Published:Updated:

அனைத்துத் துறைகளிலும் `நைட் ஷிஃப்ட்'க்கு அனுமதி... பெண்களுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் என்னென்ன?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் ( AP Photo / Manish Swarup )

இந்த பட்ஜெட்டில் பெண்களுக்காக என்னென்ன அறிவிப்புகள் தந்திருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்?

`பெண்களின் பாதுகாப்புக்கும் வளர்ச்சிக்கும் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை மிக மிகக் குறைவு. சென்ற ஆண்டு இவற்றுக்காக ஒதுக்கப்பட்டது ரூ. 726 கோடி. அது இப்போது வெறும் ரூ. 48 கோடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், `பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்', `பெண் குழந்தை பாதுகாப்பு', `வளரிளம் பருவத்தில் இருக்கும் பெண்களுக்கான திட்டம்' போன்ற திட்டங்களுக்கு இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே ஒதுக்கப்படவில்லை. அப்படியிருக்க, பெண்கள் இப்போது எல்லா துறைகளிலும் இரவுப் பணியில், தகுந்த பாதுகாப்போடு வேலைசெய்யலாம் என்று அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். இது என்ன முரண்பாடு?' - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து எழுந்திருக்கும் கருத்து இது.

``சென்ற ஆண்டு பட்ஜெட்டிலேயே பெண்களின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான அளவு நிதி ஒதுக்கி, அவற்றுக்கான அடித்தளத்தை நாம் ஏற்படுத்திவிட்டோம். அதனால் இந்த ஆண்டு, அந்தத் அடித்தளத்தின் மீதான செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" என்பது, அரசு தரப்பின் வார்த்தைகளாக உள்ளது.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
Union Budget 2021: 1.50 மணி நேரம்... பட்ஜெட்டை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்! #LiveUpdates

அடுத்ததாக, தன் பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன், ``அனைத்துத் துறைகளிலும் இரவு நேரப் பணிகளில் பெண்கள் ஈடுபடலாம். அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். நைட் ஷிஃப்டில், காலை 6 மணிக்கு முன்பு மற்றும் இரவு 7 மணிக்கு மேல் வேலைசெய்யும் பெண்களுக்கு, சில பாதுகாப்பு வரையறைகளை அவர்கள் வேலைசெய்யும் நிறுவனங்கள் ஏற்படுத்திக் கொடுத்து கடைப்பிடிக்க வேண்டும் என்று, மத்திய அரசு ஏற்கெனவே விதிகளை உருவாக்கியுள்ளது. அந்த விதிகள் வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வரும் என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விதிகளின் முக்கிய அம்சங்களைப் பார்ப்போம்...

• மேலே குறிப்பிட்டுள்ள (இரவு 7 மணிக்கு மேல், காலை 6 மணிக்கு முன்) நேரத்தில் வேலை செய்ய, பெண்களின் ஒப்புதலை முதலில் அந்நிறுவனங்கள் பெற வேண்டும்.

• பெண்களுக்கு `பிக்கப், டிராப்' வசதிகள் செய்து தரப்பட வேண்டும். அவர்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அலுவலகத்துக்கு அழைத்து வரவும், வேலை நேரம் முடிந்த பின் மீண்டும் அவர்களை அலுவலகத்திலிருந்து தங்கியிருக்கும் இடத்தில் விடவும் பாதுகாப்புடன்கூடிய போக்குவரத்து வசதிகளை அமைத்துத் தர வேண்டும்.

• மேலும், பணியிடத்தில் வேலை செய்யும் இடம், கழிவறைகள், குடிநீர் இருக்கும் இடம், நுழைவாயில் என எல்லா இடங்களும் நல்ல வெளிச்சத்துடன் இருக்க வேண்டும்.

• கழிவறைகள், தண்ணீர் குடிக்கும் இடங்கள் வேலை செய்யும் இடத்துக்கு அருகிலேயே இருக்க வேண்டும்.

• குறைந்தது மூன்று பெண்களாவது இரவு நேரப் பணியில் இருத்தல் வேண்டும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் சொன்ன`100 ஆண்டுகளில் பார்த்திராத பட்ஜெட்!' - 10 முக்கிய அம்சங்கள் #UnionBudget2021

• கர்ப்பிணி என்றால், அவருக்கு உண்டான விடுப்பு போன்ற விஷயங்களில் அதற்குண்டான சட்டங்களை மீறாமல் நடக்க வேண்டும்.

• பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை (தடுப்பு, பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம் 2013, எல்லா நிறுவனங்களிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

அடுத்ததாக, இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கான திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பற்றிப் பார்ப்போம்.

கர்ப்பிணிகளுக்காகவும், பால் கொடுக்கும் தாய்மார்களுக்காகவும் 2017-18-ல் ஆரம்பிக்கப்பட்டது `போஷன் அப்யான்' திட்டம். இப்போது இந்த அங்கன்வாடி சேவைகளுக் காகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி நிதிக்காகவும் ரூ.20,105 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சிக்காக மொத்தமாக ஒதுக்கப்பட்டுள்ள ரூ.24,435 கோடியில் 82.3% ஆகும். பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்துக்கு சென்ற வருடம் ஒதுக்கப்பட்ட நிதி இவ்வருடம் 16.31% அதிகரித்திருக்கிறது.

சமூக நலத்துறைக்கு சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ.2,411.80 கோடி. இந்த ஆண்டு ரூ.3,575.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்களின் சத்துக் குறைபாடு குறைகளை நீக்குவது மற்றும் சமூகப் பாதுகாப்பு நலன் இத்துறையின் கீழ்தான் வருகிறது.

மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்
மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன்

மேலும், அசாமில் உள்ள தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

`பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் மூலமாக, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள பெண்களுக்கு கொடுக்கப்படும் எரிவாயு சிலிண்டர்களில், மேலும் ஒரு கோடி சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா லாக்டௌன் காலகட்டத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கும், எல்லா நிலையில் இருக்கும் பெண்களுக்கும் இந்த பட்ஜெட் ஓரளவு ஆறுதலை தருகிறது என்று கூறலாம்.

- ஶ்ரீவித்யா தேசிகன்
அடுத்த கட்டுரைக்கு