Published:Updated:

ஸ்டார்ட் அப் பிராண்ட் பெயரைத் தேர்வுசெய்வது எப்படி?! 

ஸ்டார்ட் அப் பிராண்ட் பெயரைத் தேர்வுசெய்வது எப்படி?! 
ஸ்டார்ட் அப் பிராண்ட் பெயரைத் தேர்வுசெய்வது எப்படி?! 

தொழில்முனைவோர் ஆக விரும்பும் இன்றைய இளைஞர்களின் கனவை எளிதில் சாத்தியமாக்குவது ஸ்டார்ட் அப். மிகக் குறைந்த முதலீட்டில், சாமர்த்தியத்தைப் பிரதானமாகக்கொண்டு தொடங்கப்படும் இந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்காலத்தை மறைமுகமாகத் தீர்மானிப்பது, பிராண்டுதான். 

நண்பர் உங்களிடம் சில ஃபைல்களை அனுப்பச் சொல்கிறார். அவரிடம் நீங்கள் பிறகு வாட்ஸ்அப் செய்வதாகக் கூறுகிறீர்கள். ஓர் ஆவணத்தை நகல் எடுத்தாக வேண்டும்.  ஜெராக்ஸ் எடுக்க செல்கிறீர்கள். இப்படி, நாம் அன்றாடம்   உபயோகிக்கும் பிராண்டுகள் நம்மை அறியாமலேயே நாம் வாழ்வின் பல மூளை முடுக்குகளில் வசித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு அடித்தளமாய் அமைகின்றன பிராண்ட் பெயர்கள். ஜெராக்ஸ் என்பது, ஒரு பிராண்டு. போட்டோகாப்பி என்பதே நகல் எடுத்தலின் சரியான ஆங்கில இணைச்சொல்.

அமெரிக்காவில் கிட்டத்தட்ட 112 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட ஒரு பிராண்டின் பெயர், இன்றும் நம் அன்றாட வாழ்வியலின் முக்கியப் பங்காகத் திகழ்கிறது. ஒரு பிராண்டின் பெயருக்குப் பின்னால் இவ்வளவு அறிவியல் இருக்கும் நிலையில், தொழில்முனைவோர் ஆக விரும்பும் இன்றைய இளைஞர்களின் கனவை எளிதில் சாத்தியமாக்கும்   ஸ்டார்ட் - அப்பின் எதிர்காலத்தை மறைமுகமாகத் தீர்மானிக்கப்போகும் பிராண்ட் பெயர்களை எப்படித் தேர்ந்தெடுப்பது?  

உங்கள் பிராண்ட், நீங்கள் தயாரிக்க/விற்கப்போகும் அந்தப் பொருள், அது எதை வலியுறுத்துகிறது என்பதில் தெளிவு அவசியம். அது எதைக் குறிக்கிறது என்பதை ஒரு பிராண்டின் பெயரே உணர்த்தவல்லதாய் அமைய வேண்டும். உதாரணமாக, உங்கள் ஸ்டார்ட் அப்பின் டார்கெட் இளைஞர்களும் குழந்தைகளும் என்றால், க்ரியேட்டிவ்வான, ஜாலியான பெயர்களாக இருத்தல் அவசியம். கூடவே நம் பிராண்டின் ஆடியன்ஸ் யார் என்பதை மதிப்பிடுதலும் அவசியம். உங்கள் பிராண்டுக்கு நீங்கள் பெயர் சூட்டும் முன், உங்கள் பிராண்டுக்கு இருக்கும் USP எனப்படும் Unique Selling Proportion-களை பட்டியலிடுங்கள். பல நிறுவனங்கள் தங்களின் பெயரை, தங்கள் பொருளின் பண்புகளை விவரிக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கும் தவற்றைச் செய்கின்றன. ஃபேஸ்புக் எனும் பிராண்ட், அந்த வலைதளத்தின் சிறப்புகளைக் கூறாது அதன் USP- யை மட்டும் குறிப்பதைக் காணலாம்.

உங்கள் பிராண்டின் பெயர் எளிமையாய் இருத்தல் மிக அவசியம். கேட்கவும், உச்சரிக்கவும், எழுதவும், சுருக்கமாகவும், சுலபமாகவும் இருக்க வேண்டும். என்ன பிராண்ட் எனத் தெரியாமல் இருக்கும்போதும்கூட கூகுள் செய்ய உதவியாய் இருக்கும் அல்லவா! அப்படியே உங்கள் பிராண்டின் பெயர் வினைச்சொல்லாய்ப் பயன்படுத்த ஏதுவாய் இருப்பது இன்னும் ப்ளஸ்! இவற்றையெல்லாம் தாண்டி, அந்த பிராண்ட் புதியதாகவும் இருக்க வேண்டும். ஏற்கெனவே மார்க்கெட்டில் இருக்கும் பிராண்ட்களின் சாயல்கள் இருக்கக் கூடாது. வலைதளம் தொடங்கவும், நீங்கள் தொடங்கப்போகும் பிராண்டின் பெயர் டொமைனில் ஏற்கெனவே பதிவுசெய்யப்படாமல் இருத்தல் அவசியம்.

சில ஸ்டார்ட் அப்-கள், உரிமையாளர்களின் பெயரிலேயே அமைந்திருக்கும். அந்த பிராண்ட்களுடன் நம்மால் தொடர்புபடுத்திக்கொள்ளவே முடியாது. இத்தகைய பிராண்ட்களுக்கு, டல்லான ஒரு இமேஜைத் தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அதேசமயம் சர்ச்சைக்குரிய, எதிர்மறையான பெயர்களைத் தவிர்க்க வேண்டும். பல தளங்கள் ஸ்டார்ட் அப் பெயர்களை வழங்கிக்கொண்டிருக்கின்றன. உங்கள் வரைக்கூறுகளைப் பதிவிட்டால் போதும். உங்கள் ஸ்டார்ட் அப்-க்கான பல சிறந்த பெயர்களை அவை வழங்கும். இதுபோக, கிரவுட் சோர்ஸிங் மூலமாகவும் பெயர்களைத் தேர்ந்தெடுக்கலாம். சில ஸ்டார்ட் அப்-கள் இன்னும் ஒரு படி மேலே போய், சிறந்த பெயர்களைத் தேர்ந்தெடுக்க போட்டிகள்கூட நடத்துகின்றன. அமேசான், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பிராண்டிங், பொசிஷனிங் உத்திகளைச் சரியாகக் கையாண்டு பட்டித்தொட்டியெங்கும் தங்களை நிலைநாட்டியுள்ளன.

ஒரு சிறந்த பிராண்ட் பெயர், வாடிக்கையாளர்களுக்குப் பேரார்வத்தைத் தூண்ட வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு யோசியுங்கள்.