Published:Updated:

வணிகத் தலைமைகொள் - 4

வணிகத் தலைமைகொள்
பிரீமியம் ஸ்டோரி
News
வணிகத் தலைமைகொள்

இன்று, ஒன்றைப்போல இன்னொன்று என இருக்கும் தொலைக்காட்சி சேனல்களை யாரும் பார்ப்பதில்லை. வித்தியாசம் காட்டும் சேனல்களே, நிகழ்ச்சிகளே அதிகபட்ச நேயர்களை இழுக்கின்றன.

ஒரு தொழில் தொடங்கியவுடன் இன்று எல்லோருக்கும் மனதில் எழும் கேள்வி... ‘நான் இப்போதுதான் வந்திருக்கிறேன் என் தயாரிப்போடு. ஆனால் எனக்கு முன்னமே இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கிறார்களே, அவர்களோடு நான் எப்படிப் போட்டி போட முடியும்? அவர்களின் பல்லாண்டுகளாய் நிலைபெற்ற நிறுவனங்களுக்கு இணையாக, என் புதிய தயாரிப்பை / என் புது நிறுவனத்தை எப்படிச் சந்தையில் நிலைப்படுத்த முடியும்?’

எழுபதுகளில் எங்கள் குடும்பம் கிராமத்திலிருந்து சென்னைக்கு (தாம்பரம்) இடம்பெயர்ந்தபோது, தாம்பரத்தில் ஸ்வீட் கடைகள் நான்கோ ஐந்தோ இருந்தன. டெல்லிக்காரர்களும் வைத்திருந்தார்கள்.

அப்போதுதான் உள்ளூர்க்காரர் ஒருவரும் ஸ்வீட் ஸ்டால் ஆரம்பித்தார்.

இவரும் அவர்களைப் போலவே அத்தனை இனிப்புகளையும் கடையில் அடுக்கியிருந்தார். கூடுதலாக ஒன்றை மட்டும் செய்தார். இனிப்போ, காரமோ, யார் வாங்கினாலும் அந்தப் பொட்டலத்தோடு இன்னொரு பொட்டலத்தில் கொசுறாக இரண்டு, மூன்று இனிப்புகளைக் கையளவு கட்டித் தருவார்.

பால்கோவா கொஞ்சம், இனிப்பு பூந்தி கொஞ்சம், வேறு ஏதேனும் இனிப்பின் ஒரு விள்ளல். இவற்றை ஒரு சிறு தையல் இலையில் பொட்டலமாகக் கட்டித் தருவார். வீட்டுக்கு யாரேனும் இனிப்போ காரமோ வாங்கி வரும்போது, நாங்கள் முதலில் அந்தத் தையல் இலைப் பொட்டலத்தைத்தான் எடுப்போம்.

வணிகத் தலைமைகொள் - 4

பின் அந்தக் கொசுறுப் பொட்டலம் ரொம்பப் பிரபலமாகி, தாம்பரத்தின் நம்பர் 1 ஸ்வீட் ஸ்டாலாக எண்பதுகளில் மாறியது அக்கடை.

ஒரு பெரிய இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம். விமானத்திலிருந்து உப்பு வரை வணிகம் செய்பவர்கள்...

ஒரு சிறு சரக்கு ஊர்தியைத் தயாரிக்கிறார்கள், இருபது ஆண்டுகளுக்கு முன்பு! அதற்கு முன்பு பெரும்பாலும் மூன்று சக்கர வண்டியில்தான் குறைந்த எடையுள்ள சரக்குகள் இடம்பெயர்ந்தன.

இவர்கள் ஒரு நான்கு சக்கர சரக்குந்தை உருவாக்கினார்கள். இன்றைய சிறு சரக்கு ஊர்தியில் (மினி டிரக்) அவ்வண்டிதான் மார்க்கெட் லீடர். ஆம், சின்ன யானை என்றழைக்கிறோமே, அதுதான்!

அதன் வெற்றிக்குக் காரணம், அது தந்த வணிக வாய்ப்பு. மூன்று சக்கர / சிறு ஊர்தி ஓட்டுநர்களாக இருந்தவர்கள் அந்த வண்டியால் மினி டிரக் உரிமையாளர் ஆனார்கள். சரக்குப் போக்குவரத்தில் அவர்களும் ஒரு சிறுமுதலாளி ஆனார்கள். அதன் கேபினும் சரி, இருக்கையும் சரி, ஒரு சிறிய காருக்கு நிகரானது.

வண்டி அதன் பாரத்தைச் சுமந்துசெல்கையில், சிறு முதலாளிகள் சௌகரியமாக அமர்ந்து அவ்வண்டியை இயக்கினார்கள்.

கூகுள் நிறுவனம் புதுமைகளுக்குப் பெயர் போனது. ஒவ்வொரு நாளும் நமக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டிக் கொண்டே இருப்பார்கள். ‘கூகுளின் கண் பார்வை என் மனைவியின் கண்பார்வையைவிடக் கூர்மையானது’ என நகைச்சுவையாக நான் சொல்வதுண்டு.

நம் தேடல், நாம் இருக்குமிடம், நம் பாதை, நம் பயணம் எல்லாம் இந்த கூகுள் ஆண்டவர் அறிவார். அது எப்படி சாத்தியமானது?

2010 வாக்கில் அவர்கள் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அது என்னவென்றால், Find a way to Say YES. ‘எதையும் நிராகரிக்காதீர்கள். ஏற்பதற்கு வழி காணுங்கள்.’ அந்த முடிவுதான் அவர்களை இன்றளவும் படைப்பாற்றலில் புதுமையாகச் சிந்திக்க வைக்கிறது. தேட வைக்கிறது.

நாங்கள் எங்கள் நிறுவனத்தை 2012-ல் பிரைவேட் லிமிட்டெட் ஆக்கியபோது, பணியில் சேர்பவர்களுக்குச் சில நியமங்களை வகுத்தோம். அதில் ஒன்று, பார்க்கும் பணிக்கேற்றவாறு ஐ‌.டி.‌ஐ, டிப்ளோமா, இன்ஜினீயரிங் என்று ஏதேனுமொன்றை முடித்திருக்க வேண்டும்.

என் சக இயக்குநர்கள் அந்த நியமப்படி நேர்காணல் செய்து, வேலைக்கு ஆட்கள் எடுத்தனர். எனக்கு வேறு பொறுப்புகள் இருந்ததால் நான் அதில் தலையிடவில்லை. நாள்கள் போகப் போக, நிறைய பேர் பணி விலகுவது ஒரு பெரும் பிரச்னையாக மாறியது.

எனக்கொரு நாள் சட்டென மனதில் ஒரு விஷயம் தோன்றியது. என் நிறுவனம் பார்ட்னர்ஷிப் கம்பெனியாக இருந்தபோது, 2008-ல் நான் பணியில் அமர்த்திய அக்கவுன்ட்ஸ் மேனேஜர், அதற்கான தகுதிப் படிப்பைவிட ஒருநிலை குறைவாகப் படித்தவர். 2010-ல் அமர்த்திய நிர்வாக மேற்பார்வையாளர், கல்லூரிப் படிப்பைத் தொடர முடியாமல் பாதியில் விட்டவர். ஆனால் அவர்கள் இருவரும் இன்றுவரை பணிபுரிகிறார்கள். சிறப்பாகவும் செயல்படுகிறார்கள்.

‘நாம் ஏன் அதே முறையை சேல்ஸ் மற்றும் சர்வீஸ் துறை நியமனங்களிலும் கடைப்பிடிக்கக் கூடாது?’ என யோசித்து, சக இயக்குநர்களிடம் அதைத் தெரிவித்தேன்.

அவர்களும் ஒப்புக்கொண்டு கல்வித்தகுதியைப் பெரிதாகப் பாராமல் நபரையும், அவரின் அனுபவத்தையும் ஆர்வத்தையும் மட்டுமே அளவுகோலாகக் கொண்டு பணியிடங்களை நிரப்பினர். அப்படி அமர்த்தப்பட்டவர்களில் பத்தில் ஒன்பது பேர் பணியிலிருந்து விலகவே இல்லை.

வணிகத் தலைமைகொள் - 4

80, 90 மதிப்பெண் எடுத்தவருக்கு எல்லாக் கதவுகளும் திறக்கும். 35 எடுத்தவருக்கு? அதுவும் பெறாமல் தேர்வில் தேர்ச்சியே அடையாதவருக்கு?

எம் கதவுகள் திறந்திருக்கும். அவர்கள் அங்கீகரிக்கப்படுவார்கள். அங்கீகாரம் கிடைத்தபின் யார்தான் விலகுவார்கள்?

மேற்சொன்ன இனிப்புக்கடை, சின்ன யானை வாகனம், கூகுளின் find a way to say YES, என் நிறுவனத்தின் கதவுகள் யாருக்குத் திறந்திருக்கும்... இவை யாவும் உணர்த்துவது என்ன?

நாம் நம் தொழிலில்/தயாரிப்பில், இப்போதுதான் வந்திருக்கலாம். ஏற்கெனவே பழம் தின்று கொட்டை போட்டவர்கள் சந்தையைக் கைக்கொண்டிருக்கலாம். அப்போது நாமென்ன செய்யலாம்?

1. அவர்களின் தயாரிப்பை, வடிவை, தயாரிப்பு முறையைப் பின்பற்றலாம்.

2. அவர்களின் வணிகச் செயல்பாடுகளைப் பின்பற்றலாம்.

3. அவர்களின் விளம்பர யுக்திகளைப் பின்பற்றலாம்.

மூன்றுமே தவறு. தோல்விதான் அடைவோம்.

பின், வெற்றியடைய வழி? அவர்கள் செய்யாததை நாம் செய்ய வேண்டும்.

கொசுறுப் பொட்டலம் தந்த இனிப்புக்கடையும், ஓட்டுநரை உரிமையாளராக்கிய சின்ன யானையும், எக்கேள்வியையும் ஏற்ற கூகுளும், தேர்வில் தேர்ச்சி அடையாதவருக்கு வாய்ப்புத் தந்த நானுமே அதைத்தான் செய்தோம்.

If you are not first, be different. அதுதான் இவை அனைத்தின் சாரம்.

பாரதிராஜா திரைக்கு வந்தபோது, அதற்குமுன்பு முதலிடத்தில் இருந்தவர்களைப் போல படம் எடுக்கவில்லை. அவர்கள் எடுக்காததை இவர் எடுத்தார்.

இன்று, ஒன்றைப்போல இன்னொன்று என இருக்கும் தொலைக்காட்சி சேனல்களை யாரும் பார்ப்பதில்லை. வித்தியாசம் காட்டும் சேனல்களே, நிகழ்ச்சிகளே அதிகபட்ச நேயர்களை இழுக்கின்றன. வெற்றி பெற்றோர் அத்தனை பேரின் சூட்சுமமும் இதுவே.

பெரிதல்ல, சிறு வித்தியாசமும், நாம் காட்டும் தனித்துவமும்கூட வாடிக்கையாளருக்கு நம் பொருளின் மீதான மதிப்பைக் கூட்டும். நம் மீதான மதிப்பையும்...

வித்தியாசப்படுவோம், வெல்வோம்.

- வணிகம் பெருகும்...