Published:Updated:

Union Budget 2021: 1.50 மணி நேரம்... பட்ஜெட்டை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்! #LiveUpdates

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் 2021 - Live Updates

01 Feb 2021 12 PM

பட்ஜெட் உரையை 1.50 மணி நேரத்தில் வாசித்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல அதிக நிதி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு!

கடந்த 2020-2021-ம் பட்ஜெட்டில் தங்கத்துக்கான இறக்குமதி வரி உயர்த்தப்பட்டது. நடப்பு பட்ஜெட்டில் அது 12.5 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

01 Feb 2021 12 PM

``மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய சலுகைகள் மறு பரிசீலனை செய்யப்படும். பெரிய அளவிலான வரி ஏய்ப்புகள் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நிறுவனத்தின் முந்தைய 10 வருடங்களுக்கான வரி விதிப்பு தரவுகள் பரிசோதிக்கப்படும். இனி வருகிற நடப்பு ஆண்டுகளில் வரி ஏய்ப்புகளைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்படும். பங்கு முதலீட்டாளர்கள் இனிமேல் டிவிடெண்ட் வருமானத்துக்கு முன்கூட்டியே வரி செலுத்தத் தேவையில்லை."

- நிர்மலா சீதாராமன்

``இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பு நிதியாண்டில் 6.48 கோடி பேர் வருமான வரியைத் தாக்கல் செய்துள்ளனர். சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளைத் தீர்த்து வைக்க புதிய குழு அமைக்கப்படும். மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாயகம் திரும்பும்போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டுக்கடனில் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச்சலுகை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்த விலை வீடு கட்டும் திட்டங்களுக்கும், குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கும் 2022-ம் ஆண்டு வரை வரிச்சலுகை வழங்கப்படும்."

- நிர்மலா சீதாராமன்

Investment
Investment
01 Feb 2021 12 PM

75 வயதுக்கும் மேற்பட்ட முதியோர்களுக்கு வருமான வரி தாக்கலில் இருந்து விலக்கு!

``இந்த பட்ஜெட்டில் முதியோருக்கு வருமான வரியில் சலுகை கொடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டுமே நம்பியுள்ள 75 வயதுக்கும் மேற்பட்டோர் வருமான வரியைத் தாக்கல் செய்ய வேண்டாம்."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 12 PM

``இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்லது அரசு"

- பட்ஜெட் உரையில் திருக்குறளை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

``பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணியென்ப நாட்டிவ் வைந்து."

- இரண்டாவதாக மற்றொரு திருக்குறளையும் மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்

``நடப்பு நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை 9.50% ஆகவும், வருகிற நிதியாண்டில் 6.68 சதவிகிதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அரசின் செலவினங்கள் 34.85 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். அரசின் செலவுகளை சமாளிக்க சந்தைகளில் இருந்து 12 லட்சம் கோடி கடன் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 12 PM

கல்வித்துறை அறிவிப்புகள்

Education
Education

``வருகிற நிதியாண்டில் கல்வித்துறையில் 100 புதிய சைனிக் பள்ளிகள் உருவாக்கப்படும். ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூடுதல் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. லடாக்கின் லே பகுதியில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும். உயர்கல்வித் துறைக்கு புதிய குழு நியமிக்கப்படும். நாடு முழுவதும் 15,000 பள்ளிகளை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் அறிவிப்புகள் மற்றும் முக்கிய திட்டங்களை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்ய திட்டம் நிறைவேற்றப்படும். அதே போல தேசிய மொழிகளை மொழிபெயர்ப்பதற்கான புதிய திட்டமும் உருவாக்கப்படும். மேலும், கல்வித்துறையில் ஆராய்ச்சிக்கு 50,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 6 ஆண்டுகளில் ஆதி திராவிட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 35,219 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 12 PM

``சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் வெளி மாநில ஊழியர்கள் பெரிதும் பலனடைந்துள்ளனர். குறிப்பாக, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதனால் அதிகம் பலனடைந்துள்ளனர். மேலும் சாலையோர வியாபாரிகளுக்கு சமூக பாதுகாப்புத் திட்டம் விரிவுபடுத்தப்படும். விவசாயிகளுக்கு கடன் வழங்க 16.5 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."

- நிர்மலா சீதாராமன்

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தரவுகள்

Agriculture
Agriculture

``இந்த அரசு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டுள்ளது. விவசாயத் துறையில் வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நடவடிக்கை தொடரும். அதற்கான தரவுகளையும் நான் தருகிறேன். கோதுமையைப் பொறுத்தவரை 2013-14 ஆண்டில் 33,874 கோடி ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே 2019-20-ல் 62,804 கோடி ரூபாய் கோதுமை விவசாயிகளுக்கு கொள்முதல் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டில் இந்தத் தொகை 75,050-யாக உயர்ந்துள்ளது. அரசின் மூலம் பயன்பெறும் கோதுமை விவசாயிகளின் எண்ணிக்கை 2019-20 ஆண்டில் 35.57 லட்சமாக இருந்தது. இது தற்போது 43.36 லட்சமாக உயர்ந்துள்ளது.

நெல் விவசாயிகளைப் பொறுத்தவரை 2013-14 ஆண்டில் 53,928 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது 2019-20-ல் 1.41 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2020-21-ல் இந்தத் தொகை 1,72,752 ஆக உயரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் நலனில் அரசு உறுதியாக இருப்பதால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு ஆகும் வகையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

``எல்.ஐ.சி ஐ.பி.ஓ வெளியீட்டுக்கான பணிகள் இந்த ஆண்டில் முழுமையாக நிறைவடையும். நிலுவையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனையும் விரைவில் செயல்படுத்தப் படும். மேலும், பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவனங்களின் பங்குகளை விற்க நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் நிதியைத் திரட்ட முடியும்."

- நிர்மலா சீதாராமன்.

வங்கி டெப்பாசிட்களுக்கான இன்ஷூரன்ஸ் அதிகரிப்பு

``அரசு வங்கிகள் மத்திய அரசிடமிருந்து அதிக மூலதனம் எதிர்பார்த்து வந்த நிலையில், அரசு வங்கிகளுக்கு கூடுதல் மூலதனமாக 20,000 கோடி ரூபாய் நிதி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கான இன்ஷூரன்ஸ் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு

``3.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்படுத்தப்படும். மின் விநியோகத்தில் தனியார் துறைக்கு அனுமதி வழக்கப்படுகிறது. எந்த நிறுவனத்திலிருந்து மினசாரத்தைப் பெறலாம் என்பதை வாடிக்கையாளர்களே முடிவு செய்து கொள்ளலாம். வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 100 நகரங்களில் எரிவாயு விநியோகக் குழாய் அமைக்கப்படும்."

- நிர்மலா சீதாராமன்

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதத்திலிருந்து 74 சதவிகிதமாக அதிகரிப்பு

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்கு 63,246 கோடி ஒதுக்கீடு!

``சென்னையில் 118 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படும். இதற்காக ₹63,246 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வழித்தடங்கள் மேம்பாட்டுக்கு மொத்தம் 1.10 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. இந்தியாவில் 27 நகரங்களில் மெட்ரோ ரயில் வழித்தடங்கள் மேம்படுத்தப்படும். அந்த வகையில் கொச்சி மெட்ரோ பணிகள் விரிவாக்கத்துக்கு 1,900 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடம்

``நாடு முழுவதும் 13,000 கி.மீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக 11,500 கி.மீ. தூரத்துக்கு சாலைப் பணிகள் அமைக்கப்படும். அதனடிப்படையில் தமிழகத்தில் 3,500 கி.மீ தூரத்துக்கு புதிய தொழில் வழித்தடத்திற்கான நெடுஞ்சாலை அமைக்க 1.03 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல மேற்கு வங்களத்துக்கு 25,000 கோடி ரூபாயும், கேரளாவுக்கு 65,000 கோடி ரூபாயும் நெடுஞ்சாலைப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை கொல்லம் வரை நவீன வசதிகளுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும்."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

பழைய வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான திட்டம்

``நாட்டின் சுற்றுச்சூழலை மேம்படுத்த பழைய வாகனங்களை திரும்பப் பெறுவதற்கான திட்டம் வகுக்கப்படும். அதே போல நாடு முழுவதும் ஊட்டச்சத்தை அதிப்படுத்துவதற்கான திட்டமும் வகுக்கப்படும். இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும். ஜவுளித்துறைய ஊக்கப்படுத்த மிகப்பெரிய அளவில் முதலீட்டுப் பூங்கா அமைக்கப்படும். வருகிற 3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும். அதே போல அடுத்த மூன்று ஆண்டுகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். அதற்காக 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய்

Healthcare
Healthcare

``தற்காப்பு, குணப்படுத்துதல், சரியான சிகிச்சை ஆகிய மூன்று அம்சங்களில் சுகாதாரத் துறை கவனம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சுயசார்பு சுகாதார திட்டத்திற்கு 64,180 கோடி ரூபாய் இந்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு 35,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

சுயசார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம்!

Industry
Industry

``சுயசார்பு திட்டம் நமக்கு புதியது அல்ல; பழங்காலத்திலிருந்தே இந்தியா சுயசார்பாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இதற்கு முன்பு அறிவிக்கப்பட்ட சுயசார்பு இந்தியா திட்டங்கள் 5 மினி பட்ஜெட்களுக்கு சமமானது. இந்தப் பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரம் வளர்வதற்கு தேவையான அனைத்து வாய்ப்புகளையும் இந்திய அரசு பயன்படுத்தி வருகிறது. சுயசார்பு திட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்கான பல அறிவிப்புகளை இந்த பட்ஜெட்டில் நீங்கள் பார்க்கலாம்."

- நிர்மலா சீதாராமன்.

01 Feb 2021 11 AM
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

``பொதுமுடக்கத்தை அறிவிக்காமல் இருந்திருந்தால், கொரோனா பெருந்தொற்றினால் இந்தியா பெரிய அளவில் பாதிப்பை சந்தித்திருக்கும். இந்திய மக்கள் கொரோனா பயத்திலிருந்து விரைந்து வெளியில் வர வேண்டும் என்பதற்காக தற்போது கொரோனாவுக்கு எதிராக இந்தியா இரண்டு தடுப்பூசிகளை விரைவாக கொண்டுவந்துள்ளது."

- நிர்மலா சீதாராமன்

01 Feb 2021 11 AM

பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

கொரோனா நோய்த் தொற்று நம் நாட்டை பெரிதும் பாதித்திருக்கிறது. இதனால் இந்திய பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத நோய்த் தொற்று நம் நாட்டை பாதித்திருக்கும் காலத்தில்தான் நான் இந்த மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறேன் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவுத் தானியங்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டன. இதற்காக பல லட்சம் கோடி ரூபாய் நிதியை பா.ஜ.க தலைமையிலான அரசு ஒதுக்கியுள்ளது.
நிர்மலா சீதாரமன்
01 Feb 2021 10 AM

பட்ஜெட்டிற்கு கேபினட் குழு ஒப்புதல்

மத்திய பட்ஜெட் 2021-க்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தது.

01 Feb 2021 10 AM

இந்த 3 விஷயங்களுக்கு முக்கியத்துவம் வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்

``- மத்திய பட்ஜெட் 2021 ஆனது சிறுகுறு தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஒத்துழைப்பு அளித்து வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் இருக்கவேண்டும்.

- பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காக்க சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும்.

- நாட்டின் எல்லைகளின் பாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பாதுகாப்பு துறைக்கு அதிக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்." என ராகுல் காந்தி ட்வீட்.

01 Feb 2021 10 AM

குடியரசுத் தலைவருடன் சந்திப்பு

பட்ஜெட் குழுவினர் குடியரசுத் தலைவருடன்
பட்ஜெட் குழுவினர் குடியரசுத் தலைவருடன்

நாடாளுமன்றத்திற்கு செல்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் சந்திப்பு.

01 Feb 2021 9 AM

நாடாளுமன்றம் புறப்பட்டார் நிதியமைச்சர்

பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சகத்திலிருந்து புறப்பட்டார் நிர்மலா சீதாராமன். பேப்பர்லெஸ் பட்ஜெட் என்பதால் காகித ஆவணங்களுக்குப் பதில் `டேப்லெட்'டில் இன்று தாக்கல் செய்கிறார்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
01 Feb 2021 9 AM

11 மணிக்கு தாக்கலாகும் மத்திய பட்ஜெட் 2021

கோவிட் 19 பெருந்தொற்றால் நாட்டின் நிதிநிலைமை மோசமான நிலையில் இருக்கும் சூழலில் இன்று மத்திய பட்ஜெட் 2021 தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சராக இவர் தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இது.

Union Budget 2021
Union Budget 2021

கோவிட்-19 காரணமாக பெரும்பாலான தொழில்கள் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனவே தொழில்துறைக்கு கைகொடுக்கவும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் முக்கிய சலுகைகள் இந்த பட்ஜெட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக பேப்பர்லெஸ் பட்ஜெட்டாகவும் இந்த பட்ஜெட் அமைகிறது. இதையடுத்து பட்ஜெட் ஆவணங்களை மக்கள் படிப்பதற்கு ஏதுவாக `Union Budget' என்னும் செயலியையும் வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

Union Budget 2021: பொருளாதார ஆய்வறிக்கை வெளியீடு... நம்பிக்கை கொடுத்த நிர்மலா சீதாராமன்!

கொரோனா பெருந்தொற்று காரணமாக, மத்திய அரசுக்கு செலவினங்கள் அதிகரித்துள்ளதால், வருகிற 2021-2022-ம் நிதி ஆண்டில் வரி வருவாயை அதிகரிக்க மத்திய அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதனால், இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

Union Budget 2021: இந்த ஆண்டு பேப்பர்லெஸ் பட்ஜெட்... அறிமுகமானது புதிய மொபைல் ஆப்

அதிகரிக்கும் செலவுகளை சமாளிக்க அதிக வருவாய் பிரிவினருக்கு `கோவிட் செஸ்' என்ற பெயரில் கூடுதல் வரி விதிப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சுகாதாரம், உள்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளுக்கு இம்முறை அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`பட்ஜெட் அறிவிப்புகள் மக்களுக்கு உரிய பயன்தராமல் போவது ஏன்?' - விளக்கும் நிதி ஆலோசகர் சிவக்குமார்
அடுத்த கட்டுரைக்கு