நாட்டின் சுற்றுச் சூழலை மேம்படுத்த பழைய வாகனங்களைத் திரும்பப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்த 2,217 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல நாடு முழுவதும் ஊட்டச்சத்தை அதிப்படுத்துவதற்கான திட்டமும் வகுக்கப்படும். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். மேலும், ஜவுளித்துறைய ஊக்கப்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீட்டுப் பூங்கா அமைக்கப்படும். வருகிற 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும்.

பட்ஜெட் 2021
பட்ஜெட் 2021

* நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்துக்கு சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ தூரத்துக்கு சாலைப் பணிகள் தொடங்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம் அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மதுரையில் இருந்து கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன்கூடிய நெடுஞ்சாலை அமைக்கப்படும். அதே போல மேற்கு வங்கத்துக்கு 25,000 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் சாலைப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* இந்திய ரயில்வே வழித்தடங்கள் மேம்பாட்டுக்கு மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகல ரயில் பாதைகள் 2023-ம் ஆண்டுக்குள் மின்மயம் ஆக்கப்படும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். சென்னையில் 118 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படும். இதற்காக 63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

* 3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மின் விநியோகத்தில் தனியார் துறைக்கு அனுமதி வழக்கப்படுகிறது. எந்த நிறுவனத்திலிருந்து மின்சாரத்தைப் பெறலாம் என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்துகொள்ளலாம். மேலும், வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 நகரங்களில் எரிவாயு விநியோகக் குழாய் அமைக்கப்படும்.

விவசாயம்
விவசாயம்
Union Budget 2021: 1.50 மணி நேரம்... பட்ஜெட்டை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்! #LiveUpdates

* எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான பணிகள் நடப்பு நிதியாண்டில் தொடங்கப்படும். நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் நடைமுறைப்படுத்தப்படும். மேலும்

* பாரத் பெட்ரோலியம்,

* ஏர் இந்தியா,

* ஐ.டி.பி.ஐ பேங்க்,

* பவன் ஹன்ஸ்,

* கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும்.

* அரசின் தானிய கொள்முதல் நடவடிக்கை மூலம் கடந்த ஓராண்டில் 1.5 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வருகிற நிதியாண்டில் 1.72 லட்சம் கோடி மதிப்பில் விவசாய விளைபொருள்கள் கொள்முதல் செய்யப்படும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதே போல மற்ற விளைபொருள்களின் குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் வழங்க 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இன்ஷூரன்ஸ்
இன்ஷூரன்ஸ்

* வருகிற நிதியாண்டில் நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும். நாடு முழுவதும் 15,000 பள்ளிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய திட்டங்கள் நிறைவேற்றப்படும். மேலும், கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அடுத்த 6 ஆண்டுகளில் ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 35,219 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* வீட்டுக்கடனில் 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு கட்டும் திட்டங்களுக்கும், குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கும் 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும்.

Bombay Stock Exchange (BSE)
Bombay Stock Exchange (BSE)
AP Photo

* பங்கு முதலீட்டாளர்கள் டிவிடெண்ட் வருமானத்துக்கு முன்கூட்டியே வரி செலுத்த தேவையில்லை. மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய விலக்குகள் மறு பரிசீலனை செய்யப்படும். பெரிய அளவிலான வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனத்தின் முந்தைய 10 வருடங்களுக்கான வரி விதிப்பு தரவுகள் பரிசோதிக்கப்படும். இனி வருகிற நடப்பு ஆண்டுகளில் வரி ஏய்ப்புகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் நடைமுறை படுத்தப்படும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு