Published:Updated:

வணிகத் தலைமைகொள் - 8

ரஜினி - தோனி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி - தோனி

சௌகரிய நிலையிலிருந்து நம்மை வெளியே செல்லத் தடுப்பது நம் அச்சம்தான். சிலருக்கு நிறைசபையில் பேசுவதற்குப் பயமாய் இருக்கும்.

கிரிக்கெட், சினிமா இரன்டுமே இந்தியர்களின் கண்டுபிடிப்புகள் கிடையாது. ஆனால் அவை இரண்டுமே அதிகம் விரும்பப்படுவது இந்தியாவில்தான். அதனால்தான் ஆளும் அரசியலிலும் /அரசிலும் பங்கேற்கும், நிர்வகிக்கும், ஏன் தலைமை தாங்கும் வரையிலுமே இரு துறையினரும் அதிகம் இருந்துகொண்டிருக்கிறார்கள். அது சரியா, தவறா எனும் விவாதங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அதற்குள் நாம் போக வேண்டாம். அத்துறைகளின் உள்ளே வந்த இரு சாதாரண மனிதர்கள் பின்னாள்களில் ‘தலைவா' எனத் திரையரங்கத்திலும், கிரிக்கெட் அரங்கத்திலும் கொண்டாடப்படுகின்றனரே... அவர்கள் இருவரை இப்போது பார்ப்போம்.

ஒருவர் ரஜினிகாந்த், இன்னொருவர் தோனி.

இருவருமே நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர்கள். ரஜினியின் தந்தை காவல்துறையில் பணிபுரிந்தவர். தோனியின் தந்தையும் ஓர் அரசுத்துறை சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்தவர். ரஜினி கண்டக்டர் ஆகிறார். தோனி ரயில் டிக்கெட் பரிசோதகர் ஆகிறார். ரஜினி குடும்பத்தில் யாரும் திரைத்துறையில் இல்லை. தோனியின் குடும்பத்திலும் யாரும் கிரிக்கெட் விளையாடவில்லை.

இருவரும் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு இருந்திருக்கலாம். அதே வேலைகளில் வளர்ச்சியும் அடைந்திருக்கலாம். எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் வாழ்க்கையின் சௌகரியமான வட்டத்தில் வாழ்ந்து, ஹவுசிங் லோன் எடுத்து ஒரு டபுள் பெட்ரூம் அப்பார்ட்மென்ட் வாங்கி, பிள்ளைகளைப் படிக்க வைத்து, பி.எஃப் கிராஜுவிட்டி பெற்று, பக்கத்துப் பூங்காவில் சுகர் அளவைக் குறைக்க நடைப்பயிற்சி செய்துகொண்டு இருந்திருக்கலாம்.

வணிகத் தலைமைகொள் - 8

‘தலைவா' என யாரும் அழைத்திருக்கவும் மாட்டார்கள். இப்போது அழைக்கிறார்கள். கொண்டாடுகிறார்கள். இது எப்படிச் சாத்தியமானது? காரணங்கள் அநேகம் இருக்கலாம். ஆனால், முதல் காரணம்?

அவர்கள் தங்கள் சௌகரிய நிலையைத் துறந்து வந்ததுதான். தங்கள் விருப்பத்தை அடைவதற்காக அந்த சௌகரிய நிலையைத் துறந்து, விரும்பிய துறைக்கான பயிற்சியில் தங்களை வருத்திக்கொண்டதுதான் இன்று அவர்களை அவரவர் துறையில் தலைவனாக்கியிருக்கிறது.

ஆங்கிலத்தில் சொல்வார்களே comfort zone, அதிலிருந்து வெளியே வருவதுதான் வணிகத்திலும் வளர்ச்சி தரும். சுருக்கமாகச் சொன்னால், சௌகரிய நிலையில் நாம் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிறோம். துறந்து வெளிவருபவனே எல்லாவற்றையும் மாற்றுகிறான். சரி, சௌகரிய நிலையில் இருந்து எப்படி வெளியில் வருவது?

பயம் பழகு:

சௌகரிய நிலையிலிருந்து நம்மை வெளியே செல்லத் தடுப்பது நம் அச்சம்தான். சிலருக்கு நிறைசபையில் பேசுவதற்குப் பயமாய் இருக்கும். சிலருக்கு முதல் வரிசையில் அமரக்கூட அச்சமாய் இருக்கும். சிலருக்குப் பந்தியில் சாப்பிடும்போது, ஆசைப்படும் உணவைக் கேட்பதற்கும் தயக்கம் இருக்கும். இந்த பயங்களை விட்டொழிக்க ஒரே வழி, எந்தச் சூழலுக்கு நாம் பயப்படுகிறோமோ, அந்தச் சூழலைத் தவிர்க்காமல் நாமே வலிந்து உருவாக்கிக்கொள்வதுதான்.

நான் 1991-ல் சென்னையில் ஒரு சிறிய பட்டறையில் வேலை செய்துகொண்டிருந்தேன். நான் முதன்முதலில் வேலை பார்த்த இடமும் அதுதான். எங்களுக்கு ஜாப் வொர்க் தரும் நிறுவனம் மகாராஷ்டிராவில் இருந்தது. மாதம் ஒரு முறையேனும் அங்கிருந்து ஆட்கள் எங்கள் நிறுவனத்துக்கு வருவார்கள். எங்கள் பணியின் தரத்தை, எண்ணிக்கையை, இலக்கை மேற்பார்வையிடுவார்கள். எல்லாவற்றையும் அவர்களிடம் ஒரு ரிப்போர்ட் வடிவத்தில் எழுதிக்கொடுத்துவிடுவேன். அதுவரை எனக்கு எந்தப் பிரச்னையும் கிடையாது.

ரிப்போர்ட்டை ஆய்வு செய்தபடியே என்னிடம் சில விளக்கங்கள் கேட்பார்கள், ஆங்கிலத்தில். அங்குதான் நான் சைலன்ட் மோடுக்குப் போய்விடுவேன். ஏனெனில், எனக்கு ஆங்கிலம் பேச வராது. அதனால் ரிப்போர்ட்டை எழுதி மட்டும் கொடுத்துவிட்டு நகர்ந்துவிடுவேன். ஆங்கிலம் சரளமாய்ப் பேசத் தெரிந்த வேறொருவர் அவர்களுக்கு விளக்கங்கள் அளிப்பார். எழுதியது நான், விளக்கமளிப்பவர் வேறொருவர். அதனால் விளக்கம் கேட்பவருக்குத் தகவல்கள் சரியாகப் போய்ச் சேராது.

இதைத் தெரிந்துகொண்டார் அந்நிறுவனத்தின் மூத்த மேனேஜர் ஒருவர். அவர் சென்னை வரும்போதெல்லாம் மட்டுமல்ல, மற்றவர்கள் வரும்போதும் என்னை மூன்றுவேளையும் அவர்களோடு சேர்ந்து சாப்பிடச் செய்வார். விடுமுறை எனில் சென்னையைச் சுற்றிக் காட்டச் சொல்வார். அவர்களுடனான என் தொடர்பைப் பணி நேரம் மட்டுமன்றி, இதர நேரங்களிலும் அதிகரித்தார்.

நானும் வேறு வழியின்றி ஆங்கிலம் பேச ஆரம்பித்தேன். முதல் இரண்டு மாதங்கள் தட்டுத் தடுமாறியவன் ஆறாவது மாதத்தில் எந்த மனத்தடையுமின்றி உரையாடினேன். நான் பேசிய ஆங்கிலம் சரியானதா, தவறானதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் ஆங்கிலம் குறித்தான என் பயம் விலகியிருந்தது.

ஆம்! நாம் எதைக் கண்டு பயப்படுகிறோமோ, அதைத் தொடர்ந்து எதிர்கொள்வதே அந்த பயத்தை நீக்கும் செய்முறை.

புதியன பழகு:

நம்மிடம், குறிப்பாகத் தென்னிந்தியர்களிடம் இருக்கும் ஒரு பழக்கம், எத்தனை முறை ஓர் இடத்துக்குச் சென்றாலும் ஒரே ஓட்டலில்தான் தங்குவார்கள். ஒரே உணவகத்தில்தான் உணவருந்துவார்கள். சிலர் புதிய ஊருக்குப் போகக்கூட மாட்டார்கள். புதிய மனிதர்களிடம் பழக மாட்டார்கள். இத்தனை ஏன்? ஒரு புதிய பாட்டைக் கேட்கவும் மாட்டார்கள். இவை யாவும் சௌகரிய நிலையின் வெளிப்பாடே! நாம் புதியவற்றை முயற்சி செய்யாதவரை, நம்மிடம் Plan B (மாற்றுவழி) என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

இன்று உலகின் தலைசிறந்த கால்பந்து ஆட்டக்காரர் எனப் பெயரெடுத்த கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இளம்வயதில் கால்பந்து வாங்குவதற்குக்கூட வசதி கிடையாது. இருந்தும், கால்பந்தே இல்லாமல் கால்பந்து ஆடினான் அவன். எப்படி? கந்தல் துணிகளைக் கால்பந்து வடிவத்தில் உருட்டி அதை உதைத்தும் கடத்தியும் விளையாடினான். தெருவில் பந்து வடிவத்தில் எந்தப் பொருள் இருந்தாலும் அதில் விளையாடினான். அன்று அப்படிப் புதுவழிகள் கண்ட சிறுவன்தான் இன்று கால்பந்தாட்டத்தில் சூரன். தன்னிடம் எத்தனை கார்கள் இருக்கின்றன என்றுகூடத் தெரியாத அளவுக்குப் பெரும் பணக்காரன்.

புதியன பழகி மாற்றுவழிகள் காண்போம். சௌகரிய நிலை துறந்து சாதிக்கும் நிலை பெறுவோம். காலம் காலமாய்ச் செய்தவற்றையே செய்வதற்கு, ஓர் இயந்திரம் போதுமே... மனிதர்கள் எதற்கு?

சவால் பழகு:

சௌகரிய நிலையிலிருந்து வெளிவந்து நாம் வைக்கும் ஒவ்வோர் அடியும் சவால் நிறைந்ததே. மறுப்பதற்கில்லை. ஆனால் வணிகத்தில் அந்தச் சவால்கள்தான் வாய்ப்புகள்.

2003-ல் சிங்கப்பூர் கம்பெனி ஒன்றின் இந்தியக் கிளையில் நான் பணிபுரிந்தபோது, முதல் ஆர்டராக மேகாலயா மாநிலத்தில் ஒரு சிமென்ட் நிறுவனத்துக்கு ஜெனரேட்டர்களை அனுப்பி அவற்றை நிறுவ ஆர்டர் கிடைத்தது. சொல்லப் போனால், அது மற்ற போட்டியாளர்கள் வேண்டாமென விட்ட ஆர்டர்.

வணிகத் தலைமைகொள் - 8

அப்போது மேகாலயாவில் போக்குவரத்து வசதி, வேலைக்கு ஆள் கிடைப்பது, பொருள்கள் கிடைப்பது எல்லாமே சவால்தான். ஓர் ஆற்றைப் படகில் கடந்து தினமும் அந்த நிறுவனத்துக்குச் செல்ல வேண்டும். சரியான அலைபேசி வசதி, இணைய வசதி எதுவுமில்லாத இடம். ஏ‌.டி.‌எம் போக வேண்டுமென்றால்கூட 20 கி.மீ பயணிக்க வேண்டும். ஆனால் அந்த ஆர்டர்தான் எங்களுக்குச் சிறந்த புராஜெக்ட் மேனேஜிங் கம்பெனியாகச் சந்தையில் பெயர் பெற்றுத் தந்தது.

ஏனெனில் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொண்டபோது, அதைச் சமாளித்துக் கடக்கும் வழிமுறையும் கண்டோம். சிலவற்றில் முதல்முறை தோல்வி கண்டோம். பின் வழிமுறையை மாற்றி வெற்றி அடைந்தோம். ஒரு கடினமான பணியை, சூழலை, இடத்தை எப்படி மேலாண்மை செய்வது என அந்த ஆர்டர் எங்களுக்குக் கற்பித்தும் தந்தது.

வாய்ப்பு எனும் கனி, சவால் எனும் மரத்தில் ஏறினால் மட்டுமே கிடைக்கும்.

- வணிகம் பெருகும்