Published:Updated:

வணிகத் தலைமைகொள் - 2

வணிகத் தலைமைகொள் 2
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமைகொள் 2

முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளவர்களுக்கே இந்த உலகம் சொந்தமானது. மற்றவர்கள்..? பரவாயில்லை, வசித்துக்கொள்ளலாம்.

ஆண்டு 2007... சொந்தமாகத் தொழில் செய்ய முடிவெடுத்தேன். அப்போது என் மாதச் சம்பளம் கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய். கார் உண்டு. சொல்லப்போனால் 2004-ம் ஆண்டே சுயதொழில் எண்ணம் உதித்தது. விருப்பம் இருந்த அளவு, செய்ய வேண்டிய தொழிலில் முழு அனுபவம் இல்லை அப்போது. 2004-ல் அனுபவம் திரட்டவே ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தேன்.

முதல் நிறுவனத்தைவிட இந்த நிறுவனம் சிறியது, புதிதும்கூட. ஆனால், இந்தப் புது நிறுவனத்தில் நான் ஆல் இன் ஆல் அழகுராஜா. அதாவது எல்லா வேலைகளையும் செய்ய வேண்டும். ஏற்கெனவே செய்துகொண்டிருந்த விற்பனை மட்டுமன்றி சர்வீஸ் மேற்பார்வை, புராஜெக்ட் நிறைவேற்றம், கம்பெனி வரவு செலவு என ஒரு நிறுவனத்தின் நிறைய செயல்பாடுகளைச் செய்யும் பணி வாய்ப்பு. வரமாக ஏந்திக்கொண்டேன். விரும்பிச் செய்தேன்.

வணிகத் தலைமைகொள் - 2

ஆம். இன்று சிறு, பெரு வணிகர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால், அவர்களில் 99 சதவிகிதம் பேர் மிகச்சிறிய பட்டறையில் அலுவலகத்தில் பணிபுரிந்திருப்பார்கள். சிறு அலுவலகங்களில் நாம் நேரடியாக அதன் முதலாளிக்கு ரிப்போர்ட் செய்வோம். பெரிய கார்ப்பரேட்களில் மேனேஜருக்குத்தான் ரிப்போர்ட் செய்ய வேண்டியிருக்கும். முதலாளியின் பொறுப்பும் வீச்சும் பரந்துபட்டவை. எனவே படிப்பு முடித்ததும் இளைஞர்கள் சிறு நிறுவனங்களில் ஒரு வருடமேனும் பணிபுரிவது நல்லது. ஒரு நிறுவனத்தின் முழுச் செயல்பாடுகளும் அவர்களுக்கு அங்கு புலப்படும். எல்லாம் கற்க ஏதுவாகும். கார்ப்பரேட்களில் நாம் ஒரு செங்கல். சிறு வாணிபத்தில் நாம்தான் கட்டடமே கட்ட வேண்டும்.

சரி, இந்தப் புது நிறுவனத்தில் 2007-ல் ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த நான், ஏன் தொழில் தொடங்க முனைய வேண்டும்? ஒரு லட்சம் என்பது நல்ல சம்பளம்தானே, அதுவும் 2007-ம் ஆண்டில்!

ஆம், நல்ல சம்பளம்தான். ஆனால் எனக்கு நேரச் சுதந்திரம் தேவைப்பட்டது. இன்னும்கூட, பணச் சுதந்திரம் தேவைப்பட்டது. Time freedom & money freedom-க்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகின்றன. நேரச் சுதந்திரம் கூடிற்றா என்றால் ‘இல்லை' என்றே என் பதில் இருக்கும். பணச் சுதந்திரத்துக்கும் ‘இருக்கலாம்' என்பது என் பதிலாக இருக்கும். ஏனெனில், வேலை செய்தபோது என் தேவை எனக்கானது மட்டுமாக இருந்தது. இன்று என் தேவை என்பது, என் நிறுவனத்தின் தேவை. அதன் பணத் தேவை மிக மிக அதிகம்.

ஆனால், இன்னுமொரு சுதந்திரம் இருக்கிறது. தொழில் ஆரம்பித்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அதைப் பரிபூரணமாக அனுபவித்துவருகிறேன். எப்போதும் அது என்னிடம் இருக்கும். தொழில் முனைவோர் ஒவ்வொருவரிடமும் அது இருக்கும். அதுதான் ஆகப்பெரிய சுதந்திரம், ஆனந்தம், உரிமை.

அது... decision freedom. ஆம், என் முடிவுகளை நான் எடுக்கும் சுதந்திரம்.

தொண்ணூறுகளில் ஒரு நிறுவனத்தில் நான் வேலை செய்தபோது ஒரு வாடிக்கையாளருக்குக் கொடுத்த இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. சீர்செய்ய ரூபாய் மூவாயிரம் செலவாகும் என்று கொட்டேஷன் கொடுத்தோம். ‘சரி செய்துவிட்டு வாங்கிக்கொள்ளுங்கள்' என்றார்கள். நான் என் சர்வீஸ் மேனேஜருக்கு இதைத் தெரிவித்தேன். ‘‘அவர்கள் முன்பணமாக மூவாயிரம் தந்தால்தான் சீர்செய்ய முடியும்'’ என்றார் சர்வீஸ் மேனேஜர். அதனால் வியாபார விரிசல் ஏற்பட்டது. பின்னாள்களில் அந்த வாடிக்கையாளரின் கோடானு கோடி ரூபாய் வியாபாரத்தை இழந்தோம்.

இன்று வாடிக்கையாளரின் இந்த மாதிரி தேவைகளை, தேவையின் நிவர்த்திகளை நான் செய்கிறேன், முடிவெடுக்கிறேன், முடிவெடுக்கும் அதிகாரத்தையும் என் சகாக்களுக்கு அளித்திருக்கிறேன். ஆங்கிலத்தில் சொல்வார்களே penny wise pound foolish, இந்த முடிவெடுக்கும் சுதந்திரத்தால் அதுவுமே தவிர்க்கப்படுகிறது.

முடிவெடுக்கும் சுதந்திரம் உள்ளவர்களுக்கே இந்த உலகம் சொந்தமானது. மற்றவர்கள்..? பரவாயில்லை, வசித்துக்கொள்ளலாம்.

வணிகத் தலைமைகொள் - 2

சரி, தொழில் தொடங்க ஏதாவது சிறப்புத் தகுதி வேண்டுமா, வயது வரம்பு இருக்கிறதா, பெரும் முதலீடு வேண்டுமா?

எதுவும் அவசியம் இல்லை, கட்டாயம் இல்லை. நான் பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்தவன். அதற்கு மேலான படிப்புகளைக் கால், அரை, முக்கால் என விட்டவன். என்னை விடுங்கள், நான் உள்ளூர் வணிகன். உலக வணிகர்கள் மார்க் சக்கர்பெர்க், மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ், ஏன், நம் இந்திய oyo rooms உரிமையாளர் ரித்தேஷ் இவர்கள் எல்லாருமே கல்லூரிப் படிப்பை முடிக்காதவர்கள்.

வயதை எடுத்துக்கொண்டால், நான் நிறுவனம் தொடங்கும்போது எனக்கு நாற்பது வயது! என் முதலீடு ஒரு லட்ச ரூபாய். அதை வைத்துக் கொண்டு நான் விற்கும் பொருளை நானே வாங்க முடியாது. அதனாலென்ன, இருந்துவிட்டுப் போகட்டும். நம் தொழில் அனுபவமே நம் கல்வி. உள்ளத்தின் இளமையும் உழைக்கும் ஆர்வமும் மட்டுமே நம் வணிகத்தின் முதலீடு.

எட்டு மணி நேரம் ஆர்வத்தோடு உழைப்பை முதலீடு செய்தால், அடைவது நிச்சயம் வெற்றியாக இருக்கும். வெற்றி வரவில்லை எனில் பத்து மணி நேரம், அப்படியும் வரவில்லை எனில் பன்னிரண்டு மணி நேரம்.

வெற்றிக்குக் குறுக்குவழியே இல்லை. ஆர்வமும் உழைப்பும் மட்டுமே அதை அடையும் பாதை. அதை நீங்கள் இடுங்கள். வணிகம் வெற்றியை உங்களுக்கு இட்டே தீரும்.

எனவே இளைஞர்களே... வாருங்கள், வணிகம் செய்வோம்!

- வணிகம் பெருகும்...