
எல்லோரும் அவரின் மொத்தப் பேச்சுக்கும் ஆரவாரம் செய்துகொண்டிருக்கையில், சட்டென ஒரு கேள்வி அவரிடம் வைக்கப்படுகிறது.
சென்ற அத்தியாயங்களின்படி, நீங்கள் வணிகம் தொடங்கிவிட்டீர்கள். இப்போது நீங்கள் ஒரு நிறுவனத்தின் தலைவர். ஒருவேளை நீங்கள் ஒற்றை ஆள் எனினும் நீங்களே ஒரு நிறுவனம்தான். ஒவ்வொரு வணிகனும் ஒரு நிறுவனமே. அவன் உழைப்பில் வீடு மட்டுமல்ல, நாடே பலனடைகிறது.
இந்திய வணிகத்தின் மொத்த உற்பத்தியில் முப்பது சதவிகிதத்தை, சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் செய்கிறார்கள். அவர்கள் குடும்பம், அவர்களிடம் பணிபுரிவோர்கள் குடும்பம் என எல்லாம் சேர்த்தால் 40 கோடிப் பேர் வருவார்கள்.
ஆக, ஒவ்வொரு வணிகனும் ஒரு தலைவன். அவனது தலைமைப்பண்புகளே அவன் வளர்ச்சியை, நிறுவனத்தின் வளர்ச்சியை, சமூகத்தின் வளர்ச்சியை முடிவு செய்கின்றன. ஆக ஒரு வணிகன், வணிகனெனும் தலைவன் எப்படி இருக்கவேண்டும்?
மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், அமெரிக்க வரலாற்றைத் திருப்பிப் போட்ட தலைவர். ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத் தந்து, சட்டபூர்வமாக வெள்ளையினத்தவரும், அவர்களும் சமம் எனப் பிரகடனப்படுத்தியவர். நிறவெறிக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதற்காக, 35 வயதிலேயே நோபல் பரிசு பெற்றவர்.

1963-ல் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஒரு மாபெரும் பேரணியில் மார்ட்டின் லூதர் கிங் பேசுகிறார். இரண்டரை லட்சம் பேர் கூடியிருக்கிறார்கள். பேச்சின் முடிவில், ‘‘எல்லோரும் அவரவர் ஊருக்குத் திரும்பிச் செல்லுங்கள். இனியும் நாம் விரக்தியில் வாட வேண்டாம். நாம் இந்நிலையை எப்பாடுபட்டேனும் மாற்றுவோம்'' என்று கூறுகிறார்.
எல்லோரும் அவரின் மொத்தப் பேச்சுக்கும் ஆரவாரம் செய்துகொண்டிருக்கையில், சட்டென ஒரு கேள்வி அவரிடம் வைக்கப்படுகிறது. ‘‘உங்கள் கனவு என்ன?”
கிங் சில நொடிகள் யோசித்தபிறகு, தான் ஏற்கெனவே முடித்த பேச்சை மீண்டும் தொடர்கிறார். ‘I have a dream' (எனக்கொரு கனவு உண்டு) என ஆரம்பித்த அவரின் பேச்சு, அவரின் பல நாள் கனவை, வேட்கையை, தன் இனத்துக்கான விடுதலையை, அங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவர் மனத்திலும் விதைக்கிறது. பின்னாளில் ஆப்ரோ அமெரிக்கர்களுக்கு ஓட்டுரிமை பெற்றுத்தரும் வரை அல்ல, இன்றுமே அவர்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வித்திட்டது அந்த அவரின் ‘எனக்கொரு கனவு உண்டு' எனும் எழுச்சி உரைதான். சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த அமெரிக்க உரையாக அது இன்றும் கருதப்படுகிறது.
ஆனால் அப்பேருரை, ஒரு சிறுகண நேரத்தில் விளைந்தது. ஆங்கிலத்தில் சொல்வார்களே ‘presence of mind' என்று, அதனால் உருவானதே அந்த மாபெரும் மேடைப் பேச்சு.
ஆம், ஒரு தலைவன் அந்த presence of mind மற்றும் சட்டென முடிவெடுக்கும் திறனுடன் இருக்க வேண்டும். முடிவெடுக்கும் திறனுள்ள தலைவன், ஒரு நிறுவனத்தை மேலே இட்டுச் செல்வான். முடிவுகளை எடுக்காதவன், தள்ளிப் போடுபவன், தானும் முன்செல்லாமல், மற்றவருக்கும் தடையாகி, எந்தப் போட்டியாளரும் தன் நிறுவனத்தை அழிக்கத் தேவையின்றி, தானே அதைச் செய்து முடிப்பான்.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் ஹைதராபாத்தில், இந்தியப் பிரசித்தி பெற்ற ஆட்டோமொபைல் நிறுவனத்தின் ஜெனரேட்டர் டீலர் நாங்கள். எங்களைப் போலவே இன்னும் சில டீலர்களும் இருக்கிறார்கள். சொல்லப்போனால் அவர்கள் எங்களுக்கு முன்பே வணிகம் ஆரம்பித்தவர்கள். ஆனால் இன்று விற்பனை எண்ணிக்கையிலும் சரி, ஆண்டின் மொத்த விற்பனை வருவாய்த் தொகையிலும் சரி, அவர்களைவிட நாங்கள் கூடுதலாகச் செய்துகொண்டிருக்கிறோம்.
காரணங்கள் பல இருக்கலாம். முக்கியக் காரணம் ஏதெனில், எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்கள் நிறைய பேர் ஆரம்பத்திலிருந்து இன்று வரை இருக்கிறார்கள்; இனிமேலும் இருப்பார்கள். நான் பணிக்கான நேர்முகத் தேர்வு நடத்தும்போது, ஒன்றை மனதில் வைத்துக் கொண்டுதான் ஆரம்பிப்பேன். நான் ஒரு தொழிலாளியை நியமிக்கவில்லை. என் வணிகப் பயணக் கூட்டாளியை, என் சகாவை நியமிக்கிறேன். அதற்கான ஆர்வம் அவரின் சொற்களில் இருக்கிறதா? கண்களில் தெரிகிறதா? இருந்தால், தெரிந்தால், அன்றே அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அவர் கைகளில் தந்துவிடுவேன்.
அடுத்து நான் தர வேண்டியது ஒன்றே ஒன்றுதான்... அது அவருக்கான வளர்ச்சி. அதுதான், அதைத்தான் ஒரு தலைவன் தன் சகாக்களுக்குத் தர வேண்டும். அப்படித் தந்தால் அந்நிறுவனம் நிச்சயம் முதலிடம் பெறும்.
இன்று எங்கள் நிறுவனத்தில் சில பங்குதாரர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு முன்பாக, எங்கள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தவர்கள். பத்து ஆண்டுகள் என் வணிகக் கூட்டாளிகளாக இருந்தவர்களிடம் நிறுவனத்தின் பங்கைப் பகிர்வதுதானே சரி. பொறுப்பை எதிர்பார்க்கும் நாம், அவர்களுக்கான அங்கீகாரத்தையும் அதிகாரத்தையும் தர வேண்டும்தானே! அதுதானே மனிதர்களின் வளர்ச்சிக்கும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஆதாரம்.
ஆம், ஒரு நல்ல தலைவன் தன் சகாக்களை அடிமையாக வைத்திருக்க மாட்டான். அவர்களையும் தலைவனாக மாற்றுவான்.
நான் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தேன். அங்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். அதன் அன்றைய நிர்வாக இயக்குநர், இன்றும் எனக்கு உற்ற நண்பர்.

நாங்கள் 2004-05 வாக்கில் ஒரு ஜெனரேட்டரை, ஹைதராபாத்தில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றுக்கு அளித்தோம். அப்போது நல்ல மழைக்காலம். அந்த வாடிக்கையாளரின் கட்டட வேலைகள் முழுமையாக முடியாததால், ஏறக்குறைய நான்கு மாதங்களுக்கு அவர்கள் ஜெனரேட்டரை வெட்டவெளியில் வைத்திருந்தார்கள்.
கட்டுமானப் பணிகள் முடிந்து, கடைசியாக ஜெனரேட்டரை அதன் இடத்தில் நிறுவி நாங்கள் இயக்கியபோது அதன் இன்ஜின் பழுதாகிப் போனது. காரணம், மழைநீர் இன்ஜின் உள்வரை ஊடுருவியிருந்தது. நாங்கள் வாடிக்கையாளருக்கு இதைத் தெரிவித்து, ‘பழுதை சரிசெய்வதற்கான கட்டணத்தை நீங்கள்தான் கட்டவேண்டும்' என மின்னஞ்சல் அனுப்பினோம்.
எங்கள் நிர்வாக இயக்குநர் என்னை அழைத்தார். அவர் சொன்னார்... ‘‘முதலில் நாம் தந்தது weather-proof ஜெனரேட்டர். மழையில் அதற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கவே கூடாது. ஒருவேளை எப்போதும் இல்லாத அளவு மழை பெய்திருப்பினும், நாம் வாடிக்கையாளருக்கு அதன் விளைவுகளைத் தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் நம் சர்வீஸ் நபர் ஒருவர் சென்று, இன்ஜினுக்குள் நீர் புகாதவாறு சில கூடுதல் வழிமுறைகளைச் செய்துகொடுத்திருக்க வேண்டும். கடைசியாக ஜெனரேட்டரை இயக்கும் முன்பாவது, நீர் ஊடுருவியதை நாம் கண்டறிந்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், பழுது ஏற்படும் முன்பே அதைத் தவிர்த்திருக்கலாம். எனவே பழுதைச் சரிசெய்வதற்கான கட்டணத்தை நாமே ஏற்போம்.''
நான் வியந்துபோனேன். இப்படிப்பட்ட மனிதரிடம் பணிபுரிவதற்காகப் பெருமையடைந்தேன். வாடிக்கையாளரும் எங்கள் செயலை வியந்து, தங்களின் சென்னை, மும்பை, பெங்களூரு கிளைகளுக்கும் எங்கள் ஜெனரேட்டர்களையே வாங்கினார்கள்.
ஆம், Business Ethics எனப்படும் வணிக அறமே நம்மை நெடுங்காலம் நிலைத்திருக்கச் செய்யும். பணத்தின்பால் மட்டுமே நின்ற வணிகர்கள் பெயர் இழந்திருக்கிறார்கள். அறத்தின்பால் நின்றவர்கள் பெயர் பெற்றிருக்கிறார்கள். பணத்துக்காக மட்டுமே வேலை செய்தால் பெயர் போகும். பெயருக்காக வேலை செய்தால் பணம் வரும்.
- வணிகம் பெருகும்