Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன்

பிரீமியம் ஸ்டோரி

ரூபாய் 1:

2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில், “சமீப காலமாக இந்தியாவின் தென்மாநிலங்களில் புதிய சர்க்கரை ஆலைகள் தொடங்கும் போக்கு அதிகரித்துள்ளது என்ற கருத்தை  ஏற்றுக்கொள்கிறீர்களா? தக்க காரணங்களுடன் விவாதிக் கவும்” என்ற கேள்வி கேட்கப்பட்டி ருந்தது. அதாவது, ஆங்கிலத்தில் இந்தக் கேள்வி, Do you agree that there is a growing trend of opening new sugar mills in the southern states of india? Discuss with Justification என்று அமைந்திருந்தது.

பொதுவாக, 10-20 ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிராவிலும், உத்தரப்பிரதேசத்திலும்தான் அதிக எண்ணிக்கையில் சர்க்கரை ஆலைகள் காணப்பட்டன. சர்க்கரை ஆலைகள் சிறப்பாக செயல்படுவதற்கு மிக ஆதாரமான மூலப்பொருள் கரும்பு. எனவே, சர்க்கரை ஆலைகள் தொய்வின்றி செயல்பட, அந்த ஆலை களுக்கான அடிப்படை மூலப்பொருளான கரும்பு மிக அருகிலேயே விளைவிக்கப்பட வேண்டும்.  தொலைவில் விளைந்த கரும்பை சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துவர இயலாது. ஏனெனில், அவ்வாறு எடுத்துவரும்போது கரும்பில் உள்ள சர்க்கரை இழப்பு அதிகமாக இருக்கும். சில சமயங்களில் இந்த இழப்பு 90 சதவிகிதம் கூட இருக்கும். எனவே, கரும்பு விளைச்சல் அருகிலேயே சிறப்பாக நடைபெற்றால்தான், சர்க்கரை ஆலைகள் உற்பத்தியில் சிறந்து விளங்க முடியும்.

VAO முதல் IAS வரை!

உலகின் மொத்த சர்க்கரை உற்பத்தியில் 22 சதவிகிதத்தை இந்தியா தயாரித்து வழங்குகிறது. இந்தியாவில் மூன்றாவது பெரிய தொழில். 1982-ம் ஆண்டு மிக அதிகச் சர்க்கரையை உற்பத்தி செய்து உலகில் முதலிடத்தைப் பிடித்தது.

வட இந்தியாவில் கரும்பு உற்பத்திக்கு முக்கிய நெருக்கடியாக பருவநிலை அமைகிறது. Loo (லூ) என்ற வெப்பக்காற்று காரணமாகவும், பனிப்பொழிவின் காரணமாகவும் வட இந்தியாவில் விளைவிக்கப்படும் கரும்பில் சர்க்கரை குறைந்து காணப்படுகிறது.
மேலும், சர்க்கரை ஆலைகள் கரும்பை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் விலை விவசாயிகளுக்கு சாதகமாக இல்லை. தென் இந்தியாவில் உள்ள மாநில அரசுகள் (ஆனால், தமிழகத்தில் வேறு நிலை), மத்திய அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலையை மானியமாக வழங்கி சர்க்கரை ஆலைகளுக்கு எளிதில் கரும்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் பலவற்றை எடுத்துள்ளன.
 

இத்தகைய காரணங்களால் சமீப காலத்தில் தென் இந்தியாவில் சர்க்கரை ஆலைகள் அதிகம் தொடங்கும் போக்கு காணப்படுகிறது.  
 

உதாரணமாக, தற்போது தமிழ்நாட்டில் 42 சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவற்றில் 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், 3 அரசு ஆலைகள், 23 தனியார் ஆலைகள் ஆகும்.

மேலும், குஜராத் மாநிலத்தில் பால் உற்பத்தியில் கூட்டுறவு முறை வெற்றி பெற்றதைப் போல, தென் மாநிலங்களில் சர்க்கரை உற்பத்தியில் கூட்டுறவு முறை வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அதே ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் பருத்தி துணி தொழில் பற்றியும் ஒரு வினா கேட்கப்பட்டது. Analyse the factors for highly decentralised cotton textile Industry in India என்பதே அந்த வினா. அதாவது, பருத்தி துணித் தொழில் ஒரு மையத்தில் மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் பரவலாக காணப்படுவதற்கான காரணிகளை பகுத்தாயச் சொல்கிறது இந்தக் கேள்வி.

VAO முதல் IAS வரை!

சர்க்கரை ஆலைத் தொழிலைப் போல் இல்லாமல், பருத்தி துணித் தொழிலுக்கான மூலப்பொருளான பருத்தி ஓரிடத்தில் விளைந்தாலும், அதை மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வது எளிது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும்போது, பெரிய இழப்பு எதுவும் ஏற்படுவதில்லை. மேலும், பருத்தி எடை குறைந்ததாக இருப்பதால், அதை எடுத்துச் செல்வது எளிதாகிறது. எனவே, பருத்தி துணித் தொழிலைப் பொறுத்தமட்டில் பருத்தி விளைகிற இடத்தில்தான் பருத்தி துணி ஆலைகள் அதிகம் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

உதாரணமாக, இந்தியாவில் மஹாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில்தான் அதிக அளவில் பருத்தி விளைகிறது. ஆனால், பருத்தி நெசவாலைகள் தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

பருத்தி துணி ஆலை தொடங்குவதற்கு பல காரணிகள் முக்கியமானவை. பருத்திக்கு சாயம் ஏற்றுவதற்கு தொழிற்சாலைக்கு அருகிலேயே ஆறு அல்லது நீர்நிலைகள் இருத்தல், குறைந்த கூலிக்கே தொழிலாளர்கள் கிடைத்தல், பருத்தியை எடுத்து செல்வதற்கு தக்கப் போக்குவரத்து வசதி, பருத்தி துணிகளை சந்தைப்படுத்துவதற்குப் போதுமான சந்தைகள் அருகில் இருத்தல், விசைத்தறியை இயக்குவதற்கு போதுமான மின்சாரம் தடையின்றி கிடைத்தல் போன்றவையே பருத்தி தொழிற்சாலை அமைவதை ஊக்குவிக்கும் முக்கிய காரணிகள்.

இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் பருத்தி துணித் தொழிலின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அதற்கேற்ற வசதிகளைச் செய்து தந்துள்ளன. மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் சில இடங்கள் பருத்தி துணி அல்லது பருத்தி சேலை தயாரிப்புக்கு புகழ்பெற்று விளங்குவதோடு அதற்கென்று தகுந்த புவிசார் குறியீடுகளையும் பெற்றுள்ளன.

உதாரணமாக, பண்டிகை சமயங் களில் ஜவுளிக்கடைகளில் பருத்தி சேலை எடுக்கும்போது, பல மாநிலத்தைச் சேர்ந்த, பல்வேறு ஊரைச் சேர்ந்த பருத்தி சேலை வகைகள் (பனாரஸ் காட்டன், கோவை கோரா காட்டன், போச்சம்பள்ளி காட்டன், சந்தேரி காட்டன், அஹமதாபாத் காட்டன்) காட்டப்படுவதை அறிவோம். இந்த கருத்துக்கள் அனைத்தும் பருத்தி துணித் தொழில் இந்தியா முழுவதும் பரந்துள்ளது என்பதற்குச் சான்று களாகும்.

ரூபாய் 2

நாணயம் விகடனில் போட்டித் தேர்வு பொருளாதார தொடரை தொடர்ந்து படித்துவரும் வாசகர் ஒருவர், இந்தப் பகுதியில் போட்டித் தேர்வுகளில் கேட்க வாய்ப்புள்ள பொருளாதாரம் சார்ந்த புதிய பயிற்சி வினாக்கள் சிலவற்றை தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று கேட்டிருந்தார்.

 அவரைப்போல் பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், 2014-ம் ஆண்டில் முக்கிய பொருளாதார நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்வரும் 10 பயிற்சி வினாக்கள் தரப்படுகின்றன.

இந்த வினாக்களுக்கான விடைகளை அடுத்த இதழில் சொல்கிறேன். என்றாலும், இடைப்பட்ட இந்த வார காலத்தில் இந்த வினாக்களுக்கான விடைகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். அடுத்த வாரம் நான் சொல்லப்போகும் விடைகளுடன் நீங்கள் கண்டுபிடித்த விடையையும் ஒப்பிட்டு, உங்களுக்கு நீங்களே மார்க் போட்டுக்கொள்ளுங்கள். ஐஏஸ் தேர்வில் நீங்கள் சிறப்பான மதிப்பெண்களைப் பெற இந்த வகையான பயிற்சிகள் மிக முக்கியம். இனி கேள்விகள்...

VAO முதல் IAS வரை!

1. 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற BIMSTEC மாநாட்டில், அந்த அமைப்புக்கான நிரந்தர செயலகத்தை எந்த நகரத்தில் ஏற்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது?

2. 2014-ல் இந்திய மற்றும் ஜப்பான் பிரதமர்கள் மேற்கொண்ட முதலீட்டு பெருக்கக் கூட்டாண்மையின்படி, எத்தனை வருடங்களில் ஜப்பான் நிறுவனங்கள் இந்தியாவில் செய்யப் போகிற  அந்நிய முதலீடுகள் இரட்டிப்பு ஆக்கப்படும்?

3. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கைப்படி, 2011-ம் ஆண்டில் PPP (Purchase Power Parity) அடிப்படையில் இந்தியா உலகிலேயே எத்தனையாவது பெரிய பொருளாதாரம்?

4. 2014-ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் ஆசியா பத்திரிகை வெளியிட்டுள்ள Forbes Asia’s Fabulous 50 என்னும் பட்டியலில் இந்தியாவில் உள்ள எத்தனை நிறுவனங் கள் இடம் பெற்றுள்ளன?

5. உலகிலேயே அதிக யுரேனிய தாது உடைய சுரங்கமான தும்மலப்பள்ளி இந்தியாவின் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

6. 2014-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 2015 ஜனவரி 26-க்குள் வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு எத்தனை ரூபாய் மதிப்பிலான ஆயுள் காப்பீடு இலவசமாக வழங்கப்படும்?

VAO முதல் IAS வரை!

7. 2014-ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘புதுப்பிக்கப்பட்ட ஆற்றல்-2014 உலக நிலை அறிக்கை’யின்படி, இந்தியா 2013ம் ஆண்டில் 1,700 மெகாவாட் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்து, அதிக காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்த உலக நாடுகளில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. அதே 2013-ம் ஆண்டில் 16,100 மெகாவாட் காற்றாலை மின்சக்தி உற்பத்தி செய்து உலகிலேயே முதல் இடம் பெற்ற நாடு எது?

8. 2013-ம் ஆண்டு இயற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வந்த கம்பெனி சட்டம் உலகிலேயே முதன்முறையாக நிறுவனங்களின் சமூக பொறுப்பை (Corporate Social Responsibility) சட்டப்பூர்வமாக்கியுள்ளது. அதன்படி, ரூ.500 கோடி சொத்து மதிப்பும், ஆண்டுக்கு ரூ.1,000 கோடி வியாபாரமும் செய்து குறைந்தபட்சம் ரூ.5 கோடி லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தங்களது மூன்று ஆண்டு லாபத்தில் எத்தனை சதவிகிதத்தை சமூக பொறுப்புள்ள செயல்களுக்கு செலவிட வேண்டும்?

9. 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நிலக்கரி ஒதுக்கீடு பற்றி வழங்கிய தீர்ப்பில் UMPP திட்டத்தின் கீழ் ஒதுக்கப் படும் நிலக்கரி, அந்தத் திட்டத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. UMPP என்றால் என்ன?

10. 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் தொழில் துறை உற்பத்தியில் காணப்பட்ட 4.5 சதவிகித வளர்ச்சி 8 மைய தொழில்களில் (Eight Core Industries) எந்த மூன்று தொழில்களில் ஏற்பட்ட வளர்ச்சியின் காரணமாக விளைந்தது?
கேள்விகள் அவ்வளவுதான். இதற்கான விடைகளைத் தேடத் தொடங்குவோமா?

(தயாராவோம்)
படம்: கு.பாலசந்தர்

என்எல்சி தந்த ரூ.422.78 கோடி!

செப்டம்பர் மாதம் நடைபெற்ற 58-வது ஏஜிஎம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பங்குதாரர்களுக்கு 18 சதவிகித டிவிடெண்டை வழங்கியுள்ளது என்எல்சி நிறுவனம். இடைக்கால டிவிடெண்டாக மார்ச் மாதம் வழங்கிய 150.99 கோடி ரூபாய் மற்றும் தற்போது அறிவித்துள்ள மார்ச் 2013-14ம் ஆண்டுக்கான டிவிடெண்டான 271.79 கோடி ரூபாயையும் சேர்த்து மொத்தம் இந்த ஆண்டு 422.78 கோடி ரூபாயை டிவிடெண்டாக மத்திய அரசுக்கு வழங்கியுள்ளது என்எல்சி நிறுவனம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு