மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 7ஞா.சக்திவேல் முருகன்

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

‘‘இந்தியாவில் ஹெல்த்கேர் துறை முக்கியத்துவம் பெற்றுவரும் துறைகளில் ஒன்றாக மாறி வருகிறது. உலக அளவில் மருத்துவர்கள் என்பதைத் தாண்டி, பல்வேறு துறை சார்ந்தவர்களும் தேவை என்ற நிலை உருவாகி இருக்கிறது. கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையும் அதிகமாக இருக்கிறது. பயோமெடிக்கல், மருத்துவத் துணைப் படிப்புகள், சமூகவியல், உளவியல் போன்ற மருத்துவத்துடன் தொடர்புடைய துறையில் படித்தவர்கள் என பல்வேறு பிரிவுகளில் இருந்தும் ஆட்கள் தேவைப்படுகிறார்கள்” என்கிறார் ஆந்ரோலேப்ஸ் என்ற பிசினஸ் ஆந்ரோபயாலஜி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் ஜி.வி.சுரேஷ்.

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!


ஹெல்த்கேர் துறையில் என்ன மாதிரியான வாய்ப்புகள் உருவாகி வருகின்றன என்பது குறித்து அவரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

‘‘மருத்துவத் துறையில் உயிரியியல் சார்ந்த நோய் பிரிவு, மன நோய்க்கான பிரிவு என இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. அதாவது, உடல்நலம் சார்ந்தது, மனநலம் சார்ந்தது என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். தற்போது உயிரியியல் சார்ந்த நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்கள் இருக்கிறார்கள். மனநலம் சார்ந்த நோய்களுக்கு நிபுணத்துவம் பெற்றவர்கள் அதிக அளவில் இல்லாமல் இருக்கிறார்கள்.

தற்போது வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். இதனால் பலவிதமான உடல் மற்றும் மனநலம் தொடர்பான பாதிப்புகளையும் பிரச்னைகளையும் சந்தித்து வருகிறோம். அல்சைமர், கேன்சர் போன்றவை வாழ்க்கை முறை மாற்றத்தினால் வருவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கூட்டுக் குடும்பம் இல்லாமல் போனது, இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் ஒற்றுமை இல்லாமல் இருப்பது போன்ற குடும்பப் பிரச்னைகளால் மனநலம் பாதிக்கப்படுகிறது. இவற்றை எல்லாம் சரியான முறையில் கையாள சமூகவியல், உளவியல் போன்ற படிப்பைப் படித்தவர்கள் நிறையத் தேவைப்படுகிறார்கள்.

தற்போது மருத்துவத் துறையில் மருத்துவரைத் தவிர, பயோ மெடிக்கல், பாராமெடிக்கல், மருத்துவத் துறை சார்ந்த பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையும் அதிகரித்து வருகிறது.  மேற்சொன்ன மூன்று துறை சார்ந்தவர்களின் சேவையை சேர்ந்துக் கொடுத்தால்தான் மருத்துவச் சேவை முழுமை பெறும் வகையில் இருக்கிறது. இத்தகைய சேவை அடங்கிய வகையில் மருத்துவமனைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் மருத்துவம் சார்ந்த படிப்பு படித்தவர்களுடன், ஹெல்த் சார்ந்த துணைப் படிப்பு படித்தவர்களுக்கும், சமூகவியல், உளவியல் போன்ற படிப்பைப் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்போது பிசியோதெரபியுடன் கவுன்சலிங்கும் சேர்த்துத் தர வேண்டியிருக்கிறது. அதனால் சைக்காலஜி படித்தவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது. ஆனால், சரியான முறையில் தொழில்முறை பயிற்சி பெறாததால், மருத்துவ மனைகளும், மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும் சரியான ஆட்களைத் தேடி வருகின்றன. 

தற்போது வணிகவியல், பொருளாதாரம் போன்ற படிப்பை முடித்ததும், முதுநிலை பட்டப் படிப்பாக மேலாண்மையியல் படித்தவர்களுக்கும் மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவர்கள் ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் படிப்பைப் படிக்கும்போது இந்தத் துறையில் உயர் பதவியையும், நல்ல சம்பளத்தையும் பெறுவதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. 

பொதுவாக, எம்.பி.ஏ படிக்கச் செல்பவர்கள் எல்லோரும் மனித வளப் பிரிவைத் தேர்வு செய்வார்கள். இப்படித் தேர்வு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, இப்போது 5 சதவிகிதப் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கிறது. மீதமுள்ளவர்கள் தகுந்த வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் ஹெல்த்கேர் துறைக்கு வந்தால், மிகப் பெரிய பதவியும், நல்ல சம்பளமும் கிடைக்கும்.

இப்போது டாக்டர்களுக்கு உதவுவதற்கு என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள்.  ஹெல்த்கேர் சார்ந்த மொபைல் ஆப்ஸ்களை உருவாக்குவதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள்  தேவைப்படுகிறார்கள். இதுதவிர, தனிப்பட்டவர்களுக்குத் தேவையான மருத்துவச் சேவையை செயல்படுத்துவதற்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான ஆட்கள் நிறைய இல்லை என்பதே உண்மை. நமது இதயத்தின் செயல்பாட்டைத் தெரிந்துக்கொள்ளும் வகையில் ‘ஹார்டியோலேப்’ என்ற தொழில்நுட்பத்தை இரண்டு இளைஞர்கள் உருவாக்கினார்கள். இவர்கள் கண்டுபிடித்ததை வாங்குவதற்கு மருத்துவ நிறுவனங்கள் போட்டி போடுகின்றன. இவர்களது நிறுவனத்தில் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்யத் தயாராக இருந்தார்கள் என்பதில் இருந்து, இந்தத் துறையில் எவ்வளவு வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவத் துறையிலும் அனலிஸ்ட்களின் தேவை அதிகமாக இருக்கிறது. இதற்கான ஆட்களும் தற்போதைய நிலையில் குறைவுதான். 1,000 பேருக்கு மருந்து கொடுத்ததில் 990 பேர் குணமானார்கள்... மீதமுள்ள பத்து பேர் குணமாகவில்லை எனில், அதற்கான காரணங்கள் என்ன, அவர்கள் பிறரிடம் இருந்து எந்த வகையில் வேறுபடுகிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அனலிஸ்ட்கள் தேவைப்படுகிறார்கள்.

தற்போது ஆயுர்வேதமும், சித்தா மருத்துவ முறைகளும் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. அமெரிக்காவில் ஆயுர்வேதத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறார்கள். அமெரிக்காவில் உள்ள எல்லா மருத்துவமனையிலும் ஆயுர்வேதத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி நடந்து வருகிறது. 

இந்த வகையில் மருத்துவத் துறையில் இன்றைக்கு இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகமான அளவில் தேவை இருக்கிறது. நமது நாட்டில் சிகிச்சைக்கான கட்டணங்களும் குறைவு. திறமையான நபர்களும் அதிக அளவில் இருப்பதால், வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. சிகிச்சை பெறுவதற்கு வெளிநாட்டில் இருந்து நிறைய பேர் இங்கு வருகிறார்கள். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது. இதனால் நீங்கள் எந்தத் துறை சார்ந்து படித்தாலும், மருத்துவத் துறை சார்ந்து ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால் நல்ல வேலைவாய்ப்பைப் பெறலாம் என்பதில் சந்தேகமே இல்லை” என்கிறார் சுரேஷ்.

வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்புகளைப் பரிசீலிக்கலாமே!

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

மத்திய அரசு நிறுவனங்களில் 8,300 பேருக்கு வேலைவாய்ப்பு

பணியின் பெயர் :
அலுவலகப் பணி

கல்வித் தகுதி :
பன்னிரண்டாம் வகுப்பு / ஐடிஐ

வயது வரம்பு :
25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-01-2017.

விண்ணப்பக் கட்டணம் :
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும், பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் கட்டணம் இல்லை; மற்றவர்கள் 100 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு : www.ssc.nic.in

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

வேளாண் ஆராய்ச்சி பணி... 53 பேருக்கு வேலைவாய்ப்பு!

பணியின் பெயர் : முதுநிலை ஆராய்ச்சியாளர் முதல் இயக்குநர் பதவி வரை பல்வேறு பணிநிலையில் வாய்ப்பு

கல்வித் தகுதி : முதுநிலை வேளாண் பட்டதாரியாக இருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் சிறப்பு. எட்டு ஆண்டுகளுக்குக் குறைவில்லாத அனுபவம் வேண்டும். 

வயது வரம்பு : முதுநிலை ஆராய்ச்சிப் பணிக்கு 47 வயது வரையும், அதற்கு மேற்பட்ட பணிகளுக்கு 60 வயது வரையிலும் இருக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் : தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு கட்டணமில்லை; மற்றவர்கள் 500 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 31-01-2017. 

மேலும் விவரங்களுக்கு :http://www.asrb.org.in/

மருத்துவத் துறையில் மகத்தான வேலைவாய்ப்புகள்!

உள்துறை அமைச்சகத்தில் கம்யூனிகேஷன் பிரிவில் உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பணி

பணியின் பெயர் :
உதவி ஆய்வாளர், தலைமைக் காவலர் பணி

கல்வி தகுதி :
+2

வயது வரம்பு : 25

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30-01-2017.

மேலும் விவரங்களுக்கு : http://www.ssb.nic.in/