Published:Updated:

வாழ்க்கை கற்றுத் தரும் நிர்வாகப் பாடங்கள்..!

நிர்வாகப் பாடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நிர்வாகப் பாடங்கள்

எம்.பி.ஏ புக்ஸ்

வாழ்க்கை கற்றுத் தரும் நிர்வாகப் பாடங்கள்..!

எம்.பி.ஏ புக்ஸ்

Published:Updated:
நிர்வாகப் பாடங்கள்
பிரீமியம் ஸ்டோரி
நிர்வாகப் பாடங்கள்

வாழ்க்கையில் ஓர் ஆச்சர்யமான விஷயம் என்ன தெரியுமா? பத்து வருடத்துக்கும் மேலாகப் பள்ளிக் கூடத்துக்குச் செல்கிறோம். அமீபா முதல் அக்பர் வரை பாடமாகப் படிக்கிறோம்.தவளையை அறுப்பது முதல் அறுங்கோணங் களில் சரிசமமாகப் பிரிப்பதுவரை எல்லாம் படிக்கிறோம். வீட்டுப்பாடம் தரும் சுமையால் பிடித்த விளையாட்டை விளையாட முடியாத சூழலில் வளர்கிறோம். ‘நீ சிறுபிள்ளை; இந்தப் பிராயத்தில் செய்ய வேண்டியவற்றைச் செய்து குதூகலமாக இரு. நண்பர்களுடன் ஜாலி யாகவும், எல்லோரும் உன்னுடன் இணைந்து விளையாட விரும்பும் ஒரு குழந்தையாகவும் இரு’ என ஏன் ஒருவரும் சொல்வதில்லை?

பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரிக்குச் செல்கிறோம். அங்கே, ஆற்றுக்கு நடுவே பாலம் கட்டுவது எப்படி என்று படிக்கிறோம். ஆனால், அதே கல்லூரியில் மாணவர்கள் வாழும் வாழ்க்கையில் மனிதர்களுக்கு இடையே ஒரு பாலமாக இருந்து செயல்படுவது எப்படி என்று ஏன் சொல்லித் தரவில்லை? அதையும் தாண்டி ஒரு சிலர் எம்.பி.ஏ படிக்கிறார்கள். அங்கே பிசினஸை நிர்வகிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறார்களே தவிர, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையை நிர்வகிப்பது எப்படி என்று சொல்லித் தருவதில்லை? போட்டி, போட்டி என்று போட்டிக்கு நடுவிலேயே வளர்கிறோம்.

வகுப்பில் இருக்கும் அனைவரையும்விட படிப்பில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணம். ஒரு க்யூவில் நின்றால் அதில் முதல் ஆளாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம். எப்போதுமே நம்மிடம் இருப்பது போதாது என்ற எண்ணம். போட்டி போட்டு செயல்படக் கற்றுக்கொள் என்று நம்மிடம் சொன்னவர்கள் ஒருங்கிணைந்து செயல் பட்டால் சிறப்பாகச் செயல்படலாம் என்று சொல்லவில்லை. அல்லது நல்லதொரு டீம் பிளேயராய் இருப்பது தலைசிறந்த திறமை என்று ஏன் சொல்லவேயில்லை?

வாழ்க்கை கற்றுத் தரும் நிர்வாகப் பாடங்கள்..!

நல்ல மார்க்குகள் வைத்திருப்பது சிறந்த விஷயமாக இருந்தபோதிலும் அது நம்முடைய திறனை முழுமையாக வரையறுப்பதற்கான அளவுகோல் இல்லை என்பதுதானே வாழ்வின் கசப்பான நிஜமாக இருக்கிறது? நம்முடைய வாழ்க்கையில் நாம் பயிலும் கல்வி என்பது பல முக்கிய விஷயங்களைக் கற்றுக் கொடுத்தாலுமே நிஜவாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு விஷயங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு வாழ முக்கியத் தேவையான பல்வேறு விஷயங்களைச் சொல்லித் தருவதில்லை என்பதே உண்மை. பள்ளிக் கல்விக்கும் வாழ்க்கைக் கல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைச் சொல்லி என்னுடைய வாழ்வில் நான் கற்றிந்த பல விஷயங்களை உங்களுடன் பகிர்வதே இந்தப் புத்தகத்தின் நோக்கம்’’ என்று சொல்லி ஆரம்பிக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் பிரகாஷ் அய்யர்.

தெளிவாகச் சிந்திப்பது எப்படி, சிறந்த முடிவுகளை எடுப்பது எப்படி, நல்லதொரு தலைவனாக இருப்பது எப்படி, நல்லதொரு அங்கத்தினராக ஒரு குழுவில் இருப்பது எப்படி என்பன போன்ற பல்வேறு விஷயங்களுக்கு இந்தக் கதைகளின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் உதவியாகவும் உந்துதலைத் தருவதாகவும் இருக்கிறது.

படகோட்டி கற்றுத் தந்த பாடம்...

கேரளாவில் உள்ள அஸ்தமுடி ஏரியில் படகோட்டும் ஒரு படகோட்டியான விமலனுடன் நடந்த உரையாடலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இந்தப் புத்தகத்தின் ஆசிரியர். படகை ஓட்டும்போதுஅலைகள் சில சமயம் படகு செல்லும் திசைக்கு சாதகமாகவும், சில சமயம் எதிரானதாகவும் (படகை ஓட்ட சிரமமளிப்பதாகவும்) இருந்தது. எந்த திசையில் செல்ல வேண்டும் என்பதை லாகவமாக முடிவு செய்யும் படகோட்டி, சிலசமயம் எதிர்அலைகளைக் கஷ்டப்பட்டுக் கடக்க நேரிட்டது. அப்போது படகில் இருந்த ஒருவர், ‘ஏன் நீங்கள் எதிர் அலையில் சிரமப்படுகிறீர்கள். பேசாமல் வேறுபக்கமாக (எதிரலை இல்லாத வழியில்) செல்லலாமே’ என்று கேட்டாராம். அதற்கு விமலனோ, ‘எவ்வளவு சுலபமாகப் போகிறோம் என்பது விஷயமில்லை சார். எங்கே போகிறோம் என்பதுதான் விஷயமே. நீங்கள் சூரிய உதயம் பார்க்க வேண்டும் என்கிறீர்கள். அதற்கு இந்த எதிரலை இருக்கும் வழியில்தான் செல்ல வேண்டும்’ என்றாராம். ‘வாழ்க்கையில் பாதைகளைத் தேர்ந்தெடுக்கும் போது சுலபமானதைத் தேர்ந்தெடுக்காமல் எங்கே போக வேண்டும் என்று நினைக்கிறோமோ, அதை மனதில் வைத்து நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்’ என்ற அற்புதமான பாடத்தை அந்தப் படகோட்டி சுலபத்தில் கூறினார்.

‘படகில் ஏறும்போது பலரும் ‘லைஃப் ஜாக்கெட்’ இல்லையா’ என்று கேட்க, விமலனோ, ‘‘என்னுடைய படகில் ‘லைஃப் ஜாக்கெட்’ இல்லை. நான்தான் இருக்கிறேன்’’ என்று தைரியம் சொல்லிவிட்டு, ‘சிறப்பான மேஜிக்கல் சூர்யோதயத்தைப் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் லைஃப் ஜாக்கெட்டை மறந்துவிட்டு, படகோட்டியின் மீது நம்பிக்கை வையுங்கள்’ என்றாராம். இது வாழ்க்கையிலும் பிசினஸிலும் எவ்வளவு சரியான ஒன்று. இந்த இரண்டிலுமே சேஃப்டி நெட் என்பது எப்போதும் கிடைக்காது. எதையாவது பெரியதாகவோ சிறப்பாகவோ செய்ய வேண்டும் எனில், ரிஸ்க் எடுக்கத்தான் வேண்டும். முயற்சி செய்து பாருங்கள். தோல்வி குறித்து பயப்படாதீர்கள் என்ற பாடத்தைதான் அந்தப் படகோட்டி சொல்கிறார் என்று சிலாகிக்கிறார்ஆசிரியர்.

எது வேண்டும் என்ற தெளிவு...

அடுத்து, தன்னுடைய இரட்டைக் குழந்தைகள் (பெண் மற்றும் ஆண்) சிறுவர்களாக இருந்தபோது நிகழ்ந்த ஒரு அனுபவத்தை விவரிக்கிறார். பள்ளியில் இருந்து திரும்ப அழைத்து வரும்போது பள்ளியின் வாசலில் இருந்து நடந்து வரும்போதே ஒரு குழந்தை, ‘நான் காரில் வலது பக்கம் அமர்வேன்’ என்று சொல்ல, உடனே மற்றொரு குழந்தையும் எனக்கும் அந்த சீட்தான் வேண்டும் என்று அடம்பிடிக்க, ‘சரி, இன்றைக்கு அக்கா (நான்கு நிமிடத்துக்கு முன் பிறந்தவர்) உட்காரட்டும். நாளைக்கு நீ உட்காரு’ என்று சமாதானப்படுத்தி காருக்கு அருகே வந்தார்களாம். காரை திறந்த பின்னால் எது வலது பக்கம் என்று தம்பி கேட்க, ஆசிரியர் சட்டென நிலைமையைச் சமாதானப்படுத்தி காரில் உட்கார வைத்தாராம்.

அடுத்தவருக்கு (அக்காவுக்கு) வேண்டுமென்றால் அது எனக்கும் வேண்டும் என்பதுதான் குழந்தை யின் இயல்பு. இதுவே உலகில் நீக்கமற நிறைந்திருக்கிறது. நமக்கு ஒரு விஷயம் வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், ஏன் அது நமக்கு வேண்டும் என்பதற்கான காரணம் தெளிவாக நம்மிடம் இருப்பதில்லை. மற்றவர் களிடம் இருக்கிறது; அதனால் எனக்கும் அது வேண்டும் என்பதே நம்முடைய நிலைப்பாடாக இருக்கிறது. எது வேண்டும், அது ஏன் வேண்டும் என்பதற்கான தெளிவு நம்மிடம் இருக்க வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தின் பெயர்:
How Come No One 
Told Me That?
 ஆசிரியர்:
 Prakash Iyer
பதிப்பாளர்:
Penguin Portfolio
புத்தகத்தின் பெயர்: How Come No One Told Me That? ஆசிரியர்: Prakash Iyer பதிப்பாளர்: Penguin Portfolio

பயணத்தை ரசியுங்கள்...

அதே போல, ‘டைகர் சஃபாரி’ ஒன்றுக்கு சென்று மூன்று நாள்கள் காட்டுக்குள் பயணித்த பின்னரும் ஒரு புலியைக்கூட பார்க்க முடியவில்லை. இறுதிநாள் சோகத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது எங்களுடன் வந்திருந்த ஒருவர், ‘‘புலியைப் பார்க்க முடியவில்லையே என்று வருத்தப் படாதீர்கள். மூன்று நாள்கள் நாம் அனைவரும் ஜாலியாக ஒன்றாகப் பயணித்தோம். பிரமாதமான இயற்கைக் காட்சிகளைப் பார்த்தோம் இல்லையா? அதை நினைத்து சந்தோஷப்படுங்கள்’’ என்றார். வாழ்க்கையில் சென்றடையும் இடம் முக்கிய மில்லை. பயணமே முக்கியம். பயணத்தை ரசியுங்கள். அடைய வேண்டிய இடத்தை அடைய முடியவில்லையே என்று கவலைப் படாதீர்கள் என்பதுதான் அது இல்லையா என்று கேட்கிறார் ஆசிரியர்.

நான் ஏதாவது உங்களுக்கு உதவ வேண்டுமா என்ற கேள்விகளைக் கேட்காமல் உதவிகளைச் செய்ய நினைத்தால் அதற்கான காரியத்தில் இறங்க வேண்டியதன் அவசியம்; நாம் சிறப்பாகத் தோற்றமளிக்கத் தேவையான உடைகளை நம்முடைய அளவுக்கு தகுந்தாற்போல் மாற்றியமைக்க உதவும் ஆல்ட்ரேஷன் தையற்கலைஞர்களைப்போல் நம்முடைய செயல்பாடுகளை உலகுக்கு ஏற்றாற்போல் கொஞ்சம் மாற்றியமைக்க உதவுவதற்கான தையல் கலைஞர்களை (நண்பர், மென்டார் என) உடன் வைத்துக் கொள்ளுதலின் அவசியம்; பிளான்-பி என்ற எதுவும் இல்லாமல் எடுத்த விஷயத்தில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்று சங்கல்பம் எடுத்துக்கொண்ட நிலையில் செயல்படுவதின் மகத்துவம் எனப் பல்வேறு வாழ்க்கைக்கு உதவும் விஷயங்களை சிறுசிறு நிஜவாழ்க்கை கதைகளின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது இந்தப் புத்தகம்.

இறுதியாக, உங்களுடைய காலத்துக்குப் பின்னால் நீங்கள் செய்த சாதனைகள் பற்றி யாரும் பேசப் போவதில்லை; நண்பர்கள், அன்பானவர்கள் நம்மோடு இருந்த நாள்களில் நாம் எப்படி நம்பிக்கையுடன் திகழ்ந்தோம் என்பது பற்றித்தான் பேசுவார்கள் என்பதை நினைவில் கொண்டு உங்களுடைய அன்றாட வாழ்வை வாழுங்கள் என்று கூறி முடியும் இந்தப் புத்தகத்தை நாம் அவசியம் ஒருமுறை படிக்கலாம்!