Published:Updated:

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர். சங்கர சரவணன்

VAO முதல் IAS வரை!

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் டாக்டர். சங்கர சரவணன்

Published:Updated:

ரூபாய் - 1

ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது உள்கட்டமைப்பு வசதியாகும். உள்கட்டமைப்பு வசதி என்பது எரிசக்தி, போக்குவரத்து, தகவல்தொடர்பு ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றில் எரிசக்தி என்பது மிக முக்கியமானது. இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டைப் பற்றிப் பேசும்போது, அதிகமான எரிசக்தியை நுகர்வது  வீடுகளா அல்லது தொழிற்துறையா என்ற கேள்வி மிக அடிப்படையானது.  மேலோட்டமாக யோசித்தால், இந்தக் கேள்விக்குத் தொழில்துறைதான் விடையாக இருக்கும் என்று தோன்றும்.
 

ஆனால், அது உண்மையல்ல. இந்தியாவில் அதிக எரிசக்தி நுகர்வை மேற்கொள்வது வீடுகள்தான்.

 ‘ரெசிடென்ஷியல் செக்டார்’ என்று அழைக்கப்படும் வீடு மற்றும் உறைவிடத் துறை நாட்டின் மொத்த எரிசக்தியில் 57 சதவிகிதத்தை நுகர்கிறது. எரிசக்தி நுகர்வில் தொழிற்சாலைகளின் பங்கு 24% மட்டுமே. 9% போக்குவரத்துத் துறையாலும்,  7% பிற தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

எரிசக்தி மூலங்களைப் பொறுத்தமட்டில், இந்தியாவில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் எரிசக்திக்கு  மூலமாகத் திகழ்வது மர விறகு (Fuel wood) ஆகும். இது மொத்த எரிசக்தி மூலத்தில் 37% ஆகும். இரண்டாவது, எரிசக்திக்கு மூலமாக வருவது நிலக்கரி (34%). மூன்றாவது, நான்காவது இடத்தில் வருபவை பெட்ரோலியம் (22%) மற்றும் இயற்கை எரிவாயு (4%). ஐந்தாவதாக நீர்மின் சக்தியும், அணுமின் சக்தியும் சேர்ந்து 1% பங்களிப்பைச் செய்கின்றன.

VAO முதல் IAS வரை!

ரூபாய் - 2

இந்தியாவின் எரிசக்தி வளத்தில் முக்கிய இடத்தைப் பெறுவது நிலக்கரி. இந்தியாவில் கிடைக்கும் நிலக்கரி கோன்ட்வானா நிலக்கரி (98%), டெர்ஷரி நிலக்கரி (2%) என இரு வகைப்படும். இதில், கோன்ட்வானா காலம் என்பது டெர்ஷரி காலத்துக்குப் பிற்பட்டது. எனவே, கோன்ட்வானா நிலக்கரி, டெர்ஷரி நிலக்கரியைவிடத் தரம் குறைந்ததாகவே உள்ளது.

நிலக்கரியை அதிலுள்ள கார்பன் அளவைப் பொறுத்து நான்கு வகையாகப் பிரிக்கிறார்கள். ஆந்த்ரசைட் (Anthracite), பிட்டுமினஸ் (bituminous), லிக்னைட் (Lignite), மரக்கரி (Peat) என்பவையே அந்த நான்கு வகைகள். இவற்றுள் ஆந்த்ரசைட் தரத்தில் உயர்ந்தது. இதில் சுமார் 65% கார்பன் உள்ளது. பிட்டுமினஸ் நிலக்கரி வகையில் 55%, லிக்னைட்டில் 45% கார்பன் உள்ளது. மரக்கரி என்பது மிகக் குறைந்த கார்பன் அளவு கொண்ட தரம் குறைந்த கரியாகும். நிலக்கரியின் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அதைக் கோக்கிங் நிலக்கரி (Coking Coal), கோக்கிங் வகை சாரா நிலக்கரி (Non Coking Coal) என்றும் வகைப்படுத்துவதுண்டு. இதில் கோக்கிங் என்பது நிலக்கரியைச் சூடேற்றி கார்பனாக மாற்றம் செய்வதைக் குறிக்கும். கோக்கிங் வகை நிலக்கரி பெருமளவுக்கு உலோகவியல் துறையில் பயன்படுகிறது.

VAO முதல் IAS வரை!

கோக்கிங் வகை சாரா நிலக்கரியில் சாம்பல் அளவு மிக அதிகமாக இருக்கும். எனவே, அவற்றை உலோகத் தொழிலில் பயன்படுத்த முடியாது. எரிபொருளாக மட்டுமே பயன்படுத்த வேண்டும். கோக்கிங் வகை சாரா நிலக்கரியிலும் பல வகைகள் உண்டு. அவற்றிலும், 34 சதவிகிதத்துக்குமேல் சாம்பல் கொண்ட நிலக்கரியை அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தக்கூடாது எனச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் பெருமளவுக்கு, கோக்கிங் வகை சாரா நிலக்கரியே கிடைப்பதால், கோக்கிங் நிலக்கரியை நாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவேண்டிய நிலை உள்ளது.

இந்திய மின்சக்தி உற்பத்தியில் 80%  அனல் மின் நிலையங்களில் இருந்தே கிடைக்கிறது. அனல் மின் நிலையங் களுக்கு மிக முக்கிய எரிசக்தி வளமாகத் திகழ்வது நிலக்கரிதான். எனவே, நமது எரிசக்தி தேவைக்காகவும், மின் உற்பத்திக்காகவும் நிலக்கரியைப் பெரிதும் நம்பியுள்ளோம். ஆனால், சமீபத்தில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு காரணமாக படிம எரிபொருட்கள்
(Fossil Fuel) வகையைச் சார்ந்த நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டிய சவாலையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

VAO முதல் IAS வரை!

படிம எரிபொருட்கள் பசுமை இல்ல வாயுவான கார்பன்டை ஆக்ஸைடை அதிக அளவு உற்பத்தி செய்வதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும், அப்படி முடியாத பட்சத்தில் படிம எரிபொருட்களில் இருந்து தூய்மையான எரிசக்தியை (அதாவது, குறைந்த அளவு கார்பன்டை ஆக்ஸைடை வெளியிடும் எரிசக்தியை) உருவாக்கும் வண்ணம் புதிய தொழில் நுட்பங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் உலக அளவில் விஞ்ஞானிகள் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவில் தூய நிலக்கரி தொழில்நுட்பங்களை (Clean coal Technologies) வளர்க்கும் பணியும் தொடங்கி உள்ளது. நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கல் (Underground Coal Gasification) மற்றும் நிலக்கரி நீர்மம் ஆக்கல் (Coal liquefaction) ஆகிய புதிய தூய நிலக்கரி தொழில்நுட்பங்களை இந்திய அரசாங்கம் தற்போது ஊக்குவித்து வருகிறது.

ரூபாய் - 3

எரிசக்தி தொடர்பாக 2014-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் கேட்கப்பட்ட ஒரு கேள்வியைப் பார்க்கலாம்.

1. With reference to two non-conventional energy sources called ‘coalbed methane’ and ‘shale gas’, consider the following ‘statements:

1. Coalbed methane is the pure methane gas extracted from coal seams, while shale gas is a mixture of propane and butane only that can be extracted from fine-grained sedimentary rocks.

2.In India abundant coalbed methane sources exist, but so far no shale gas sources have been found.
Which of the statements given above is/are correct?

(a) 1 only (b) 2 only
(c) Both 1 and 2 (d) Neither 1 nor 2

VAO முதல் IAS வரை!

மரபு சாரா எரிசக்தி மூலங்களைப் பொறுத்தமட்டில் நிலக்கரிப் படுகை மீத்தேன் மற்றும் ஷேல் வாயு குறித்த பின்வரும் கூற்றுகளைக் கவனிக்கவும்.

1. நிலக்கரிப் படுகை மீத்தேன் என்பது நிலக்கரிப் படுகையில் இருந்து எடுக்கப்படும் தூய்மையான மீத்தேன். ஷேல் வாயு என்பது புரேப்பேனும், பியூட்டேனும் கலந்த கலவை.

ஷேல் வாயுவை நுண்மையாகத் தூளாக்கப்பட்ட படிவுப் பாறைகளிலிருந்து மட்டுமே பெறமுடியும்.

2. இந்தியாவில் மிக அதிக அளவில் நிலக்கரிப் படுகை மீத்தேன் காணப்படு கிறது. ஆனால், இதுவரை ஷேல் வாயு மூலங்கள் கண்டறியப்படவில்லை.

மேலே இடம்பெற்ற கூற்றுகளில் எது/எவை சரியானவை?
(a) 1 மட்டும் (b) 2 மட்டும்
(c) 1 மற்றும் 2
(d) 1 மற்றும் 2 இரண்டுமே தவறானது.

இந்தக் கேள்விக்குச் சரியான விடை (d) ஆகும். இந்தியாவில் தற்போது புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள எரிசக்தி மூலங்களில் நிலக்கரிப் படுகை மீத்தேன் மற்றும் ஷேல் வாயு ஆகிய இரண்டும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. நிலக்கரிப் படுகை மீத்தேன் என்பது  நிலக்கரி சுரங்கங்களில் இருந்து ஹைட்ரோ முறிவு (Hydro-fracturing) மற்றும் கிடைமட்ட துளையிடல் (Horizontal drilling) தொழில்நுட்பங்களின் படி எடுக்கப்படுகிறது. இந்தியாவில் சுமார் 3,381 பில்லியன் கனமீட்டர் நிலக்கரிப் படுகை மீத்தேன் வளம் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஷேல் வாயு என்பது மற்றொரு முக்கிய மாற்று எரிசக்தி. சிலர் இதை ஷேல் எண்ணெய் (Oil Shale) என்றும் குறிப்பிடுவார்கள். ஆனால், இது ஒரு வகை எண்ணெய் அல்ல. இதில் காணப்படும் கரிமப் பொருள் கரோஜன் (Kerogen) எனப்படுகிறது. கரோஜனை 450 டிகிரி வெப்பநிலைக்குச் சூடுபடுத்தப்படும் போது, அதிலிருந்து ஷேல் எரிவாயு கிடைக்கும். இந்தியாவில் ஷேல் வளம் அசாம், அருணாச்சலப் பிரதேசம், நாகலாந்து மாநிலங்களில் கண்டறியப்பட்டு உள்ளது.

(தயாராவோம்)
படங்கள்:  ச.ஹர்ஷினி, இரா.யோகேஷ்வரன்.