Published:Updated:

‘கன்னிப் பருவத்திலே’ முதல் ரோஜா’ வரை...ராஜேஷ் சொல்லும் பண ரகசியம்!

ஆயிரம் முதல் லட்சம் வரை... - அனுபவம் பகிரும் பிரபலங்கள்

பிரீமியம் ஸ்டோரி

நடிகர் ராஜேஷ், சினிமா நடிப்புடன் நின்றுவிடவில்லை; அதைத் தாண்டி பிசினஸ், எழுத்து எனப் பன்முகம் காட்டி பரிமளிப்பவர். ஆசிரியர் பணி செய்து வந்த அவர், தீவிர முயற்சிக்குப் பிறகு, ‘கன்னிப் பருவத்திலே’ மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்தார்.

கதாநாயகன் என்கிற பிம்பத்துக்கு மட்டும் ஆசைப்படாமல் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என்று கதைகளின் நாயகனாக அவர் நடித்ததால், தமிழ்த் திரை நடிகர்களில் நடிகர் ராஜேஷ்க்கு அழுத்தமான இடம் உண்டு. தற்போது தன்னுடைய 72-வது வயதில் சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். சென்னை, ராமாபுரத்திலிலுள்ள அவருடைய இல்லத்தில் அவரைச் சந்தித்தோம்.

ராஜேஷ்
ராஜேஷ்

‘‘நான் பிறந்த ஊரையும் என் பெற்றோரையும் பத்தி ஒரு வரியில் சொல்லணும்னா, அது ரொம்ப நாணயமான ஊர். என்னைப் பெத்தவங்க சூதுவாது தெரியாதவங்க. இது உண்மை. உண்மையைத் தவிர வேறு இல்லை. எனக்கு நல்லா நினைவிருக்கு. பக்கத்து வீட்டுக் கோழி தன் வீட்ல வந்து முட்டையிட்டுட்டா, அதைக் கையாலத் தொடறதைக்கூட நாணயக் குறைச்சலா நினைப்பாங்க எங்க ஊர்க்காரங்க. கோழிக்கு சொந்தக்காரங்க வீட்ல இருக்கிற ஒரு பிள்ளையைக் கூப்பிட்டு, ‘உங்க வீட்டு முட்டையை எடுத்துட்டு போ’ன்னு சொல்வாங்க. அப்படிப்பட்ட மேலநத்தம்தான் என் சொந்த ஊர். இது மன்னார்குடி பக்கத்துல இருக்கு.

என் அப்பா கிளார்க், அம்மா டீச்சர். நல்ல கல்வியைக் கொடுத்தாங்க. அதைத் தாண்டி ‘எங்க புள்ளைங்களை அவங்களை மாதிரி பெரியாளாக்கணும்; இவங்களை மாதிரி பெரியாளாக்கணும்கிற வேகம், வெறியெல்லாம் இல்லாதவங்க.

வேலையைத் தேடி சென்னைக்கு வந்தேன். நிமிஷத்துக்கு ஒரு பஸ், வானத்துல ஏரோபிளேன் போறதுன்னு இருந்த சென்னை என்னை நிறைய ஆச்சர்யப்படுத்துச்சு. ஆசிரியர் பயிற்சி முடிச்சு ஆசிரியரா வேலைபார்த்தேன்.

சின்ன வயசுல இருந்தே நடிகனாகணும்கிற ஆசை எனக்குள்ள இருந்துச்சு. நிறைய இயக்குநர்களைச் சந்திச்சு வாய்ப்பு கேட்டேன். 1979-ல ‘கன்னிப் பருவத்திலே’ பட வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்துல நடிச்சதுக்காக 2,000 ரூபா வாங்கினேன்.

முதல் படத்தோட கதை, என்னோட கதாபாத்திரம், பாடல்கள்னு நல்லா பேசப்பட்டுச்சு. அதனால, தொடர்ச்சியா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சது.

‘கன்னிப் பருவத்திலே’ முதல் ரோஜா’ வரை...ராஜேஷ் சொல்லும் பண ரகசியம்!

1984-ல் வெளிவந்த ‘சிறை’, ‘ஆலய தீபம்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’னு மூணு படங்களுமே மிகப் பெரிய ஹிட். ‘சிறை’ எழுத்தாளர் அனுராதா ரமணனின் கதை. அந்தப் படத்தில் அடுத்தவன் மனைவியை சூறையாடுகிற கதாபாத்திரம் என்னுடையது. ‘ஆலய தீப’த்தில் புகழ்பெற்ற நடிகையின் கணவனாக, மிடில் கிளாஸ் அப்பாவாக நடித்திருப்பேன்.

கே.பாலசந்தரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’யில் ஒரு நல்லவன் அரசியலில் நுழைந்து எப்படி படிப்படியாகக் கெட்டவனாகிறான் என்பது கதை. அந்த அரசியல்வாதி நான்தான். பெரிய பெரிய கட் அவுட், நூறு நாள்களைத் தாண்டி படம் ஓடியது. மக்களும் திரையுலகத்தினரும் என்னைக் கொண்டாடினாங்க. என்னோட சினிமா கரியரில் வெற்றிகரமான வருஷமா 1984-ம் ஆண்டைத்தான் குறிப்பிடுவேன். இந்தக் காலகட்டத்துல என் சம்பளம் 2 லட்சம். அந்தக் காலத்துல அது மதிப்பு மிகுந்த தொகை.

அந்தக் காலகட்டத்துலதான் நான் சொந்தமா ரெண்டு வீடு வாங்கினேன். ரெண்டு கார் வாங்கினேன். படப்பிடிப்பு களுக்காக ஒரு பங்களா கட்டி னேன். கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணத்தை மது, சிகரெட்னு எந்த வகையிலும் வீணாகச் செலவழிக்காத நடிகர் நான்’’ என்றவரின் குரலில் மிகுந்த கம்பீரம் ஒலிக்கிறது.

‘‘ஒரு நடிகரோட வாழ்க்கையில் மேனேஜர், ஆடிட்டர், டாக்டர், வக்கீல், மனைவி ஆகிய ஐந்து பேர் சரியா இருந்தா, அவர் சக்சஸ்ஃபுல்லா இருக்கலாம். எனக்கு நான்தான் மேனேஜர். எனக்குக் கிடைச்ச ஆடிட்டர், டாக்டர், வக்கீல் மூணு பேருமே அருமையான மனுஷங்க. என்னைப் பார்க்கிறதுக்கு வீட்டுக்கு வர்ற எல்லோருக்கும் சாப்பாடு போட்ட அருமையான மனுஷி என்னோட மனைவி சில்வியா.

என்னோட பெற்றோர்கிட்ட இருந்த ‘நியாயமா சம்பாதிக் கணும்; இருக்கிறது போதும்கிற’ குணம் என்னோட ரத்தத்துலேயும் இருந்ததால, படங்களைத் தேர்ந்தெடுத்துதான் நடிச்சேன்; அளவாகத்தான் சம்பாதிச்சேன்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜின்னு ரெண்டு இமயங்களோட அன்பையும் பெற்றவனா இருந்தேன். காலம் போயிக் கிட்டே இருந்தது. மக்கள் திலகம் மறைஞ்ச பிறகு, சில வருஷங்கள் ஜானகி அம்மாவோட இணைஞ்சு அரசியல் பணிகள்ல ஈடுபட்டுக்கிட்டிருந்தேன்.

ஜானகி அம்மாதான், எம்.ஜி.ஆரோட நண்பர் ஜேப்பியார்கிட்ட சொல்லி என்னை ‘ரியல் எஸ்டேட் பிசினஸ்’ செய்யச் சொல்லி அறிவுறுத்தினார். ‘இதெல்லாம் பண விஷயம். நானென்ன காமராஜரா, கக்கனா? என்னை நம்பி மக்கள் எப்படிப் பணம் தருவாங்கன்னு ஜேப்பியார்கிட்ட கேட்டேன். ‘மக்கள் உங்களை நம்புவாங்க ராஜேஷ்னு...’ சொன்னார் ஜேப்பியார்.

என்னைப் பத்தி எனக்கே தெரியாத ஒரு விஷயத்தைச் சொல்லி, ரியல் எஸ்டேட் பிசினஸ்ல ஈடுபட வைச்சார். கிட்டத்தட்ட 10 வருடங்கள் அந்தத் துறையில் ஓஹோன்னு இருந்தேன். அதுக்கப்புறம், நிலத்தோட மதிப்பு குறைஞ்சிருந்த காலத்துல என்னால ரியல் எஸ்டேட்ல தொடர்ந்து ஈடுபட முடியலை. விட்டுட்டேன்.

சினிமாவுல ஓஹோன்னு இருக்கும்போதே சின்னத்திரையிலேயும் நடிச்சிருக்கேன். டப்பிங் கொடுப்பேன். ஹாலிவுட் நடிகர்களின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகங்களாக எழுதியிருக்கிறேன். எனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம் என்பதால், அது தொடர்பான புத்தகங்களையும் எழுதியிருக்கேன்.

இப்ப சன் டி.வி-யில் ஒளிபரப்பாகும் ‘ரோஜா’ சீரியலில் ‘டைகர் மாணிக்கம்’ அப்படிங்கிற கேரக்டர்ல நடிச்சுக்கிட்டிருக்கேன். மாசத்துல சில நாள்கள் ‘ரோஜா’ ஷூட்டிங் நடக்கும். இதற்கான சன்மானம் எனக்கும் என்னை நம்பியிருக்கிறவங்களுக்கும் ஒரு மாதத் தேவைக்குப் போதுமானதாக இருக்கும்.

என்னோட பண அனுபவம் பத்தி நீங்க கேட்டதால இதைச் சொல்றேன்’’ என்று வெளிப்படையாகப் பேசும் நடிகர் ராஜேஷ், தற்போது இயக்குநர் ஹரியின் ‘யானை’ உட்பட மூன்று தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

‘‘இந்த வயசிலேயும் விருப்பப்பட்டதைச் சாப்பிடுறேன். பிள்ளைகளுக்குக் கல்யாணம் செஞ்சு பேரப்பிள்ளைகளைப் பார்த்துட்டேன். நாணயமா, நேர்மையா வாழுறேன். இப்படியே கடைசி வரைக்கும் எந்தக் கெட்டப்பேரும் இல்லாம வாழ்ந்து, மருத்துவ மனைக்குப் போகாம வீட்டிலேயே என் காலம் முடியணும். அதைத்தான் என்னோட பெரிய சொத்தா பார்க்கிறேன்’’ என்பவரின் குரலில் பெரும் நிறைவு தெரிகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு