Published:Updated:

உங்க அப்ரைசல் சிறப்பா இருக்கணுமா? அப்போ இந்த 5 விஷயங்களை மிஸ் பண்ணாதீங்க!

நீங்கள் செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள், புதிதான ஐடியாக்கள், புதிதான முயற்சிகளைத் தைரியமாக எடுத்து அதை வெற்றி அடையச் செய்யுங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அப்ரைசல் என்று வந்துவிட்டாலே சம்பந்தமே இல்லாமல் திடீரென எல்லோரும் ஹெச்.ஆர்.-ஐ வறுத்தெடுப்பார்கள். கூட்டம் கூட்டமாக நின்று சீரியஸாக சீக்ரெட் பேசிக்கொண்டிருப்பார்கள். சிலரின் முகம், வீட்டில் இழவு விழுந்ததுபோல இருக்கும். சிலரின் முகம் ஆயிரம் வாட்ஸ் பல்பு போலப் பிரகாசமாக இருக்கும்... இது மாதிரியான காட்சிகளை ஒவ்வோர் அலுவலகத்திலும் அப்ரைசல் மாதத்தில் மட்டுமே பார்க்க முடியும்.

இந்த கொரோனா காலத்திலும் அப்படியான பரபரப்பு அனைத்து அலுவலகங்களிலும் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. கொரோனாவால் சம்பளப் பிடித்தம், சம்பளம் குறைப்பு எனப் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பது சம்பளதாரர்கள்தாம். ``இந்த அப்ரைசலப் பாத்துட்டுதான் பேப்பர் போடுறதா (ராஜினாமா செய்வது) இல்லையான்னு முடிவு பண்ணணும்" என்று எங்கு பார்த்தாலும் இந்த வருடாந்தரச் சடங்கு பற்றித்தான் ஊழியர்கள் மத்தியில் ஒரே பேச்சாக இருகிறது.

அப்ரைசல்
அப்ரைசல்

இந்திய நிறுவனங்களில் மே மாதம்தான் அப்ரைசல் என்றாலும், அதற்கு முந்தைய மார்ச், ஏப்ரல் மாதங்களிலேயே அதற்கான பணிகளை ஆரம்பித்துவிடுவார்கள். இந்தச் சமயத்தில்தான், சம்பள உயர்வைப் பற்றி, உங்கள் நேரடி மேலதிகாரியிடம் பேச முடியும். அப்ரைசல் நேரத்தில் என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்கான கட்டுரைதான் இது.

``அப்ரைசல் திடீர் நிகழ்வல்ல. ஒவ்வொரு வருடமும், சரியாகத் திட்டமிட்டு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் விஷயம். அதைச் சரியாகச் செய்வது நிர்வாகத்தின் கடமை. தவறினால் கேட்க வேண்டியது பணியாளர்களின் கடமை.

உங்கள் கம்பெனியின் அப்ரைசல் முறையை ஆராய்ந்து அதை அறிவு சார்ந்து அலசுங்கள். ஹெச்.ஆரை நொந்து பயனில்லை. நீங்கள் பாதிக்கப்பட்டீர்கள் என்பதற்காக நிர்வாகத்தைத் தவறாகப் பேசாமல் அதன் அமைப்பைப் புரிந்துகொள்ள முயலுங்கள். ஒன்று, நீங்கள் நல்ல நிறுவனத்தில் உள்ளீர்கள் எனத் தெரிந்துகொள்வீர்கள். அல்லது நல்ல நிறுவனத்தை நோக்கி நகர்வீர்கள்.

பாலமுருகன்
பாலமுருகன்

உங்கள் நேரடி மேலதிகாரியிடம் நீங்கள் நிகழ்த்தும் உரையாடல், க்ளைமாக்ஸ் வசனத்தைவிட முக்கியமானது. `நான் என்னப்பா செய்யட்டும்? நான் எவ்வளவோ சொல்லிட்டேன். எல்லாம் அவங்க மாத்திட்டாங்க!' என்று நீலிக்கண்ணீர் வடித்தால் நம்பாதீர்கள். உங்களை மதிப்பீடு செய்வதில் அவருக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

மேலும், உணர்வுகளை அதிகம் கலக்காமல் உரையாடல் நிகழ்த்துவது உங்களுக்கு நல்லது. தகவல்களைத் தயாராக வைத்திருங்கள். இதை இன்ஸ்டன்ட் புரோட்டாவைப்போல உடனே சமைக்க முடியாது. இதை வாரந்தவறாமல் திரட்டி வைத்திருந்தால் சமயத்தில் கைகொடுக்கும். இதற்கு உங்கள் வேலை குறித்த குறிப்புகளை மறக்காமல் திரட்டி வாருங்கள்" என்றார் போலரீஸ் நிறுவனத்தின் ஹெச்.ஆர் பிரிவு மேலாளர் பாலமுருகன்.

அப்ரைசலில் சிறப்பான பாராட்டைப் பெற ஒரு பணியாளர் மேற்கொண்டொழுக வேண்டிய செயல்பாடுகளைப் பற்றி பட்டியல் இட்டார் அவர். அந்தச் செயல்பாடுகள் இனி...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!

அலுவலகத்தில் புதிதாகத் தொடங்கும் ஏதேனும் ஒரு புதிய புராஜெக்ட்டின் பொறுப்பை யாரேனும் ஏற்றுக்கொள்ளுமாறு கூறும் சமயத்தில், அதற்கான முழுத் தகுதி இருந்தும், அதைப் பற்றிய முழு அறிவு இருந்தும் பொறுப்பை ஏற்கத் தயங்கி நிற்காதீர்கள். முன்வந்து பொறுப்பை ஏற்று சிறப்பாக முடித்துக் கொடுங்கள். இது அப்ரைசல் நேரத்தில் கைகொடுக்கும்.

வேலை
வேலை

சுய மதிப்பீடு!

ஒரு வருடம் முழுவதும் நீங்கள் செய்த வேலைகள் என்ன, அலுவலகத்தில் உங்களுடைய டீமில் உங்களுக்கான பங்கை சரியாகச் செய்துள்ளீர்களா, சென்ற வருடத்தைவிட இந்த வருடம் வேலையில் ஏதேனும் நல்ல விதமான மாற்றம், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு நீங்களே பதில் அளித்து சுயமதிப்பீட்டை அளித்துக்கொள்ளுங்கள். இந்தச் சுயமதிப்பீட்டில் நேர்மையாகப் பதில் அளிப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் உங்களின் திறமை என்ன, எந்த வேலையைச் சீக்கிரத்தில், சிறப்பாக முடிக்க இயலும் என்பது போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சமமாகப் பழகுங்கள்!

அப்ரைசலில் நம்மைப் பற்றியும் நம் வேலைகளைப் பற்றியும் முயற்சிகளைப் பற்றியும் மேலிடத்தில் நம் சார்பாக எடுத்துக் கூறப்போகும் மேல் அதிகாரியோ, டீம் லீடரோ, புராஜெக்ட் மேனேஜரோ யாராக இருப்பினும் அவர்களிடம் ஓர் அழகான ஜென்டில் ரிலேஷன்ஷிப்பை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்காக அடிமை போன்றும் அப்ரன்டிஸ் போன்றும் இல்லாமல் உங்களின் வேலையைச் சரியான நேரத்தில் சிறப்பாக முடிப்பதோடு, மேல் அதிகாரிகள், சக ஊழியர்கள் என அனைவரிடமும் சமமாக அன்புடன் பழகுங்கள்.

சோசியல் மீடியாக்கள் தவிர்க்க..!

அலுவலக நேரங்களில் சோசியல் மீடியாக்களைப் பயன்படுத்து வதைத் தவிர்த்திடுகள். ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்ற சோசியல் மீடியாக்களில் நேரம் செலவிடுவதை வேலைக்கு நடுவில் ஒரு பிரேக்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால், அதுவே வேலை செய்யும் நேரங்களில் டார்கெட்டை அடைய முடிக்காமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கக் கூடாது. உங்களிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துச் சென்ற அதிகாரி திரும்பிவந்து பார்க்கும்போது ஸ்க்ரீனில் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் பக்கத்தைப் பார்க்க நேரிட்டால் அது உங்களின் அப்ரைசலை வெகுவாகப் பாதிக்கும் என்பதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்.

வேலை
வேலை
திறக்கப்படும் அலுவலகங்கள்...
நேரத்தைத் திறம்படக் கையாள்வது எப்படி? - வழிகாட்டுகிறார் ஹெச்.ஆர்

வேலையில் புதுமை!

நீங்கள் செய்யும் வேலையை ரசித்துச் செய்யுங்கள்; புதிதான ஐடியாக்கள், புதிதான முயற்சிகளைத் தைரியமாக எடுத்து அதை வெற்றி அடையச் செய்யுங்கள். இதனால் உங்களின் திறமை மீதும் தன்னம்பிக்கை ஏற்படவும் அவநம்பிக்கை மாறவும் வாய்ப்புகள் உள்ளன. மாதம் ஒரு முறை, வாரம் ஒரு முறை என உங்களுக்கு நீங்களே டார்கெட் ஃபிக்ஸ் செய்துகொண்டு அதை அடைய முழு முயற்சி செய்யுங்கள். எல்லோரிடமிருந்து தனித்துத் தெரிவதற்கு புதுமையான முயற்சிகளும் கடின உழைப்பும் அவசியம் தேவை.

உங்களை நிரூபிக்க ஒரு வாய்ப்பு!

நீங்கள் நினைத்த மதிப்பீடு, உயர்வு கிடைக்கவில்லை என்றால், மனம் உடையாமல் உண்மையை அறிய பாருங்கள். அரசியல் இல்லை, உள்நோக்கம் இல்லை என்றால், அங்கு நிறைய தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது என்பதை அறியுங்கள். நிர்வாகம் உங்கள் வேலை பற்றி வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கும் நீங்கள் உங்கள் வேலை பற்றி வைத்திருக்கும் எதிர்பார்ப்புக்கும் நிறைய இடைவெளி என்று புரிந்துகொள்ளுங்கள்.

Office (Representational Image)
Office (Representational Image)

ஒரு குறிப்பிட்ட திறன் குறைவு, ஒரு குறிப்பிட்ட ஆளுமைப் பண்பில் குறை, ஒரு குறிப்பிட்ட வேலையில் பின்னடைவு, ஒரு குறிப்பிட்ட அனுபவமின்மை என எல்லாவற்றையும் பட்டியல்போட்டு வாங்கிக்கொள்ளுங்கள். அடுத்த முறை எங்கு உங்கள் கவனத்தைக் குவிக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

தோல்வி தரும் பாடங்கள் முக்கியமானவை. அப்ரைசல் உங்களை நிரூபித்துக்கொள்ள அளிக்கப்படும் ஒரு வாய்ப்பு. நீங்கள் தவறாக மதிப்பிடப்பட்டதாகவும் உலகின் மொத்த அநீதியையும் உங்கள் மேல் கொட்டப்பட்டதாகவும் நினைக்க வேண்டாம். அடுத்த முறை அசத்திடலாம் எனத் தெம்பாய் வேலையைத் தொடங்குங்கள்" என்றார் தெளிவாக.

ஆக மொத்தத்தில், அப்ரைசலில் நமக்கு நல்ல விதமாக எதுவும் நடக்கவில்லையே என்று நினைத்து புலம்பிப் பிரயோஜனமில்லை; யார் மீதும் குறை சொல்லியும் பயனில்லை. நல்ல விதமான விளைவுகளை ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்கள், மேற்சொன்ன இந்த விஷயங்களைப் பின்பற்றி நடக்கலாமே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு