Published:Updated:

சிறந்த நிர்வாகிகளுக்கு அவசியமான 12 குணங்கள்!

சிறந்த நிர்வாகி
பிரீமியம் ஸ்டோரி
News
சிறந்த நிர்வாகி

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஒரு விளம்பர நிறுவனத்தில் சி.இ.ஓ-வாக இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் இருந்த போது நடந்த நிகழ்ச்சியைச் சொல்லி இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார். அந்த விளம்பர நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவர், நிறுவனத்தின் வாடிக்கை யாளரின் ட்விட்டர் கணக்கை, தன்னுடைய ட்விட்டர் கணக்கு என்று தவறாக நினைத்து, மோசமானதொரு கமென்ட்டை அந்த ஊழியர் போஸ்ட் செய்தாராம்.

புத்தகத்தின் பெயர்:
Twelve and a Half 
ஆசிரியர்:
Gary Vaynerchuk
பதிப்பாளர்:
HarperBusiness
புத்தகத்தின் பெயர்: Twelve and a Half ஆசிரியர்: Gary Vaynerchuk பதிப்பாளர்: HarperBusiness

இதைப் பார்த்த வாடிக்கையாளர் நிறுவனம், சி.இ.ஓ-வைத் தொடர்புகொண்டு, அந்த ஊழியரை உடனடியாக வேலையிலிருந்து நீக்க வேண்டும் என்று கறாராகச் சொன்னது. அந்த வாடிக்கையாளர் நிறுவனத்தின்மூலம் 30% டேர்ன் ஓவர் வந்துகொண்டிருந்ததால், அந்த ஊழியரை நீக்க வேண்டிய கட்டாயம் புத்தகத்தின் ஆசிரியரான சி.இ.ஓ-வுக்கு. என்றாலும், ‘‘நடந்தது தவறுதான். வேண்டு மென்றே யாரும் இதைச் செய்யவில்லை. எனவே, அந்தத் தவற்றை செய்த பணியாளரை வேலையை விட்டுத் தூக்குவது சாத்தியமில்லை’’ என்று சொல்லிவிட்டாராம்.

விற்பனை அதிகரிப்பு, லாப அதிகரிப்பு என காலாண்டுக்கு ஒருமுறை பிரஷர் அதிகமாகிக் கொண்டே போகும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற கடுமையான முடிவுகள் வர்த்தக ரீதியாக ஸ்மார்ட்டான முடிவுகளாகப் பார்க்கப்படாது. வியாபாரம் தரும் நிறுவனத் தின் அழுத்தத்துக்குக் கட்டுப்பட்டு நிறுவனங்கள் பணிநீக்கத்தையே தீர்வாக எடுத்திருக்கும்.

ஆனால், அது மாதிரியான முடிவு எடுக்கப் பட்டால், அது நிறுவனத்தினுள் ஒரு அசாதாரண பதற்றம் நிறைந்த சூழ்நிலையையே உருவாக்கும். அதுபோன்ற சூழல் நீண்ட நாள் அடிப்படையில் நிறுவனத்துக்கு கேட்டையே விளைவிக்கும் என்று சொல்லி ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

90 நாள் பிரஷர்...

பெரிய நிறுவனங்கள் அனைத்திலுமே எந்த ஒரு முடிவின் வெற்றியும் தோல்வியும் 90 நாள் என்கிற அளவீட்டு அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது. ஏனென்றால், பெரு நிறுவனங்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன. பங்குச் சந்தை முதலீட்டாளர்களோ 90 நாள்களுக்கு ஒரு முறை என்ன முன்னேற்றம் நடந்துள்ளது என்று அளவீடு செய்வதிலேயே குறியாக இருக் கின்றனர். இந்தவித 90 நாள் அடிப்படையில் பார்த்தால், ஒரு சி.இ.ஓ-வாக நான் எடுத்த முடிவு சரியானதல்ல. ஆனால், ஒரு சி.இ.ஓ-வாக நிறுவனத்தினுள் இதுபோன்ற பயத்தை நீக்கிய பின் நிறைய நல்ல விஷயங்கள் அதுவாகவே நடக்க ஆரம்பிக்கும். இந்தவித பயம் நிலவினால் பணியாளர்கள் ஒருவரை ஒருவர் கவிழ்க்க நினைப்பார்களே தவிர, கையில் இருக்கும் வேலையைச் சரியாக முடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

உணர்வுசார் நுண்ணறிவில் (Emotional Intelligence) கைதேர்ந்ததொரு சி.இ.ஓ-வோ, மேனேஜரோதான் இந்த மாதிரியான நீண்ட காலத்துக்கான முடிவுகளை நிதானமாக எடுக்க முடியும். உணர்வுசார் நுண்ணறிவு குறைவாக இருக்கும் நபர் அப்போதைக்கு வியாபார ரீதியில் சரியானதொரு முடிவை எடுப்பாரே தவிர, நீண்டகால அடிப்படையில் அந்த மாதிரியான முடிவுகள் தவறான விளைவுகளையே ஏற்படுத்தும்.

சிறந்த நிர்வாகிகளுக்கு அவசியமான 12 குணங்கள்!

வெற்றிக்கான 12 குணாதிசயங்கள்...

நன்றியுணர்வு, விழிப்புணர்வு, பொறுப்பை விருப்பத்துடன் ஏற்றல், நம்பிக்கையுடன் இருத்தல், அனுதாபம், கருணை, விடாப்பிடியாக இருத்தல், ஆர்வம், பொறுமை, எடுக்கும் முடிவை நம்பி உறுதியாக இருத்தல், பணிவு, லட்சியத்துடன் செயல்படுதல் என்கிற 12 குணாதிசயங்களைக் கலவையாகக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு நிர்வாகி என்பவர் நீண்ட கால அடிப்படையில் சிறப்பான செயல்பாடுகளை நிகழ்த்த முடியும் என்று சொல்லும் ஆசிரியர், இந்த 12 குணாதிசயங்கள் எப்படிப்பட்டவை என்பது பற்றியும் சொல்கிறார்.

இந்த 12 குணாதிசயங்களில் முக்கியமானது, பொறுமை. ஆனால், இன்றைய பரபரப்பாக கார்ப்பரேட் உலகில் பொறுமையைக் கடைப்பிடித்தால், உச்சபட்ச பதவியை என்னால் எட்டிப்பிடிக்க முடியுமா என்று நீங்கள் கேட்கலாம். பொறுமையால் லட்சியத்தை அடைய முடியாது என்று நீங்கள் முழுமையாக நம்பவும் செய்யலாம். ஆனால், நிஜத்தில் பொறுமை என்ற பாதையே லட்சியத்தை அடைவதற்கான சரியான பாதை என்பதை நீங்கள் காலம் செல்லச் செல்ல புரிந்துகொள்வீர்கள்.

பொறுமையும் உணர்வுசார் நுண்ணறிவும் முக்கியம்...

ஒரு நிர்வாகியாகவோ, சி.இ.ஓ-வாகவோ உங்களின் கீழே பணிபுரியும் நபர்களை முன்னேற்றமடைய வைக்க மிகவும் அதிக அளவிலான பொறுமை வேண்டியிருக்கும். ஒரு நிர்வாகிக்கோ, தொழில்முனைவோருக்கோ காலம் குறித்த புரிதல் என்பது மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. குறுகிய காலத்தில் எல்லாவற்றையும் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பதாலேயே (பிசினஸ் வாழ்க்கையில்) வெற்றிக்கு மிகவும் குறைவான வாய்ப்புகள் உள்ள (low probability) விஷயங்களை அவர்கள் செய்ய முயல்கிறார்கள். பொறுமையின்மையால் அவர்கள் தவறான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள் என்று கூறலாம்.

அடுத்து உணர்வுசார் நுண்ணறிவு. ஒரு தொழிலின் வளர்ச்சிக்கான வாய்ப்பு அதை நிர்வகிக்கும் நிர்வாகியின் உணர்வுசார் நுண்ணறிவு எந்த அளவுக்கு அதிகமாக இருக் கிறதோ, அந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறது. வாழ்க்கை என்ற கடல் போன்ற பல்வேறு முக்கியத்துவங்கள் கொண்ட மிகப் பெரிய விஷயத்தில் நம்முடைய பிசினஸ் என்பது மிக மிக முக்கியத்துவம் குறைந்த ஒன்றே ஆகும். இதைப் புரிந்து கொண்டு வாழ்க்கைக்கான விஷயங்களை அதிகமாக நடைமுறையில் கொண்டு வாழ்ந்தால், பிசினஸ் என்பது தானாகவே செழிப்பாக வளர்ந்து செழிக்கும்.

மேலும், நன்றியுணர்வுடன் நாம் இருந்தாலோ, நம்முடைய பிசினஸில் நாம் மிகவும் வலிமை உள்ளவராக உருவெடுக்க முடியும். ஏனென்றால், இந்த நன்றியுணர்வே நமக்கான சக்தியையும் (நம்மிடம் இருக்கும் விஷயங்களில் இருந்து) மகிழ்ச்சி யையும் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்.

உங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ளுங்கள்...

அதே போல், உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்ட தருணத்திலேயே நீங்கள் மற்றவர்களைப் பார்த்து அஞ்சுவதை விட்டொழிப்பீர்கள். இது உங்களுடைய தொழிலுக்கு மிகப் பெரிய அளவில் உதவும். உங்களுடைய இந்த நிலைக்கு நீங்கள் அடுத்தவர்களைக் (பாஸ், உங்களுடன் பணிபுரிபவர், வாடிக்கையாளர் என) காரண மாகக் கூறினால், உங்களுடைய நடவடிக்கைகளில் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்றுதானே அர்த்தம்? நம்முடைய வாழ்க்கை என்பது நம்முடைய கட்டுப் பாட்டில் இருக்க வேண்டும் என்பதை உங்களுடைய பிசினஸ் வாழ்க்கையில் நடைமுறைப் படுத்திப் பாருங்கள். அதில் உருவாகும் சந்தோஷத்தின் அளவே நிச்சயம் வேறு லெவலில் இருக்கும் என்றும் சொல்கிறார்.

எடுத்த காரியத்தை முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை கொண்டிருக்கும் நீங்கள், அத்துடன் அந்தச் செயல் நல்ல படியாக முடியும் என்கிற உங்களுடைய நம்பிக்கையையும் விடாமுயற்சியையும் இணைக்கிற மாத்திரத்தில் வெற்றி என்பது கைகூடி வந்து உங்களுடன் நிலைத்து நிற்பதற்கான வாய்ப்பு அதிகமாகும். அதே போல், செய்யும் செயலின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையும் அதைத் தொடர்ந்து செய்வதற் கான உறுதிப்பாடும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வல்லது. நீங்கள் செய்யும் செயலின் மீது மிக அதிகமான நம்பிக்கையைக் கொண்டிருந்தீர்கள் எனில், என்ன கஷ்டம் வந்தபோதிலும் அதைத் தொடர்ந்து செய்வது என்பதில் உங்களுக்கு எந்தவிதமான தயக்கமும் ஏற்படாது என்கிறார் ஆசிரியர்.

லட்சியத்தை வெளிப்படையாகச் சொல்லுங்கள்...

எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களுடைய லட்சியம் குறித்து ஒருபோதும் வெளிப்படையாகப் பேசத் தயங்காதீர்கள்.ஏனென்றால், உங்களுடைய லட்சியம் குறித்து நீங்கள் வெளிப்படையாகப் பேசும்போதுதான் உங்களுக்கு அதை அடைவதற்கான முயற்சிகளைச் செய்வதற்கான பொறுப்பு அதிகரிக்கிறது என்று சொல்லி புத்தகத்தின் முதல் பகுதியை முடிக்கிறார் ஆசிரியர்.

இரண்டு மற்றும் மூன்றாவது பகுதிகளில்...

புத்தகத்தின் இரண்டாவது பகுதியில், நிஜவாழ்வில் நிகழும் பல்வேறு உதாரணங்களைச் சொல்லி, அதுபோன்ற சூழ்நிலைகளில் இந்த 12 விஷயங்களைக் கொண்டு அவற்றை அணுகுவது எப்படி என்று விளக்கியுள்ளார். மூன்றாவது பகுதியில், இந்தப் புத்தகத்தில் கூறப்பட்டுள்ள 12 விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஏற்றவாறு உங்களுக்கான பயிற்சிகள் பலவற்றையும் தந்துள்ளார் ஆசிரியர்.

நம்முடைய சமுதாயத்தில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வகையான சுதந்திரங்கள் இருக்கின்றன. இந்தப் புத்தகத்தில் உள்ள நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு வாழ்வின் முக்கியமான விஷயமான மனஅமைதி எனும் சுதந்திரம் முழுமையாகக் கிடைக்கும் என்று கூறி முடிக்கிறது இந்தப் புத்தகம்.

பிசினஸில் வெற்றி பெறுவதற்கான மாற்றுச்சிந்தனை கொண்ட உத்திகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை நிர்வாகிகளும் தொழில்முனைவோர்களும் அவசியம் படித்துப் பயன்பெறலாம்.