Published:Updated:

தொழில் துறைக்கு ஏற்றமா... ஏமாற்றமா? பட்ஜெட் குறித்து தொழில் துறை நிபுணர்கள்

I N D U S T R Y

பிரீமியம் ஸ்டோரி

பட்ஜெட் 2021

இந்திய மக்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது ‘மத்திய பட்ஜெட் 2021.’ குறிப்பாக, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகமான சலுகைகளை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்த்தனர். ஏனெனில், கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில் பெரிதும் பாதிக்கப் பட்டது இந்தத் துறை சார்ந்த நிறுவனங்களும், தொழில்முனைவோர் களும்தான். அதனால், ‘மத்திய பட்ஜெட் 2021’ தொழில்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள அந்தத் துறை சார்ந்த அமைப்புகளின் தலைவர்கள் சிலருடன் பேசினோம்.

ஹரி தியாகராஜன், எம்.வி.ரமேஷ்பாபு, ஜேம்ஸ், எம்.இந்துநாதன்
ஹரி தியாகராஜன், எம்.வி.ரமேஷ்பாபு, ஜேம்ஸ், எம்.இந்துநாதன்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள நலத்திட்டங்கள்!

பட்ஜெட் 2021-ல் எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த தொழிலகங்களுக்கு ரூ.15,700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இரும்பு மற்றும் ஸ்டீலுக்கான இறக்குமதியின் மீதான இறக்குமதி வரி 12.5 சதவிகிதத்தில் இருந்து 7.5 சதவிகிதமாகக் குறைக்கப் பட்டுள்ளது. உலோகங்கள் மறுசுழற்சி யாளர்களுக்கான (Scrab) இறக்குமதி வரிக்கு வருகிற 31.03.2022 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தாமிர ஸ்கிராப்புக்கான இறக்குமதி வரி 5 சதவிகிதத்திலிருந்து 2.5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இத்துறை சார்ந்த தொழில் நிறுவனங்களின் கடன் தொகை சார்ந்த வழக்குகளை விரைந்து தீர்வு காண உதவ ஏற்பாடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வாகனங்களுக்கு 20 ஆண்டுக் காலமும் வணிக ரீதியான வாகனங்களுக்கு 15 ஆண்டுக் காலமும் என்ற சாலையில் இயங்குவதற்கான புதிய கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டு களில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும் என சொல்லப் பட்டிருக்கிறது.

தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் இல்லை என்பதில் நியாயம் இல்லை!

சி.ஐ.ஐ அமைப்பின் தலைவர் ஹரி தியாகராஜன், “கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் பிரச்னைகளை கருத்தில்கொண்டு, கொரோனா காலத்தில் ஏற்கெனவே போடப்பட்ட மூன்று மினி பட்ஜெட்டுகள் மூலம் கடன் உதவி, வட்டிச் சலுகை, வட்டி செலுத்துவதற்கான கால நீட்டிப்பு போன்ற பல்வேறு சலுகைகளை நிதி அமைச்சர் அறிவித்திருக்கிறார். அதையும்தான் இப்போது கணக்கில் எடுத்துக்கொண்டு பேச வேண்டுமே தவிர, கடந்த மத்திய பட்ஜெட்டில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான அறிவிப்புகள் அவ்வளவாக இல்லை எனப் பேசுவதில் நியாயம் இல்லை.

வருகிற மூன்று ஆண்டுகளில் ஏழு ஜவுளி பூங்காக்கள் உருவாக்கப்படும் எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் வரவேற்கிறேன். அதே சமயம், காட்டன் இறக்குமதிக்கான வரியை 10% ஆக்கியிருப்பது ஏற்புடையதாக இல்லை. இதுவரை வெளிநாடுகளில் இருந்து காட்டன் இறக்குமதிக்கு வரி கிடையாது. ஆனால், இனி அதற்கு வரிச் செலுத்த வேண்டும். நம் நாட்டின் மொத்த காட்டன் நுகர்வு ஆண்டுக்கு சுமார் 330 லட்சம் பேல்களாக இருக்கின்றன. இதில் 15 லட்சம் பேல்கள் மட்டுமே வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ‘சுயசார்பு பாரதம்’ என்ற கோட்பாட்டுக்குகீழ் இந்தியாவில் உற்பத்தி செய்யும் பொருள்களின் வர்த்தகத்தை அதிகப்படுத்த நினைக்கும் அரசின் எண்ணம் போற்றுதலுக்கு உரியதுதான். அதற்காக மற்ற நாடுகளில் இருந்து குறைந்த அளவே இறக்குமதியாகும் காட்டன்களுக்கான இறக்குமதி வரியை விதித்திருப்பது சரியல்ல. இதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

தொழில்
தொழில்

எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லாமல் போனது ஏமாற்றமே...

இந்த பட்ஜெட் குறித்து, கோவை மாவட்ட சிறு தொழில் சங்கம் கொடிசியா அமைப்பின் தலைவர் எம்.வி.ரமேஷ் பாபுவிடம் பேசினோம். “சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு, புத்தாக்கம் மற்றும் ஆய்வு, நிதி முதலீடு மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், சுயசார்பு இந்திய மேம்பாடு, மனிதவள சக்திக்கு புத்துயிர் ஊட்டுதல், தேவையற்ற அரசு குறிக்கீடுகளைத் தவிர்த்தல் என்ற ஆறு தூண்களின் மீதமைந்த இந்த 2021-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். இந்த பட்ஜெட்டில் எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்த பல அறிவிப்புகள் இருந்தாலும், நாங்கள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லாமல் போனது எங்களுக்கு ஏமாற்றமே.

ஜி.எஸ்.டி வரி குறைப்பு குறித்த அறிக்கை வெளியாகும் எனப் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், அது குறித்த எந்தவொரு விளக்கத்தையும் நிதி அமைச்சர் பட்ஜெட்டில் தெரிவிக்க வில்லை. அதேபோல, தற்போது நடைமுறையில் இருக்கும் நான்குவிதமான ஜி.எஸ்.டி வரம்பை மூன்றாகக் குறைப்பார்கள் என்கிற எதிர் பார்ப்பும் இருந்தது. இதைச் செய்திருந்தால் எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்தவர்களுக்கு பேருதவி யாக இருந்திருக்கும்.

ஸ்டீலுக்கான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்திருப்பது, தாமிர ஸ்கிராப்புக்கான இறக்குமதி வரியைக் குறைத் திருப்பது வரவேற்கத்தக்க விஷயம். இதனால் கட்டுமானப் பொருள்களில் கம்பி, பம்புகள் மற்றும் வால்வுகளின் விலை குறையும்.

சாலை உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் மேலும் கூடுதல் பொருளாதார வழித்தடங்கள் உருவாக்கத் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, உள்கட்டமைப்பில் இந்த ஆண்டு 11,000 கி.மீ தூரத்தை முடிப்பதற்கான திட்டம், மதுரை - கொல்லம் பொருளாதார வழித்தடம் உள்ளிட்ட 3,500 கி.மீ நீள தேசிய நெடுஞ்சாலை பணிகள் என இன்ஃப்ராஸ்ட்ரக்சர் மேம்பாட்டுத் திட்டங்களை மத்திய அரசாங்கம் அறிவித் திருப்பது ஒருவகையில் எம்.எஸ்.எம்.இ துறை சார்ந்தவர்கள் பலன் பெற வாய்ப்பாக இருக்கும். இதனால் குறு, சிறு, தொழில் நிறுவனங்களுக்குத் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்” என்றார்.

‘‘கூடுதலாக எதிர்பார்த்தோம்...’’

தமிழ்நாடு ஊரகத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனை வோர் சங்கமான டேக்ட் அமைப் பின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸிடம் பேசினோம்.

“கொரோனா காலத்தில் வெளியான இந்த பட்ஜெட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களைச் சேர்ந்த நாங்கள் இன்னும் கூடுதலாக எதிர்பார்த்தோம். கடந்த ஒரு வருடத்தில் குறு, சிறு தொழில் களைச் செய்துகொண்டிருந் தவர்களுக்கு மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக் கிறார்கள். அரசு கைகொடுத்து தூக்கி விடாமல் எழுந் திருக்கவே முடியாத வீழ்ச்சியாகத்தான் இது இருக்கிறது. இந்த நிலையில், அரசிட மிருந்து நாங்கள் எதிர்பார்த்த உதவிகள் எதுவுமே கிடைக்க வில்லை.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்ற நாடுகளில் சிறு, குறு தொழில் நிறுவனங் களுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நாட்டு அரசாங்கம் வழங்கியிருக்கிறது. ஆனால், நம் நாட்டு அரசாங்கம் சிறு, குறு தொழில்துறையை, அந்தத் துறையின் துயரத்தைக் கண்டுகொள்ளவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம். கடந்த ஒரு வருடத்தில் தொழில் இல்லாமல், வருமானம் இல்லாமல், அதனால் வாங்கிய கடனுக்கான வட்டி யைக் கட்ட முடியாமல் திணறிக் கொண்டிருக் கிறோம். இந்த நேரத்தில் ஒரு வருடத்துக்கான தொழில் கடன் வட்டியைத் தள்ளுபடி செய்திருந்தால் மிகவும் உதவியாக இருந்திருக்கும்.

ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்டு மூன்று வருடங்கள் ஆகின்றன. இருப்பினும் இதில் இருக்கும் குழப்பங்கள் தீர்ந்த பாடில்லை. இதைப் போக்கும் விதமாக ஜி.எஸ்.டி வரி விவகாரத்தில் சீரான வரி விதிப்பும், வரி குறைப்பும் வேண்டும் எனக் கேட்டிருந்தோம். அதற்கான அறிவிப்புகள் எதையும் இந்த பட்ஜெட்டில் பார்க்க முடியவில்லை” என்றார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு ஏமாற்றம் அளித்த பட்ஜெட்...

தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கமான டான்ஸ்டியாவின் மாநில பொதுச் செயலாளர் எம்.இந்துநாதனிடம் பேசினோம்,

“சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் பட்ஜெட். இந்த துறை சார்ந்தவர்கள் எதிர் பார்த்த பெரும்பாலான அறிவிப்புகள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெற வில்லை. மாறாக, மேம்போக் கான அறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றன.

இன்றைய நிலையில், மூலப் பொருள்களுக்கான விலைகள் எக்கச்சக்கமாக ஏறியிருக் கின்றன. அதைக் குறைக்க வேண்டும் என முறையிட்டிருந்தோம். ஆனால், அதற்கான சாயல் கூட இந்த பட்ஜெட்டில் இல்லை. ஜி.எஸ்.டி வரியை மாதம்தோறும் செலுத்துவது சிரமமாக இருக்கிறது என்பதால், அதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செலுத்துகிற மாதிரி வசதிகளை ஏற்படுத்தக் கேட்டிருந்தோம். ஆனால், அதற்கான எந்த விஷயமும் இந்த பட்ஜெட்டில் இல்லை’’ என்றார்.

இந்த பட்ஜெட் பெரு நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி தருவதாகவும் சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிருப்தியைத் தருவதாகவுமே இருக்கிறது!

பிட்ஸ்

சீன அரசை விமர்சனம் செய்ததால் அந்த நாட்டின் முக்கிய தொழில் அதிபர்கள் பட்டியலில் இருந்து இருட்டடிப்பு செய்யப்பட்டு இருக்கிறார் ஜாக் மா. ஆனால், அவரது அலிபாபா நிறுவனம் கடந்த காலாண்டில் 37% அதிகரித்து, 34.2 பில்லியன் டாலர் அளவுக்கு வருமானம் ஈட்டியுள்ளது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு