Published:Updated:

பெரும் பணக்காரர்களுக்கு செக்... பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா?

நிர்மலா சீதாராமன் ( vikatan )

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு பலரும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். அது, பரம்பரைச் சொத்துக்கு வரி விதிப்பது (Inheritance tax).

பெரும் பணக்காரர்களுக்கு செக்... பரம்பரைச் சொத்துக்கு பட்ஜெட்டில் வரி விதிக்கப்படுமா?

பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பு பலரும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். அது, பரம்பரைச் சொத்துக்கு வரி விதிப்பது (Inheritance tax).

Published:Updated:
நிர்மலா சீதாராமன் ( vikatan )

பட்ஜெட் வரும்போதெல்லாம் சில புதிய வரிகள் விதிக்கப்படலாம் என்கிற பேச்சு பொதுவாக எழுந்து அடங்குவதுண்டு. அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாகவே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு சில நாள்களுக்குமுன்பு பலரும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேச ஆரம்பிப்பார்கள். அது, பரம்பரைச் சொத்துக்கு வரி விதிப்பது (Inheritance tax). புலி வருது, புலி வருது என்கிற மாதிரி கடந்த காலத்தில் இந்த வரி வரவில்லை என்றாலும் வருகிற வெள்ளிக்கிழமை அன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருக்கும் 2019-20-ம் ஆண்டுக்கான முழுபட்ஜெட்டில் இந்த வரி குறித்த அறிவிப்பு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பட்ஜெட்
பட்ஜெட்
vikatan

பரம்பரைச் சொத்து வரி என்றால்...?

ஒரு தந்தை, தான் சம்பாதித்த பல நூறு கோடி சொத்தினை தன் வாரிசுகளுக்கு விட்டுச் செல்லும்போது, குறிப்பிட்ட சதவிகித வரியினைக் கட்டி, அந்தச் சொத்தினைப் பெற்றுக்கொள்வதுதான் பரம்பரைச் சொத்து வரி. உதாரணமாக, ஒரு தந்தை தனது இரு வாரிசுகளுக்கு 10 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தினை விட்டுச் செல்கிறார் என்று வைத்துக்கொள்வோம். வாரிசுகள் இருவருக்கும் ஆளுக்கு தலா 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து கிடைக்கும். இதற்கு பரம்பரைச் சொத்து வரி 10% என்று வைத்துக்கொண்டால், வாரிசுகள் இருவரும் தலா ரூ.50 லட்சத்தை வரியாகச் செலுத்தி, தங்களது தந்தையின் சொத்தினைப் பெறுவதுதான் பரம்பரைச் சொத்து வரி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதிய வரியல்ல...

இந்த வரி நமக்குப் புதிய வரியல்ல. 1953-ம் ஆண்டு நம் நாட்டில் இந்த வரி நடைமுறைக்கு வந்தது. இந்த வரியானது 10 சதவிகிதத்தில் தொடங்கி, ரூ.20 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துகளுக்கு 85% வரை விதிக்கப்பட்டது. அதாவது, அந்தக் காலத்தில் ரூ.1 கோடி மதிப்பு சொத்து வாரிசுக்கு வந்தால், ரூ.85 லட்சத்தினை வரியாகச் செலுத்திவிட்டு, வெறும் ரூ.15 லட்சத்தினை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

ராஜீவ் காந்தி
ராஜீவ் காந்தி
vikatan

வரியை நீக்கிய ராஜூவ்காந்தி...

இந்த வரியானது கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் அதாவது, 1986-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. இந்திரா காந்தியின் மறைவுக்குப் பிறகு பிரதமரான ராஜீவ்காந்தியின் ஆட்சிக் காலத்தில்தான் இந்த வரி நீக்கப்பட்டது. சொத்து தொடர்பான சட்டச்சிக்கல்களினால் பலரும் இந்த வரியைக் கட்டாமலே இருந்தனர். இதனால் இந்த வரியை வசூலிக்க அரசாங்கம் செய்த செலவுக்குக்கூட வரி மூலம் வருமானம் கிடைக்கவில்லை. எனவே, இந்த வரி நாடாளுமன்றத்தின் ஏகோபித்த ஆதரவுடன் நீக்கப்பட்டது.

ஆனால், இந்த வரியானது நீக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம், அன்றைக்கு இருந்த பெரும் பணக்காரர்கள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சொத்து மதிப்பில் பெரும்பகுதி அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்த வேண்டியிருக்கிறதே என்று ஆதங்கப்பட்டதுதான். அவர்கள் தந்த மறைமுகமான நெருக்கடிதான் ராஜீவ் காந்தியை இந்த நடவடிக்கை எடுக்க வைத்தது என்கிறார்கள் சிலர். சோஷியலிஸ கொள்கை கொண்ட நேரு, இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தார். ஆனால், அவருக்குப்பின் வந்தவர்கள் அந்தக் கொள்கையில் பிடிப்பு கொண்டவர்கள் அல்ல என்பதால், பரம்பரைச் சொத்து சட்டம் வழக்கிலிருந்து ஒழிந்தது வரலாறு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவில் இன்றும் உண்டு...

ஆனால், வளர்ந்த மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, ஜப்பான், தென் கொரியா எனப் பல நாடுகளில் இந்த வரியானது தொடர்ந்து நடைமுறையில் இருந்துவருகிறது. உதாரணமாக, இந்த வரிக்கு கிஃப்ட் டாக்ஸ் அண்ட் எஸ்டேட் டாக்ஸ் என்று பெயர். அமெரிக்கக் குடிமகன் ஒருவர், தன் தந்தையின்மூலம் பெறும் சொத்தின் மதிப்பு 11 மில்லியன் டாலருக்குமேல் செல்லும்பட்சத்தில், 40% வரி கட்டித்தான் பெறமுடியும். இங்கிலாந்திலும் 40% வரி கட்ட வேண்டும். ஆனால், அமெரிக்காவினைவிட குறைந்த அளவு உச்சவரம்பினை நிர்ணயித்திருக்கிறது இங்கிலாந்து அரசு.

மேற்கத்திய நாடுகளில்தான் இந்த வரி வழக்கத்தில் இருப்பதாக நினைக்கவேண்டாம். ஆசிய நாடுகளிலும் இந்த வரி நடைமுறையில் உள்ளது. ஜப்பானில் 55 சதவிகிதமும் தென் கொரியாவில் 40 சதவிகிதமும் இந்த வரி விதிக்கப்படுகிறது.

பில்கேட்ஸ்
பில்கேட்ஸ்
vikatan

மாற்றங்கள் பலப்பல...

இந்த வரி நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டதன் விளைவாக, உலக நாடுகள் பலவற்றில் குறிப்பாக, அமெரிக்காவில் நடந்த சமூக மாற்றங்கள் ஒன்றிரண்டல்ல. தான் கஷ்டப்பட்டு சேர்த்த சொத்து அனைத்தையும் தன் வாரிசுகளுக்குத் தருவதைவிட, அந்தச் சொத்தில் குறிப்பிட்ட அளவினைத் தன்னை உருவாக்கிய சமுதாயத்துக்கே தரமுன்வந்தார்கள் பலர். இதனால், அங்கு பல மருத்துவமனைகள் உருவாகின; தரமான கல்வி நிறுவனங்கள் செயல்படத் தொடங்கின. பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைந்தது. அமெரிக்க இளைஞர்கள் கடுமையாக உழைக்கவும் தங்களின் திறனை மேம்படுத்திக்கொள்ளவும் முயற்சி செய்ததற்கு முக்கிய காரணம், இந்த வரிதான்.

பில்கேட்ஸும் வாரன் பஃபெட்டும்...

மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தான் சேர்த்த சொத்தில் பெரும்பகுதி, அதாவது 89 பில்லியன் டாலரில் பெரும்பகுதியை தன்னை உருவாக்கிய உலகத்துக்கே திரும்பத் தந்துவிட்டார். இத்தனைக்கும் அவருக்கு மூன்று வாரிசுகள் உண்டு. ஏறக்குறைய 99 சதவிகித சொத்தினை உலகத்துக்கு நன்கொடையாகத் தந்துவிட்டு, மீதமுள்ள ஒரு சதவிகிதத்தை மட்டுமே தனது வாரிசுகளுக்குத் தந்திருக்கிறார். ‘‘என் குழந்தைகள் தங்கள் எதிர்காலத்துக்கானப் பணத்தை அவர்கள்தான் உழைத்துச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்’’ என்று பில்கேட்ஸே ஒருமுறை சொன்னது நமக்கெல்லாம் ஆச்சர்யம் தரும் தகவலாகவே இருக்கும்.

வாரன் பஃபட்
வாரன் பஃபட்
vikatan

பங்குச் சந்தை முதலீட்டின்மூலம் உலகின் பெரும் பணக்காரராக ஆனவர் வாரன் பஃபெட். இவர் தனது மூன்று குழந்தைகளுக்குத் தலா இரண்டு பில்லியன் டாலரைத் தந்துவிட்டு, மீதமுள்ள 67 பில்லியன் டாலரை இந்த உலகுக்கே நன்கொடையாகத் திரும்பத் தரவிருக்கிறார். இதில் 34 பில்லியன் டாலரை ஏற்கெனவே நன்கொடையாகத் தந்துவிட்டார். சமீபத்தில் 3.5 பில்லியன் டாலரை ஐந்து அறக்கட்டளைக்குத் தந்திருக்கிறார்.

இந்தியாவில் பாசிட்டிவ் மாற்றங்கள்...

இந்தியாவிலும் பரம்பரைச் சொத்து வரியினை மீண்டும் கொண்டுவருவதன்மூலம் பல நல்ல மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். தனது சொத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை சமூக வளர்ச்சிக்குப் பலரும் செலவிடத் தொடங்குவார்கள். இதனால் நல்ல மருத்துவ வசதியும் தரமான கல்வியும் நம் மக்களுக்கும் கிடைக்கும். அசையாத சொத்துகளுக்கும் வரி விதிக்கப்படும் என்பதால், பலரும் தாங்கள் வைத்திருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை விற்க வாய்ப்புண்டு. இதனால் நிலத்தின் விலை குறைந்து, சாதாரண மக்களும் காணி நிலம் வாங்கும் கனவு நிறைவேறும்.

அசீம் பிரேம்ஜி
அசீம் பிரேம்ஜி
vikatan

விப்ரோ பிரேம்ஜியும் ஹெச்.சி.எல் சிவ நாடாரும்

விப்ரோ நிறுவனத்தின் பிரேம்ஜி இந்தியாவின் மிகப் பெரும் பணக்காரர். அவருக்கு இரண்டு மகன்கள் உண்டு. அவர் சம்பாதித்த சொத்தினை அப்படியே அவர்களுக்குத் தராமல், ஏறக்குறைய 21 பில்லியன் டாலரினை தனது அசீம் பிரேம்ஜி ஃபவுண்டேஷனுக்குத் தந்திருக்கிறார். கல்வி வளர்ச்சி, ஆரோக்கியம் எனப் பலவற்றுக்கும் இந்தத் தொகை செலவிடப்படவிருக்கிறது. ஹெச்.சி.எல் நிறுவனத்தின் சிவ நாடார் இந்தியாவின் ஐந்தாவது பெரும் பணக்காரர். இவருடைய சொத்து மதிப்பு சுமார் 75,000 கோடிக்குமேல். ஏறக்குறைய ரூ.630 கோடியை சிவ நாடார் அறக்கட்டளைக்குத் தானமாகத் தந்திருக்கிறார். கல்வி வளர்ச்சிக்காக இந்தத் தொகை செலவிடப்படவிருக்கிறது.

மாற்றவேண்டிய சட்டங்கள்...

பரம்பரைச் சொத்து வரியினை இந்த பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொண்டுவர வேண்டுமெனில், இரண்டு முக்கியமான சட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும். அதில் ஒன்று, இந்துக் கூட்டுக் குடும்பம் (Hindu Undivided Family); இரண்டாவது, அறக்கட்டளை (Trust). இந்த இரண்டு சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து பரம்பரைச் சொத்துக்கான வரியைக் கட்டவேண்டிய அவசியமே இருக்காது.

இந்துக் கூட்டுக் குடும்பச் சட்டத்தின்படி, எந்தச் சொத்தாக இருந்தாலும் அது தனிப்பட்ட சொத்தாக இல்லாமல், கூட்டுக் குடும்பத்தின் சொத்தாக இருக்கும். தந்தைக்குப்பின் மகன், மகனுக்குப்பின் பேரன் எனக் கூட்டுக் குடும்ப உறுப்பினர் சொத்துகளாகப் போய்க்கொண்டிருக்குமே தவிர, தனிநபர்களின் சொத்தாக அது கருதப்பட மாட்டாது.

இதேபோலத்தான், அறக்கட்டளை என்கிற அமைப்பும். அறக்கட்டளைக்குத் தானமாகத் தரப்படுகிற சொத்தானது, அதற்குத்தான் சொந்தமே தவிர தனிப்பட்ட நபர்களுக்கானதாகக் கருதப்பட மாட்டாது. அறக்கட்டளையின் தலைவர் யாரோ அவரே அந்தச் சொத்தனைக் கட்டுப்படுத்தக்கூடிய நபராக இருப்பார். எனவே, இந்த ஏற்பாட்டின்மூலமும் பரம்பரைச் சொத்து வரியினைக் கட்டாமலே தப்பித்துவிட முடியும்.

  சிவ நாடார்
சிவ நாடார்
vikatan

அதிக வரி வேண்டாமே!

இந்த பட்ஜெட்டிலோ அல்லது அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் பட்ஜெட்டிலோ இந்த வரி கொண்டுவந்தாலும், சில விஷயங்களை அரசாங்கமானது கட்டாயமாகச் செய்ய வேண்டும். கடந்த காலத்தில், சொத்து மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க அதிக சதவிகிதத்தில் இந்த வரி விதிக்கப்பட்டது. 85% வரி என்பது உலக அளவில் மிக மிக அதிகம் என்றே சொல்லலாம். அப்படி இல்லாமல், நியாயமான ஒரு சதவிகிதத்தை வரியாக நியமிக்க வேண்டும். இது 1 முதல் 20 சதவிகிதமாக இருக்கும்பட்சத்தில், அனைவரும் தானாக முன்வந்து இந்த வரியினைக் கட்டுவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இந்த வரியைக் கொண்டுவரும்போது நடுத்தர மக்கள் பாதிக்கப்படாத வண்ணம் கொண்டுவரப்பட வேண்டும். அதாவது, குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய்க்குமேல் சொத்து மதிப்பு இருந்தால் மட்டுமே இந்த வரியானது கட்டப்பட வேண்டும் என்று கொண்டுவரலாம். காரணம், இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் வைத்திருக்கும் ஒரு வீடுகூட ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பு பெறுகிறது. எனவே, சொத்து மதிப்பு ரூ.1 கோடி என்று மதிப்பிடுவதைவிட ரூ.10 கோடிக்கு மேல் என்று இருந்தால், இந்த வரியினால் பலரும் பாதிப்புக்குள்ளாகாத நிலை ஏற்படும்.

சில தீமைகளும் ஏற்படும்

ந்த வரியினைக் கொண்டுவருவதினால் நன்மை மட்டுமே விளையும் என்று சொல்வதற்கில்லை. சில தீமைகளும் ஏற்படும் என்பதை மறுப்பதற்கில்லை. இன்றைக்குப் பணக்காரர்களாக இருக்கும் பலரும் தங்கள் கடின உழைப்பினால்தான் பல நூறு கோடிகளைச் சேர்த்திருக்கிறார்கள். தனக்கும் தன்னுடைய சந்ததிகளுக்கும் சொத்து சேர்த்துவைக்க வேண்டும் என்கிற காரணத்துக்காகத்தான் அவர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இறந்தபிறகு அதில் கணிசமான பகுதியை அரசாங்கத்துக்குத் தரவேண்டும் என்கிற கருத்தினை நம்மில் பலரும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதனால் இங்கு சம்பாதிக்கும் பணம் வெளிநாட்டுக்குப் போக வாய்ப்புண்டு. தவிர, வெளிநாடுகளில் நன்கு சம்பாதித்தவர்கள் தங்கள் பணத்தை நம் நாட்டில் கொண்டுவருவதற்கான வாய்ப்புகளும் குறையும். இதனால் நம் நாட்டை நோக்கிவரும் முதலீடு குறையும். எல்லாவற்றுக்கும் மேலாக, ‘நான் கஷ்டப்பட்டு சம்பாதித்து அரசாங்கத்துக்குத் தரவேண்டுமா? அதற்கு நான் சம்பாதிக்காமலே இருந்துவிடுகிறேன்’ என்கிற எண்ணம் வந்தால், பலரும் தொழில்முனைவது குறையும். இதனால் பொருளாதார வளர்ச்சி குறையும்; வேலைவாய்ப்பும் குறையும்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்
vikatan

நடுத்தர மற்றும் ஏழைகளுக்குப் பாதிப்பில்லை...

என்றாலும் இந்த வரியைக் கொண்டுவரப்படும்பட்சத்தில், அதனால் நடுத்தர வர்க்கத்தினருக்கோ அல்லது ஏழைகளுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பல நன்மையே கிடைக்கும். காரணம், நம் நாட்டில் 58% செல்வமானது, 1% மட்டுமே இருக்கும் பெரும் பணக்காரர்களிடம் இருப்பதாக ஆக்ஸ்ஃபேம் (Oxfam) அமைப்பு சொல்கிறது. இது உலக சராசரியைவிட 8% அதிகம் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இந்த ஒரு சதவிகிதத்தினர் தாங்கள் பெறவிருக்கும் சொத்தில் 10 அல்லது 20 சதவிகிதத்தை மக்கள் வளர்ச்சிக்காகத் திரும்பத் தருவதில் எந்தத் தவறும் இருக்காது. இந்த வரியானது மீண்டும் கொண்டுவரப்படுமா, இல்லையா என்பது நாளை (வெள்ளிக்கிழமை) மதியத்துக்குள் தெரிந்துவிடும்!

(புள்ளி விவரம் உதவி: துரைராஜ்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism