Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன் படங்கள்: கே.குணசீலன், மீ.நிவேதன்.

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன் படங்கள்: கே.குணசீலன், மீ.நிவேதன்.

Published:Updated:

ரூபாய் - 1

ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் பொருளாதாரம் தொடர்பான வினாக்களில் சில சமயங்களில் சில விரிவாக்கங்களும் கேட்கப்படுகின்றன. உதாரணமாக, 2006-ம் ஆண்டு நடந்த தேர்வில் CEMA Bloc பற்றிக் கேட்கப் பட்டது. CEMA என்பதன் விரிவு Council of Economic Mutual Assistance என்பதாகும்.

இந்த அமைப்பு 1949-ல் ரஷ்யாவால் ஏற்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், தன் கைவசமான கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக ரஷ்யா இந்த அமைப்பைத் தோற்றுவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

2008-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் முதன்மைத் தேர்வில் NAMA என்பதன் விரிவாக்கம் கேட்கப்பட்டது. NAMA என்பதன் விரிவு Non Agricultural Market Access என்பதாகும். இது, உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் ஒன்று. வேளாண்மை சாராத உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறைகளில் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டிய வர்த்தகம் தொடர்பானது. இந்த உடன்படிக்கையை வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதாக வளரும் நாடுகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றன.

VAO முதல் IAS வரை!

உலக வர்த்தக நிறுவனம் நடத்திய பல்வேறு மாநாடுகளில் இந்த NAMA தொடர்பான ஷரத்துகள் பற்றிய விவாதங்கள் மிகுந்த சர்ச்சையோடு நடைபெற்றுள்ளன. குறிப்பாக, 2001-ம் ஆண்டு தோகாவில் நடந்த மாநாட்டில் NAMA பற்றிய விவாதம் வெகு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.

ரூபாய்- 2

கடந்த வாரம் இந்தப் பகுதியில் 2013-ல் நடைபெற்ற ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றை தந்து அதுகுறித்த விடையைச் சிந்திக்குமாறு கோரியிருந்தோம். தற்போது, அந்தக் கேள்விக்கான விடையைப் பார்க்கலாம்.

‘2005-ம் ஆண்டு இந்திய காப்புரிமை சட்டம் 1970-ன் 3(d) பிரிவு திருத்தப்படு வதற்கான சூழ்நிலை உருவானதை வெளிக்கொணர்க. அந்தத் திருத்தத்தை 2013-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் எவ்வாறு சாதகமாகப் பயன்படுத்தி, நோவார்டிஸ் நிறுவனம் Glivec என்ற மருந்துக்குக் கோரிய காப்புரிமையை நிராகரித்தது. அந்த முடிவால் ஏற்படும் நன்மை, தீமைகளை விவாதி’ என்பதுதான் அந்தக் கேள்வி.

இனி, இந்தக் கேள்விக்கான விடையைப் பார்க்கலாம். இந்தியா 2005-ம் ஆண்டு தனது காப்புரிமை சட்டத்தைத் திருத்தியது. 1995-ம் ஆண்டு முதல் இந்தியா, உலக வர்த்தக நிறுவனத்தில்  உறுப்பினராகச் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து உலக வர்த்தக நிறுவனத்தின் வர்த்தகம் சார்ந்த அறிவுசார் சொத்துரிமைகள் தொடர்பான TRIPS (Trade Related Intellectual Property Rights) ஒப்பந்தத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக, மேற்படி திருத்தத்தை 2005-ம் ஆண்டு செய்தது. அவ்வாறு அந்தச் சட்டத்தின் பிரிவு 3-d-ல் செய்யப்பட்ட திருத்தம், எந்தவொரு பொருளுக்கும் ஒரு நிறுவனம் தொடர்ந்து காப்புரிமை நீட்டிப்பதை (Evergreening of Patents) தடுக்கும் விதத்தில் அமைந்தது.

இந்தத் திருத்தத்துக்கு முன்புவரை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தாங்கள் காப்புரிமை பெற்றிருந்த மருந்துகளில் மிகச் சிறிய மாற்றங்களை அவ்வப்போது செய்து, அந்த மருந்து பொருள் மீதான தங்கள் காப்புரிமையைத் தொடர்ந்து நீட்டித்து வந்துகொண்டிருந்தன. 2013-ம் ஆண்டு நோவார்டிஸ் நிறுவனம் தனது Glivec என்ற மருந்துக்கு காப்புரிமை நீட்டிப்புக் கோரி விண்ணப்பித்தபோது, உச்ச நீதிமன்றம் இந்திய காப்புரிமைச் சட்டம் (1970) பிரிவு 3-d-ல் செய்யப்பட்ட மேற்படி திருத்தத்தைப் பயன்படுத்தி கிளைவெக் மருந்துக்கு நோவார்டிஸ் கம்பெனி கோரிய காப்புரிமையை நிராகரித்தது.

நோவார்டிஸ் நிறுவனம் காப்புரிமை கோரியதற்கு கூறிய காரணம், 3-d-ன்படி பார்க்கும்போது, சாரமற்ற வெற்றுக் காரணமாக இருந்ததே, அது நிராகரிக்கப் படுவதற்குப் போதுமாயிற்று. கிளைவெக் மருந்தில், தான் புதிதாகச் சில மாற்றங் களைச் செய்துள்ளதாகக் கூறிய அந்த நிறுவனம், தான் செய்துள்ள புதிய மாற்றங்களால், புதிய மருத்துவப் பயன்கள் எதுவும் விளையாது. ஆனால், முன்பிருந்த மருந்தைவிடச் சிறந்த முறையில் இதை ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ள முடியும் என்று கூறியது. எனவே, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், மருத்துவ ரீதியாக நேரடியாகக் கூடுதல் பலன் ஏதும் இல்லாதபோது, மருந்து வாங்குபவர் வாங்கி  அதை சேமிப்பதோ, அவ்வப்போது வாங்கிக் கொள்வதோ, வாங்குவோரின் விருப்பத்தைச் சார்ந்தது. அதற்காக காப்புரிமையை நீட்டிக்க இயலாது என்று கூறிவிட்டது.

VAO முதல் IAS வரை!

இந்தத் தீர்ப்பு மருத்துவ வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாகும். இதன்காரணமாக சாதாரண அறிவியல் பொதுப் பெயரில் (Generic Name) குறைந்த விலைக்குக் கிடைக்கும் மருந்துகளைப் பெரிய நிறுவனங்கள் தங்கள் வர்த்தகப் பெயரைக் காட்டி அதிக விலைக்கு விற்பதோடு, அந்த மருந்து பொருளுக்கான முற்றுரிமையையும் (Monopoly) காப்புரிமை என்ற போர்வையில் தக்கவைத்துக் கொண்டிருந்த நிலைமைக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முடிவு கட்டியது. இதுபோல், உலக வர்த்தக நிறுவனத்தின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட ஒருசில நன்மைகளையும் நாம் நினைவுகூற வேண்டும்.

ரூபாய்-3

ஐஏஎஸ் முதற்கட்ட தேர்வில் கேட்கப்படும் பல்வேறு வகையான கேள்விகளில் முடிவெடுத்தலும், பிரச்னை தீர்த்தலும் (Decision Making & Problem Solving) என்ற பிரிவின் கீழ் கேட்கப்படும் கேள்விகள் நுட்பமானவையாகவும், உளவியல் சார்ந்தவை யாகவும் இருக்கும். இந்தவகைக் கேள்விகளில் ஒரு சூழல் விளக்கப்பட்டு, அந்தச் சூழலில் நீங்கள் ஓர் அதிகாரியாக இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்று கேட்கப்படும். நான்கு வாய்ப்பு விடைகளும் தரப்படும். அவற்றில் ஒன்றை உங்கள் எண்ணத்துக் கேற்ப நீங்கள் தெரிவு செய்யலாம்.

இந்தவகைக் கேள்விகளுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது. எனவே, எந்த விடையை வேண்டுமானாலும் நீங்கள் தெரிவு செய்யலாம். ஆனால், ஒவ்வொரு விடைக்கும் அந்த விடையின் தன்மைக்கேற்ப முழு மதிப்பெண்ணோ, பாதி மதிப்பெண்ணோ, பூஜ்ஜியம் மதிப்பெண்ணோ வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, 2011 ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பார்க்கலாம்.

1. You are the officer in-charge of a village, administering distribution of vaccine in an isolated epidemic hit village, and you are left with only one vaccine. There is a requirement of that vaccine from the Gram Pradhan and also a poor villager. You are being pressured by the Gram Pradhan to issue the vaccine to him. You would
(a) initiate the procedure to expedite the next supply without issuing the vaccine to either.
(b) arrange vaccine for the poor villager from the distributor of another area.
(c) ask both to approach a doctor and get an input about the urgency.
(d) arrange vaccine for the Gram Pradhan from the distributor of another area

திடீர் நோய் தாக்குதலுக்கு உள்ளான ஒரு கிராமத்தில் தடுப்பு மருந்து விநியோகத்துக்கு உரிய அலுவலராக நீங்கள் இருக்கிறீர்கள். உங்களிடம் ஒரே ஒரு குப்பி தடுப்பு மருந்துதான் உள்ளது. அந்தக் கிராமத்தின் முக்கிய பிரமுகருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த ஏழை ஒருவருக்கும் தடுப்பு மருந்து தேவைப்படுகிறது. கிராமத்தின் முக்கிய பிரமுகர், இருக்கிற ஒரே தடுப்பு மருந்தை தனக்கே தர

VAO முதல் IAS வரை!

வேண்டும் என்கிறார். இந்தச் சூழலில் நீங்கள் என்ன செய்வீர்கள்?

(a) இருக்கிற ஒரு குப்பியை இருவருக்கும் கொடுக்காமல் அடுத்து வரவேண்டிய குப்பிகளை விரைவாக வரவழைப்பீர்கள்.

(b) ஏழை கிராமவாசிக்கு மற்றொரு பகுதியிலிருக்கும் விநியோகஸ்தரிட மிருந்து தடுப்பு மருந்து கிடைக்கச் செய்வீர்கள்.

(c) இருவரையும் மருத்துவரிடம் சென்று யாருக்கு அவசியமாக தடுப்பு மருந்து தேவை என்று சான்று பெற்று வரச் சொல்வீர்கள்.

(d) கிராமத்தின் முக்கிய பிரமுகருக்கு வேறு பகுதியிலிருக்கும் விநியோகஸ்தரிடமிருந்து  தடுப்பு மருந்து வருவித்து கொடுப்பீர்கள்.

இந்தக் கேள்விக்கான விடையை ஒரு நல்ல குடிமைப் பணியாளருக்கு இருக்க வேண்டிய குணநலன்கள் என்ற அடிப்படையில் அணுக வேண்டும். ஒரு குடிமைப் பணியாளர் பாரபட்சம் இல்லாதவராக (Impartial) இருக்க வேண்டும். அதேசமயத்தில், பொறுப்பை தட்டிக்கழிப்பவராக இருக்கக் கூடாது. மேலும், அவர் சமூகத்தின் நலிந்த பிரிவினர் மீது அக்கறைகாட்டுபவராக இருக்க வேண்டும். இந்தப் பண்புகளை யெல்லாம் இங்கே கொடுக்கப்பட்ட விடைகளோடு பொருத்திப் பார்க்கும்போது, முதல் விடை குடிமைப் பணியாளர் முடிவெடுப்பதில் தைரியமில்லாதவராக இருப்பதை எடுத்துக் காட்டுகிறது.

மூன்றாவது விடை, அவர் பொறுப்பை தட்டிக்கழித்து மற்றொருவர் மீது சுமத்துவதைக் காட்டுகிறது. தடுப்பு மருந்து என்பது எல்லோருக்குமே அவசியமானதுதான். இதில் ஏழை, கிராம முக்கிய பிரமுகர் என்ற வித்தியாசம் கிடையாது.

VAO முதல் IAS வரை!

 எனவே, இதற்காக டாக்டர் சான்றிதழ் பெறச் சொல்வது பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும். கிராமத்தில் இந்த தடுப்பு மருந்து முகாமை சிறப்பாக நடத்த கிராம முக்கிய பிரமுகரின் ஒத்துழைப்பு அவசியமானதுதான். எனவே, அவருக்கு வேறு ஒரு பகுதியில் இருந்து தடுப்பு மருந்து வருவித்து கொடுத்தால், அது நல்லதுதான். எனவே, இருக்கிற ஒரு குப்பி தடுப்பு மருந்தை ஏழைக்கு கொடுத்துவிட்டு, கிராம முக்கிய பிரமுகருக்கு வேறொரு பகுதியில் இருந்து தடுப்பு மருந்து வருவித்து கொடுப்பது சிறந்த விடையாக இருக்கும்.

மாறாக, வாய்ப்பு விடை (b)-ல் குறிப்பிட்டதுபோல, கையிருப்பில் உள்ள ஒரு தடுப்பு மருந்தை கிராம முக்கிய பிரமுகருக்கு கொடுத்துவிட்டு, ஏழைக்கு மற்றொரு கிராமத்திலிருந்து தடுப்பு மருந்து வரும்வரை காத்திருக்கச் செய்தால், குடிமைப் பணியாளருக்கு இருக்க வேண்டிய நலிந்த சமூகத்தினர் மீது இரக்கம் (Compassion towards weaker sections of society) என்ற பண்புக்கு பங்கம் வருகிறது. எனவே, வாய்ப்பு விடை (d)தான் மிகச் சிறந்த விடையாகக் கொள்ளப்படுகிறது.

(அடுத்த இதழில் நிறைவு பெறும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism