Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர் சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய் - 1

பொருளாதாரத்தில் பெருந்தொழில் என்பதற்கும், சிறு தொழில் என்பதற்கும் வேறுபாட்டை கண்டறியும் முயற்சி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் இருந்தே தொடங்குகிறது. இந்த வேறுபாடுகள் தொழில் முதலீட்டின் அளவு, தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன.

முதல் ஐந்தாண்டுத் திட்டம் சிறு தொழிலுக்கும் (Small Scale Industry), குடிசைத் தொழிலுக்கும் (Cottage Industry) இடையேயான இரண்டு வேறுபாடு களைக் கண்டறிந்து சொன்னது. இதன்படி, சிறு தொழில்கள் என்பவை நகர்புறத்தில் அமைந்திருப்பவை. குடிசைத் தொழில் என்பவை கிராமப் புறங்களில் அமைந்திருப்பவை. மற்றொரு வித்தியாசம், சிறு தொழில் களில் உற்பத்தி பொருட்கள், பெரும் இயந்திரத் தளவாடங்களைக் கொண்டு வெளி தொழிலாளர்களைப் பணியமர்த்தித் தயாரிக்கப்படுகின்றன.

ஆனால், குடிசைத் தொழில்களில் உற்பத்தி பொருட்கள் இயந்திரங்கள் உதவின்றிக் கைகளாலேயே அதிலும் குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களைப் பணியாளர்களாகக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன. உதாரணமாக, பென்சில், ரப்பர், பேனா போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கி, ஆகாய விமானத்துக்கான பகுதிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் வரை பல்வேறு வகையான சிறுதொழில் நிறுவனங்கள் உண்டு. ஊதுபத்தி முதல் ஊறுகாய்த் தயாரிப்பது வரை பல்வேறு தயாரிப்பு களைக் குடிசைத் தொழில் நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.

VAO முதல் IAS வரை!

1951-ம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட தொழிற்சாலை சட்டம், ஐம்பது தொழிலாளர்களைக் கொண்டு மின்னாற்றல் உதவியோடு நடைபெறும் உற்பத்தி தொழில்கள் அல்லது நூறு தொழிலாளர்களைக் கொண்டு மின்னாற்றல் உதவியின்றி நடைபெறும் உற்பத்தி தொழில்கள் ஆகியவற்றுக்கு பதிவு செய்வதில் இருந்து விலக்கு அளித்தது. இந்த அடிப்படையிலும், இந்த வகை உற்பத்தி தொழில்கள் சிறு தொழில்கள் என்று அழைக்கப்பட்டன.
2006-ம் ஆண்டுக் கொண்டுவரப்பட்ட எம்எஸ்எம்இ சட்டம் எண்டர்பிரைஸ் என்ற புதிய சொல்லை சட்டரீதியாக அறிமுகப்படுத்தியது.

எண்டர்பிரைஸ் என்பதற்கு தமிழில் வணிக நடுவம் என்ற கலைச்சொல் வழக்கத்தில் இருந்தபோதிலும்,எம்எஸ்எம்இ சட்டரீதியாகக் குறிப்பிடும்போது  எண்டர்பிரைஸ் என்ற சொல்லுக்கு ஏற்ற தமிழ் சொல்லாக தொழில் நிறுவனம் என்ற சொல்லே பயன்படுத்தப்படுகிறது. எம்எஸ்எம்இ சட்டம், எண்டர்பிரைஸ் என்ற சொல்லை உற்பத்தித் துறை (Manufacturing Sector) மற்றும் சேவைத் துறை (Service Sector) ஆகிய இரு துறைகளுக்கும் பொதுவான கலைச்சொல்லாகப் பயன்படுத்துகிறது.

எம்எஸ்எம்இ சட்டத்தின் கீழ் உற்பத்தித் துறை நிறுவனங்களில் தளவாடங்கள் மற்றும் இயந்திரங்களில் (Plants and Machineries) 25 லட்சத்துக்கும் குறைவாக முதலீடு செய்துள்ளவை குறுந்தொழில் நிறுவனங்கள் என்றும் (Micro Enterprises) 25 லட்சத்துக்கு மேல் 5 கோடி வரை முதலீடு செய்துள்ளவை சிறு தொழில் நிறுவனங்கள் என்றும் (Small Enterprises) 5 கோடிக்கு மேல் 10 கோடிக்குள் முதலீடு கொண்ட நிறுவனங்கள் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சேவை துறை நிறுவனங்களைப் பொறுத்தமட்டில், எம்எஸ்எம்இ சட்டம் 10 லட்சத்துக்குக் குறைவாக உபகரணங்களில் (Equipments) முதலீடு செய்துள்ள நிறுவனங்களை குறுந் தொழில் நிறுவனங்கள் என்றும், 10 லட்சத்துக்கு மேல் 2 கோடி வரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களை சிறு தொழில் நிறுவனங்கள் என்றும், 2 கோடிக்கும் மேல் 5 கோடி வரை முதலீடு செய்துள்ள நிறுவனங்களை நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் என்றும் வரை யறுக்கிறது.

VAO முதல் IAS வரை!

ரூபாய் - 2

தொழில் நிறுவனங்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் தனியார் தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் எவை சிறந்தவை என்ற கேள்விகள் பொருளாதார விவாத அரங்கில் கடந்த ஒரு நூற்றாண்டாகவே எழுப்பப்பட்டு வருகிறது. இந்தக் கேள்விக்குத் தரப்படும் விடைகள் அவரவர் பொருளாதாரக் கொள்கை சார்ந்து வேறுபடும். இருப்பினும், தனியார் நிறுவனங்களைப் போல் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள் சரியாகச் செயல்படுவதில்லை என்ற கூற்றும், விமர்சனமும் பரவலாக முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இவற்றில் பெருமளவுக்கு உண்மையில்லை என்பதைக் காட்டும் ஆதாரங்களும் உள்ளன.

1990-91-ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைக்குப்பின் பொதுத்துறை நிறுவனங்களின் திறனும், லாபமும் பெருமளவுக்கு அதிகரித்திருப்பதாக ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. பத்தாம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் (1997 - 2002) இந்தியாவில் மொத்தம் 244 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளதாகக் கூறும் ஓர் ஆய்வு, அவற்றில் உள்ள மொத்த முதலீடு 4.26 லட்சம் கோடி என்று தெரிவிக்கிறது.

இவற்றில் அதிக முதலீட்டுடன் கொண்டு அரசு பொதுத்துறை நிறுவனங்களாக மின் உற்பத்தி, சுரங்கத் தொழில், கட்டுமானத் தொழில் போன்றவை இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் பொதுத்துறை நிறுவனங்களால் வேலைவாய்ப்பு பெற்ற வர்களின் எண்ணிக்கை சுமார் 16 லட்சத்தைத் தாண்டுகிறது. இவற்றில் 44 பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய பங்குச் சந்தையில்  இடம் பிடித்துள்ளன. இந்த இருநூற்றி சொச்ச நிறுவனங்களில் 157 நிறுவனங்கள் லாபத்தில் இயங்குபவை.

VAO முதல் IAS வரை!

வேறொரு ஆய்வு, 9-ம் ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் லாபத்தில் இயங்கும் மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 120-லிருந்து 157-ஆக உயர்ந்ததாகக் கூறுகிறது. அதேபோல் 11-ம் ஐந்தாண்டுத் திட்ட ஆவணம், நஷ்டத்தில் இயங்கிய பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 109-லிருந்து 58-ஆகக் குறைந்துவிட்டதாகக் கூறுகிறது. 2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் வாராந்திர (Economic and Political Weekly)ஆய்வு கட்டுரை ஒன்று, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து வருவதைச் சுட்டிக் காட்டுகிறது.

அனைத்து தனியார் நிறுவனங்களுமே லாபத்தில் இயங்குபவை அல்ல. அவற்றிலும் நஷ்டத்தில் இயங்குபவை உண்டு. அதுபோல, அரசால் நிர்வகிக்கப்படும் பொதுத்துறை நிறுவ னங்களிலும் நிர்வாகத் திறமையின்மை, உற்பத்தி பொருளின் தேவை/விநியோகம்  வேறுபாடுகள் காரணமாக நஷ்டம் ஏற்படுவது உண்டு.

அரசாங்க நிறுவனம் என்பது யாருமற்ற அனாதைக் குழந்தை (Government is nobody’s Baby) என்ற மனோபாவம் இல்லாமல், பொதுத்துறை நிறுவனத்தின் உயர் நிர்வாகிகளும் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு உழைத்தால் பொதுத்துறை நிறுவனங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு உதாரணமாக மகாரத்தினங்களாகவும், நவரத்தி னங்களாகவும், குறுரத்தினங்களாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியல் எடுத்துக் காட்டப்படுகிறது.

ரூபாய் - 3

ஐஏஎஸ் தேர்வில் தொழில்துறை பற்றிக் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளைப் பார்க்கலாம்.

VAO முதல் IAS வரை!

1. What does venture capital mean?
(a) A short-term capital provided to industries
(b) A long-term start-up capital provided to new entrepreneurs
(c) Funds provided to industries at times of incurring losses
(d) Funds provided for replacement and renovation of industries

1.  துணிகர முதலீடு என்பதன் பொருள் யாது?

a)  தொழில் துறைக்கு வழங்கப்படும் குறுகிய கால மூலதனம்
b)  புதிய தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் நீண்ட கால மூலதனம்
c) தொழிற்சாலைகள் நஷ்டத்தில் இயங்கும் தருணத்தில் அவற்றுக்கு வழங்கப்படும் நிதி
d) தொழிற்சாலைகளை மாற்றி அமைக்கவும் புதுப்பித்துக் கொள்ளவும் வழங்கப்படும் நிதி

2. Which one of the following is not a drug or pharma company?

a)  Chevron
b)  Nicolas piramal
c)  Pfizer
d)  Zydus cadilla

பின்வருவனவற்றுள் எது மருந்து தயாரிப்பு நிறுவனம் அல்ல?

a)  செவ்ரான்
b) நிகோலஸ் பிரமல்
c)  ஃபைசர்
d)  சைடஸ் கேடில்லா

VAO முதல் IAS வரை!

மேலே தரப்பட்ட கேள்விகளில் முதல் கேள்வி 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும், இரண் டாவது கேள்வி 2009-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்விலும் கேட்கப்பட்டவை ஆகும்.

முதல் கேள்விக்கான சரியான விடை (b) புதிய தொழில் முனைவோர்கள் தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் நீண்ட கால மூலதனம். புதிய தொழில்முனைவோரை நம்பி இவ்வாறு துணிகர முதலீட்டை செய்பவர்கள் தேவதை முதலீட்டாளர் கள் (Angel investors) என்று அழைக்கப்படு கின்றனர். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் நிறுவனத்துக்கு வழங்கப்படும் கடன் துணிகர முதலீடு என்று அழைக்கப்படுவதில்லை. மாறாக, மறு சீரமைப்பு நிதி (Restructuring finance) என்றே அழைக்கப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைந்த நிறுவனங்களாக (Sick Industries) அங்கீகரிக்கவும் அவற்றை மறு சீரமைப்பு செய்வதற்கான நிதி வழங்க  மத்திய அரசு விதிமுறைகளையும் வரைமுறைகளையும் வகுத்துள்ளது.

இரண்டாவது கேள்விக்கான சரி யான விடை (a) செவ்ரான் என்பதாகும். இந்த நிறுவனம், ஓர் எரிசக்தி நிறுவனம் (Energy Industry) ஆகும். அமெரிக்காவைத் தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் செவ்ரான் 180-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் செயல்படுகிறது. எண்ணெய் வளங்களைக் கண்டறிதல், எண்ணெய் எடுத்தல், எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற பல பணிகளையும் செவ்ரான் செய்கிறது.

அந்த ஆண்டில் தனியார் நிறுவ னங்களைப் பற்றி 5 கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. ஐஏஎஸ் தேர்வு அரசு அதிகாரிக்கான தேர்வாக இருந்தாலும் அந்தப் பணிக்கு வருபவர்கள் தனியார் நிறுவனங்களைப் பற்றிய அடிப்படை அறிவையும் கொண்டிருக்க வேண்டும் என மத்திய பணியாளர் தேர்வாணையம் விரும்புகிறது.

(தயாராவோம்)
படங்கள்:  இரா.யோகேஷ்வரன்