Published:Updated:

வணிகத் தலைமைகொள் - 3

வணிகத் தலைமைகொள்
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமைகொள்

சந்தை ஆய்வுக்காக நாம் ஆயிரம் பேரைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் தொடங்கவிருக்கும் தொழிலைச் செய்யும் இரண்டு மூன்று பேரைச் சந்தித்தால் போதும்

இன்றைய இளைஞர்கள் நிறைய பேருக்கு பிசினஸ் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கவே செய்கிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு அது வெறும் ஆசையாகவே சில காலம் இருந்து, பின் நிராசையாக மறைந்துவிடுகிறது.

ஆசையை நிகழ்வாக்க வேண்டுமெனில், முதலில் நாம் என்ன பிசினஸ் செய்வது சரி என்பதை முடிவு செய்தாக வேண்டும். இன்றைய வணிகத்தைப் பொதுவாக நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

உற்பத்தி (manufacturing), விற்பனை (sales), சேவை (service) மற்றும் கருத்தியல் வணிகம் (concept sales). இந்தக் கருத்தியல் வணிகம் என்பது இன்சூரன்ஸ் போன்ற பொருள் சாராத விற்பனைத் துறைகள்.

மேற்குறிப்பிட்ட எதுவாக இருப்பினும் முதலில் நமக்கு வேண்டியது அவ்வணிகத்தில் அனுபவம் பெறுவது, குறைந்தபட்சம் இரண்டு வருடங்களாவது.

என் பட்டறிவில் நான் தெரிந்துகொண்டது, நாம் எந்தப் பணியிலும் பிறர் உதவியின்றித் திறமையாகப் பரிணமிக்கக் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. எனவே இரண்டு ஆண்டுகள் பணி கற்றபின் தொழில் தொடங்குவதே சிறந்தது. நமக்கு அத்தொழிலின் முழுப் பரிணாமமும் அப்போது கிடைத்திருக்கும்.

புவியாண்ட அரசர்களின் மகன்களும் / மகள்களும் கூட, நீதியும் நிர்வாகமும் தாக்குதலும் தற்காப்பும் கற்ற பின்னரே அரசுப் பொறுப்புக்கு வந்தனர். நேராக அரியணையில் அமர்ந்திருந்தால் என்னவாகியிருக்கும்..? எனவே அனுபவம் பெற்று வணிகம் தொடங்குவதோ, அல்லது, எத்துறையில் அனுபவம் இருக்கிறதோ அதைத் தேர்வு செய்வதோ, நாமுமே வணிகத்தில் கோலோச்ச உதவும்.

அனுபவம் பெறும்போதே அல்லது பெற்றவுடன், நாம் செய்ய இருக்கும் வணிகம் குறித்து, தயாரிக்கப்போகும் அல்லது விற்கப்போகும் (தயாரித்தும் விற்கலாம்) பொருள் குறித்துச் சந்தை ஆய்வு (market survey) செய்துவிட்டுப் பின்னர் களத்தில் இறங்குவது நல்லது.

வணிகத் தலைமைகொள் - 3

சந்தை ஆய்வில் பல விஷயங்கள் நமக்குப் புலப்படும். முதலில் நம் பொருளின் சந்தை எவ்வளவு பெரியது, அதில் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள், நமக்கு அந்த வணிகத்தில் / செய்யப்போகும் இடத்தில் எத்தனை வாய்ப்புகள் இருக்கின்றன, நம் வாடிக்கையாளர்கள் யார் யார் போன்றவற்றை அறிவது மிகுந்த பலன் தரும். நாம் செய்ய வேண்டியவை என்னென்ன, செய்யக் கூடாதவை என்னென்ன என்று எல்லாமே தெரிய வரும்.

சந்தை ஆய்வுக்காக நாம் ஆயிரம் பேரைச் சந்திக்க வேண்டிய அவசியமில்லை. நாம் தொடங்கவிருக்கும் தொழிலைச் செய்யும் இரண்டு மூன்று பேரைச் சந்தித்தால் போதும். அவர்களிடம் அத்தனை தகவல்களும் இருக்கும். கொஞ்சம் பெரிய அளவில் தொழில் செய்ய வேண்டுமென்றால், நிறைய சந்தை ஆய்வுக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றை அணுகலாம். மேலும், இணையத்திலும் தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன, எல்லாத் தொழில்கள் குறித்தும்.

சரி, சந்தை ஆய்வு செய்தாயிற்று; தொழிலும் தொடங்கியாயிற்று.

ஒரு சிறிய அறையேனும் எடுத்து அலுவலகம் நடத்துதல் நன்று. வீட்டில் இருந்தபடி வணிகம் செய்வது என்பது, வீடு, வணிகம் இரண்டுக்குமே அசௌகரியம். முதலில், வணிகத்தில் நம் கவனம் சிதற வாய்ப்புகள் அதிகம். அடுத்து, வீட்டின் சூழலும் நம் வணிக நிமித்தங்களால் பாதிப்படையும். நாம் சந்தோஷமாக இருந்தால் சந்தோஷமாக இருக்கும் வீடு, நாம் வருந்தினால் வருந்தும். நாம் பதறினால் பதறும். எனவே, வீடு, அலுவலகம் இரண்டும் தனித்தனியாக இருத்தல் நல்லது. நாம் இரண்டுக்கும் குவாலிட்டியான நேரமும் கவனமும் அளிக்கமுடியும்.

அலுவலகம் அமைத்தாயிற்று. வணிக நிறுவனத்திற்கு நல்ல பெயரொன்றைத் தேர்ந்தெடுங்கள். ஜி.‌எஸ்‌.டி சான்றிதழ் பெற்றுக் கொள்ளுங்கள். அருகில் இருக்கும் ஜி.‌எஸ்‌.டி அலுவலகம் சென்றால் அதற்கான விண்ணப்பம் கிடைக்கும். உங்கள் நிறுவன ஆண்டு வருவாய், விற்பனையில் நாற்பது லட்சம் ரூபாய்க்குக் கீழ் எனில் ஜி.‌எஸ்‌.டி தேவையில்லை. சேவை எனில் இருபது லட்ச ரூபாய் வரை தேவையில்லை.

அடுத்து வங்கிக் கணக்கு. நிறுவனம் ஒரு தனிநபர் உரிமை நிர்வாகத்தில் நடக்கப்போகிறது எனில், அவரின் PAN card போதும் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு. கூட்டாண்மை (partnership) எனில் நிறுவனத்துக்கு PAN card விண்ணப்பித்து அது வந்தபிறகு வங்கிக் கணக்கு தொடங்கிவிடலாம்.

வங்கிக் கணக்கும் அதன் பரிவர்த்தனைகளும் எவ்வளவு நன்மைகள் அளிக்கும் எனப் பிறிதோர் அத்தியாயத்தில் பார்ப்போம்.

இந்த ஜி.‌எஸ்‌.டி பதிவு, PAN card பெறுதல், வங்கிக் கணக்கு ஆரம்பித்தல் மற்றும் வேறு ஏதேனும் ஆவணத் தேவை எல்லாம் அதிகபட்சம் ஒரு வாரத்தில் முடிவடையக்கூடியவை. அதற்காக சில ஏஜென்சிகளும் இருக்கின்றன. கூகுள் செய்தால் போதும், நிமிடத்தில் பத்து இருபது ஏஜென்சிகள் கிடைக்கும்.

அலுவலகம், வங்கிக் கணக்கு, ஜி‌.எஸ்‌.டி, லெட்டர்ஹெட்கள், அழகான பெயர்ப்பலகை, சுழல் நாற்காலி, வழுவழுவென மேசை இவை தொழில் நிமித்தங்கள்தான். எத்தனை பாதுகாப்பு அணிகலன்கள் இருப்பினும், நீந்தத் தெரிந்தால்தான் நதியாட முடியும். சந்தையே நதி, அனுபவமே நீச்சல்.

தத்துவஞானி ஜேகே சொல்லியிருப்பார், Life is a movement of relationship என! வாழ்க்கை என்பது உறவுசார் இயக்கம். வணிகமும் அதே.

வணிகத் தலைமைகொள் - 3

வணிக மொழியில் உறவை, தொடர்பை, contact என்பார்கள். Business is nothing but contacts. ஆம், நமக்கு எத்தனை பேரோடு வணிகத் தொடர்பு இருக்கிறதோ, அந்த அளவுக்கு நம் வணிகம் பெருகும். எனவே வணிகம் தொடங்கியவுடன் செய்ய வேண்டியது, அவ்வணிகம் சார்ந்த மனிதர்களைச் சந்திப்பது. அவர்கள் வாடிக்கையாளராக இருக்கலாம், விற்பனையை முடித்துத் தருபவராக இருக்கலாம், எங்கு விற்பனை இருக்கிறது எனத் தகவல் அளிக்கும் ஆலோசகராக (consultant) இருக்கலாம், போட்டியாளராகக்கூட இருக்கலாம். அத்தனை தொடர்புகளும் வணிக வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

அந்தத் தொடர்புகளைப் பலப்படுத்திக் கொள்வது, அவர்களுக்காக ஏதேனும் சிறு நன்மையேனும் செய்வது அல்லது அவர்களோடு பேசும்போது, வாக்கினிலே இனிமை கொள்வது... இவை எல்லாவற்றையும் கடமையாக இல்லாமல் விரும்பிச் செய்ய வேண்டிய தருணம் வந்தாயிற்று.

ஆம், நாம் இப்போது யாருக்கோ வேலை செய்யவில்லை. நமக்காகச் செய்கிறோம்.

எனவே இளைய தலைமுறையே! வாருங்கள், வணிகம் செய்வோம்.

- வணிகம் பெருகும்