Published:Updated:

உங்களை ஹீரோவாக உருவாக்கும் ஆக்‌ஷன் பிளான்..!

ஆக்‌ஷன் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்‌ஷன் பிளான்

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

உங்களை ஹீரோவாக உருவாக்கும் ஆக்‌ஷன் பிளான்..!

செல்ஃப் டெவலப்மென்ட் புக்ஸ்

Published:Updated:
ஆக்‌ஷன் பிளான்
பிரீமியம் ஸ்டோரி
ஆக்‌ஷன் பிளான்

எந்த ஒரு கதையிலும் நான்கு வகையான அடிப்படை கதாபாத்திரங்கள் இருக்கும். 1. பாதிக்கப்பட்ட நபர், 2. வில்லன், 3. ஹீரோ, 4. வழிகாட்டி. இந்த நான்கு கதாபாத் திரங்களும் ஏன் பெரும்பாலான கதைகளில் கட்டாயமாக இருக்கின்றன? ஏனென்றால், இந்த உலகத்தில் இந்த நான்கு கதாபாத்திரங் களும் நீக்கமற நிறைந்துள்ளன. உங்களுக்கும் எனக்குள்ளும் இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் இருக்கவே செய்கின்றன.

புத்தகத்தின் பெயர்:
Hero on a Mission
ஆசிரியர்:
Donald Miller
பதிப்பாளர்:
HarperCollins Leadership
புத்தகத்தின் பெயர்: Hero on a Mission ஆசிரியர்: Donald Miller பதிப்பாளர்: HarperCollins Leadership

‘‘என்னுடைய வாழ்வில் அன்றாடம் நான் இந்த நான்கு கதாபாத்திரங்களின் செயல் களையும் கட்டாயம் நடைமுறைப்படுத்து கிறேன். சற்றும் நியாயம் இல்லாத ஒரு சவாலை சந்திக்கும் ஒரு சில நிமிடம் பாதிக்கப்பட்ட வரின் மனநிலைக்குச் சென்று, என்னை நானே பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, அதிலிருந்து மீண்டுவருகிறேன். எனக்கு அநீதி இழைக்கப் பட்டால், நான் ஒரு வில்லன் மனநிலைக்கு சென்று பழிவாங்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஏதாவது ஒரு நல்ல ஐடியா தோன்றியது எனில், அதை உற்சாகத் துடன் நிறைவேற்ற நினைக்கும்போது ஒரு ஹீரோவின் மனநிலைக்குச் சென்றுவிடுகிறேன். யாராவது என்னிடம் யோசனைகள் கேட்டால், அந்த நிமிடமே நான் ஒரு வழிகாட்டியாக மாறிவிடுகிறேன்.

என்னுடைய வாழ்க்கையில் நான் பல வருட காலங்கள் ஒரு பாதிக்கப்பட்ட நபராகவே இயங்கி வந்துள்ளேன். இது என்னுடைய வாழ்க்கையின் தரத்தை மிகவும் குறைத்தே வைத்திருந்தது. நான் உருப்படியாகப் பணம் சம்பாதிக்கவும் இல்லை. யாருடனும் நல்லதொரு நட்பையும் வைத்திருக்கவில்லை. ஒரு திறமையான புரொஃபஷனலாகவும் நான் இருக்கவில்லை.

என் பிரச்னைகளுக்கெல்லாம் காரணம், நான் வளர்க்கப்பட்ட விதமோ, தொடர்ந்து நான்பட்ட சிரமங்களோ, என் சூழ்நிலைகளோ இல்லை. என் பிரச்னையே என்னை நான் பார்த்த விதம்தான். என்னை எங்கும் எதிலும் ஒரு பாதிக்கப்பட்ட (victim) நபராகவே நான் பார்த்து வந்திருந்தேன். சினிமாக்களில் வரும் ஹீரோக்களின் பாத்திரங்களில் வடிவமைக்கப் பட்ட குணாதிசயங்களைப் பட்டியலிட்டுப் பார்த்த நான் அந்தக் குணாதிசயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக பழக்கப்படுத்திக் கொண்டால் என் வாழ்வில் மாறுதல்கள் உருவாகும் என்பதைப் புரிந்துகொண்டேன்.

ஒரு ஹீரோவைப் போல் வாழ முயற்சி செய்யும்போது அந்த வாழ்க்கைமுறை என்னை அறியாமலேயே ‘லோகோதெரபி’ (வியான்னா நாட்டை சார்ந்த விக்டர் ப்ரான்கல் என்பவர் கண்டறிந்த) எனும் நடைமுறைக்குள் கொண்டு சென்றது. இந்த நடைமுறை வாழ்வின் அர்த்தத்தை ஒருவர் தேடுவதற்காக வாழும் நடைமுறையாகும். இந்த நடைமுறைக்குள் நான் சென்ற பின்னால் என் வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மாறியது. வருத்தம் என்ற நிலையில் இருந்து, இதுபோதும் என்ற மனநிலைக்கு மாறினேன். பலனளிக்காத செயல்களைச் (Unproductive) செய்துகொண் டிருந்த நான், பலனளிக்கும் செயல்களை (productive) செய்ய ஆரம்பித்தேன். நல்ல நட்பைக் கொண்டிருப்பதில் எனக்கிருந்த பயங்கள் விலகி மிகச் சிறந்த நண்பர்களை ஏற்படுத்திக்கொண்டேன். எல்லாவற்றுக்கும் மேலாக, என் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போகிறதே என்ற எண்ணம் கொண்டிருந்த நிலையிலிருந்து மாறி மிகவும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதாக உணர ஆரம்பித் தேன். பத்து வருடங்கள் இதுபோன்றதொரு ஹீரோ மனநிலையிலான வாழ்ந்த பின்னால் நான் இது போன்ற வாழ்க்கைக்கான நடைமுறை ஒன்றைத் தயாரித்தேன். இந்தப் புத்தகம் அந்த நடைமுறையை உங்களுக்குத் தெளிவாக விளக்கும்’’ என இந்தப் புத்தகத்தை எழுதியதற்கான நோக்கத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்கிறார் ஆசிரியர்.

உங்களை ஹீரோவாக உருவாக்கும் ஆக்‌ஷன் பிளான்..!

நம் கதையின் கதாசிரியர் நாமேதான்...

ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வது விபத்து போன்ற நிகழ்வல்ல. நம்முடைய வாழ்க்கைக்கதை என்பதன் கதாசிரியர் நாமேதான். கதையை எழுதுவதும் வாழ்வதும் சுலபமான ஒன்றே என்றாலும் தலைசிறந்த கதைகளுக்கு அதிக சிரத்தையும் உழைப்பும் தேவைப்படுகிறது. நம்முடைய வாழ்க்கையிலும் ஆரம்பம், இடைப்பட்ட மற்றும் முடிவு என்ற மூன்றும் இருக்கவே செய்கிறது. இந்த மூன்று காலகட்டங்களில் நாம் பல்வேறு விதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கவே செய்கிறோம். நாமே அண்ணன் மற்றும் தங்கை, மகன் மற்றும் மகள், அப்பா மற்றும் அம்மா, டீம்மேட், காதலர், நண்பர் என்ற பல ரோல்களை செய்கி றோம். நம்மில் சிலருக்கு நம்முடைய கதை சுவாரஸ்யமான தாகவும், ஈடுபாட்டுடன் இருப்பதாகவும் இருக்கிறது. பலருக்கு அவர்களுடைய கதை கதாசிரியர் சொதப்பியதாக நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.

இங்கே ஒரு முக்கியமான கேள்வியை நாம் கேட்டேயாக வேண்டும். நம்முடைய வாழ்க்கைக் கதையை எழுதுவது யார், ஆண்டவனா, விதியா, நம்முடைய அரசாங்கம் அல்லது நம்முடைய பாஸ் நம் கதையை எழுதுகிறாரா, இல்லை நம்முடைய கதை டைம் லூப்பில் நடக்கும் ஒன்றா?

இதற்கு எது விடையாக இருந்தாலும், நாம் நம்முடைய கதையை வாழ்ந்தேயாக வேண்டும். அதை எப்படி சிறப்பாகவும் அர்த்தமுள்ளதாகவும் வாழ்வது என்பதுதான் நம்முன்னே இருக்கும் முக்கியமான கேள்வியே என்கிறார் ஆசிரியர்.

உங்கள் கதையை உங்களால் மாற்ற முடியும்...

ஒரு மனிதன் அவனுடைய கதையை அவனைச் சுற்றி யிருக்கும் சூழ்நிலையே உருவாக்குகிறது என்று நம்பும் வரை அதுவே உண்மையாக இருக்கிறது. எந்த நிமிடம் அவன் அவனுடைய வாழ்க்கையைச் சொந்தமாக வடிவமைத்துக் கொள்ள முடியும் என்று முழுமையாக நம்புகிறானோ, அந்த நிமிடமே அவனுக்கு அவனுடைய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ளும் சக்தி கிடைத்துவிடுகிறது என்கிறார் ஆசிரியர்.

‘‘என்னவோ போங்கள். என் வாழ்க்கை என்னை சோர்ந்து போக வைத்துவிட்டது என்று சொல்கிற நபரா நீங்கள்? கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கைக் கதை என்பது எந்த நிமிடத்திலும் எடிட் செய்து மாற்றமுடியும் வகையிலானதே என்பதை உணர்ந்துகொண்டு செயல்படுங்கள். பிரச்னைகளைத் தீர்க்கலாம். சோகமான கதையை மகிழ்ச்சியான பாதையில் பயணிக்க வைக்கலாம். சிரமமான நிலையில் இருந்து சுலபமான நிலைக்கு மாற்றலாம்.

நீங்கள் ஹீரோவா, பாதிக்கப்பட்ட நபரா?

இதையெல்லாம் செய்ய நீங்கள் ஒரே ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டிருக்க வேண்டும். நீங்கள் வாழும் வாழ்வில் என்ன மாதிரியான அர்த்தத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்பதுதான் அது என்கிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு கதாபாத்திர ரீதியாக நாம் மனநிலையை ஆராய்வோம். ஒரு பாதிக்கப் பட்ட நபராக நம்மைப் பார்க்க நமக்கே வெட்கமாக இருக்கும். வில்லனால் பாதிக்கப்பட்ட நாம் நம்முடைய மனநிலையை பாதிக்கப்பட்ட மனிதரின் மனநிலையாக மாற்றிக்கொள் வோம். அதன்பின் நம்முடைய மனதினுள்ளேயே எதற்கெடுத் தாலும் வில்லன் நம்மைத் தாக்குவதைப்போல் கற்பனை செய்துகொள்வோம். இதனால் நாம் நிரந்தரமாகப் பாதிக்கப்பட்ட (victim) மனநிலையிலேயே இருக்க வாய்ப்புள்ளது. நாம் நம்முடைய வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றிக்கொள்ள முடியாமல் போவதற்கு வில்லன் மற்றும் விக்டிம் (பாதிக்கப்பட்டவர்) என்ற இரண்டு மனநிலைகளே காரணமாக இருக்கிறது.

அதே சமயம், ஒரு ஹீரோ வானவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம். ஹீரோ அவருக்கு ஏற்படும் வலிகளிலிருந்து மீளவும் நன்கு வாழவும் கற்றுக் கொள்கிறான். அந்தப் படிப்பினை களிலிருந்து மற்றவர்களுக்கு (அதுபோன்ற கஷ்டங்களில் இருந்து மீள்வதற்கு) உதவவும் முற்படுகிறான். ஆனால், அதற்கு மாறாக, வில்லனோ அவனுக்கு உலகம் தந்த கஷ்டங்களுக்காக பழிவாங்கும் முயற்சியில் இறங்கு கிறான். ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே இருக்கும் வித்தியாசம் அவர்கள் பட்ட வலிக்கு அவர்கள் ஆற்றும் எதிர் வினையிலேயே இருக்கிறது.

குறிப்பாக, ஒரு ஹீரோ ஒரு இலக்கை நிர்ணயித்து (இதுவாக மாற வேண்டும் / இதைச் செய்து முடிக்க வேண்டும்,) அதை அடைவதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் முழுமையாக இறங்குகிறார். ஒரு கதையைப் படிக்கும்போது நாம் என்ன நினைக்கிறோம்? நம் ஆழ்மனதில் ஹீரோ அவனுக்குத் தேவையான தகுதிகளைப் பெற்று வெல்ல வேண்டும் என்றுதானே? இதை நீங்கள் உங்களுடைய வாழ்வில் பொருத்திப் பாருங்கள்.

உங்கள் வாழ்க்கை கதையும் மாற்றி அமைக்கலாம்!

உங்கள் வாழ்க்கைக்கதை எடிட் செய்யக்கூடிய வகையிலானது எனில், உங்களால் வெற்றி பெரும் ஹீரோவாக உங்களுடைய கதையை எடிட் செய்து கொள்ள முடிய வேண்டும் இல்லையா?

ஒரு ஹீரோவை உலகம் நிராகரிக்கும்போது, அதை எப்படிக் கையாள்கிறார், எல்லாம் போய்விட்டது என்ற சூழ்நிலையிலும் அதிலிருந்து மீள்வதற்கான வழிகளை எப்படிக் கண்டுபிடிக்கிறார், ஒரு முயற்சியில் ஜெயிக்க வில்லை என்றாலும் தொடர்ந்து முயற்சி செய்கிறாரா இல்லையா என்று பாருங்கள். ஹீரோ மீண்டும் உத்வேகத்துடன் முயற்சி செய்யும்போது நமக்கு எவ்வளவு உற்சாகம் பிறக்கிறது, அப்போதுதானே கதையில் சுவாரஸ்யமும் கூடுகிறது.

எனவே, உங்கள் வாழ்க்கையின் போக்கு என்பது நீங்கள் எந்த கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதிலேயே இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்று சொல்லும் ஆசிரியர், ஒரு ஹீரோவாக உங்கள் வாழ்க்கையை எடுத்துச்செல்வது எப்படி என்று மூன்று பெரும் பிரிவு களில் விளக்கமாகச் சொல்கிறார். இறுதியில் உங்களை ஹீரோவாகக் கொண்ட கதைக்கான ஆக்‌ஷன் பிளான் ஒன்றையும் (டெம்ப்ளேட்) வடிவமைத்துத் தந்துள்ளார்.

எளிய நடையில் பல்வேறு நிஜவாழ்க்கை உதாரணங் களுடன் சாதிக்கத் தூண்டும் சூட்சுமங்கள் பலவற்றையும் தொகுத்துத் தந்துள்ள இந்தப் புத்தகத்தை அனைவரும் கட்டாயம் ஒருமுறை படித்து வாழ்க்கையை மாற்றியமைத்து ஒரு ஹீரோவைப் போல் வெற்றி பெற முயற்சி செய்யலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism