Published:Updated:

பயத்தைத் தூக்கி எறியுங்கள்... பயணத்தை உடனே தொடங்குங்கள்..!

செல்ஃப் டெவலப்மென்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்ஃப் டெவலப்மென்ட்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

"கப்பல் எப்போதுமே துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டால் மிகுந்த பாதுகாப்பாக இருக்கும்; ஆனால், கப்பல் கட்டப்பட்ட நோக்கம் அதுவல்ல என்ற பொன் மொழியை வலது முன்கையில் பச்சை குத்தியிருக்கிறேன். ஏனென்றால், என் வாழ்வில் எப்போதுமே செளகரிய எல்லையை (comfort zone) விட்டு விலகி இருக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லி இந்தப் புத்தகத்தை (Built Through Courage) ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பெயர்:
Built Through Courage
ஆசிரியர்:
Dave Hollis
பதிப்பாளர்:
HarperCollins Leadership
புத்தகத்தின் பெயர்: Built Through Courage ஆசிரியர்: Dave Hollis பதிப்பாளர்: HarperCollins Leadership

பயமே தடை...

“நாம் செய்ய பயப்படும் விஷயங் களைச் செய்து, புதிய அனுபவங்களைப் பெற்று அந்தக் காரியங்களில் தவறு களைச் செய்து அதிலிருந்து மீள்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டால் மட்டுமே தலைசிறந்த எல்லைகளைத் தொட முடியும். ஆனால், நாமோ நம்மை துறைமுகத்திலேயே கட்டி வைத்துக்கொண்டு இருக்கிறோம். ‘ஒருவேளை இப்படி ஆகிவிட் டால், ஒருவேளை அப்படி ஆகிவிட்டால், நம் சுற்றமும் நட்பும் நம்மைப் பார்த்து என்ன சொல்லும்’ என்ற எண்ணத்தில் கட்டுப்பட்டு வாழும் நிலைப்பாட்டையே தொடர்ந்து எடுக்கிறோம். இந்தப் புத்தகத்தின் நோக்கம் நீங்கள் கட்டப்பட்டிருக்கும் துறைமுகத்தில் இருந்து (கம்ஃபர்ட் ஜோன்) உங்களை அவிழ்த்து விடுவதே ஆகும்.

இன்றைய சூழலில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. நாளை நமக்குக் கொண்டுவந்து சேர்க்கப்போகும் சர்ப்ரைஸ் என்ன என்பதை நம்மால் ஒரு போதும் கணிக்க முடியாத சூழ்நிலையில் வாழும் நாம் இருக்கும் இடம் பாதுகாப்பானது என்று நினைப்பது நகைமுரண் இல்லையா?” என்று கேட்கிறார். இதற்கு உதாரணமாக அவர், 2019 வருட இறுதியில் கொண்டாடிய கொண்டாட்டங்களும் 2020-ல் சாதிக்க வேண்டியவை என்று போட்ட பட்டியலையும் சொல்கிறார். இதனாலேயே வாழ்க்கைக் கடலினுள் பயம் நீக்கி பயணத்தைத் தொடங்க நீங்கள் உடனடியாகத் தயாராகுங்கள் என்று உற்சாகமூட்டவும் செய்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

பயத்தைத் தூக்கி எறியுங்கள்... 
பயணத்தை உடனே தொடங்குங்கள்..!

இயக்கும் சக்தி...

“இந்த உலகில் நம்மைவிட பெரிய சக்தி ஒன்று இருக்கிறது. அவரவர்களுடைய நம்பிக்கை மற்றும் கொள்கைகளுக்கு இணங்க இறைவன், இயற்கை, உள்ளுணர்வு எனப் பல விதமான பெயர்களை அதற்கு வைத்துக்கொள் கிறோம். அதுவே, உங்களுக்கான பாதையைத் தீர்மானித்து நடத்திச் செல்கிறது. உங்களுக்குள் இருக்கும் துணிவே உங்களை வழிநடத்திச் செல்லும் அந்த சக்தி. அது உங்களை எந்தத் திசையில் அழைத்துச் செல்லத் திட்டமிட்டு உள்ளது என்பதை அறிவதற்கான முயற்சியைச் செய்கிறது. இதை உணர்ந்துகொண்டால் நீங்கள் உங்கள் உள்ளுணர்வையும் தைரியத் தையும் கொண்டு, செல்லும் திசையை ஓரளவுக்கு தீர்மானித்துக்கொள்ளும் பண்பைக் கொண்டிருப்பீர்கள். நம்மை மீறிய சக்தியானது நமக்குக் காட்டும் சமிக்ஞைகளை உணர்ந்து கொண்டு அதனுடன் பயணிப்பதே சரியான அணுகுமுறை.

அதென்ன அப்படிப்பட்ட நம்மை மீறிய சக்தியின் வழிகாட்டுப் பயணம் என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் ஒரு தகப்பனாகவோ, தாயாகவோ உங்களுடைய குழந்தையை ஆரம்பத்தில் எழுந்து நடப்பதற்கான ஊக்கத்தை எப்படி அளித்தீர்கள் என்பதைக் கொஞ்சம் ஞாபகப்படுத்திப்பாருங்கள். ஒரு பெற்றோராக வெளியே இருந்து நீங்கள் கொடுத்த தூண்டுதலே குழந்தையை சுலபமாக நம்பிக்கையுடன் நடக்க வைத்தது இல்லையா? அதே போன்றதுதான் இதுவும். குழந்தையின் உடல்வாகு, வெளியில் இருந்து நீங்கள் கொடுத்த ஊக்கம் என்ற இரண்டும் இணைந்துதான் அந்தக் குழந்தை தானாக உதவியின்றி நடந்திருக்கும் இல்லையா?

மூன்றுவித நம்பிக்கை...

ஒரு சராசரி மனிதனாக நீங்கள் இப்போதைக்கு இருக்கும் இடத்தில் உள்ள சிரமங்கள் உங்களுக்குப் பழகிப்போயிருக்கும். பழகிப்போன கஷ்டங்கள் செளகரியத்தின் எல்லைக்குள் இருந்துவிடுகின்றன. இதனால் செளகரியத்தையும் அனுபவித்துக்கொண்டு முன்னேற்றம் இல்லை என்று புலம்பிக் கொண்டு, சாமர்த்தியமாக நாம் திரிந்து கொண்டிருப்போம். முன்னேற்றம் இல்லை எனில், இதைவிட்டு வெளியேறி வேறு இடத்துக்குச் சென்று விட வேண்டியதுதானே என்று கேட்டால், அங்கே புதிது புதிதாக பிரச்னைகள் இருக்கும்; அதற்கு பயந்துகொண்டுதான் நான் இந்தத் துறைமுகத்திலேயே நங்கூரம் பாய்ச்சி இருக்கிறேன் என்று கூறுவோம்.

ஆனால், அந்தப் புதிய இடங்களில்தான் நாம் தேடும் வளர்ச்சி என்பது இருக்கும். இந்த இடம் பெயர்தலைச் செய்ய மூன்று நம்பிக்கைகள் நமக்கு வேண்டியிருக்கிறது. முதலாவது, நம் மீது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை. இரண்டாவது, நம்மைத் தாண்டிய நம்மை இயக்கக்கூடிய விஷயத்தின் மீது இருக்கும் நம்பிக்கை. மூன்றாவது, நம்முடைய செளகரிய எல்லையைத் தாண்டி இருக்கும் இடத்தில் நமக்குத் தேவையான / நாம் ஆசைப்படுகிற அளவிலான வாய்ப்புகள் இருக்கும் என்கிற நம்பிக்கை. இந்த மூன்று நம்பிக்கைகளுமே நம்மை இருக்கும் இடத்தில் இருந்து அசைக்க உதவுகின்றன.

இரவல் மேப் வேண்டாம்...

இந்தவித முதல் முயற்சியை எடுப்பதில் இருக்கும் தயக்கத்தை முறியடித்தால் மட்டுமே நாம் முன்னேற்றத்துக் கான பாதையில் பயணிக்க முடியும். அதற்கு நமக்கு மிக மிக அவசியமான ஒன்று, தைரியம். இப்படி நாம் எடுத்து வைக்கும் முதல் அடியே நாம் கொண்டிருக்கும் திறமைக்கு ஏற்ற நிலையை அடைவதற்கான பாதையில் பயணிக்க உதவும். இதில் இன்னும் ஒரு சிக்கல், நம்மில் பெரும்பாலானோர் நமக்கு எது தேவை என்பதை உணராமல் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு பயணத்தைத் தொடங்குவதுதான். இது எப்படி எனில், அடுத்தவரிடம் இருக்கும்... அவர் போக நினைக்கும் ஊருக்கு செல்வதற்கான வழியைக் காட்டும் மேப்பை இரவல் வாங்கி நாம் போக வேண்டிய இடத்துக்கு செல்வதற்கான பயணத்தைத் தொடங்குவது போன்றதாகும். ஏன் இதில் பெரும்பான்மையானவர்கள் என ஏன் சொல்கிறோம் எனில், நாம் முதலில் பணிக்குச் சேரும் நிறுவனத்தில் இருக்கும் அனுபவஸ்தர்களின் மேப்பை சுலபத்தில் இரவலாக வாங்கி நாம் போக வேண்டிய ஊர் அதுதான் என்று நினைத்துப் பயணித்துவிடுவோம்.

பத்து, பதினைந்து வருடம் தாண்டி பயணிக்கும் போதுதான் இது நமக்கு செட் ஆகாது என்று நமக்கு திட்டவட்டமாகப் புரியும். பெரும்பாலானோர் இந்த நிலைக்கு வந்துவிட்டு அவர்கள் காணும் தேக்கநிலையை ‘மிட் லைஃப் க்ரைசிஸ்’ என்று சொல்வதை நாம் பார்க்கிறோம். இது இல்லாத நபர்கள் மிகவும் குறைவாக இருப்பதானாலேயே பெரும்பாலானோர் என்று நான் அடித்துச் சொல்கிறேன்” என்கிறார் ஆசிரியர்.

மாற்றத்துக்கான பதில்...

இன்றைக்கு நீங்கள் ‘மிட் லைஃப் க்ரைசிஸில்’ இருந்தால் பின்வரும் கேள்விகளை உங்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இன்றைக்கு நீங்கள் இருக்கும் நிலைக்கு வருவதற்குமுன் நீங்கள் என்னவாக வேண்டும் என்று நினைத்தீர்கள்? நீங்கள் 19 வயதில் இருக்கும்போது உங்களுடைய கனவு என்னவாக இருந்தது, இன்றைக்கு உங்களுக்கு இருக்கும் கடமைகள் மற்றும் பொறுப்புகள் உங்களுக்கு வந்து சேர்வதற்கு முன் உங்களை சந்தோஷப் படுத்தும் விஷயங்களாக இருந்தவை என்னென்ன? இந்தக் கேள்விகளுக்கான பதிலை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எனில், இந்த நிலையில் இருந்து மாற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்குப் புலப்பட ஆரம்பிக்கும்” என்கிறார் ஆசிரியர்.

பயணம் தொடங்கட்டும்...

‘‘நீங்கள் இப்போது இருக்கும் துறைமுகமானது உங்கள் குடும்பம், நண்பர்கள், சமூகம் நிர்ணயம் செய்த ஒரு துறைமுகம். அங்கே நங்கூரம் பாய்ச்சி இருப் பது அவர்கள் விருப்பத்துக்கு இணங்கவும் உங்களின் செளகரியத்துக்காகவும் என்று கொள்ளலாம். இங்கேயிருந்து கப்பலைக் கிளப்பலாம் என்று நினைத்தாலே பயம் நம்மை பற்றிக் கொள்ளும். இருக்கும் துறைமுகம் செளகரிய மாக இல்லாவிட்டாலும் கூட பழகிப்போயிருக்குமே! அதுதான் மிகப்பெரிய சிக்கலே. இங்கிருந்து கப்பலைக் கிளப்பினால் நமக்கு என்ன அசெளகரியங்கள் வரும், பிறருக்கு என்னென்ன அசெளகரியங்கள் வரும் என்பதையெல்லாம் சிந்தித்து தெளிவான முடிவெடுத்து பயணத்தைத் தொடங்க வேண்டும்.

இது கொஞ்சம் கடினம் என்றாலும், நீங்கள் யாராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த நிலைக்குச் செல்ல இந்தக் காரியத்தை நீங்கள் செய்தேயாக வேண்டும். உங்கள் வாழ்க்கைக் கதையை மாற்றி எழுதும் தருணம் இது. என்ன செய்வது? கட்டாயம் இந்தவித பயங்களை நீங்கள் கடந்தேயாக வேண்டும். இந்த நடவடிக்கையை நீங்கள் எடுக்க முயலும்போது நீங்கள் இதுவரை உங்கள் வாழ்வில் கடந்து வந்த கடிமான விஷயங்களையும் நினைவுபடுத்திப் பார்த்தால், இப்போது எடுக்கப்போகும் முடிவுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும்.

கொஞ்சம் வேடிக்கையாக இருந்தாலும் நீங்கள் வாழ்க்கையை ஆரம்பித்த காலத்தில் இருந்த உங்களுக்கே நீங்கள் இன்றைக்கு இருக்கும் நிலை குறித்து ஒரு கடிதம் எழுதுங்கள். அந்தக் கடிதத்துக்குப் பதிலாக கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கொண்ட அந்த இளைஞன் (நீங்கள்தான்) என்ன எழுதுவான் என்று சிந்தித்துப் பாருங்கள். அந்த இளைஞன் உங்களுக்கு எழுதும் பதிலில் நிச்சயமாக உங்களின் மீது நம்பிக்கை கொள்ளச் சொல்வான். இன்னும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்பச் சொல்வான் இல்லையா...” என்று கேட்கிறார் ஆசிரியர்.

“இதைச் செய்த பின்னாலும் ஊக்கம் வரவில்லையா கவலையை விடுங்கள். நாம் கிளப்புவோம் கப்பலை. நாம் செல்ல வேண்டிய துறைமுகம் வேறு என்பது தெரிந்த பின்னால் ஊக்கம் என்பதெல்லாம் தேவையில்லாத ஆணிதானே...” என்று கிண்டலாகச் சொல்கிறார் ஆசிரியர்.

நீங்கள் மதிக்கும் விஷயங்கள், உங்களுடைய அடையாளம், உங்களுக்கு இருக்கும் கடமைகள் என வரிசையாகப் பல தடைக்கற்கள் உங்களுடைய பயணத்தை ஆரம்பிக்க தடையாக வந்து கொண்டேயிருக்கும். இவற்றில் புறந்தள்ள வேண்டியவற்றைப் புறந்தள்ளி, கவனித்து மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியவற்றுக்கு மாற்று ஏற்பாடு செய்து பயணத்தைத் தொடங்குவது எப்படி என்பதை இந்தப் புத்தகம் தெளிவாக நிஜவாழ்க்கை உதாரணங்களுடன் விளக்குகிறது.

மாற்றத்தை விரும்பும் நமக்கு மாறுவது குறித்து இருக்கும் அதீத பயத்தைப் போக்கும் கையேடாக உதவும் இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து படித்து நடைமுறைப்படுத்தினால், நம்மை சரியான இடத்துக்குக் கொண்டு சேர்க்க உதவும்.

இருக்கும் நிலையில் இருந்து மாற வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் இந்தப் புத்தகத்தைப் படித்துப் பலன் பெறலாம்.