Published:Updated:

பட்ஜெட் 2021-22... பாசிட்டிவ் என்ன, நெகட்டிவ் என்ன? சொல்கிறார்கள் நிபுணர்கள்

B U D G E T 2 0 2 1 - பட்ஜெட் 2021

பிரீமியம் ஸ்டோரி

எதிர்வரும் 2021-22-ம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்ஜெட் குறித்து உங்கள் கருத்து என்ன என வங்கியின் சி.இ.ஓ-க்கள், தொழிலதிபர்கள், நிபுணர்கள் சிலரிடம் கேட்டோம். அவர்கள் சொன்னதாவது...

சி.வி.ஆர். ராஜேந்திரன்,  என்.காமகோடி, எம்.பொன்னுசுவாமி, ஆர்.குமார், கே.எஸ்.கமாலுதீன்
சி.வி.ஆர். ராஜேந்திரன், என்.காமகோடி, எம்.பொன்னுசுவாமி, ஆர்.குமார், கே.எஸ்.கமாலுதீன்

சி.வி.ஆர். ராஜேந்திரன், எம்.டி & சி.இ.ஓ, கேத்தலிக் சிரியன் பேங்க்.

‘‘இந்த பட்ஜெட்டில் கட்டுமானத் துறைக்கு மிகப்பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் உருவாகும். இந்த பட்ஜெட்டில் நலத்துறைக்கான செலவுகளைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, நாட்டு முன்னேற்றத்துக்குத் தேவையான மூலதன செலவை அதிகரித்திருக்கிறார்கள்.

விவசாயத்துக்கு அளிக்கப்படும் கடன் தொகையை ரூ.16 லட்சம் கோடிக்கு அதிகப்படுத்தி இருக்கிறார்கள். விவசாயிகள் போராட்டம் நடந்துவரும் இந்த வேளையில், விவசாயத் துறைக்கு நிறைய திட்டங்களை அறிவித்திருக்கிறார் நிதி அமைச்சர். தடுப்பூசிக்காக ரூ.35,000 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறார். ஆக, மொத்தத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட் மிகவும் நன்மை செய்வதாகவே இருக்கும். தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்து ஆச்சர்யம் தந்திருக் கிறார்கள். மதுரை - கொல்லம் ஸ்பெஷல் காரிடர் திட்டம்மூலம் தென் தமிழ்நாட்டின் அனைத்து ஊர்களிலும் தொழில் வளர்ச்சி ஏற்படும். மீன்பிடித் துறைமுகங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, ஜவுளிப் பூங்கா எனப் பல திட்டங்களைக் கொண்டுவந்திருப்பது சிறப்புதான்.’’

என்.காமகோடி, எம்.டி. & சி.இ.ஓ, சிட்டி யூனியன் பேங்க்.

‘‘எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே இந்த பட்ஜெட் வந்திருக்கிறது. புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாதது சிறப்பான விஷயம். நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி செலவு செய்யாமல் இருப்பதை விட்டுவிட்டு, பொருளாதார வளர்ச்சிக்கு மூலதனச் செலவை அதிகளவில் செய்யப் போகிறார்கள். நிதித் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்த பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்தி, இன்ஷூரன்ஸ் நிறுவனங்களில் அதிக முதலீட்டைக் கொண்டுவரவும் செய்திருக்கிறார்கள். கொரோனா பாதிப்பிலிருந்து வங்கிகளும் தொழில் நிறுவனங்களும் மீண்டுவர கடந்த ஆண்டே பல அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இப்போதும் வெளியிட்டிருக் கிறார்கள். இந்த பட்ஜெட்டால் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது நிச்சயம்.’’

பட்ஜெட்
பட்ஜெட்

எம்.பொன்னுசுவாமி, சேர்மன், பொன்ப்யூர் கெமிக்கல்ஸ்.

‘‘தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.1 லட்சம் கோடி செலவழிக்கப்படும் என அறிவித்திருப்பது சிறப்பான விஷயம். அதேபோல, கடந்த சில ஆண்டுகளாகவே கிடப்பில் இருந்த சென்னை மெட்ரோ இரண்டாவது நிலைக்கும் மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதை நிச்சயம் வரவேற்கலாம். சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பல அறிவிப்பு களை வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. இதனால் நம் நாட்டில் தொழில் வளர்ச்சி கண்டிப்பாக அதிகரிக்கும்.’’

ஆர்.குமார், சேர்மன் & எம்.டி, நவீன்ஸ் ஹவுஸிங்.

‘‘இந்த பட்ஜெட்டைப் பார்க்கும்போது எக்கச்சக்கமான அறிவிப்புகள் இருக்கின்றன. உள்கட்டமைப்புக்கு நிறைய கவனம் தந்திருக்கிறார்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல லட்சம் கோடி செலவழிக்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், இந்த ஆண்டு எவ்வளவு செலவு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார்கள், ஏற்கெனவே அரசிடம் பணம் இல்லாத நிலையில் பணத்துக்கு எங்கே போவார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. இந்த பட்ஜெட்டின் நோக்கங்கள் நன்றாக இருந்தாலும், இதை எப்படி நடைமுறைப் படுத்தப் போகிறார்கள் என்பதுதான் முக்கிய மான கேள்வி.’’

கே.எஸ்.கமாலுதீன், டைரக்டர், புளூபாரத் எக்ஸிம் பிரைவேட் லிமிடெட்.

‘‘இந்த பட்ஜெட்டில் தங்கம், காப்பர், ஸ்டீல் களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு நபர் கம்பெனியை நடத்து வது தொடர்பாக புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பதால், வெளிநாட்டவர்கள் பலரும் இனி இந்தியாவில் ஒரு நபர் கம்பெனியை நடத்த வாய்ப்பிருக்கிறது. ஆனால், விவசாய விளைபொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறை யில் சில மாற்றங்களைக் கொண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தோம். அப்படி எதுவும் வரவில்லை. நம் நாட்டில் பால் உட்பட பல பொருள்கள் அதிகமாகவே உற்பத்தி ஆகின்றன. அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, நல்ல வருமானம் பார்க்கலாம். அதற்கான அறிவிப்புகளை அடுத்த ஆண்டிலாவது கொண்டு வர வேண்டும்’’ என்றார் அவர்.

பட்ஜெட் 2021-22... உடனடி அலசல் நிகழ்ச்சியைக் காண விரும்புகிறவர்கள் https://bit.ly/3rpZYlZ, https://bit.ly/3pPlVe7 ஆகிய லிங்கில் சென்று பார்க்கலாம்.

பட்ஜெட் அன்று சந்தை உயரக் காரணம் என்ன?

வ.நாகப்பன், நிதி நிபுணர்.

‘‘பட்ஜெட் வெளியான தினத்தில் உலகளவில் பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் இருந்ததால், நம் சந்தையும் உயர்ந்தது. இரண்டாவது, கோவிட் காலத்தில் பங்குச் சந்தை நன்றாக செயல்பட்டதன் விளைவாக அதன்மீது ஏதாவது ஒரு வகையில் வரி விதிக்கப்படலாம் என்கிற எண்ணம் பலருக்கும் இருந்தது. அப்படி எந்த வரியும் விதிக்கப்படாததை பங்குச் சந்தை உலகம் ஒரு பாசிட்டிவ்வான விஷயமாகக் கருதியதால் சந்தை உயர்ந்து. மூன்றாவதாக, மூலதனச் செலவுக்கு மிகப்பெரிய தொகை ஒதுக்கீடு செய்திருப்பதால், பொருளாதாரம் நல்ல வளர்ச்சி காணும் என்ற எதிர்பார்ப்பும் சந்தை உயர காரணம். ஆனால், எந்த வகையான ரேஷியோ அடிப்படையில் பார்த்தாலும், அது உச்சத்தில் இருப்பதை மனதில்கொண்டு கவனமாகச் செயல்படுவது நல்லது."

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு