Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் ! டாக்டர் சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் ! டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

 ரூபாய் - 1

பணம் என்றால் என்ன? இந்தக் கேள்வியைக் கேட்பது மிகவும் எளிது. ஆனால், இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்வது கடினம்.

வாக்கர் (Walker) என்ற பொருளாதார அறிஞர், ‘பணம் எதையெல்லாம் செய்கிறதோ, அதுவே பணம்’ (Money is what money does) என்று பணத்தை வரையறுத்தார்.

உலகத்தில் பணம் புழக்கத்துக்கு வருவதற்குமுன், பண்டமாற்று முறை வழக்கத் தில் இருந்தது. ஆங்கிலத்தில் barter என்று அழைக்கப்பட்ட பண்டமாற்று முறையில் மக்கள் தங்களிடம் இருந்த பொருளைத் தந்து,  தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டனர். பணம் இல்லாமலேயே பொருட்களின் பரிவர்த்தனை நடந்தது.

இதில் இரண்டு சிக்கல்கள் எழுந்தன. ஒன்று, இரட்டைத் தேவை பொருத்தம் (Double Coincidence of wants). மற்றொன்று, இருப்பு வைப்பதில் உள்ள பிரச்னை (Problem of Storage). அதாவது, அரிசி வைத்திருப்பவர் ஒருவருக்கு பருப்பு தேவை எனில், அவர் பருப்பு வைத்திருப்பவரைத் தேடிப்பிடிக்க வேண்டும். தவிர, பருப்பு வைத்திருப்ப வருக்கு அரிசி தேவையாக இருக்க வேண்டும். இதையே இரட்டைத் தேவைப் பொருத்தம் என்கிறோம்.

VAO முதல் IAS வரை!

மற்றொன்று, இருப்பு வைத்திருப்பதில் எழுந்த சிக்கல். அரிசியைக் கெட்டுப் போகாமல் எவ்வளவு காலத்துக்குத்தான் சேமித்து வைக்க முடியும்? எனவே, பண்டமாற்று முறையில் இருந்த இந்த இரண்டு சிக்கல்களைத் தீர்ப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிதான் பணம்.

பணம் என்பது நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், காசோலைகள், உண்டியல் பில்கள் என எல்லாவற்றையும் குறிக்கும். பணத்தின் பணி எது என்ற கேள்வி எழுந்தால் அதற்கும் பொருளாதாரத்தில் பதில் இருக்கிறது.

 ரூபாய் - 2

கடந்தமுறை பணக்கொள்கை பற்றிய மூன்று கேள்விகளைக் கொடுத் திருந்தோம். அதில் ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கைப் பற்றிய கூடுதலான விளக்கங்களை இந்த இதழில் தருவ தாகவும் கூறியிருந்தோம்.

ரிசர்வ் வங்கி பணக்கொள்கையை தன் கையில் வைத்துள்ளது. நம் நாட்டு ரிசர்வ் வங்கி மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே பணக்கொள்கை என்பது அந்த நாட்டின் மத்திய வங்கியிடம்தான் இருக்கும். நாட்டில் பணப்புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை மைய வங்கி எப்படி கையாள்கிறது என்பதே பணக்கொள்கை (Monetary Policy). இன்னும் சுருக்கமாகச் சொன்னால், பணக்கொள்கை என்பது மத்திய வங்கியின் கடன் கட்டுப்பாட்டு கொள்கைதான்.

VAO முதல் IAS வரை!

இந்தியாவைப் பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி பின்பற்றும் கடன் கட்டுப்பாட்டு முறைகளை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒன்று, கடன் அளவு கட்டுப்பாடு (Quantitative Control of Credit); மற்றொன்று, கடன் தன்மைக் கட்டுப்பாடு (Qualitative Control of Credit).

வங்கி விகிதம் (Bank Rate), ரொக்க இருப்பு விகிதம் (Cash Reserve Ratio) மற்றும் வெளிச்சந்தை செயல்பாடுகள் (Open Market Operations) ஆகிய மூன்றும் கடன் கட்டுப்பாட்டு முறைகளாகும். வங்கி விகிதம் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறிக்கும். இதைக் கழிவு விகிதம் (Discount Rate) என்றும் குறிப்பிடுவார்கள்.

நாட்டில் பணவீக்கம் ஏற்படும்போது ரிசர்வ் வங்கி இந்த விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பெறும் கடன் தொகை குறைந்து, அதன் விளைவாக வணிக வங்கிகளும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக் கின்றன. இதனால் வாடிக்கை யாளர்கள் வாங்கும் கடன் தொகை குறைந்து நாட்டில் பணப்புழக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பணவாட்டத்தின்போது (Deflation) ரிசர்வ் வங்கி தனது வங்கி விகிதத்தைக் குறைக்கிறது. இதன்காரணமாக, வணிக வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து அதிக தொகையைக் கடனாகப் பெறு கின்றன. அதனால் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதத்தையும் குறைக்கின்றன. இதனால் நாட்டில் பணப்புழக்கம் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

VAO முதல் IAS வரை!

பொருளாதாரம் என்பது அறிவியல் அல்ல. அது ஒரு சமூக அறிவியல். எனவே, இந்த நடவடிக்கை எடுத்தால் பதிலுக்கு இந்த விளைவு ஏற்படும் என்று அனுபவ அனுமானங்களின் அடிப்படை யிலேயே முடிவுகளை எடுக்க வேண்டி யுள்ளது. இப்படி எடுத்தால், இப்படித் தான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்வது கடினம்.

ஒவ்வொரு வணிக வங்கியும் தன்னிடம் உள்ள மொத்த வைப்புத் தொகையில்  குறைந்தபட்ச ரொக்கத்தை ரிசர்வ் வங்கியிடம் இருப்பு வைத்திருக்க வேண்டியது அவசியம். இதைத்தான் ‘ரொக்க இருப்பு விகிதம்’  என்கிறார்கள். இந்த விகிதத்தை ரிசர்வ் வங்கி அதிகரிக்கும்போது வங்கிகளில் பண இருப்பு குறைவதால், நாட்டில் பணப் புழக்கமும் குறைகிறது. பணவீக்க காலத்தில் இந்த நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.

வெளிச்சந்தை செயல்பாடுகள் என்பவை மத்திய வங்கி நேரடியாக வெளிச்சந்தையில் அரசு பத்திரங்களை வாங்கி விற்கும் நடவடிக்கைகளைக் குறிக்கிறது. பணவீக்கத்தின்போது மைய வங்கி பத்திரங்களை விற்கிறது. அதன்மூலம் பணத்தை உள்ளே இழுக்கிறது. பணவாட்டத்தின்போது, மைய வங்கிப் பத்திரங்களை வாங்கி, வணிக வங்கிகளுக்கு ரொக்கம் அளிக்கிறது.

கடன் தன்மை கட்டுப்பாட்டு முறைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் கட்டுப்பாட்டு முறைகள் (Selective Credit Control) என்று அழைக்கிறார்கள். இதில், வரம்பு குறித்தல், நுகர்வோர் கடன் நெறிப்படுத்துதல், நேரடி நடவடிக்கை, கடன் பங்கீடு, அறிவுறுத்துதல் ஆகிய ஐந்து நடவடிக்கைகள் உண்டு. இவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.

 ரூபாய் - 3

பணக்கொள்கை பற்றி 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ் முதல்கட்ட தேர்வில் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

VAO முதல் IAS வரை!

1. Supply of money regaining the same when  there is an increase in demand for money, there will be
a) a fall in the level of prices
b) an increase in the rate of interest
c) a decrease in the rate of interest
d) an increase in the level of income and employment

பண அளிப்பு மீண்டும்  அதிகரிக்கும்போது பணத்துக்கான தேவையும் அதிகரித்தால், அப்போது

(a) பொருட்களின் விலை குறையும்
(b) வட்டி விகிதம் அதிகமாகும்
(c) வட்டி விகிதம் குறையும்
(d)  வருமானம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவைப் பெருகும்.

2. An increase in the bank rate generally indicates that the
a) market rate of interest is likely to fall
b) Central Bank is no longer making loans to commercial banks
c) Central Bank is following an easy money policy
d) Central Bank is following a tight money policy

வங்கி வட்டி விகிதம் அதிகரிப்பது பொதுவாக எதைக் காட்டுகிறது?

(a) வட்டியின் சந்தை விகிதம் குறையலாம் என்பதை
(b) மத்திய வங்கி வணிக வங்கிகளுக்கு தொடர்ந்து கடன் எதையும் கொடுக்காது என்பதை
(c) மத்திய வங்கி மலிவு பணக்கொள்கையை பின்பற்றுகிறது என்பதை
(d) மத்திய வங்கி இறுக்க பணக்கொள்கையை பின்பற்றுகிறது என்பதை

தற்போது இந்தக் கேள்விகளுக்கான விடைகளைப் பார்க்கலாம். முதலாவது கேள்விக்கான சரியான விடை (b) வட்டி விகிதம் அதிமாகும். ஏனென்றால், பண அளிப்பு அதிகரிக்கும்போது பணத் துக்கான தேவையும் அதிகரிப்பதாக கேள்வியில் தரப்பட்டுள்ளது. எனவே, பண அளிப்பு அதிகரிக்கும்போது  வட்டி விகிதம் உயரத்தான் செய்யும்.

VAO முதல் IAS வரை!

இந்தக் கேள்வியில் தரப்பட்டுள்ள மற்ற வாய்ப்பு விடைகள் பொருந்தாது. ஏனெனில், வாய்ப்பு விடை (a)-ல் விலை பற்றி தரப்பட்டிருக்கிறது. விலையைப் பற்றி இந்தக் கேள்வியில் எந்த விவரங்களும் தராததால், அதைப் பொருத்தி பார்க்க முடியாது. அதேபோல், பண அளிப்பு அதிகரித்து பணத் தேவை அதிகரித்தால், அந்தச் சமயத்தில் வருவாயும், வேலைவாய்ப்பும் பெருகும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. 

அதேசமயம்,  பண அளிப்பு அதிகரிக்கும்போது, பணத்துக்கான தேவையும் அதிகரித்தால், வட்டி விகிதம் குறையும் என்பது பொருந்தாது. தேவை குறைந்து பண அளிப்பு மட்டும் அதிகரித்துக் கொண்டே போனால்தான் வட்டி விகிதம் குறையும்.

இரண்டாவது கேள்விக்கான விடை (d) மத்திய வங்கி இறுக்க பணக்கொள்கையைப் (Tight Money Policy) பின்பற்றுகிறது என்பதே. வங்கி விகிதம் அதிகரிக்கிறது எனில், வட்டி விகிதங்களும் அதிகரிக்கிறது என்பதே பொருள். இதனால் பணப்புழக்கம் குறைந்து, கடன் வாங்குவது அதிக செலவு பிடிக்கும் காரியமாக மாறுகிறது. எனவேதான், இதை ரிசர்வ் வங்கி பின்பற்றும் இறுக்க பணக்கொள்கை என்கிறார்கள். இதற்கு மாறாக, வங்கி விகிதத்தைக் குறைத்து அதன் காரணமாக வணிக வங்கிகளில் வட்டி விகிதம் குறைந்தால் அதை சுலப பணக்கொள்கை (Easy Money Policy ) என்பார்கள்.

(தயாராவோம்)
படம்: தே.தீட்ஷித்.