Published:Updated:

தோல்வியைத் தவிர்க்க உதவும் நியூட்ரல் மனநிலை..!

நியூட்ரல் மனநிலை
பிரீமியம் ஸ்டோரி
நியூட்ரல் மனநிலை

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

தோல்வியைத் தவிர்க்க உதவும் நியூட்ரல் மனநிலை..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
நியூட்ரல் மனநிலை
பிரீமியம் ஸ்டோரி
நியூட்ரல் மனநிலை

நாம் இந்த வாரம் பார்க்கவிருக்கும் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் ட்ரேவர், விளையாட்டு வீரர்களுக்கு மனத்தை ஆக்கபூர்வமாக நிலைநிறுத்தப் பயிற்சி (Mental Conditioning Expert) அளித்து வந்த நிபுணர் ஆவார். விளையாட்டுகளுக்கான அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிகையான ‘ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேட்டட்’ விளையாட்டு உலகின் தலைசிறந்த மனதுக்கான பயிற்சியாளர் என்ற பட்டத்தை இவருக்கு வழங்கியுள்ளது.

புத்தகத்தின் பெயர்:
Getting to Neutral 
ஆசிரியர்கள்:
Trevor Moawad & Andy Staples
பதிப்பாளர்:
HarperOne; HarperCollins
புத்தகத்தின் பெயர்: Getting to Neutral ஆசிரியர்கள்: Trevor Moawad & Andy Staples பதிப்பாளர்: HarperOne; HarperCollins

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி இவர் அரியவகை புற்றுநோயால் இயற்கை எய்தினார். இந்தவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வது கடினம் என்பதை மருத்துவர்கள் கூறியபோதிலும், அதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படாமல் கடைசிவரை அவர் ஏற்றுக்கொண்டிருந்த பயிற்சிதரும் வேலைகளைச் சிறப்பாகச் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது!

நடுநிலை என்றால்..?

உங்களுடைய இலக்குகள் என்ன? பணி யிலிருக்கும் நிறுவனத்தில் இருக்கும் அனைவரையும் முந்த வேண்டும். நிறுவனத்தின் சிஇஓ-வாக வேண்டும். கோடீஸ்வரனாக வேண்டும் என்பதா? பிரச்னையான குடும்ப வாழ்க்கையிலிருந்து வெளியேற வெற்றிகரமாக விவாகரத்து பெற வேண்டும் என்பதா?

இதில் எந்த வகை பட்டியல் உங்களிடம் இருந்தாலும், அவற்றை நிறைவேற்றிவிட்டால் அது உங்களுக்கு மகத்தான வெற்றியாக இருக்கும். ஆனால், நம்முடைய முழு எனர்ஜி யையும் நாம் நினைத்த விஷயத்துக்கு செலவிட்டு விட்டு அந்த இடத்தைச் சென்றடைந்ததும் நாம் வெற்றிடத்தில் இருப்பதைப்போல் உணர ஆரம்பிப்போம். அல்லது இதில் எதையுமே செய்து முடிக்க முடியவில்லை எனில், ‘அடப் போங்கப்பா! வாழ்க்கையே மோசம்’ என்று அழுது புரள்வோம். இந்த இரண்டும் இல்லாத நிலையையே ‘நியூட்ரல் நிலை’ என்கின்றனர் ஆசிரியர்கள். ‘‘வாழ்க்கை வாழ்வதற்கு (human beings) என்று சொன்னால் நீங்கள் வளர்வதற்கு (human becoming) என்று அர்த்தம் செய்து கொள்கிறீர்கள்’’ என்கின்றார்கள் ஆசிரியர்கள். இந்த நியூட்ரல் நிலைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் பற்றிச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

நெகட்டிவ் டு பாசிட்டிவ் சிந்தனை...

தன்னம்பிக்கை பயிற்சியாளர்கள், எதிர்மறை (நெகட்டிவ்) மனநிலைக்குச் சென்ற ஒருவரிடம் முன்னேற்றம் காண வேண்டுமெனில், நேர் மறை (பாசிட்டிவ்) எண்ணத்தை உருவாக்குங்கள் என்பார்கள். நெகட்டிவ் மனநிலையிலிருந்து பாசிட்டிவ் மனநிலைக்கு வருவது ஒன்றும் அவ்வளவு சுலபமில்லை. பாசிட்டிவ் மனநிலைக்கு வருவது மிக மிக அவசியமானதும் இல்லை. மேலும், அது பலருக்கு சாத்தியமாவதும் இல்லை. வெற்றி பெற ஒருவர் நியூட்ரல் மனநிலைக்கு வருவதே போதுமானது. பெரும் பாலானோருக்கு சாத்தியமாவதும் அதுதான்.

ஏற்கெனவே நாம் ஒரு செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது நாம் எதிர் கொள்கிற கடினமான சூழ்நிலையினாலேயே நாம் குழப்பமடைந்து நெகட்டிவ் சிந்தனைகளுக்கு ஆளாகிறோம். இந்தச் சூழ்நிலையில் பாசிட்டிவ் சிந்தனைகளை உருவாக்குங்கள் என்று சொன்னால் என்னவாகும்? நிலைமை இன்னும் மோசமாகவே செய்யும். இந்த மாதிரியான நெகட்டிவ் சூழ்நிலைகளில் மீண்டு நியூட்ரல் நிலைக்கு வர முயல்வதே சாத்தியமான சிறந்த தீர்வுமாக இருக்கும். தோற்றுவிட்டோம் என்ற மனநிலையிலிருந்து வெற்றி பெறுவோம் என்ற மனநிலைக்குச் செல்வதைவிட வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாத நியூட்ரல் நிலைக்கு வருவதே சுலபமான ஒன்றாகும்.

தோல்வியைத் தவிர்க்க உதவும்
நியூட்ரல் மனநிலை..!

பாசிட்டிவ் திங்கிங்கின் நெகட்டிவ் அம்சங்கள்...

‘‘ஏன் நீங்கள் பாசிட்டிவ் திங்கிங் என்பதைக் கடுமையாக எதிர்க்கிறீர்கள் என அனைவரும் எங்களைக் கேட்கின்றனர். பாசிட்டிவ் திங்கிங்கை எதிர்த்து நியூட்ரல் திங்கிங்கை விளம்பரம் செய்ய வேண்டும் என்பது எங்களுடைய எண்ணம் இல்லை. சில சமயங்களில் பாசிட்டிவ் திங்கிங் என்பது சாத்தியமே இல்லாத ஒன்றாக இருக்கிறது. சில சமயம், பாசிட்டிவ் திங்கிங் என்பதே நமக்கு ஊறுவிளைவிப்பதாகவும் மாறிவிடுகிறது. நெகட்டிவ் திங்கிங் நம்மை பாதிக்கிறது என்பதில் நம் அனைவருக்குமே மாற்றுக்கருத்து ஏதுமில்லை.

அதே சமயம், நெகட்டிவ் திங்கிங்குக்கு பாசிட்டிவ் திங்கிங் மட்டுமே ஒரு மாற்று மருந்து இல்லை. பல சமயம், பாசிட்டிவ் திங்கிங் செய்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்து பல விஷயங்களைச் சிந்தித்து அதை நடைமுறைப் படுத்தும்போதும் பல வெல்ல முடியாத சவால்களைச் சந்திப்போம். அப்போது நம்முடைய மனம் இன்னமும் சோம்பலடையவே செய்யும் இல்லையா? ஆனால், நியூட்ரல் நிலைமை என்பது நெகட்டிவ் திங்கிங்குக்கு ஒரு மாற்று மருந்தாகச் செயல் படுகிறது. ஏனென்றால், இதனால் மற்றுமொரு பாதிப்பு (நம்மால் இதையும் முடிக்க முடியவில்லையே என்ற மனச் சோர்வு, ஏக்கம் போன்றவை) நமக்கு மீண்டும் வராது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இதை ஓர் உதாரணத்துடன் பார்த்தால், சுலபமாகப் புரியும். 2020-ம் ஆண்டில் அமெரிக்காவில் கோவிட்-19 முதல் அலையின்போது இதை நம்மால் சமாளிக்க முடியும் என்று மக்கள் தளராத நம்பிக்கை (optimism) கொண்டிருந்த காரணத்தாலேயே தொற்று பெரிய அளவில் பரவியது. அதன் பின்னால் 2021-ம் ஆண்டில் தொற்றுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவரும் போட்டுக்கொண்ட பின்னாலுமே இந்த மருந்தால் பெரிய அளவில் பயனிருக்காது என்ற அவநம்பிக்கை (pessimism) அதே மக்கள் மனதில் குடி கொண்டிருந்தது. அதனாலேயே சாதாரண வாழ்க்கையை அவர்களால் வாழ முடியவில்லை. இதனால்தான் ஆப்டிமிசமும் வேண்டாம்; பெசிமிசமும் வேண்டாம். நியூட்ரல் என்ற நிலையே சிறந்தது என்கிறோம்’’ நாங்கள் என்கின்றனர் ஆசிரியர்கள்.

நியூட்ரல் திங்கிங்... ஏன் சரி..?

சரி நியூட்ரல் திங்கிங் என்றால் என்ன? நம்முடைய முடிவுகளை ஒரு சார்புநிலையை வைத்துக் கொண்டோ (Bias) அல்லது டேட்டாக்களை வைத்துக் கொண்டோ எடுப்பதைத் தவிர்ப்பதே நியூட்ரல் திங்கிங் ஆகும். உதாரணமாக, கால்பந்து போட்டியில் கடந்த பத்து பால் களில் கோல் போட முடியாத காரணத்தால் பதினோராவது தடவையும் கோல் போட முடியாது என்று நினைப்பது தவறு. ஏற்கெனவே நடந்தவற்றை முழுமையாக ஏற்றுக்கொள்வது, நாளை நடக்கவிருப்பதை ஏற்கெனவே நடந்தவற்றை வைத்து கணிப்பதைத் தவிர்ப்பதுமே நியூட்ரல் திங்கிங் என்பதாகும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

குறிப்பாகச் சொன்னால், என்னால் முடியாது என்றும் நினைக்கத் தேவையில்லை. என்னால் முடியாது என்றால் யாராலும் முடியாது என்றும் நினைக்கத் தேவையில்லை. இந்த இரண்டு வகை நினைப்புக்கு நியூட்ரல் திங்கிங்கில் இடமே இல்லை. ஏனைய ஊக்கப்படுத்தும் (motivational) நடைமுறைகள் இந்த வகை மாயை (Illusion) அல்லது சுய மாயை (self-delusion) நினைப்பையே ஊக்குவிப்பதாய் இருக்கின்றன. நியூட்ரல் திங்கிங் முறையில் இதற்கு இடமே கிடையாது என்கின்றனர் ஆசிரியர்கள்.

பயன் தராத ‘பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்’...

‘பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்’ என்பது பலருக்கும் உதவுவது இல்லை. என்னதான் நீங்கள் பாசிட்டிவ்வாக இருந்தாலும் தொடர் தோல்விகள்/சிக்கல்கள் வரும்போது உடைந்து போகவே செய்வீர்கள். இன்னும் சொல்லப் போனால், நாளடைவில் ‘பவர் ஆஃப் பாசிட்டிவ் திங்கிங்’ என்ற நடைமுறையே பலரிடம் எடுபடாமல் போய்விடுகிறது. ஏனென்றால், அவர்களுடைய சொந்த அனுபவமே அந்தக் கருத்துக்கு வலுசேர்ப்பதாக இல்லாமல் இருப்பதால்தான். பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் வெறுமனே பாசிட்டிவ் திங்கிங்குடன் இருப்பது என்ற நிலையிலிருந்து முழுமையாக மாறுபடவே செய்கின்றனர்.

இதில் கொடுமை என்ன எனில், பாசிட்டிவ் திங்கிங்கை நடை முறையாகக் கொண்டு செயல்பட முனைபவர்களில் பெரும்பாலா னோர் நாளடைவில் நெகட்டிவ் திங்கிங்குக்கு ஆட்பட்டு விடுவது தான் என்கிறார்கள் ஆசிரியர்கள். இதற்குக் காரணம் என்னவென்று ஆய்வுகள் சொல்வதைப் பார்ப்போம். பொதுவாக, ஒருவருடைய வாழ்வில் நடக்கும் நல்லவிஷயங்கள் ஏற்படுத்தும் பாதிப்பைவிட கெட்ட விஷயங்கள் ஏற்படுத்தும் பாதிப்பு மிக அதிகம் என்கிறது 2001-ம் ஆண்டில் கேஸ் வெஸ்டர்ன் பல்கலைக் கழகம் மற்றும் ஃப்ரீ வெஸ்டர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அம்ஸ்ட்ர்டேம் ஆய்வு முடிவுகள். இதனாலேயே திங்கிங்கைக் கோட்பாடாகக் கொண்டு செயலாற்றும் நபர்கள் பலரும் ஒரு கட்டத்தில் நெகட்டிவ் திங்கிங்குக்கு ஆளாகி அதிலேயே உழல ஆரம்பித்துவிடுகின்றனர்.

‘‘பாசிட்டிவ் திங்கிங் என்பது நடப்புக்கு சம்பந்தம் இல்லாத வகையில் எதிர்காலம் குறித்த எண்ணங்களை வளர்ப்பதாகும். நியூட்ரல் திங்கிங் என்பது வருவது வந்துவிட்டது. இனி மாற்ற முடியாது. அதனால், அடுத்து நடக்க வேண்டியது என்ன என்பது குறித்து சிந்தித்துச் செயலாற்றும் வகையிலானது.

கோவிட்-19 சூழலை 2020-ம் ஆண்டிலிருந்து நினைத்துப் பாருங்கள். மருந்துகள் கண்டுபிடிக்கப்படும், தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்படும் என்று பாசிட்டிவ் திங்கிங்குடன் மட்டும் நாம் இருக்கவில்லை. அடுத்து நடக்க வேண்டியது என்ன என்றே யோசித்தோம். வொர்க்-ஃப்ரம்-ஹோம், ஜும்/கூகுள் மீட் மூலம் பள்ளி வகுப்புகள் எனப் பல விஷயங்களை நடைமுறைப்படுத்தினோம். அதை விட்டுவிட்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்படும் என்று மட்டுமே நின்றிருந்தால் என்னவாகும்? மருந்துகள் வந்தது. மருந்துகள் முழுவதுமாகத் தொற்றிலிருந்து பாதுகாப்பது இல்லை. ஆனால், தொற்றால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. அதனால் இரண்டு வருடங்களாகியும் அவ்வப்போது கட்டுப்பாட்டுடன் இருக்கச் சொல்லி அரசாங்கங்களால் நாம் அறிவுறுத்தப்படுகிறோம். எனவே தான், அடுத்து நடக்க வேண்டிய விஷயங்களைப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கு ‘நியூட்ரல் திங்கிங்’ என்ற நிலைப்பாடே உதவுகிறது’’ என்கிறார்கள் ஆசிரியர்கள்.

வாழும் முறை பற்றி ஒரு மாற்றுக் கருத்தைப் பல்வேறு வகையான நிஜவாழ்க்கைச் சம்பவங்களுடன் தெளிவு படுத்தும் இந்தப் புத்தகத்தைப் படித்து பலன்பெறலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism