நடப்பு
Published:Updated:

VAO முதல் IAS வரை

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம்! டாக்டர் சங்கர சரவணன்

ரூபாய் - 1

கடந்த வாரத்துக்கு முந்தைய வாரம் வாசகர்களிடம் ஐஏஎஸ் நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றை கேட்டிருந்தோம். ஒரு தொழிலதிபருக்கு 30 கோடி ரூபாய்க்கான ஓர் ஒப்பந்தம் அரசாங்கத்திலிருந்து கிடைக்கிறது. அந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைத்தால் அவர் திருப்பதி கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் காணிக்கை செலுத்துவதாக வேண்டியிருக்கிறார். அதன்படி, அதைச் செலுத்துகிறார். அதேபோல், அந்த ஒப்பந்தம் தனக்குக் கிடைக்கக் காரணமாக இருந்த அதிகாரிக்கு (அந்த அதிகாரி நீதிக்கு புறம்பாக எதையும் செய்யவில்லை; தனக்குப் பணம் தரும்படியும் அந்தத் தொழிலதிபரிடம் கேட்கவில்லை) 50 லட்சம் ரூபாய் தருகிறார். இப்போது அந்தத் தொழிலதிபர் கோயிலுக்குச் செலுத்திய 1 கோடி ரூபாய் காணிக்கை எனப் படுகிறது. ஆனால், அந்த அதிகாரிக்கு தரும் 50 லட்சம் லஞ்சமாகப் பார்க்கப் படுகிறது. ஏன் அப்படி? என்பதுதான் அந்தக் கேள்வி. இதற்குப் பல வாசகர்கள் பதில் அனுப்பியுள்ளனர்.

அவர்களில் ரங்கத்தைச் சேர்ந்த வாசகர் இரா.கோவிந்தராஜு பின்வருமாறு விடையளித்துள்ளார். ‘‘கேட்டுப்பெறுவது மட்டுமல்ல, கேட்காமல் கொடுப்பதைப் பெறுவதும் லஞ்சம்தான். இறைவனுக்கு வழங்குவது பயன் கருதி அல்ல. மனதிருப்திக்கே’’. இந்தப் பதில் சிறந்த பதிலாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. பல வாசகர்கள் இதையொட்டி விடையளித்திருந்தாலும், நாம் வாசகர்களின் பதில்கள் இரண்டு வரிகளில் நறுக்கென இருக்க  வேண்டும் என்று குறிப்பிட்டதைப் பலர் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. எனவே, வாசகர் கோவிந்தராஜு அனுப்பிய பதில் சிறந்த பதிலாகத் தெரிவு செய்யப் படுகிறது. அவருக்கு விகடன் பிரசுரம் வெளியிட்ட இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும், இந்திய விடுதலைப் போராட்டமும் என்ற புத்தகம் பரிசாக அனுப்பிவைக்கப்படும்.

VAO முதல் IAS வரை

மேற்படி கேள்விக்கு ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற ஒரு மாணவர் கூறிய பதில் என்னவென்று பார்ப்போம். திருப்பதி கோயிலுக்குக் கொடுக்கப்படும் பணம் தொழிலதிபரின் நம்பிக்கையைக் காட்டுகிற மாதிரி இருக்கிறது. ஆனால், அதிகாரி பெறும் பணம் அரசாங்கம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் குலைப்பதாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தைத் தொழிலதிபருக்கு வழங்கு வதற்கென்று ஏழுமலையான் அரசாங்கத் திடமிருந்து ஊதியம் எதையும் பெறவில்லை. ஆனால், அதிகாரி இந்தக் கடமையைச் செய்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து ஊதியம் பெறுகிறார். எனவே, கடவுளுக்குத் தருவது காணிக்கை. அதிகாரி வாங்குவது லஞ்சம் என்பதுதான் அந்தப் பதில்.

ரூபாய் - 2

கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி ஐஏஎஸ் முதல்கட்ட தேர்வு நடைபெற்றது. அதில் கேட்கப்பட்ட பொருளாதாரம் தொடர்பான கேள்விகள் இரண்டைப் பார்ப்போம்.

1. With reference to Union Budget, which of the following is/are coverd under Non-Plan Expenditure?
1. Defence expenditure
2. Interest payments
3. Salaries and pensions
4. Subsidies

Select the correct answer using the code given below.
(a) 1 only
(b) 2 and 3 only
(c) 1, 2, 3 and 4
(d) None

VAO முதல் IAS வரை

பின்வருவனவற்றில் எது/எவை திட்டம் சாரா செலவினங்களில் அடங்கும்?
1. பாதுகாப்புச் செலவுகள்
2. வட்டி செலுத்துகைகள்
3. ஊதியம் மற்றும் ஓய்வூதியம்
4. மானியங்கள்

பின்வரும் குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.
(a) 1 மட்டும்
(b) 2 மற்றும் 3 மட்டும்
(c) 1, 2, 3 மற்றும் 4
(d) இவை எதுவுமில்லை

2. In the context of Indian economy, which of the following is/are the purpose/purposes of ‘Statutory Reserve Requirements’?

1. To enable the Central Bank to control the amount of advances the banks can create.
2. To make the people’s deposits with banks safe and liquid
3. To prevent the commercial banks from making excessive profits.
4. To force the banks to have sufficient vault cash to meet their day-to-day requirements
Select the correct answer using the code given below.

(a) 1 only
(b) 1 and 2 only
(c) 2 and 3 only
(d) 1, 2, 3 and 4

VAO முதல் IAS வரை

இந்திய பொருளாதாரத்தில் ‘சட்டப்பூர்வ ரிசர்வ் கட்டாயங்களின்’ நோக்கம் என்ன?

1. வணிக வங்கிகள் உருவாக்கும் அட்வான்ஸ் தொகைகளை மத்திய வங்கி கட்டுப்படுத்த முடிகிறது.
2. மக்களின் சேமிப்புகள் வங்கிகளில் பாதுகாப்பாகவும், நீர்மைத் தன்மையு டனும் இருக்க வழிவகைச் செய்கிறது.
3. வணிக வங்கிகள் அதீத லாபம் சம்பாதிப்பதைத் தடுக்கிறது.
4. தங்கள் தினசரி தேவைகளை மேற்கொள்ள போதுமான அளவு கையிருப்பை வங்கிகள் வைத்திருப்பதைக் கட்டாயமாக்குகிறது.

பின்வரும் குறியீடுகளில் இருந்து சரியான விடையைத் தெரிவு செய்யவும்.

(a) 1 மட்டும்
(b) 1 மற்றும் 2 மட்டும்
(c) 2 மற்றும் 3 மட்டும்
(d) 1, 2, 3 மற்றும் 4

VAO முதல் IAS வரை

முதல் கேள்விக்கான விடை (c) 1, 2, 3 மற்றும் 4 என்பதாகும். அரசாங்கத்துக்கு ஒரு ரூபாய் வருமானம் எப்படி வருகிறது, ஒரு ரூபாய் எப்படி செலவாகிறது என்ற விவரம் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் குறிப்பிடப்படுவது வழக்கம். அதில், திட்டச் செலவினம் எவ்வளவு? திட்டம் சாரா செலவினம் எவ்வளவு? என்ற விவரங்களும் தெளிவாகக் குறிப்பிடப்படும். இந்தக் கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் செலவினம், மானியங்கள், வட்டி செலுத்துகைகள் ஆகியவை திட்டம் சாரா செலவினங்கள் என்பதை போட்டித் தேர்வுக்குப் படித்து வரும் மாணவர்கள் நன்கு அறிந்திருப்பார்கள்.

ஊதியம் மற்றும் ஓய்வூதியம் ஆகியவை திட்டச் செலவினத்தில் அடங்குமா, அடங்காதா என்ற சந்தேகம்தான் சிலருக்குத் தோன்றும். ஆனால், அந்தச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் முதல் மூன்றும் தெரிந்திருந்தாலே சரியான விடை அளிப்பதுபோல் வாய்ப்பு விடைகள் அமைந்துவிட்டதைக் கவனிக்க வேண்டும். எனவே, நாம் படித்த விவரங்களைத் தெளிவாக நினைவில் வைத்திருந்தாலே இதுபோன்ற நுணுக்கமான கேள்விகளுக்கு நாம் சரியாக விடையளித்துவிட முடியும். ஊதியங்களும், ஓய்வூதியங்களும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுபவை. அவை அரசாங்கத்தால் செயல்படுத்தப் படும் திட்டங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் ஊழியர்களுக்காக அரசாங்கம் செலவிடும் தொகைதான்.

ஆனால்,  அதைத் திட்ட செலவினமாக எடுத்துக்கொள்வதில்லை. திட்ட செலவினம் என்பது ஐந்தாண்டு திட்டங்கள் அடிப்படையில் வகுக்கப் படுவது. ஆனால், அரசு ஊழியர்கள் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றக் கூடியவர்களாக இருப்பதாலும், ஆண்டுதோறும் புதிதாகப் பணியேற்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் ஓய்வுபெறும் ஊழியர்களின் எண்ணிக்கை என்பது ஆண்டுக்காண்டு மாறுபடுவதாலும், ஊதியங்களும், ஓய்வூதியங்களும் திட்டம் சாரா செலவினங்களாகவே கொள்ளப்படு கின்றன. அரசாங்கம் செய்யும் செலவினத்தை மூன்றில் இரண்டு பாகம் திட்டம் சாரா செலவினமாகவும், ஒரு பாகம் திட்ட செலவினமாகவும் உள்ளது என்பதையும் தேர்வர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இரண்டாவது கேள்விக்கான சரியான விடை (d) 1, 2, 3 மற்றும் 4. இந்தக் கேள்விக்கு தொடர்புடைய விஷயங்களான சிஆர்ஆர் மற்றும் எஸ்எல்ஆர் பற்றி ரிசர்வ் வங்கி மற்றும் பணக்கொள்கைகளை இந்தத்தொடரில் விளக்கும்போது ஏற்கெனவே, குறிப்பிட்டுள்ளோம். எனவே, இந்தக் கேள்விக்கு வங்கிகள் பற்றிய அரசாங்கக் கொள்கையை நன்றாக உணர்ந்து கொண்டிருந்தால் எளிதாக விடையளித்து விடலாம். எஸ்எல்ஆர், சிஆர்ஆர் போன்ற சட்டப்பூர்வ ரிசர்வ் கட்டாயங்களின் நோக்கத்தில் இந்தக் கேள்வியில் கொடுக்கப்பட்டுள்ள நான்கு கருத்துகளுமே அடங்கும் என்பது தெளிவாகப் புரிந்திருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி விடையளிக்கலாம். இந்தக் கேள்விக்கு சரியாக விடையளித்த ஒரு மாணவர் சொன்ன தகவல் சுவையானது. அந்த மாணவருக்கு இந்தக் கேள்வியில் தரப்பட்டுள்ள நான்காவது கருத்து தெளிவாகத் தெரியும்.

அதாவது, எஸ்எல்ஆரின் முக்கிய நோக்கம் தங்கள் தினசரி தேவைகளை மேற்கொள்ளப் போதுமான அளவு கையிருப்பை வங்கிகள் வைத்திருப்பதை ரிசர்வ் வங்கி  கட்டாயமாக்குகிறது என்பதை அந்த மாணவர் சரியாகப் புரிந்துவைத்திருந்தார். ஆனால், மற்ற கருத்துகள் பற்றி அவருக்குத் தெளிவில்லை. இருப்பினும், இந்தக் கேள்வியில் தரப்பட்டுள்ள வாய்ப்பு விடைகளில் நான்காவது கருத்தை மட்டுமே கொண்டு எந்த வாய்ப்பு விடையும் இல்லை. நான்காவது கருத்து சரியானது என்று தெரிந்தாலே வாய்ப்பு விடை d- யைத்தான் தேர்வு செய்ய வேண்டும். எனவே, அந்த மாணவர் தனக்குத் தெரிந்த ஒரு கருத்தை வைத்தே இந்தக் கேள்விக்கு சரியான விடையை அளித்துவிட்டார். இதைத்தான் விடையளிக்கும் திறன் (Answering ability) என்று சொல்வார்கள். படிப்பு மற்றும் அறிவு ஆகியவற்றோடு போட்டித் தேர்வை வெல்வதற்கு இதுமாதிரி விடையளிக்கும் திறனும் முக்கியமாகிறது.

(தயாராவோம்)
படங்கள்: ர.சதானந்த், இரா.யோகேஷ்வரன்.

வேண்டுமென்றே கடனைச்  செலுத்தாத மல்லையா!

கிங்ஃபிஷர் நிறுவனம் 17 வங்கிகளின் கூட்டமைப்புக்கு மொத்தம் 4,022 கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இதில் யுனைடெட் வங்கிக்கு வரவேண்டிய கடன் தொகை 350 கோடி ரூபாயாகும்.  இந்த நிலையில் கிங்ஃபிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவையும், மற்ற மூன்று இயக்குநர்களையும் வேண்டுமென்றே கடன் கட்டத் தவறியவர்கள் என யுனைடெட் வங்கி அறிவித்துள்ளது. இதனால் இனி மல்லையா, மற்றும் அவர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடன் பெறும் தகுதியை இழக்கும்.