நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

உங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ‘ஸ்மார்ட் வொர்க்’ பிளான்!

ஸ்மார்ட் வொர்க்
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்மார்ட் வொர்க்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

ஸ்மார்ட்டாக வேலை செய்து நினைத்த காரியங்களையெல்லாம் முடிப்பது எப்படி என்பதைச் சொல்கிறது இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் புத்தகமான ‘க்ரிப்.’

புத்தகத்தின் பெயர்:
Grip
ஆசிரியர்:
Rick Pastoor
பதிப்பாளர்:
Thorsons; HarperCollins
புத்தகத்தின் பெயர்: Grip ஆசிரியர்: Rick Pastoor பதிப்பாளர்: Thorsons; HarperCollins

ஸ்மார்ட்டாக வேலை செய்வது...

“இன்றைக்குப் பலருக்கும் இருக்கும் பெரிய பிரச்னை வேலை என்பது நம் வாழ்க்கையில் பெரிய அளவிலான பகுதியை ஆக்கிரமித்துக்கொள்வதுதான். ஆனால், அதை எப்படி சிறந்த வகையில் நேர்த்தியாகச் செய்வது என்பது குறித்து நமக்கு யாரும் கற்றுத் தருவதில்லை. அது இயல்பாக நமக்கு வர வேண்டும் என்றே உலகம் எதிர்பார்க்கிறது. முக்கியமான விஷயங்களுக்கு நேரத்தை எப்படி ஒதுக்குவது, ஒரே நேரத்தில் இரண்டு விஷயங் களை மாற்றி மாற்றி செய்யத் தேவையான அளவிலான கவனத்தில் வைத்துச் செய்வது, குறிப்பிட்ட வேலையைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பது எப்படி, அதற்காகத் திட்ட மிடுவது எப்படி, வேலையை சரியான நேரத்தில் முடிப்பது எப்படி என்பதை எல்லாம் தான் ஸ்மார்ட்டாக அதாவது, நேர்த்தியாக வேலை செய்வது...” என எடுத்த எடுப்பிலேயே சிறு விளக்கம் தருகிறார் புத்தக ஆசிரியர்.

“இவையெல்லாம் என்ன பெரிய விஷயமா... என்று நமக்குத் தோன்றும். அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்பதே நிஜம். நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை பார்த்தபோதிலுமே நாளின் இறுதியில் மெயில் பாக்ஸில் பதில் எழுத வேண்டிய மெயில்கள் எக்கச்சக்கமாக நிலுவையில் இருப்பதும், அடுத்த ஒரு மாதத்துக்கு ஓய்வு என்பதே சாத்தியமில்லாத என்கிற சூழ்நிலையை காலண்டர் காட்டுவதும், செய்து முடிக்க வேண்டிய விஷயங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போவதும் ஒரு மனிதன் வேலையில் கொண்டிருக்கும் ஈடுபாட்டைத் தகர்த்தெறிய செய்யும்.

குறித்து வைத்து வேலை செய்வது...

ஒரு நாளின் வேலை நேரத்தில் பெரும் பகுதியைக் கடந்த பின்னரும் கையில் இருக்கும் வேலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை நீங்கள் உணர்ந்த அந்த நொடியே நீங்கள் ஒட்டுமொத்தமாக முடங்கிப்போவீர்கள். இதுபோன்ற சூழலில் நாம் சிக்கிக்கொண்டால், வேலை அதிகமாக அதிகமாக நாம் வேலை செய்வதை விட்டுவிட்டு, அதை நிர்வகிப்பதையே முதன்மையான குறிக்கோளாக ஆக்கிக்கொண்டுவிடுவோம். அதாவது, எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கி செயல்படுவதற்கான சாதுரியமான முயற்சி களை நாம் செய்ய ஆரம்பிப்போம். ஏனென்றால், எல்லா வேலையுமே உடனே செய்து முடித்தாக வேண்டும் என்று நாம் செயல்பட ஆரம்பிப்போம். வேலை நடப்பதில் நிஜமான முன்னேற்றம் என்பது நீங்கள் எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்து செய்வதாலோ, அந்த நேரத்தில் உங்கள் மனதில் எந்த வேலை நினைவுக்கு வருகிறதோ, அதைச் செய்வதாலோ அல்ல.

நீங்கள் எந்த அளவுக்கு பிசியாக ஆரம்பிக்கிறீர்களோ, அந்த அளவுக்கு உங்களுக்கு வேலை பார்ப்பதற்கான புதிய நடைமுறை ஒன்று தேவைப்படும் என்பதே இன்றைய சூழ்நிலையில் மறுக்க முடியாத நிஜம். அந்த நடைமுறையைச் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்” என்கிறார் ஆசிரியர்.

உங்கள் முன்னேற்றத்துக்கு உதவும் ‘ஸ்மார்ட் வொர்க்’ பிளான்!

ஸ்மார்ட்டாக உழைத்து வாழுங்கள்...

“ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். இந்தப் புத்தகத்தில் ஒருபோதும் ரொம்பவும் கஷ்டமெல்லாம் படாதீர்கள் – டேக் இட் ஈஸி என்பது போன்ற வார்த்தை களை நான் சொல்லவே மாட்டேன். பிசியான வாழ்க்கை என்பது நமது எல்லைகளைத் தாண்டி நாம் திறம்பட செயல் படுவதிலேயே இருக்கிறது. இருக்கும் நேரத்தை சரிவர நிர்வகித்து வேலை மற்றும் குடும்பம் என்ற இரண்டையும் சரிவர கவனியுங்கள் என்ற கருத்தும் இந்தப் புத்தகத்தில் இல்லை. இருக்கிற நேரத்தை எப்படி அதிக உற்பத்தித்திறன் கொண்டதாக ஆக்க முடியும் என்பதைத்தான் இந்தப் புத்தகம் சொல்கிறது. கஷ்டப்பட்டு உழையுங்கள் என்று சொல்லாமல், ஸ்மார்ட்டாக உழைத்து வாழுங்கள் என்று சொல்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர்.

மூன்று பிரிவுகள்...

மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதலாவது பகுதி, ஒரு நாளில் நீங்கள் செய்யும் செயல்களின் மீது பிடிமானத்தை ஏற்படுத்துவது எப்படி என்பதையும், ஸ்மார்ட்டாகவும் ஸ்ட்ராட்டஜிக்காவும் உங்களுடைய நேரத்தை உபயோகிப்பது எப்படி என்பது குறித்தும் சொல்கிறது.

எல்லோருக்கும் ஒரே அளவில் தரப்பட்டதுதான் நேரம். ஒரு வேலையைச் செய்து முடிக்க எவ்வளவு நேரம் இருக்கிறது என்கிற கோணத்தில் பார்க்காதீர்கள். அந்த நேரத்தை நீங்கள் எப்படி செலவிடப்போகிறீர்கள் என்று பாருங்கள். அந்த வேலையை முடிக்க எந்தப் பாதையை நீங்கள் தேர்வு செய்யப்போகிறீர்கள் என்பதில் இருந்தே உங்களுடைய நேரத்தை அதற்கு எப்படி செலவிடப் போகிறீர்கள் என்பது தீர்மானமாகிறது. இதைச் சுலபமாகச் செய்ய ஒரு வாரத்துக்கு நாம் என்னென்ன விஷயங்களைச் செய்யப்போகிறோம் அதாவது, ஒரு செயலை செய்து முடிக்க எந்தப்பாதையில் பயணிக்கப்போகிறோம் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். புத்தகத்தின் முதல் பிரிவானது, நாம் நம்முடைய ஒவ்வொரு மணி நேரத்தின் மீது ஒரு பிடிப்பைப் (GRIP) பெறுவது எப்படி என்பதை விளக்குகிறது.

அவசியம் இல்லாத விஷயங்களைச் செய்யாதீர்கள்...

இன்றைக்கு பலரும் வேலை குறித்த விஷயங்களை ஒரு டைரி காலண்டரில் குறித்து வைத்து வேலை பார்ப்பதாகவே கூறுவார்கள். இங்கேதான் தவறு நடக்க ஆரம்பிக்கிறது. ஒரு நபருடைய காலண்டர் என்பது அவருக்கு அந்த நாளில் எதை முதலில் செய்ய வேண்டும், எதை அடுத்து செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்க வேண்டுமே தவிர, செயல் களின் முக்கியத்தன்மை குறித்து எந்தவிதமான கவலையும் கொள்ளாமல் எதை எதை, எப்போது செய்ய வேண்டும் என்பதைக் கூறுவதாக இருக்கக் கூடாது.

முதலில் உங்களுடைய டைரியைப் பாருங்கள். நீங்கள் செய்ய வாய்ப்பில்லாத விஷயங் கள் ஏதும் அதில் இருந்தால், முதலில் அதை நீக்கிவிடுங்கள். உதாரணமாக, நீங்கள் பங்களிக்கவே செய்யாத அன்றாட மீட்டிங்குகள் ஏதும் அதில் இருந்தால், முதலில் அதை அடித்துவிடுங்கள். எதை எல்லாம் நீங்கள் நிச்சயமாகச் செய்வீர்களோ, அவற்றை மட்டும் டைரி காலண்டரில் வைத்துக்கொள்ளுங்கள்’’ என்கிறார் ஆசிரியர்.

“ பெரும்பாலானவர்களுடைய டைரி காலண்டர்களில் அவர்கள் அன்றாடம் செய்ய வேண்டிய விஷயத்துக்கான நேர ஒதுக்கீட்டுக்கான இடமே இருக்காது. இவரைப் பார்க் கிறோம், அவரைப் பார்க்கிறோம், இந்த மீட்டிங்குக்கு செல்கிறோம் என்ற குறிப்புகளே இருக்கும். இப்படி நேரடியாகச் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்ய நேரம் ஒதுக்காமல் இருக்கும் காலண்டரை வைத்துக் கொண்டு வேலை நடக்கவில்லை என்று வருத்தப்படுவதில் என்ன பயன்’’ எனக் கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.

‘‘உங்களுடைய காலண்டரில் நீங்கள் எப்படி நேரத்தைச் செல விடுகிறீர்கள் என்பதைக் காண வேண்டும் எனில், முதலில் அது உங்களுடைய முக்கியமான பணிகள் என்னென்ன என்பதை மட்டுமே காட்ட வேண்டும். உங்களுடைய முக்கியமான பணி என்ன என்பதை நீங்கள் எப்படிக் கண்டறிவது என்று கேட்பீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதற் கெல்லாம் பொறுப்பு, உங்கள் நிறுவனம், நீங்கள் வேலை பார்க்கும் பிரிவு, உங்களுடைய குழு போன்றவற்றின் தலையாய பணி எது, உங்களுடைய மேனே ஜருக்கு நீங்கள் எந்தெந்த விஷயங் களில் அவசியமாகத் தட்டாமல் பதில் சொல்ல வேண்டியிருக்கும். உங்களுடைய ஃபர்பாமன்ஸ் ரிவ்யூ/ஃபீட்பேக் நன்கு அமைய எதையெல்லாம் அவசியமாகச் செய்ய வேண்டியிருக்கும் என முக்கியமான பணிகள் என்னென்ன என்பதற்கான விடையைக் கண்டறிய உதவும் கேள்விகளாக இருக்கும்’’ என்கிறார் ஆசிரியர்.

அடுத்தபடியாக, நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது, உங்கள் வேலைபார்க்கும் ஸ்டைல். உங்களுடைய வேலை நேரத்துக்கும் வேலை பார்க்காமல் இருக்கும் சோம்பேறித் தனமான நேரத்துக்கும் இடையேயான விகிதாசாரம் எவ்வளவு என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, ஒரு மீட்டிங் முடிந்தபின்னால் நீங்கள் உங்களுடைய வேலைக்குள் இயல்பாய் மூழ்க எவ்வளவு நேரம் பிடிக்கும் என்று பார்க்க வேண்டும். அதே போல, உங்களுடைய தலை சிறந்த பர்ஃபாமன்ஸ் என்பது அதிகாலையில் இருக்குமா அல்லது மாலையிலும் இரவிலும் இருக்குமா என்பது குறித்தும் ஆராய வேண்டும்” என்கிறார் ஆசிரியர்.

அதே போல, பலபேர் சூழ்ந்திருந்தாலும் வேலையைத் தொடர்ந்து பார்க்கும் குணம் கொண்டவரா அல்லது தனியாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வேலை ஓடுமா, வேலையை முடிப்பதற்கான இலக்கு நாளை நிர்ணயித்தால் மட்டுமே நீங்கள் சிறப்பாகச் செயல்படும் நபரா அல்லது இலக்குகள் இல்லாத வேலையையும் உடனுக்குடன் சிறப்பாகச் செய்யும் குணாதிசயம் கொண்டிருப்பவரா..? இது போன்ற பல்வேறு கேள்விகளுக்கான பதிலையும் அதற்கான செயல்பாட்டு வழிமுறைகளையும் ஆசிரியர் விளக்கமாகக் கூறியுள்ளர்.

இரண்டாவது பிரிவில் நாள்களை வசப்படுத்துவதால், வருடத்தை வசப்படுத்துவது எப்படி, உங்களை வழிநடத்து வது உங்களுக்கு பிடித்த விஷயங்களா அல்லது உங்களுடைய திறமையா என்பது போன்றவற்றை விளக்கமாகச் சொல் கிறார் ஆசிரியர். அதேபோல, ஓர் ஆண்டுக்கான திட்டத்தை சுலபமாகத் தீட்டுவது எப்படி என்பதையும் பல்வேறு உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

மூன்றாவது பகுதியில், நீங்கள் ஒரு புதிய மனிதராக உங்களுடைய இமேஜ் மற்றும் குணாதிசயங்களை மாற்றிக் கொண்டு செயல்படுவது எப்படி, குறைவாகப் பேசுவதால் கிடைக்கும் பலன்கள், எல்லா விதமான பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து இந்தப் புத்தகம் விளக்குகிறது.

பரபரப்பான அலுவலக வாழ்க்கையில் வேலைகளை அதன் முக்கியத்துவம் சார்ந்து வரிசைப்படுத்திச் செய்வது எப்படி என்பது குறித்து தெளிவாக விளக்கும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!