Published:Updated:

நோட்டிஸ் பீரியட்... தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்!

செ.கார்த்திகேயன்

ஒரு பணியாளர், நிறுவனத்துக்கு ராஜினாமா கடிதத்தை வழங்கியவுடன், செய்யும் முதல் காரியம், தாமதமாக அலுவலகத்துக்கு வருவது. பிறகு சீக்கிரமே வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவது.

நோட்டிஸ் பீரியட்
நோட்டிஸ் பீரியட்

வேலை செய்துகொண்டிருக்கும் நிறுவனத்திலிருந்து, பிரச்னைகள் இல்லாமல் சுமுகமாக இன்று யாருமே வெளியேறுவதில்லை. ஐந்து ஆண்டுகள் அந்நிறுவனத்தில் ஒழுங்காக வேலைபார்த்தவர்களுக்கு, நோட்டிஸ் பீரியட் நாள்களை கையாளத் தெரியாமல் போவதுதான் முக்கியமான காரணம். இன்று எல்லா நிறுவனங்களிலும், குறிப்பாக ஐ.டி நிறுவனங்களில் நோட்டிஸ் பிரீயட் கட்டாயமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தக் காலகட்டம் ஒவ்வொரு பணியாளர்களுக்கும் மிக முக்கியமான காலகட்டம் என்பதை உணர்ந்து கொண்டாலே போதும் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும். ஆனால், பணியாளர்கள் அப்படி நினைப்பதில்லை. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததும் நிறுவனத்தை விட்டுக் கிளம்பிவிட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால், அந்த நாள்களில் ஒரு சில தவறுகளைத் தவிர்ப்பது நல்லது.

நோட்டிஸ் பீரியட்
நோட்டிஸ் பீரியட்

அலுவலக ஒழுங்கை அவசியம் கடைப்பிடிக்கவும்!

ஒரு பணியாளர் ராஜினாமா செய்ததும் செய்யும் முதல் விஷயம், தாமதமாக அலுவலகத்துக்கு வருவது. பிறகு சீக்கிரமே வேலையை முடித்துவிட்டுச் சென்றுவிடுவது. உயரதிகாரி யாராவது கேட்டால், 'நான் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். இனியும் என்னை ஏன் கன்ட்ரோல் செய்கிறீர்கள்?’ என்கிற மாதிரி பேசுவது. இது மிகத் தவறான அணுகுமுறை. நாமாக வேலையைவிட்டுப் போவதாக இருந்தாலும் அல்லது நிறுவனமே நம்மை வேலையைவிட்டு அனுப்புவதாக இருந்தாலும் அலுவலக ஒழுங்கை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும்.

குறை சொல்லாதீர்கள்!

தவிர்க்கவேண்டிய முக்கிய விஷயம், இதுவரை செய்த வேலை பற்றித் தவறாகப் பேசுவது. இதெல்லாம் ஒருவேலையா, இதெல்லாம் ஒரு நிறுவனமா என்கிற ரீதியில் சிலர் பேசுவார்கள். தவிர, புது நிறுவனத்தைப் பற்றிப் பெருமை பீற்றிக்கொள்வார்கள். இங்கு ஒரு சலுகையும் இல்லை; அந்த நிறுவனத்தில் ஐபேட் தருகிறார்கள் என்பார்கள். ஏற்கெனவே வேலை பார்த்த நிறுவனம் மீது இருக்கும் வெறுப்புதான் இப்படிப் பேச வைக்கிறது.

வேலையைவிட்டு போகப் போகிறோம் என்று முடிவெடுத்த பிறகு வேலையையோ, உயரதிகாரிகளையோ அல்லது நிறுவனத்தையோ குறை சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை; அது நேர்மையாக இருக்காது.

வெட்டியாகப் பொழுதை கழிக்காதீர்கள்!

இன்னும் சிலர் ராஜினாமா கடிதம் தந்த பிறகு அலுவலகத்தில் நக்கலாகப் பேசி, வெட்டியாகப் பொழுதைப் போக்கிக்கொண்டிருப்பார்கள். இப்படிச் செய்வதால் பணியாளர் தனக்குத் தெரியாமலே தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்கிறார் என்று அர்த்தம். ஒரு பணியாளரை வேலையிலிருந்து விடுவிக்கும் போது, அந்தப் பணியாளரின் நடத்தைப் பற்றி விடுவிப்புக் கடிதத்தில் சில வார்த்தைகள் சொல்லப்படும். தவிர, பணியாளரின் வேலை செய்யும் திறன் பற்றியும் சில வார்த்தைகளைச் சொல்வார்கள். ஓ.கே., நன்று, மிக நன்று என எப்படிவேண்டுமானாலும் எழுதலாம். வேலை செய்யாமல் இருந்தாலோ அல்லது குதர்க்கமாகப் பேசி பிற பணியாளர்களின் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலோ, நம் ஒழுக்கத்தைப் பற்றி மோசமாக ஏதாவது எழுதிவிட வாய்ப்புண்டு. ஜாக்கிரதை.

பொறுப்புகளை ஒப்படைப்பதில் அலட்சியம் வேண்டாம்!

ராஜினாமா செய்தபிறகும் நீங்கள் வேலை செய்ய ஒரு மாத காலம் அனுமதிக்கப்படுவதன் நோக்கமே, உங்கள் பொறுப்புகளை மற்றவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்பதற்காகத்தான். அடுத்த ஊழியரை நீங்கள் பொறுப்போடு தயார் செய்வதை விடுத்து வேறு வேலைகளில் ஈடுபடாதீர்கள். நீங்கள் தயார்படுத்தும் நபருக்கு நீங்கள் சொல்லித் தரும் விஷயம் புரியவில்லை என்றாலோ அல்லது, அதில் காட்டும் அலட்சியம் உங்களுடைய உயர் அதிகாரியின் பார்வைக்கு போனாலோ ஆப்பு உங்களுக்குத்தான்.

நோட்டிஸ் பீரியட்
நோட்டிஸ் பீரியட்

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள்!

ராஜினாமா செய்த பிறகு, அந்தப் பணியாளரை நோட்டிஸ் பீரியட் சமயங்களில்தான் பந்தாடுவார்கள். நோகடிப்பார்கள். இந்தச் சமயங்களில் உணர்வுகளைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொள்வது நல்லது. அந்தச் சமயங்களில் மேலாளர் மீதோ அல்லது குழுத் தலைவரின் மீதோ கோபம் வரும். வாக்குவாதம் செய்யலாம் எனத் தோன்றும். ஆனால் அதைச் செய்யாதீர்கள். காரணம், அந்தச் சமயத்தில் நீங்கள் காட்டும் சின்ன ரியாக்ஷன் பெரும் விளைவுகளை ஏற்படுத்தலாம்.

நோட்டீஸ் பீரியடில் இழுத்த‌டித்து நோகடிக்கச் செய்வதற்கு ஒரே ஒரு காரணம்தான். அந்த ஊழியர்தான் பணியாற்றிய காலத்தில் திறமை மிக்கவராக இருப்பார். அவரை அந்நிறுவனம் இழக்க விரும்பாது.
Vikatan

இனிமேல் எனது நிறுவனத்துக்கு உழைக்காத நீ, வேறொரு நிறுவனத்துக்கு உழைத்துக் கொட்டுவாயா என்கிற ஏமாற்றத்தின் வெளிப்பாடாகத்தான் நோகடிப்பார்கள். இதைப் புரிந்துகொண்டுவிட்டாலே போதும், எந்தத் தவறும் செய்யமாட்டீர்கள்.

ஆக, ராஜினாமா கடிதம் தந்தபிறகும் உங்கள் வேலையைச் சரியாகச் செய்து, அலுவலக விதிகளை முறையாகப் பின்பற்றினால், புதிய அலுவலகத்தில் உங்களுக்குக் கிடைக்கும் அதே சம்பளத்தைப் பழைய நிறுவனமே தர வாய்ப்புண்டு. புதிய அலுவலகம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பழைய அலுவலகத்திலேயே மீண்டும் சேர இது நிச்சயம் உதவும்.