
நாணயம் எம்ப்ளாய்மென்ட்! - 13ஞா.சக்திவேல் முருகன்

வேலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதன் மூலமும், பணம் கொடுத்தும்தான் மகிழ்ச்சிப்படுத்தவேண்டும் என்றில்லை. வேலையை விரும்பிச் செய்கிற மாதிரி, வேலைச் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலே போதும், அனைத்துப் பணியாளர்களும் மகிழ்ச்சியாகப் பணியாற்றுவார்கள். பணியாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உற்பத்தி வெகுவாக அதிகரிக்கும் என்கிறார் நியூராடெக் லேப்ஸ் (Nuratech Labs) நிறுவனத்தின் தலைமை மகிழ்ச்சி அதிகாரி (Chief Happiness Officer) சுரேகா சுந்தர். ஒரு நிறுவனத்தில் மகிழ்ச்சிகரமான பணிச் சூழலை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார்.

குறையினைக் கண்டறிந்து பயிற்சி பெறு
‘‘வேலை பார்ப்பதற்குப் பணித் தகுதி (Employability) என்று ஒன்று இருக்கிறது. நிறையபேர் இன்ஜினீயரிங் படித்தால் மட்டும் போதும், வேலை கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். வேலையில் சேர்ந்து சிறப்பாகச் செயல்பட, கவனிக்கும் திறன், வெளிப்படுத்தும் திறன், எழுத்துத் திறன், பேச்சுத் திறன் என்பவை உள்ளிட்ட 25 திறன்கள் தேவைப்படுகின்றன. இதில் எந்தத் திறன் குறைவாக இருக்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை.
இன்றைய உலகில் யாருமே தங்களுடைய குறைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. வேலையில் இருப்பவர்களும், வேலை தேடுபவர்களும் தங்களுடைய குறைகளைக் கண்டறிந்து, அவற்றிலிருந்து வெளியே வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நிறுவனமும் இதற்கு உதவி செய்ய வேண்டும்.
முதலில், ஒரு பணியாளரிடம் என்னென்ன திறமைகள் அதிகமாக இருக்கின்றன என்றும், என்னென்ன திறமைகள் குறைவாக இருக்கின்றன என்றும் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். குறைவாக இருக்கும் திறமைகளை வளர்த்துக் கொண்டாலே பாதிக்கும் மேற்பட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடும்.
சூழலுக்குத் தகுந்தாற்போல் பயிற்சி
இன்றையத் தேதியில் பணித் தகுதி என்பதுதான் நிறுவனங்களில் அதிகம் அலசப்படும் வார்த்தையாக இருக்கிறது. இது ஒவ்வொரு பணி யாளருக்கும் மிக மிக அவசியம். ஒரு பணியாளரிடம் திறமை இல்லை என்று ஒப்புக்கொள்ளும்போது, அதற்கான பயிற்சியை எளிதில் வழங்கலாம். இதனை மேலைநாடுகளில் எல்லாம் கடைப்பிடிக் கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் கடைப்பிடிக்கிறார்கள். அதனை நாம் அப்படியே கடைப்பிடிக்க முடியாது. அதை நமது சூழலுக்குத் தகுந்தாற்போல் மாற்றிச் செயல் படுத்தலாம். குறை இருப்பதை நம்ப வைத்து, அதன்பின் அந்தக் குறையினை நிவர்த்தி செய்வதற் கானப் பயிற்சியை வழங்கும்போது மட்டுமே வேலைக்கானத் தகுதியை, பணியாளர்கள் பெறுவார்கள்.
நிறுவனத்தை நேசி; நிறுவனம் உன்னை நேசிக்கும்
ஒரு வேலைவாய்ப்பில் நான்கு நிலைகள் இருக்கின்றன. முதல் நிலையில், வேலை தேடல். இரண்டாவது நிலையில், நிறுவனத்தில் நுழைவது. இந்தக் காலகட்டத்தில் ஒரு பணியாளர் முழு வேகத்துடன் செயல்படுவார். மூன்றாவது நிலையில், வேலையில் சேர்ந்து அங்கு உள்ளவர் களுடன் பழகுவது. நான்காவது, வேலையை முழுமையாகப் பழகிய காலகட்டம். இந்தக் கால கட்டத்தில் ஒரு பணியாளர் தன் நிறுவனத்தை மிகவும் நேசிக்கவேண்டும். ஒரு பணியாளர் தன் நிறுவனத்தைத் தாங்கிப் பிடித்தால், நிறுவனம் அந்தப் பணியாளரைத் தாங்கிப் பிடிக்கும்.
கற்றலும் மகிழ்ச்சியே
ஒரு விளையாட்டை எப்படி விளையாட வேண்டும் என்று தெரிந்துகொண்டவுடன் மகிழ்ச்சி அடைகிறோம். ஆக, கற்றுக்கொள்ளுதல் என்பதை மகிழ்ச்சியுடன் செய்யவேண்டும். எதையும் வேலைக்காகக் கற்றுக்கொள்ளாமல், அதையும் தாண்டி பல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்கிறோம். அதற்கான வாய்ப்புக் கிடைக்கும்போது மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒரு நிறுவனம், பணியாளர்களுக்குப் பல விஷயங்களில் வாய்ப்புக் கொடுக்கிறது. அந்த நிறுவனத்தில் என்னென்ன பணிகள் நடக்கின்றன என்பதைத் தெரிந்துகொண்டு அந்த வேலைகளையும் தெரிந்துகொண்டால், நிறுவனமும் மகிழ்ச்சி அடையும்; பணியைச் செய்பவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.
பங்களிப்புக்கு மதிப்பளிப்பது பெருமகிழ்ச்சி
நிறுவனங்கள், தாங்கள் வளர்வதற்குத் தேவையான யோசனைகளை பணியாளர்களிடமிருந்து பெறுவதற்கு ஒரு ‘ஐடியா பாக்ஸை’ அலுவலகத்தில் வைக்கலாம். நிறுவனத்தில் என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் எனப் பணியாளர்களிடம் எழுதிப் போடச் சொல்லலாம். இதனை மதிப்பீடு செய்து, என்னென்ன விஷயங்களைச் செய்ய முடியுமோ, அதனை நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.
பிரச்னையை ஆற்றுப்படுத்த வேண்டும்
நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் பல பிரச்னைகள் இருக்கும். அந்தப் பிரச்னைகள் அவர்களின் மனதை அழுத்திக்கொண்டிருக்கும். அந்த அழுத்தம் பணிச் சூழலில் மகிழ்ச்சி இல்லாமல் செய்யும். இதுபோன்ற சமயத்தில் பணியில் இருப்பவரை ஆற்றுப்படுத்து, அவசியம். அதாவது, அவருடைய பிரச்னைகளைக் கேட்டறிந்து, அதனைத் தீர்ப்பதற்கு ஆலோசனை வழங்கலாம். இதை ரகசியமாக வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் பிரச்னைக்குள்ளானவரின் மனதில் அமைதி உருவாகும். வேலையினை மகிழ்ச்சியாகச் செய்வார்கள்.
முழு மனதுடன் கூடிய உழைப்பு
பணி நேரமாக எட்டு மணி நேரத்தை நிர்ணயித்து இருப்பது ஒரு வசதிக்காக மட்டுமே. ஒரு நல்ல திறனுள்ள பணியாளராக இருந்தால், ஒரு நாளைக்கு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே அவர் செய்கிற வேலையின் மீது முழுமையான உழைப்பைச் செலுத்த முடியும். சராசரி பணியாளராக இருப்பவர் இரண்டு மணி நேரம் மட்டுமே சொந்த உழைப்பை முழுமையாகச் செலுத்த முடியும். இந்த உழைப்பை இரண்டு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக உயர்த்துவது நிறுவனத்துக்கு நிறையப் பயன்களைத் தரும்.
தனிப்பட்ட குறைகளை வெளியே சொல்லக்கூடாது
சண்டை என்று வந்துவிட்டாலே தனிப்பட்ட குறைகளைச் சொல்லி சண்டை போடுவதுதான் எல்லோரது வழக்கம். இது, நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களிடமும் இருக்கிறது. வேலையில் போட்டி போட முடியாமல் குணாதிசயங்களையோ, தனிப்பட்ட பண்புகளையோ விமர்சித்து சண்டை போடுவார்கள். இது சக பணியாளரின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தும். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் குணாதிசயங்களையோ, தனிப்பட்ட பண்புகளையோ விமர்சிக்காமல், ரகசியம் காப்பது அவசியம். ஒருவரது தனிப்பட்ட குறைகளை அம்பலப்படுத்தி விமர்சிப்பதை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
நிறுவனமும் காதலிதான்
‘ஏன் அவரைக் காதலித்தீர்கள்?’ என்று காதலிகளிடம் கேட்டால், ‘அவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்று காதலித்தேன்’ என்பார்கள். இதைப்போலவே, பணியாளர்களும் தங்கள் நிறுவனம் தங்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று நினைத்தால், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தையும், தன் பணியையும் காதலிக்க ஆரம்பித்துவிடுவார்கள். உங்களைச் சுற்றி இருக்கும் எல்லோரையும் காதலியுங்கள். அருகில் உள்ள பணியாளர், ஏதாவது சொல்ல வந்தால் அதனைக் காது கொடுத்துக் கேளுங்கள். இவ்வாறு கேட்கும்போது அவருக்கு மதிப்புக் கொடுக்கிறீர்கள் என்று நினைப்பார். இது பணிச் சூழலை சாதகமாக வைத்திருக்கும். காது கொடுத்து கேட்காத போது அவர் உங்கள் மீது வெறுப்பைக் கொட்டுவார். அப்போது உங்களுக்கும் அவருக்குமான உறவில் விரிசல் ஏற்பட்டு, பணியிடத்தில் சலிப்பு உருவாகும்.
வீட்டிலும் மகிழ்ச்சி நிலவவேண்டும்
வெற்றிகரமாக வாழ்வது மகிழ்ச்சிதான்; ஆனால், மகிழ்ச்சிகரமாக வாழ்வதே வெற்றிகரமான வாழ்க்கை என்பதை மனதில் கொள்ளுங்கள். அலுவலகத்தில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு வேலை பார்க்காதீர்கள். அதே சமயம், எதையும் பெரிதாக எதிர்பார்த்து வேலைச் செய்யாதீர்கள்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமல்ல, வீட்டிலும் மகிழ்ச்சி நிலவவேண்டும். பலரும் வேலை முடித்து வீடு திரும்பியதும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், டிவி என்று நுழைந்துவிடுகிறார்கள். வீட்டில் மனைவி டிவியிலும், கணவர் செல் போனுடனும் இருக்கும்போது வீட்டில் இருவரும் பேச நேரமில்லாமல் இருக்கிறார்கள். இதனைத் தவிர்த்து, அவர்களுடைய பணியில் நடந்த விஷயங்கள் குறித்துப் பேசிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரின் பேச்சை ஒருவர் காது கொடுத்துக்கேளுங்கள். அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்காதபோது கோபம் வரும். அதைப்போலவே, குடும்பத்தில் தங்களுடைய பேச்சுக்கு அங்கீகாரம் கிடைக்காத போதும் கோபம் வரும். ஒருவருக்கொருவர் ஆறுதல் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்ளும் போதுதான் குடும்பத்திலும் மகிழ்ச்சி இருக்கும். பணிச்சூழலிலும் மகிழ்ச்சி இருக்கும்’’ என்றார் சுரேகா சுந்தர்.
இவர் சொல்வதை நிறுவனங்களும் பணியாளர் களும் பின்பற்ற முயற்சிக்கலாமே!
படம்: பா.காளிமுத்து
ஜாப் கார்னர்

பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
பணியின் பெயர்: பொறியாளர், உதவிப் பொறியாளர் பணி
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலெக்ட்ரிக்கல், புரொடக்ஷன் பிரிவுகளில் பட்டப் படிப்பு
வயது வரம்பு: 27 வயது
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதரப் பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21-2-2017.
மேலும் விவரங்களுக்கு: www.bemlindia.com

மத்திய அரசின் தகவல் ஒளிப்பரப்புத் துறையின் கீழ் உள்ள பிராட்காஸ்டிங் இன்ஜினீயரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணி வாய்ப்பு
பணியின் பெயர் : மூத்த கண்காணிப்பாளர் (சீனியர் மானிட்டர்ஸ்) மற்றும் கண்காணிப்பாளர் (மானிட்டர்ஸ்) பணி
மாதச் சம்பளம் : ரூ.30,000 (சீனியர் மானிட்டர்ஸ்) & ரூ.23,000 (மானீட்டர்ஸ்) (ஒப்பந்த அடிப்படையில்)
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன் ஓராண்டு பத்திரிகை துறையில் பணியாற்றி இருக்கவேண்டும். பத்திரிகை துறைச் சார்ந்த படிப்பாக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும். தமிழில் மொழித்திறனும் கணினிப் பயன்படுத்தும் திறனும் வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.300 (பொதுப் பிரிவு மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு). இதரப் பிரிவினருக்குக் கட்டணம் விலக்களிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 03-03-2017.
மேலும் விவரங்களுக்கு: www.becil.com

மத்திய ரிசர்வ் காவல் படையில் (CRPF) தமிழ்நாடு பிரிவில் 200 பணிகள்
பணியின் பெயர்: காவலர் (தொழில் நுட்பம் மற்றும் டிரேடுமேன் - ஆண் மற்றும் பெண்)
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு
வயது வரம்பு: 27
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 01-03-2017.
மேலும் விவரங்களுக்கு: crpfindia.com