மற்ற எபிசோடுகள்
Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர் சங்கர சரவணன்

ரூபாய்-1

அறிவுசார் சொத்துரிமை (Intellectual Property Rights - IPR) என்ற சொற்றொடரை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். மனிதன் தன் சிந்தனையைப் பயன்படுத்தி இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த எந்தவொரு புதிய விஷயத்தை உருவாக்கினாலும், அந்தப் படைப்பு, அதை உருவாக்கியவரின் அல்லது உருவாக்கிய குழுவின் அறிவுச்சொத்து ஆகும். அதை அங்கீகரிக்கும் வகையிலே அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க சர்வதேச அளவில் சட்டங்கள் பல உருவாக்கப் பட்டுள்ளன.

அறிவுசார் சொத்துகள் என்ற சொற்றொடர் காப்புரிமை (Patent), பதிப்புரிமை (Copyright), தொழில் சார்ந்த வடிவமைப்பு (Industrial Design), வர்த்தகச் சின்னம் (Trademark), புவிசார் குறியீடு (Geographical Indication), ஒன்றிணைக்கும் சுற்றின் வடிவமைப்பு (Layout of Integrated circuit), தாவர வகைக்கான பாதுகாப்பு (Plant Variety Protection), தொழில் ரகசியங்கள் (Trade Secrets) ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.
அறிவுசார் சொத்துரிமை தொடர்பான கேள்விகள் தற்போதைய போட்டித் தேர்வுகளில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.

இந்தியாவில் மிகப் பாரம்பரியமிக்க விவசாய உற்பத்திப் பொருட்களான மஞ்சளுக்கும், பாசுமதி அரிசிக்கும் அமெரிக்கா உரிமை கோரியதால் எழுந்த சர்ச்சைகள் குறித்து நம்மில் பலர் படித்திருக்கலாம்.

2013-ல் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில், ‘2005-ம் ஆண்டு இந்திய காப்புரிமை சட்டம் 1970-ன் 3(d) பிரிவு திருத்தப்படுவதற்கான சூழ்நிலை உருவானதை வெளிக்கொணர்க. அந்தத் திருத்தத்தை 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தி, நோவார்டிஸ் நிறுவனம் Glivec என்ற மருந்துக்குக் கோரிய காப்புரிமையை நிராகரித்தது. அந்த முடிவால் ஏற்படும் நன்மை, தீமைகளை விவாதி’ என்றொரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது, அந்தக் கேள்வி ஆங்கிலத்தில், Bringing out the circumstances in 2005 which forced amendment to the section 3(d) in Indian Patent Law, 1970. discuss how it has been utilised by the Supreme Court in its judgement in rejecting Novartis’ patent application for ‘Glivec’. Discuss briefly the pros and cons of the decision என்று அமைந்திருந்தது.

VAO முதல் IAS வரை!

இந்தக் கேள்விக்கான பதிலை சிந்தியுங்கள். அடுத்த வாரம் நான் அந்தக் கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்.

ரூபாய் - 2

அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் அமைப்புகள், ஒப்பந்தங்கள், சட்டங்கள் பற்றிப் பார்க்கலாம்.
பன்னாட்டு அறிவுசார் சொத்துரிமைகளைக் கண்காணிப்பதில் கீழ்க்கண்ட இரு அமைப்புகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

1) உலக அறிவுசார் சொத்துரிமைகள் கழகம் (விப்போ - World Intellectual Property Organization (wipo))

2. வர்த்தகம் தொடர்பான அறிவுசார் சொத்துகளின் உரிமை (டிரிப்ஸ் - Trade Related Intellectual Property Rights - TRIPS)

இனி இந்த இரு அமைப்புகள் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

1. விப்போ (WIPO)

இந்தக் கழகம் 1967-ம் கூட்டத்தின்படி துவக்கப்பட்டு 1970-ம் ஆண்டிலிருந்து செயல்படுத்தப்பட்டது. 1974-ம் ஆண்டு ஐக்கிய நாட்டு சபையின் (UNO) அங்கமாக மாறியது. இதற்கு 2 குறிக்கோள்கள் உள்ளன.

i)  உறுப்பு நாடுகள் மற்றும் பன்னாட்டுக் கழகங்களின் துணை கொண்டு அறிவுசார் பண்டங்களின் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

ii) 24 பல தரப்பட்ட உடன்படிக்கைகள் (Multilateral Agreements) மூலம் நிர்வாக ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல்.

2) வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள்.

VAO முதல் IAS வரை!

உலக வர்த்தக அமைப்பின் கீழ், 1993-ம் ஆண்டு சுங்கவரி மற்றும் வாணிபம் குறித்த பொது உடன்பாடு உருகுவே சுற்றுப்பேச்சுகளில், வர்த்தகத் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இது, எல்லா உலக வர்த்தக மையத்தின் (WTO) உறுப்பினர் களையும் கட்டுப்படுத்தும்.

மேலும், சட்டங்களை அமலாக்குவதிலும் இந்த உடன்படிக்கை மிகவும் பலம் வாய்ந்தது. மேலும், விப்போ மற்றும் உலக வர்த்தக மையம் இடையே 1996-ம் ஆண்டு உடன்படிக்கை ஏற்பட்டது.

இதன்படி சட்ட, தொழில்நுட்ப விஷயங்களில் இரண்டு கழகங்களும் ஒத்துழைப்புடன் செயல்படும். இந்த உடன்படிக்கை ஏழு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் தேசிய பிரிவு மற்றும் மிகச் சாதகமான தேசிய பிரிவு குறிப்பிடப்பட்டுள்ளது.

  மிகச் சாதகமான தேசிய பிரிவு (Most favoured nation clause) இங்கு, பிரிவு என்பது நீக்குதல்      (elimination) அல்லது பேதங்காட்டுதல் (discrimination) தன்மையைக் குறிக்கும். இந்தப் பிரிவை இங்கே கொடுக்க வேண்டியதன் காரணம், பன்னாட்டு வாணிபத்தில் பேதங்காட்டும் தன்மையைத் தவிர்க்கவே ஆகும்.

உதாரணமாக, பர்மாவுக்கு நம் நாட்டில் என்ன உரிமை கொடுக்கிறோமோ, அதே உரிமையை அமெரிக்காவுக்கும் கொடுக்க வேண்டும்.
 
தேசிய பிரிவு (Favoured nation clause) இதன்படி, இந்திய மண்ணில் இந்தியர் ஒருவருக்கு என்ன உரிமை கிடைத்ததோ, அதே உரிமை இங்கு வேறு நாட்டவர்களுக்கும் கிடைக்க வேண்டும்.

பகுதி III-ன் கீழ், அறிவுசார் சொத்துரிமைகள் கொடுக்கப் பட்டுள்ளன.

VAO முதல் IAS வரை!

1) பதிப்புரிமை மற்றும் தொடர்புடைய உரிமைகள் (ஆர்ட்டிக்கிள் 9-14).

2) வர்த்தகச் சின்னம் (ஆர்ட்டிக்கிள் 15-21)

3) புவிசார் குறியீடு (ஆர்ட்டிக்கிள் 22-24)

4) தொழில் சார்ந்த வடிவமைப்பு (ஆர்ட்டிக்கிள் 25-26)

5) காப்புரிமை (ஆர்ட்டிக்கிள் 27-34)

6) ஒன்றிணைக்கும் சுற்றின் வடிவமைப்பு (ஆர்ட்டிக்கிள் 35-38)

இது பாரிஸ் மாநாடு, பெர்னே மாநாடு, காப்புரிமை ஒத்துழைப்பு உடன்படிக்கை மற்றும் பல உடன்படிக்கைகளின்படி எடுத்துரைக்கப்பட்டது.
பகுதி III இவற்றை அமலாக்கும் விதம் பற்றியும், பகுதி IV-ல் அறிவுசார் சொத்துரிமை பெறுவது மற்றும் பேணுவது குறித்தும், பகுதி V-ல் இடைப்பட்ட ஏற்பாடு குறித்தும் கூறப்பட்டுள்ளது.

இந்தியா கீழ்க்கண்ட கூட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளில் உறுப்பு நாடாகவோ அல்லது கையெழுத்திட்ட நாடாகவோ பங்கு வகிக்கிறது.
1) பெர்னே மாநாடு, 1886
2) பதிப்புரிமை பொதுக்கூட்டம், 1952 (universal convention copyright- 1952)
3) ஒன்றிணைக்கும் சுற்றின் வடிவமைப்பு, வாஷிங்டன் கூட்டம், 1989 (Convention)
4) பயோ டைவர்சிட்டி கூட்டம் (CBD, 1994)
5) வர்த்தகம் தொடர்புடைய அறிவுசார் சொத்துரிமைகள், 1995
6) பாரிஸ் மாநாடு / காப்புரிமை ஒத்துழைப்பு உடன்படிக்கை 1998 (Patent Cooperation Treaty)
7) புடாபெஸ்ட் உடன்படிக்கை 2001
8) மாட்ரிட் புரோட்டோகால்

 (தயாராவோம்)
படங்கள்:  மீ.நிவேதன், கு.பாலசந்தர்.

2020-ல் ஆன்லைன் இன்ஷூரன்ஸ் 20 மடங்கு அதிகரிக்கும்!

தற்போது ஆன்லைன் மூலம் ரூ.700 கோடிக்கு இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பனையாகி வருகின்றன. இவற்றில் ரூ.300 கோடிக்கு லைஃப் இன்ஷூரன்ஸும்,  ரூ.250 கோடிக்கு மோட்டார் இன்ஷூரன்ஸும், ரூ.150 கோடிக்கு ஹெல்த் மற்றும் டிராவல் இன்ஷூரன்ஸும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இது,2020-ல் ரூ.15,000 கோடியாக அதிகரிக்கும் எனவும், இதில் ரூ.3,500-6,000 கோடி வரை லைஃப் இன்ஷூரன்ஸ்களின் விற்பனையாக இருக்கும் எனவும் இன்ஷூரன்ஸ் துறையைச் சேர்ந்தவர்கள் கணித்திருக்கிறார்கள். அன்றைய நிலையில் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பவர்களில் நான்கில் மூவர் ஆன்லைன் மூலம் எடுப்பவர்களாக இருப்பார்களாம்!