Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன் படம்: டி. ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்.

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்டாக்டர் சங்கர சரவணன் படம்: டி. ஆரோன் பிரின்ஸ் காட்ஸன்.

Published:Updated:

ரூபாய் - 1

காணிக்கை, லஞ்சம் - இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி கடந்த இதழில் கேட்கப்பட்டிருந்த கேள்விக்கான விடையை அடுத்த இதழில் சொல்கிறேன். அதற்குமுன் நம்மை உயிர் வாழவைக்கும் உழவுத் தொழில் பற்றி போட்டித் தேர்வுகளில் எப்படியெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதை இந்த வாரம் சொல்கிறேன்.

‘உழுவார் உலகத்துக்கு ஆணி’, ‘சுழன்றும் ஏர் பின்னது உலகம்’, ‘உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்’ என்றெல்லாம் உழவுத் தொழிலின் சிறப்பைப் பேசும் திருவள்ளுவர் உழவுத் தொழிலில் இருந்த பிரச்னைகளையும், சிரமங்களையும் நன்றாகவே அறிந்திருக் கிறார். அதனால்தான், அவர் உழன்றும் உழவே தலை என்றும் கூறுகிறார்.

அதாவது, எவ்வளவு துன்பப்பட் டாலும் இந்த உலகத்துக்குத் தலையாயத் தொழிலாக இருப்பது உழவுத் தொழில் தான் என்பதே அதன் பொருள்.

தவத்திரு குன்றக்குடி அடிகளார் இதை ஒட்டித்தான் உழவர்களை உலகின் தலைகுடிமக்கள் (First Citizen of the World) என்று குறிப்பிட்டார். ஏனென்றால், திருவள்ளுவர் சொல்வதுபோல் இந்த உலகில் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் தங்கள் உழவுக்காக விவசாயிகளைச் சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. அதனால்தான், விவசாயிகள் எல்லாக் குடிமக்களையும் விட தலைக் குடிமக்களாக மதிக்கப்படு கின்றனர்.

VAO முதல் IAS வரை!

Agriculture என்ற ஆங்கிலக் கலைச்சொல்லுக்குப் பொருத்தமான தமிழ் கலைச்சொல் எது என்று அறிஞர்கள் ஆய்வு செய்தபோது, விவசாயம், உழவுத் தொழில், பயிர் தொழில் என்ற பல்வேறு சொற்களையும் தவிர்த்துவிட்டு, திருக்குறளில் உதவி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட வேளாண்மை என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்தனர். உலகத்திலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவக்கூடியவர் ஒருவர் உண்டு என்றால் அவர் விவசாயிதான்.

வேளாண்மை குறித்து விரிவான அறிவு என்பது தேர்வு நோக்கில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அறிவு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, தெளிவு நோக்கில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய உணர்வு சார்ந்த விஷயமும்கூட.

ரூபாய் - 2

VAO முதல் IAS வரை!

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 85 சதவிகித மக்கள் வேளாண்மையை நம்பி இருந்தனர். சுதந்திரம் அடைந்ததில் இருந்து, வேளாண்மையை முன்னேற்ற ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களிலும் மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்கிறது.

1900 முதல் 1950 வரையிலான ஐம்பது ஆண்டுகளில் வேளாண் உற்பத்தி தேக்க நிலையிலேயே இருந்தது. விடுதலைக்குப் பின் 1950 - 51 முதல் 1964 - 65 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 3.3% என்ற அளவில் அதிகரித்தது.

ஜமீன்தாரி ஒழிப்பு, குத்தகை சாகுபடி தொடர்பான சீர்திருத்தங்கள் மற்றும் பாசனம், மின்சார உற்பத்தி உள்ளிட்ட ஊரக வளர்ச்சி சார்ந்த துறைகளில் அரசு மேற்கொண்ட பொது முதலீடு களும் வளர்ச்சியை அதிகரித்தன.

1966-ல், பருவமழை பொய்த்து, பெரிய உணவு பஞ்சம் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் பசுமைப் புரட்சி அறிமுகப் படுத்தப்பட்டது.

நார்மன் போர்லாக் (Norman Borlaug) பசுமைப் புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியை நடைமுறைப்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். பசுமைப் புரட்சி நடைமுறைப்படுத்தியதில் பெரும் ஆதரவு தந்தவர் மத்திய வேளாண் துறை அமைச்சராக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சி.சுப்ரமணியம்.

பசுமைப் புரட்சி கொள்கைகள் தானிய உற்பத்தியைப் பெருக்கவும் வேளாண் வளர்ச்சியைச் சாத்தியமாக் கவும் முக்கியப் பங்களித்தன.

பசுமைப் புரட்சி என்பது தானிய உற்பத்தியைப் பெருக்குதல், உயர் மகசூல் விதைகள், ரசாயன உரங்கள் உள்ளிட்ட ஒரு புதிய தொழில்நுட்பம், விவசாயி களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தானியங்களுக்குக் குறைந்தபட்ச விலை உத்தரவாதம், அரசு கொள்முதல் ஏற்பாடு, வேளாண் ஆராய்ச்சி அமைப்பை வலுப்படுத்துதல், விரிவாக்கப் பணி அமைப்பினை வலுப் படுத்துதல், சாகுபடிச் செலவுகளுக்கும் நவீன வேளாண் உற்பத்திக் கருவிகளை வாங்கவும் வங்கி/கூட்டுறவு கடன் என்று பலவகைகளில் அரசு முன்முயற்சிகளை மேற்கொண்டதுமே ஆகும்.

பாசன வசதி பெற்ற பகுதிகளில் நெல் மற்றும் கோதுமை சாகுபடி மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக, கோதுமை சாகுபடிதான் பசுமை புரட்சியின் மையம் என்று கூறலாம்.
அமெரிக்க அறிவியல் விஞ்ஞானி நார்மன் போர்லாக் கண்டுபிடித்த குட்டை ரகக் கோதுமை (Dwarf varieties of wheat) வகைகள் பசுமை புரட்சிக்கு உயிர்மூச்சாகத் திகழ்ந்தன. இந்தக் குட்டை ரகக் கோதுமை வகைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் கரியான, சோனா என்ற இரண்டு புதிய இனங்கள் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தால் உருவாக்கப் பட்டன. இவையே இந்தியாவில் பசுமை புரட்சியை அதிகரித்ததற்கான முக்கிய வீரிய விதைகள் ஆகும்.

குட்டை ரகக் கோதுமை வகைகள் கண்டுபிடிக்கப்படாமல் போயிருந்தால் இந்தியா மட்டுமின்றி பல ஆசிய நாடுகளும், ஆப்பிரிக்க நாடுகளைப் போன்ற பஞ்சத்தை 1960-களில் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானிகள் கூறுவார்கள்.

VAO முதல் IAS வரை!

இப்படியொரு பசுமை புரட்சியை உருவாக்கி ஆசிய நாடுகளில் பஞ்சம் எதுவும் வராமல் தடுத்ததால்தான் நோபல் கமிட்டி, அமெரிக்க விஞ்ஞானி நார்மன் போர்லாக் அவர்களுக்கு உயிரியல் துறைக்கான நோபல் பரிசை வழங்காமல், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கியது என்றும் கூறப்படுகிறது.

1970-களில் வேளாண் ஆராய்ச்சி அமைப்பு, விரிவாக்க அமைப்பு மற்றும் தானியக் கொள்முதல் அமைப்பு ஆகியவை வலுப்பெற்றன.

1980 முதல் 1991 வரையிலான காலத்தில் வேளாண் உற்பத்தி ஆண்டுக்கு 4% என்ற அளவிலும் நெல் மற்றும் கோதுமை உற்பத்தி, முறையே ஆண்டு ஒன்றுக்கு 3.84 சதவிகிதம், 4.38% என்ற அளவிலும் அதிகரிக்கப் பெரிதும் உதவின.

மாநில அரசுகளும், விவசாயிகளுக்குப் பயிர் செய்யவும், உழவு கருவிகள் வாங்கவும் கடன் உதவிகளை வழங்கி வருகின்றன. உரம், பூச்சி மருந்து பொருட்கள் மானிய விலையில் கொடுக்கின்றன.
1960-61-ம் ஆண்டில் மாவட்ட தீவிர வேளாண்மை திட்டம் (IADP – Intensive Agricultural District Programme) ஏழு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.
1961-ம் ஆண்டுக்குப் பிறகு சான்றிதழ் அளிக்கப்பட்ட விதைத் திட்டம் தொடங்கப்பட்டது.

வெளிநாட்டிலிருந்து தரமான விதைகள் இறக்குமதி செய்ய வழிவகுக்கும் விதை மேம்பாட்டுக்கான புதிய கொள்கை (New Policy on seed development) 1988-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
1965-க்குபின் இந்திய வேளாண் தொழிலில் மாறுதல்கள் ஏற்பட்டு வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரித்தது. 1966-67-ல் அதிக விளைச்சல் தரும் பயிர் திட்டம் (High yielding varieties programme) தொடங்கப்பட்டது.

1968-69-ல் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், வேளாண் இயந்திரங்கள் ஆகியவற்றைப் பயன் படுத்தி வேளாண் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய ஆரம்பித்ததே பசுமை புரட்சி எனப்படும் புதுமையான வேளாண் தொழில் நுணுக்கத்தின் தொடக்கம் என்றும் கூறுவார்கள்.

ஆனால், இந்தியாவில் கோதுமை உற்பத்தி அதிகரிப்பைக் குறிப்பதற்கு வெகுகாலத்துக்கு முன்பே வில்லியம் காட் என்பவர் (William Gaud) பசுமைப் புரட்சி (Green revolution) என்ற சொல்லை பயன்படுத்திவிட்டார் என்கிறார்கள் சிலர்.

1990-91-ல் மழையை நம்பியுள்ள பகுதிகளுக்கான தேசிய தண்ணீர் மேம்பாட்டுத் திட்டம் (National Watershed Development Project for Rainfed Areas) 28 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் தொடங்கப்பட்டது.

VAO முதல் IAS வரை!

ரூபாய் - 3

இந்திய குடிமைப்பணி தேர்வில் மட்டுமின்றி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளிலும் இந்திய வேளாண்மை பற்றிய கேள்விகள் புவியியல் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் கேட்கப்படு கின்றன. இந்தியாவில் பயிரிடப்படும் முக்கியப் பயிர்கள், அவை பயிராவதற்கான சூழல், இந்திய உணவு பயிர்களின் பல்வேறு வகைகள், இந்திய வேளாண்மை எதிர்கொண்டுள்ள பிரச்னைகள், இந்திய மாநிலங்கள் குறிப்பிட்ட வேளாண் விளைபொருள் உற்பத்தியில் பெற்றுள்ள இடம் போன்ற கேள்விகள் புவியியல் சார்ந்த வேளாண்மை கேள்விகள் ஆகும்.

இந்தியாவில் வேளாண்மை துறையின் வளர்ச்சி, பசுமைப் புரட்சி, பசுமைப் புரட்சியினால் விளைந்த நன்மைகள், பசுமைப் புரட்சியின் குறைபாடுகள் ஆகியவற்றைக் குறித்து விமர்சனப் போக்கில் வைக்கப்படும் கருத்துக்கள், இந்திய வேளாண் கொள்கை, வேளாண்மைக்கான காப்பீட்டுத் திட்டங்கள், வேளாண் விளைபொருட்களுக்கு அரசாங்கம் வழங்கும் மானியங்களுக்கு சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள சர்வதேச நெருக்கடிகள் போன்றவை குறித்துக் கேள்விகள் வருகின்றன.

VAO முதல் IAS வரை!

வேளாண்மையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், அவற்றின் குறைபாடுகள், இயற்கை சார்ந்த வேளாண்மை, வேளாண்மைக்குப் பயன்படும் உயிரி உரம், மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் நன்மை, தீமைகள் போன்றவையும் வேளாண்மை தொடர்பான கேள்விகளில் அதிக மார்க் பெறுவதற்கு வாய்ப்புள்ளவை.

(தயாராவோம்)